logo

|

Home >

hindu-hub >

temples

கோயில் (சிதம்பரம், தில்லை) தலவரலாறு.

இறைவர் திருப்பெயர்: நடராசர், ஆனந்த நடராஜர், அம்பலகூத்தர், திருச்சிற்றம்பலமுடையார், அம்பலவாணர், திருமூலட்டானேசுவரர், கூத்தபிரான், கனகசபாபதி, சபாநாயகர்.

இறைவியார் திருப்பெயர்: சிவகாமி, சிவகாமசுந்தரி.

தல மரம்:

wad

தீர்த்தம் : சிவகங்கை, பரமானந்தகூபம், வியாக்ரபாத தீர்த்தம், (திருப்புலீச்சரம்) பிரமதீர்த்தம், அனந்த தீர்த்தம் முதலியன.

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்,திருமாளிகைத்தேவர், பரணதேவ நாயனார், கபிலதேவ நாயனார், கருவூர்த்தேவர், சேரமான் பெருமாள் நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், பூந்துருத்திநம்பி காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர், சேந்தனார் , பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், வியாக்ரபாதர், பதஞ்சலி, உபமன்யு, வியாசர், திருநீலகண்டர், திருமூலர், திருநாளைப்போவார், கணம்புல்லநாயனார் முக்தி பெற்ற பதி. முதலியோர்,

Sthala Puranam

  • 'கோயில்' என்று பொதுவாக வழங்கினாலே சைவத்தில் சிதம்பரம் நடராசப் பெருமானின் கோயிலைத்தான் குறிக்கும். ஊர்ப்பெயர் தில்லை; கோயிலின் பெயர் சிதம்பரம், இன்று ஊர்ப்பெயர் வழக்கில் மறைந்து, கோயிலின் பெயரே ஊர்ப் பெயராக வழங்கி வருகிறது.
  • தில்லை மரங்கள் அடர்ந்த காடாக இருந்தமையால் தில்லைவனம் என்று பெயர் பெற்றது. (இம்மரங்கள் தற்போது சிதம்பரத்தில் இல்லை; ஆனால் இதற்கு அண்மையிலுள்ள பிச்சாவரத்திற்குப் பக்கத்தில் உப்பங்கழியின் கரைகளில் காணப்படுகின்றன.)
  • வியாக்கிரபாத முனிவராகிய புலிமுனிவர் எல்லாப் பொருட்கும் சார்பாகிய இறைவனைப் பெரும்பற்றாகக் கொண்டு போற்றியமையால் பெரும்பற்றப்புலியூர் எனப் பெயர்பெற்றது.
  • எல்லாம் வல்ல இறைவன் நுண்ணிய (சிறு) ஞானமயமான அம்பலத்தில் ஆடல் புரிதலால் திருச்சிற்றம்பலம் எனவும் இத்தலம் அமைக்கப் பெறுவதாயிற்று. சிற்றம்பலம் - நுண்ணிய ஞான வெளி.
  • இது தஹராகாச க்ஷேத்திரமாதலால் சிதம்பரம் (சித் + அம்பரம் - சித்தமாகிய பெருவெளி) என்று அழைக்கப்படுகிறது.
  • முன்னொருகாலத்தில் மத்தியந்தனமுனிவர் என்பவர், தாம் தவஞ்செய்து பெற்ற புதல்வருக்குக் கல்விப்பயிற்சி நிரம்பிய பின்னர் அறிவுநூற்பொருள் முழுவதையும் அறிவுறுத்தினார். தந்தையார்பால் அறிவுநூற்பொருளை உணர்ந்த அப்புதல்வர், சிறப்புடைய திருத்தலம் ஒன்றிலே சென்று இறைவனை வழிபாடு செய்தற்கு விரும்பினார். பிள்ளையின் விருப்பத்தையுணர்ந்த மத்தியந்தன முனிவர் அவரைத் தில்லைப்பதிக்குச் செல்லும்படி அனுப்பிவைத்தார். தந்தை சொல்வழி நடக்கும் அப்புதல்வர், தில்லைவனத்தையடைந்து, அவ்விடத்தே ஓர் அழகிய தடாகமும் அதன் தென்பக்கத்தே ஓர் ஆலமரநீழலில் சிவலிங்கத் திருவுருவமும் இருத்தலைக்கண்டு பெருமகிழ்வு கொண்டார். அங்கே ஒரு தவச்சாலை அமைத்துக்கொண்டு சிவலிங்கப் பெருமானைப் பூசித்து வருவாராயினர், தாம் நாள்தோறும் இறைவனை வழிபாடு செய்தற்கென்று பறிக்கும் பலநறுமணமலர்களை ஒருநாள் ஆராய்ந்து பார்த்தார். அம்மலர்களுள் பழையனவும் பழுதுபட்டனவுமான மலர்கள் கலந்து இருக்கக் கண்டு வருந்தினார். பொழுது விடிந்தபின் மலர்களைக் கொய்தால் அவை வண்டுகள் ஊதியனவாக ஆகிவிடுகின் றன. இரவிலேயே சென்று பறிப்போம் என்றால், மரம்செறிந்த இக்காட்டிலே வழிதெரியவில்லை, மரங்களில் ஏறினாலும் பனியால் கால் வழுக்குகின்றது என அவ்விளைய முனிவர் பெரிதும் வருந்தினார். அந்நிலையில் எல்லாம்வல்ல சிவபெருமான் அம்முனிவர் முன்னே தோன்றினார். முனிவர் இறைவனை வணங்கி வாழ்த்தி, ஐயனே தேவரீரை வழிபடுதல் வேண்டி அடியேன் விடியற் பொழுதில் சென்று மரங்களில் வழுக்காமல் ஏறவேண்டியிருத்தலால் என்னுடைய கைகால்கள் புலியின் வலிய நகங்களையுடையனவாதல் வேண்டும். வழி தெரிந்து செல்லுதற்கும், பழுதற்ற நறுமலர்களைத் தெரிந்து கொய்வதற்கும் கால்களிலும் கைகளிலும் கண்கள் உண்டாதல் வேண்டும்” என வேண்டினார். எல்லாம்வல்ல இறைவனும் அவர் வேண்டியவண்ணம் வரத்தினைத் தந்து மறைந்தருளினார். அன்றுமுதல் அவர் வியாக்கிரபாதர் (புலிக்கால் முனிவர்) என்னும் பெயருடையராய், சிவபெருமானைத் தாம் விரும்பிய வண்ணம் புது மலர்களால் வழிபாடு செய்து மகிழ்ந்திருந்தார். இவ்வாறு புலிக்கால் முனிவர் வழிபட்ட காரணத்தினால், தில்லைவனமாகிய இப்பதி புலியூர் எனவும் வழங்கப் பெறுவதாயிற்று. வியாக்கிரபாத முனிவர் உலகியல் பற்றுக்களை அறவே நீக்கி எல்லாப் பொருட்கும் சார்பாகிய இறைவன் ஒருவனையே பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்ந்தமையால் இப்பதி பெரும்பற்றப்புலியூர் எனச் சிறப்புடையதாயிற்று. 
  • வியாக்கிரபாத முனிவர் திருமூலட்டானத்துப் பெருமானை வழிபட்டிருக்கும் நாளில், அவர் தந்தையார் மத்தியந்தனமுனிவர் தில்லையையடைந்து வசிட்ட முனிவரின் தங்கையாரைத் தம் மைந்தர்க்கு மணம் செய்து வைத்தார். வியாக்கிர பாதரும் அவர் மனைவியாரும் தில்லையில் தங்கி. இறைவனை வழிபட்டிருக்கும் நாளில், அவ்விருவர் செய்த. தவத்தின் பயனாக உபமன்யு என்னும் குழந்தை பிறந்தது. அக்குழந்தையை, வசிட்ட முனிவரின் மனைவியார் அருந்ததியம்மையார் எடுத்துச்சென்று, தம்பாலுள்ள காமதேனு என்னும் தெய்வப்பசு பொழிந்தபாலை ஊட்டி வளர்த்து வந்தார். பின்னர், புலிக்கால் முனிவரும் அவர் மனைவியாரும் உபமன்யுவைத் தில்லைக்கு அழைத்து வந்தனர். காமதேனுவின் இனிய பாலையருந்தி வளர்ந்த உபமன்யு உணவையுண்ணாது பசிதாங்காது. அழுவதாயிற்று. அதுகண்டு வருந்திய வியாக்கிரபாதரும் அவர் மனைவியாரும் திருமூலட்டானப்பெருமான் முன்பு அக்குழந்தையைக் கொண்டு வந்து வேண்டினர். எல்லாம் வல்ல சிவபெருமான் அக்குழந்தையின் பொருட்டுத் தெய்வத்தன்மை வாய்ந்த பாற்கடலையே வரவழைத்து உணவாக ஊட்டினார், உபமன்யு ஆகிய அக்குழந்தை திருப்பாற்கடலைப் பருகிக்களித்திருந்தது. 
  • வியாக்கிரபாதர்  சிவபெருமான் தேவதாரு வனத்தில் வாழ்ந்த முனிவர்களின் பொருட்டு நிகழ்த்திய ஐந்தொழில் இன்பக் கூத்தினை யான் காணுமாறு எங்ஙனம்? என்று, பெரிதும் நெஞ்சம் நெகிழ்த்துருகி வருந்தினார். இத்தில்லையம் பதியே நிலவுலகத்திற்கு நடுநாடியாயிருத்தலால் இதன்கண்ணே தான் சிவபெருமான் ஐந்தொழில் திருக்கூத்து நிகழ்த்தியருளுவான், ஆதலால் அகத்தே காணுவதற்குரிய அத்திருக்கூத்தினை இத் தில்லையம்பலத்தின் கண்ணே புறத்தேயும் காணப்பெறுவேன், என்று தவக்காட்சியால் உணர்ந்த வியாக்கிரபாத முனிவர் தில்லைப்பதியிலேயே திருமூலட்டானப்பெருமானை வழிபாடு செய்து கொண்டு இருப்பாராயினார். 
  • திருமால், பாற்கடலில் பாம்பணையிற் பள்ளிகொண்டு தேவதாரு வனத்தில் தாம்கண்ட இறைவனது ஆனந்தத் திருக்கூத்தினையே யெண்ணி யெண்ணிப் பெருங்களிப்புடையராய்த் துயிலாதிருந்தார். அந்நிலையில் அவர்க்குப் படுக்கையாயிருந்த ஆதிசேடன் திருமாலைப் பணிந்து அவர் கொண்ட பெருமகழ்ச்சிக்கக் காரணம் யாது என வினவினான். திருமாலும் தேவதாரு வனத்தில் சிவபெருமான் ஆடிய ஆனந்தத் திருக்கூத்தின் இயல்பினை எடுத்துரைத்தார். அதனைக் கேட்ட ஆதிசேடன் அத்திருக்கூத்தினைத் தானும் காணும் பெருவேட்கை அடைந்தான். ஆதிசேடன் தன்மகன் அனந்தன் என்பவனைக் திருமாலுக்குப் பாம்பணையாக்கி விட்டு வடகயிலை மருங்கு சென்று சிவபெருமானை நினைந்து அருந்தவம் புரிந்தனன். அவனது பேரன்பின் திறத்தைப் பலரும் அறியச்செய்யத் திருவுளங் கொண்ட சிவபெருமான், "எமது திருக்கூத்தினைப் பொறுத்தற்கு ஏற்ற இடம் தில்லைவனமே. அத்தகைய தில்லை மன்றத்தின் கண்ணே நமது ஐந்தொழில் இன்பத்திருக்கூத்து எக்காலத்தும் இடையறாது நிகழும். அங்கு வியாக்கிரபாத முனிவன் அவ்விலிங்கத்தைப் பூசித்துக் கோண்டு உள்ளான். உன்னைப்போன்றே எனது திருக்கூத்துனைக்காணும் பெருவேட்கையுடன் என்னை வழிபாடு செய்து கொண்டிருக்கும் அவனுடன் நீயும் இருப்பாயாக; உங்கள் இருவர்க்கும் தைப்பூசம் குருவாரத்தோடு கூடும் சித்தயோக நன்னாளில் உச்சிக்காலத்தில் எமது ஆனந்தத் திருக்கூத்தினை நீங்கள் தரிசிக்கும்படி ஆடியருள்புரிவோம்'' என்று கூறி மறைந்தருளினார். ஆதிசேடன் பதஞ்சலி முனியாகிப் புலிக்கால் முனிவருடன் அளவளாவி அனந்தேசுரம் என்னும். திருக்கோயிலில் இறைவனைப் பூசித்தான்.
  • சிவபெருமான் தாம் குறித்தருளியவண்ணம் தைப்பூச நன்னாளில் தில்லைத் திருக்கோயிலிலே கூத்தப்பெருமானாகத் தோன்றி, சிவகாமியம்மையார் காண ஐந்தொழில் இன்பத்திருக்கூத்தினை ஆடியருளினார். அன்று முதல் தில்லைச் 
    சிற்றம்பலத்திலே இத்திருக்கூத்து என்றும் இடையீடின்றி நிகழும் அனவரத தாண்டவமாக நிகழ்ந்து வருகின்றது. 
     
  • திருமால்,பிரமன், முதலியோர் இசைக்கருவிகளை ஒலிக்கக் கூத்தபிரான் என்றும் திருநடனம் புரிகிறான்.அம்மை சிவாகம சுந்தரி இத்திரு நடனத்தை இடைவிடாது ரசிக்கிறாள்.

 திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள்  :  சம்பந்தர்     -  1. கற்றாங் கெரியோம்பிக் (1.80),                                   2. ஆடினாய்நறு நெய்யொடு (3.1);                 அப்பர்        -  1. செஞ்சடைக் கற்றை (4.22),                                   2. பத்தனாய்ப் பாட மாட்டேன் (4.23),                                   3. பாளையு டைக்கமு (4.80),                                   4. கருநட்ட கண்டனை (4.81),                                   5. அன்னம் பாலிக்குந் (5.1),                                   6. பனைக்கை மும்மத (5.2),                                  7. அரியானை அந்தணர்தஞ் (6.1),                                  8. மங்குல் மதிதவழும்  (6.2);               சுந்தரர்        -   1. மடித்தாடும் அடிமைக்கண் (7.90);         மாணிக்கவாசகர்    -   1. கீர்த்தித் திருஅகவல் (8.2),                                 2. திருவண்டப் பகுதி (8.3),                                 3. போற்றித் திருஅகவல் (8.4),                                 4. திருப்பொற்சுண்ணம் (8.9),                                 5. திருக்கோத்தும்பி (8.10),                                 6. திருத்தெள்ளேணம் (8.11),                                 7. திருச்சாழல் (8.12),                                 8. திருப்பூவல்லி (8.13),                                 9. திருஉந்தியார் (8.14),                                10. திருதோணோக்கம் (8.15),                                11. திருப்பொன்னூசல் (8.16),                                12. அன்னைப்பத்து (8.17),                                13. குயில்பத்து (8.18),                                14. திருத்தசாங்கம் (8.19),                                15. கோயில்மூத்ததிருப்பதிகம் (8.21),                                16. கோயில்திருப்பதிகம் (8.22),                                17. கண்டபத்து (8.31),                                18. அச்சப்பத்து (8.35),                                19. குலாப்பத்து (8.40),                                20. எண்ணப்பத்து (8.44),                                21. யாத்திரைப்பத்து (8.45),                                22. திருப்படையெழுச்சி (8.46),                                23. திருப்படையாட்சி (8.49),                                24. ஆனந்தமாலை (8.50),                                25. அச்சோப்பதிகம் (8.51);  திருமாளிகைத்தேவர்    -    1. ஒளிவளர் விளக்கே (9.1),                                   2. உயர்கொடி யாடை (9.2),                                 3. உறவா கியயோ (9.3),                                   4. இணங்கிலா ஈசன் (9.4);     கருவூர்த்தேவர்        -    1. கணம்விரி (9.8);   பூந்துருத்திநம்பி காடநம்பி -   1. முத்து வயிரமணி (9.19);   கண்டராதித்தர்         -   1. மின்னார் உருவம் (9.20);   வேணாட்டடிகள்        -   1. துச்சான செய்திடினும் (9.21); திருவாலியமுதனார்      -   1. மையல் மாதொரு (9.22),                                2. பவளமால் வரையைப் (9.23),                                3. அல்லாய்ப் பகலாய் (9.24),                                4. கோல மலர்நெடுங்கண் (9.25); புருடோத்தம நம்பி       -   1. வாரணி நறுமலர் (9.26),                                2. வானவர்கள் வேண்ட (9.27);     சேதிராயர்           -   1. சேலு லாம்வயல் (9.28);    சேந்தனார்            -   1. மன்னுக தில்லை (9.29) திருப்பல்லாண்டு; பட்டினத்துப் பிள்ளையார் -   1. பூமேல் அயன்அறியா (11.27); நம்பியாண்டார் நம்பி    -   1. நெஞ்சந் திருவடிக் (11.33); பாடல்கள்   :  சம்பந்தர்  -      ஆரூர்தில்லை யம்பலம் (2.39.1);                  அப்பர்   -       மூவா உருவத்து (4.113.3),                                   நல்ல நான்மறை (5.30.6),                                   கொல்லை யேற்றினர் (5.33.1),                                   புல்ல மூர்தியூர் (5.65.5),                                     முல்லை நன்முறுவல் (5.78.3),                                   முல்லையங் கண்ணி (6.5.3),                                   செல்வப் புனற்கெடில (6.7.1),                                   தாயவனை எவ்வுயிர்க்குந் (6.33.6),                                   பாடகஞ்சேர் மெல்லடிநற் (6.34.3),                                   அறையார்பொற் (6.54.6),                                   தில்லைச் சிற்றம்பலமுஞ் (6.70.1),                                   கடிமலிந்த மலர்க்கொன்றைச் (6.81.6),                                   வானத் திளமதியும் (6.82.1 & 9),                                   பார்முழுதாய் (6.86.4),                                   அணிதில்லை (6.96.7);                சுந்தரர்       -    கோட்டங்கொண் டார் (7.17.6),                                   தில்லைவாழ் (7.39.1),                                   ஆத்தம் என்றெனை (7.62.4),                                   கொல்லை விடைக் (7.84.5),                திருமூலர்     -    உண்டில்லை (10.4ம் தந்திரம் - 05. சத்தி பேதம் - திரிபுரை சக்கரம்),                                   மானுடர் ஆக்கை (10.7ம் தந்திரம் - 03. பிண்டலிங்கம்); ஐயடிகள் காடவர்கோன் நாயனார்  -  ஓடுகின்ற நீர்மை (11.5.1) க்ஷேத்திரத் திருவெண்பா; சேரமான் பெருமாள் நாயனார்     -  மொழியக்கண் டான் (11.6.77 & 84) பொன்வண்ணத்தந்தாதி;                 கபிலதேவ நாயனார்       -  இயலிசை நாடக மாய் (11.22.24) சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை;        பரணதேவ நாயனார்       -  ஆங்குரைக்க லாம் (11.24.17) சிவபெருமான் திருவந்தாதி;         நம்பியாண்டார் நம்பி      -   செப்பத் தகு (11.34.2,3,21,59,72,83 & 89) திருத்தொண்டர் திருவந்தாதி;                                         தேறும் புனல்தில்லைச் (11.39.68) ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி;              சேக்கிழார்            -    ஊன் அடைந்த (12.1.2) பாயிரம்,                                          பரம் பொருளைப் (12.5.91 & 92) தடுத்தாட்கொண்ட புராணம்,                                          ஆதியாய் நடுவுமாகி (12.1.1,3 & 10) தில்லைவாழ் அந்தணர் புராணம்,                                          வேதியர் தில்லை மூதூர் (12.2.1,30 & 31) திருநீலகண்ட நாயனார் புராணம்,                                          சொல்லுவது அறியேன் வாழி (12.3.32) இயற்பகை நாயனார் புராணம்,                                          செல்வம் மேவிய நாளில் (12.4.6) இளையான் குடி மாற நாயனார் புராணம்,                                          தேடிய மாடு நீடு  செல்வமும் (12.5.4) மெய்ப் பொருள் நாயனார் புராணம்,                                          அயில் கொள் (12.17.10) உருத்திர பசுபதி நாயனார் புராணம்,                                          இத் தன்மை ஈசர் மகிழ் பதி (12.18.20,22,28,34 & 35) திருநாளைப்போவார் நாயனார் புராணம்,                                          சென்னி அபயன் (12.20.8) சண்டேசுர நாயனார் புராணம்,                                          ஆனாத சீர்த் தில்லை (12.21.156,161 & 174) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,                                          இவ் வகை அரசின் நாமம் (12.25.44) அப்பூதி அடிகள் நாயனார் புராணம்,                                          சிரபுரத்தில் அமர்ந்தருளும் (12.28.142,144,147,148,152,153,154,156,162,168,170,171,174,793,962,1135,1136,1143 & 1144) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                          அத் திருப்பதியை (12.29.89,110,111,166 & 167) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்,                                          நீடும் உரிமைப் (12.37.23,53,59.61) கழறிற்றறிவார் நாயனார் புராணம்,                                          மல்லல் ஞாலம் (12.39.4 & 5) கூற்றுவ நாயனார் புராணம்,                                          அந் நகரில் (12.41.8) புகழ்ச்சோழ நாயனார் புராணம்,                                          தாவாத பெருஞ் செல்வம் (12. 48.3 & 4) கணம்புல்ல நாயனார் புராணம்,                                          ஆரணியத்து உலர்ந்த (12.63.3) முழுநீறு பூசிய முனிவர் புராணம்,                                          தொன்மை தரு (12.68.7,15 & 17) கோச்செங்கட் சோழ நாயனார் புராணம்.                                        

 

தல மரம் :  தில்லை

 

Specialities

  • தமிழ்நாட்டிலுள்ள சைவசமயச் சான்றோர்களால் கோயில் என்னும் பொதுப் பெயரால் சிறப்பித்துப் போற்றப் பெறுவது பெரும்பற்றப் புலியூராகிய தில்லைப் பதியாகும். தில்லைத் திருக்கோயிலில் இறைவன் அருவுருவத் திருமேனி கொண்டு எழுந்தருளிய திருமூலட்டானமும், அப்பெருமான் உமையம்மை காண ஐந்தொழில் நாடகம் செய்தருளும் திருச்சிற்றம்பலமும் சைவத்திருமுறையாசிரியர் எல்லோராலும் போற்றி வழிபடப் பெற்ற அருள் நிலையங்களாகும். 
  • தில்லைத்தலமானது சோழநாட்டில் கொள்ளிடத்திற்கு வடக்கும், வடவெள்ளாற்றுக்குத் தெற்கும் ஆக அமைந்த இடப்பரப்பில் வங்கக்கடலுக்கு மேற்கே அமைந்துள்ளது. 
  • இறைவன் - விராட்புருஷனின் வடிவத்தில் திருவாரூர் மூலாதாரமாகவும், திருவானைக்கா 'உந்தி 'யாகவும், திருவண்ணாமலை 'மணிபூரக'மாகவும், திருக்காளத்தி 'கழுத்தாகவும்', காசி 'புருவமத்தி'யாகவும், சிதம்பரம் 'இருதயஸ்தான'மாகவும், சொல்லப்படும்.
  • இக்கோயிலுள் 'திருமூலட்டானம்' என்னும் தனிக்கோயில் ஒன்றுள்ளது. அர்த்தசாம வழிபாடு முடிந்தபின் எல்லாக் கோயில்களிலும் உள்ள சிவகலைகள் அனைத்தும் இந்த மூலத்தான லிங்கத்தில் ஒடுங்குவதாக ஐதீகம்.
  • சிற்றம்பலம் உள்ளே செல்வதற்கு ஐந்துபடிகள் - பஞ்சாக்கரப்படிகள் உள்ளன; இப்படிகளின் இரு புறமும் யானை உருவங்கள் உள்ளன. பதினான்கு சாஸ்திரங்களில் ஒன்றை இப்படியில் வைத்தபோது, இப்படிகளிலுள்ள யானைகளில் ஒன்று தன் தும்பிக்கையால் அந்நூலையெடுத்து நடராசப்பெருமான் திருவடியில் வைத்தமையால் அந்நூல் 'திருக்களிற்றுப்படியார்' என்ற பெயர் பெற்றது.
  • பஞ்சபூத தலங்களுள் இது 'ஆகாயத் ' தலம்.
  • பஞ்சசபைகளுள் இது கனகசபை, பொற்சபை, சிற்சபை ஆகும்.
  • இக்கோயிலுள், இறைவனின் ஐந்து சபைகளாகிய 1. சிற்றம்பலம், 2. பொன்னம்பலம் (கனகசபை), 3. பேரம்பலம், 4. நிருத்தசபை, 5. இராசசபை என ஐந்து மன்றங்கள் உள்ளன.
  • "சிற்றம்பலம்" நடராசப்பெருமான் திருநடனம்புரிந்தருளும் இடம் - 'தப்ரசபா' எனப்படும் இவ்வம்பலத்திற்கு முதலாம் ஆதித்தசோழனின் மகன் முதற்பராந்தகசோழன் பொன்வேய்ந்தான் என்று திருவாலங்காட்டு செப்பேடுகளும் 'லெய்டன்' நகரப் பெரிய செப்பேடுகளும் கூறுகின்றன. இவனுக்கு முன் இரண்யவர்மன், பொன்வேய்ந்தான் என்று கோயிற்புராணம் தெரிவிக்கின்றது.
  • "பொன்னம்பலம் (கனகசபை)" நடராசப்பெருமான் அபிஷேகம் கொண்டருளும் இடம். இப்பொன்னம்பலத்தின் முகட்டை, முதலாம் ஆதித்தசோழன், கொங்குநாட்டிலிருந்து கொண்டுவந்த உயர்ந்த மாற்றுடைய பொன்னால் வேய்ந்தான் என்று சேக்கிழாரும், தில்லைக்கோயில் கல்வெட்டுப்பாடலொன்று சிறந்த சிவபக்தனும், படைத்தலைவனுமான மணவில் கூத்தனான காளிங்கராயன் என்பவன் பொன்வேய்ந்தான் என்றும் கூறுகின்றது.
  • "பேரம்பலம்" இது தேவசபை எனப்படும். மணவில் கூத்தனான காளிங்கராயன் விக்கிரமசோழன் காலதில் இச்சபையைச் செம்பினால் வேய்ந்தான் என்று தில்லைக்கோயில் பாடலால் அறிவதோடு, பின்பு இப்பேரம்பலத்திற்கு பொன் வேய்ந்தவன் மூன்றாங்குலோத்துங்கச் சோழன் ஆவான்.
  • "நிருத்த சபை" ஊர்த்தவ தாண்டவம் செய்தருளிய இடம் இதுவே.
  • "இராச சபை" இஃது ஆயிரக்கால் மண்டபமாகும். சோழ மன்னர் மரபில் முடிசூடப் பெறுபவர்களுக்கு இம்மண்டபத்தில் முடிசூட்டு விழா நடைபெற்று வந்தன.
  • வியாக்ரபாதர் (புலிக்கால்முனிவர்) மிகுதியான பற்றினால் பூசித்த ஊராதலின் பெரும்பற்றப்புலியூர் என்றும்; சித்+ அம்பரம் (அறிவு - வெட்டவெளி) = சிதம்பரம் ஞானகாசம் என்றும்; பூலோக கயிலாயம், புண்டரீகபுரம், சிதாகாசத்தலம் எனவும் இதற்குப் பலபெயர்களுண்டு.
  • வைணவத்திலும் 'திருச்சித்திரக்கூடம்' என்று புகழ்ந்தோதப்படும் திருப் பதி.
  • சந்தானாசாரியர்கள் முத்தி பெற்ற சிறப்புடையதுமாகிய பழம்பதி.
  • மாணிக்கவாசகர் புத்தரை வாதில் வென்று ஊமைப் பெண்ணைப் பேசுவித்த பெரும்பதி.
  • திருஞானசம்பந்தர் தில்லைவாழ் அந்தணர்களைச் சிவகணங்களாகக் கண்டது இப்பதியில் தான்.
  • திருநீலகண்ட நாயனார் அவதரித்து வாழ்ந்தப்பதி. அவதாரத் தலம் : தில்லை (சிதம்பரம்).  முத்தித் தலம் : திருப்புலீச்சரம் (தில்லை - சிதம்பரத்தில் உள்ள ஒரு தலம்). குருபூசை நாள் : தை - விசாகம்.
  • உமாபதிசிவம் 'கொடிக்கவி' பாடிக் கொடியேற வைத்த அதிசய தலம்.
  • திருப்பல்லாண்டு பாடிச் சேந்தனார் தடைப்பட்ட தேரை ஓடச்செய்த மந்திரத்தலம்.
  • இராசராசன் வேண்டுதலின்பேரில் நம்பியாண்டார் நம்பிகளால் பொல்லாப்பிள்ளையாரின் துணைக்கொண்டு, திருமுறைகளை வெளிப்படுத்திய தெய்விகத் தலம்.
  • சேக்கிழார் பெருமானுக்குத் திருத்தொண்டர் புராணம் பாட அடியெடுத்துத்தந்து, அரங்கேற்றச் செய்யப்பட்ட அருமையான தலம்.
  • நடராச சந்நிதிக்கான கொடிமரம் தங்கத்தகடு வேய்ந்ததாகும்.
  • சிற்றம்பலம் - சிற்சபை நடராசப் பெருமானுக்குப் பக்கத்தில் 'சிதம்பர ரகசியம் ' உள்ளது.
  • அர்த்த ஜாம அழகர் :
    சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில், சங்கூதிப் பிள்ளையாருக்கு வலது புறத்தில், அர்த்தஜாம அழகர் கோயில் கொண்டுள்ளார். இரவு பத்து மணி அளவில் நடந்தேறும் அர்த்தஜாம பூஜையில் ஸ்ரீ நடராஜர், பள்ளியறை தீபாராதனைகளைத் தொடர்ந்து, நிறைவாக அர்த்தஜாம அழகர் எனும் இத்திருக்கோலத்திற்கு மஹா தீபாராதனையோடு அன்றைய பூஜைகள் நிறைவுறும். அமர்ந்த வடிவில், தூக்கிய இடது கையும், வலது கையில் கதை ஆயுதமும், பெயருக்கு ஏற்றார் போல் மிக மிக அழகிய வடிவினராக அருள்கிறார்.

சிதம்பர மஹிமை

ஸ்தல மஹிமை

      எல்லாவறிவும், எல்லாமுதன்மையும், எல்லாவநுக்கிரகமும் உடைய முழுமுதற் கடவுள் தாம் ஒருவரேயாய், பசுக்களாகிய ஆன்மாக்களெல்லாந் தமக்கு என்றும் உடைமைப் பொருள்களேயாகத் தாம் என்றும் உடையவராயே நின்று, பசுபதி எனப்படுஞ் சிவபெருமான் பிரபஞ்சம் எங்குமாகி நீக்கமற வியாபித்து நிற்பர். ஆயினும், அவ்வுண்மை யாவருக்கும் விளங்காது; ஆதலினாலே, முத்தியடைதல் எளிதன்று. இதனைச் சிவபெருமானெ திருவுளங்கொண்டு, தம்மை ஆன்மாக்கள் வழிபட்டுய்யும் பொருட்டு எண்ணில்லாத முக்கிய ஸ்தலங்களைப் பூமியில் வைத்தருளினார். அவைகளுள்ளே, அறுபத்தெட்டு ஸ்தலங்கள் சிறந்தன; அவ்வறுபத்தெட்டு ஸ்தலங்களுள்ளே, ஆறு ஸ்தலங்கள் சிறந்தன; அவ்வாறு ஸ்தலங்களுள்ளே, திருவாரூர், காசி, சிதம்பரம் என்னும் மூன்று ஸ்தலங்கள் சிறந்தன. திருவாரூரிலே பிறந்தவர்களும், காசியிலே இறந்தவர்களும், சிதம்பரத்திலே சிவபெருமானுடைய திருவடிகளைத் தரிசித்தவர்களும் முத்தியை அடைவார்கள்.

      திருவாரூரிலே பிறத்தல், முன்செய்த புண்ணிய மிகுதியினாலே, தானே நேர்படினல்லது செயற்கையால் அடையத்தக்கதன்று. காசியில் இறக்கலாமெனின், பிறர்பொருள் கொள்ளாது, பாவத்துக்குப் பயந்து தரும நெறியினாலே சம்பாதித்த பொருள்கொண்டு, ஜன்மதேசத்தை விடுத்து, வழியிலே இறவாது உயிர்தாங்கிச் சென்று காசியை அடைந்து, இறக்கும் வரையும் நல்லொழுக்கத்தோடும் அத்திருப்பதியில் இருந்து இறப்பது எளிதின் முடிவதன்று. சிதம்பரத்திலோவெனிற் சிவபெருமானுடைய திருவடிகளைத் தரிசித்தமாத்திரத்தே முத்தி சித்திக்கும். இன்னும், தக்ஷணதேசத்தார் சிதம்பரத்தை நீங்கி முத்தியைத் தேடிக் காசியிலே சென்றால், அது முத்தியைக் கொடுப்பதில்லை; உத்தர தேசத்தார் ‘சிதம்பரம் முத்திதரும்’ என்று வந்து சேர்ந்தால், இது முத்தியைக் கொடுக்கும். ஆதலினாலே, சிதம்பரமே எல்லா ஸ்தலங்களினுஞ் சிறந்தது.

      பிண்டமும் பிரமாண்டமும் சமம். பிண்டமாகிய சரீரத்தில் இடப்பக்க நாடியாகிய இடைக்கும், வலப்பக்க நாடியாகிய பிங்கலைக்கும் நடுவில் உள்ள சுழு முனா நாடியும், பிரமாண்டத்தில் உள்ள இப்பரதகண்டத்தில் இலங்கைக்கும் இமயமலைக்கும் நடுவில் உள்ள தில்லையும் சிவபெருமான் ஆநந்த நிருத்தஞ்செய்யும் தானமாம்.

      சரீரம் பிரமபுரம்; சரீரத்தினுள்ளே இருக்கும் இருதய ஸ்தானம் தகரமாகிய புண்டரீக வீடு; இருதய ஸ்தானத்தினுள்ளே இருக்கும் பிரமமாகிய சிவம் ஆகாசம். புறத்தும், இப்படியே பிரமாண்டம் பிரமபுரம்; பிரமாண்டத்திலுள்ளே இருக்கும் தில்லைவனம் புண்டரீக வீடு; தில்லைவனத்தில் நிருத்தஞ் செய்யும் சிவம் ஆகாசம். இவ்வாகாசம் பூதாகர சம்போற் சடமாகாது சித்தேயாம்; ஆதலாற் சிதம்பர மெனப்படும். இச்சிதம்பரம் எக்காலமும் நீக்கமின்றி விளங்கும் ஸ்தானமாதலால், இத் தில்லையும் சிதம்பரம் எனப் பெயர் பெறும்.

      சிதம்பரத்திலே ஞானசபையிலே, சிவபெருமான் சிவகாமி யம்மையார் காண, ஆன்மாக்கள் பொருட்டு அனவாதமும் ஆநந்த நிருத்தஞ் செய்தருளுவர். சபாநாயகர், கோடி சூரியருடைய ஒளுபோலும் ஒளியும் திருப்புன்முறுவலையுடைய ஒரு திருமுகமும், மூன்று திருக்கண்ணும், கங்கையையும் பிறையையும் கொன்றைமாலையையும் தாங்கிப் பின்றூங்காநின்ற திருச்சடையும், சங்கக்குண்டலம் பொருந்திய வலத்திருச்செவியும், திருத்தோடு பொருந்திய இடத்திருச்செவியும், திருநீலகண்டமும், டமருகம் பொருந்திய திருக்கரம் அபயகரம் பொருந்திய திருக்கரம் டோளகரம் என்னும் இடத்திருக்கரம் இரண்டும், புலித்தோலை ஆடையாகக் கொண்டு கச்சையுடைத்தாய் நெறிப்புப் பொருந்தி விளங்குந் திருவரையும், முயலகன் மேல் ஊன்றிய வலத்திருப்பாதமும், தூக்கி வளைத்த இடத்திருப்பாதமும் உடையர். சிவகாமியம்மையார், பச்சைநிறத்திருமேனியும், திருக்கழுத்திலே பொருந்திய திருமங்கல சூஸ்திரமும், செங்கழுநீர் மலர் பிடித்த வலத்திருக்கையும், கடிக்க்கீழ்த் தொங்கவிட்ட இடத்திருக்கையும், மிக ஒடுங்கிய திருநிலையும் உடையர்.

      சபாநாயகருடைய வடிவம் ஶ்ரீபஞ்சாக்ஷர வடிவம்; வாச்சிய மந்திரமாகிய சிவசத்தி அவருக்கு உண்மை வடிவம்; வாசக மந்திரம் அவருக்குக் கற்பித வடிவம். அவருடைய ஆநந்த நிருத்தம் பஞ்சகிருத்தியம். சிருஷ்டி கிருத்தியம் டமருகத்தினும், திதிகிருத்தியம் அபயகரத்தினும், சங்கார கிருத்தியம் அக்கினியினும், திரோபவ கிருத்தியம் ஊன்றிய பாதத்தினும், அநுக்கிரக கிருத்தியம் குஞ்சித பாதத்தினும் தோன்றும். அவ்வாநந்த நிருத்தத்துக்கு நிலைக்களமாகிய சபை சிவசத்தியால் அதிஷ்டிக்கப்பட்ட சுத்த மாயா மயம். சிவசத்தி, அக்கினியோடு சூடுபோலச் சிவத்தோடு நீக்கமின்றி உள்ள திருவருள்.

chitambaram temple      வியாக்கிரபாத முனிவர், பதஞ்சலி முனிவர், உபமன்யு முனிவர், திருவுடை யந்தணர்கள், வியாச முனிவர், சுக முனிவர், செளனக முனிவர், ஜைமினி முனிவர், சூத முனிவர் முதலாயினோர் எண்ணிறந்தோர்கள், சிதம்பரத்திலே நியமமாகச் சிவகங்கையிலே ஸ்நானஞ்செய்து, நடேசப் பெருமானுடைய ஆநந்த நிருத்தத்தைத் தரிசித்து வணங்கித் துதித்துச் சிவாநந்தப் பெருவாழ்வு அடைந்தார்கள். உபமன்யு முனிவர் கிருஷ்ணருக்குச் சிவதீக்ஷை செய்து சிவபூஜை எழுந்தருளப் பண்ணிக்கொடுத்த சைவாசாரியர். ஜைமினி முனிவர் நடேசப்பெருமானை வேதபாத ஸ்தவத்தினாலே துதித்தவர். வேதபாத ஸ்தவமாவது முதன் மூன்று பாதமுங் தமது வாக்காவும், நான்காம் பாதம் வேதமாகவும் செய்யப்பட்ட தோத்திரம். [ஸ்தவம் – தோத்திரம்.]

      பரங்கருணைத் தடங்கடலாகிய நடேசப்பெருமானுடைய இலக்கணங்களை உண்மை நூல் வாயிலாக அறிந்து, நல்லொழுக்கத்தின் வழுவது நிலைகொண்டு, அவருடைய விளக்கத்துக்கு இடமாகிய திருவுருவை விராட்புருடனாகிய பிரமாவினது பிரமாண்ட சரீரத்தின் இருதய கமலமாகிய தில்லையிலே நாடோறும் விதிப்படி அன்போடு தரிசித்துக் கொண்டு வந்தவர், அந்நடேசப் பெருமானைத் தமது பிண்ட சரீரத்தினது இருதய கமலமாகிய தகரத்திலே தியானித்துத் தரிசித்துப் பாசநீங்கி முத்தி அடைவர். இதுவே தகர வித்தை. தகரவித்தை சாந்தோக்கியோபநிடதத்திலும், கைவல்லியோபநிடதத்திலும் பேசப்பட்டது.

      சிதம்பரத்துக்குச் சிதம்பர மான்மியம், புண்டரீகபுரமான்மியம், வியாக்கிரபுர மான்மியம், ஏமசபா மான்மியம், தில்லைவன மான்மியம் என வடமொழியில் ஐந்து மான்மியங்கள் உள்ளன. (நாவலர் சிதம்பர மான்மியம்.)

தீர்த்த மஹிமை

      சிதம்பரத்திலே பத்துத் தீர்த்தங்கள் உள்ளன. அவையாவன: -

1.     சிவகங்கை               -      இது கனகசபைக்கு வடக்கே உள்ளது.

2.     குய்ய தீர்த்தம்           -      இது திருக்கோயிலுக்கு வடகிழக்கே உள்ள சமுத்திரத்திற் பாசமறுத்த துறை.

3.     புலிமடு                  -      இது திருக்கோயிலுக்குத் தெற்கே உள்ளது.

4.     வியாக்கிரபாத தீர்த்தம்    -      இது திருக்கோயிலுக்கு மேற்கே, திருப்புலீச்சுரத்துக்கு எதிரே உள்ளது. இது இளமைநாயனார் குளம் எனவும் பெயர் பெறும்.

5.     அனந்த தீர்த்தம்          -      இது திருக்கோயிலுக்கு மேற்கே திருவனந்தேச்சுரத்துக்கு முன் உள்ளது.

6.     நாகசேரி                 -      இது திருவனந்த்தேச்சுரத்துக்கு மேற்ௐஏ உள்ளது.

7.     பிரம தீர்த்தம்            -      இது திருக்கோயிலுக்கு வடமேற்கே திருக்களாஞ்சேரியில் உள்ளது.

8.     சிவப்பிரியை             -      இது திருக்கோயிலுக்கு வடக்கே பிரமசாமுண்டி கோயிலுக்கு முன்னே உள்ளது.

9.     திருப்பாற் கடல்          -      இது சிவப்பிரியைக்குத் தென்கிழக்கே உள்ளது.

10.    பரமானந்த கூபம்         -      இது கனகசபைக்குக் கிழக்கே உள்ளது.

      சிவகங்கை சிவவடிவம். அது கோடி ஜன்மார்ஜிதமான பாவ சமூகங்களைத் தனது மகாத்மிய புண்ணிய சிரவணத்தினாற் போக்க வல்லமையுள்ளது. அச்சிவகங்கையின் தென்கரையில் சிவபெருமான் ஆநந்தத்தாண்டவம் செய்துவருகின்றார். அத்தீர்த்தம் உலகின் கண்ணுள்ள எல்லாப் புனித தீர்த்தங்களிலும் மிகப் புனிதமுடையது. புண்ணியத்தை விருத்திசெய்து வீடளித்தற்குப் பெரிய காரணமானது. தங்கமயமான பங்கய மலர்ந்து எங்கும் மணம் வீசும் அத்தீர்த்தத்தில் பக்தியில்லாது, விளையாட்டாகவாயினும் அருந்தல் குளித்தல் ஸ்நான முதலியவைகள் செய்தவரைப் பார்த்த எமனுடைய ஹிருதயம் நடுங்கும். அவர்களுடைய வரவை நினைத்துச் சிவலோகம் விசாலத்தை அபேக்ஷிக்கும். புண்ணியம் நிறைந்த அத்தீர்த்தத்தில் ஒருமுறை ஸ்நானஞ் செய்தவன் பிறகு எத்தலத்தில் எவ்விதமா யிருப்பினும் சிவலோகத்தை யடைவான். அதில் ஸ்நானஞ்செய்து, சிற்றம்பலத்தில் நர்த்தனஞ் செய்யும் சிவபெருமானைத் தரிசித்துச் சிவ பஞ்சாக்ஷரத்தை ஆயிரத்தெட்டு உரு ஜெபித்தவன் சகல பாவங்களினின்றும் விடுபட்டு சிவரூபத்தை யடைவான். மேஷ சங்கரமணத்தில் ஸ்நானஞ் செய்தவர்கள் உடனே மகா பாவங்களினின்றும் விடுபடுவார்கள். ஆனிமாசப் பிரவேசத்திலும், அந்தமாசத்திய கிருஷ்ணபக்ஷ அஷ்டமியிலும் ஸ்நாநஞ் செய்தவர்கள் அளவிறந்த சிவ புண்ணியங்களை அடைவார்கள். துலா மாசத்தில் உத்திர நக்ஷத்த்ரத்தில் ஸ்நானஞ் செய்தவர்கள் ஜனன மரணத்தினின்றும் நீங்குவார்கள். தை மாசத்தில் புஷ்ய நக்ஷத்திரத்தில் ஸ்நானஞ் செய்தவர்கள் தேவர்கட்கெல்லாம் தலைவராவார்கள். பங்குனி மாசத்தில் உத்திர நக்ஷத்திரத்தில் ஸ்நானஞ் செய்தவர்கள் சிவபெருமானது சாரூப்பியத்தை யடைவார்கள். சுக்கிரவாரத்தில் ஸ்நானம் பண்ணினவர்களின் புண்ணியவிசேஷத்தைச் சொல்ல முடியாது. மாசிமாசம் கிருஷ்ணபக்ஷம் அஷ்டமியில் ஸ்நானஞ் செய்தவர்கள் பிதுர் குலங்களில் நூறு குலங்களை மோக்ஷத்திற் சேர்ப்பார்கள். ஆவணி மாசத்தில் ஸ்நானஞ் செய்து தர்ப்பணஞ் செய்தவர்கள் இருபத்தொரு குலங்களைத் திருப்தி செய்விப்பார்கள். மார்கழி மாசத்தில் சுக்கில பக்ஷத்திலாவது கிருஷ்ண பக்ஷத்திலாவது பிதுருக்களை உத்தேசித்து அச் சிவகங்கைக் கரையில் சிராத்தஞ் செய்பவர்கள் ஏழு குலங்களைத் தாரணஞ் செய்விப்பார்கள். சந்திர சூரியர்களுடைய கிரஹண காலங்களிலும், திருவாதிரை நக்ஷத்திரத்திலும் ஸ்நானஞ் செய்து சிராத்தம் புரிபவர்கள், கதியற்றவர்களாய்ப் பசியாலும் தாகத்தாலும் வருந்துகிறவர்களான தமது குல பிதுருக்களைப் பிரமகற்பம் வரையில் நித்திய திருப்தர்களாகச் செய்வார்கள். அப் புண்ணிய தடாகக்கரையில் பிராமண போஜனஞ் செய்து வைப்பவர்கள் தமது வம்சங்களுடன் சிவசாயுஜ்ஜியத்தை யடைவார்கள்.

      பரமானந்த கூபம் சிவசத்தி வடிவம். அதிலே சுக்கிர வாரம் நவமி என்பவைகளிலே ஸ்நானஞ் செய்வது விசேஷம். ஐப்பசிமாச சுக்கிலபக்ஷநவமி, மாசிமாச சுக்கிலபக்ஷ சதுர்த்தசி, சூரியகிரஹணம், சந்திர கிரஹணம் என்பவைகளிலே ஸ்நானஞ் செய்வது மகாவிசேஷம். பரமானந்த கூபத்திலே ஐப்பசி மாசம் சுக்கில பக்ஷ நவமியிலே ஸ்நானஞ் செய்து அன்று முதல் ஒரு வருஷகாலம் இடைவிடாது நாடோறும் அத்தீர்த்தத்தில் ஓர் உழுந்தளவு உட்கொண்டு வருவது உத்தமோத்தம புண்ணியம்.

      தை அமாவாசை தோறும் சிவபெருமான் சிவகங்கை முதல் பரமானந்த கூபம் இறுதியாகிய பத்துத் தீர்த்தத்தினும் எழுந்தருளித் தீர்த்தங் கொடுத்தருளுவர். அத்தினத்தில் இப்பத்துத் தீர்த்தத்திலுஞ் சிவபெருமானைச் சேவித்துக் கொண்டு, உடன்சென்று, சிரத்தையோடு ஸ்நானஞ் செய்வது மகா புண்ணியம்.

Contact Address

அமைவிடம்
அ/மி. நடராசர் திருக்கோயில்,
சிதம்பரம் & அஞ்சல் - 608 001.
கடலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04144 - 231166, 094439 86996.
மாநிலம் : தமிழ் நாடு

சென்னை - திருச்சிராப்பள்ளி மெயின்லைன் இருப்புப் பாதையில் உள்ள புகைவண்டி நிலையம். தமிழகத்தின் பல இடங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

Related Content

திருக்காழி (சீர்காழி)

திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோவில்)

திருக்கண்ணார்கோயில் (குறுமாணக்குடி)

திருப்புள்ளமங்கை

வைகல்மாடக்கோயில்