பண் - கொல்லிக்கௌவாணம்
திருச்சிற்றம்பலம்
393 | தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன் இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன் வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன் விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன் அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. |
7.39.1 |
394 | இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன் ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன் கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன் கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன் மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன் எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன் அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. |
7.39.2 |
395 | மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன் முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன் செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன் திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன் மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன் ஆரூரான் ஆரூரில் அம்மானுக் காளே. |
7.39.3 |
396 | திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன் பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன் பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன் ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன் ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன் அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. |
7.39.4 |
397 | வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும் மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன் நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன் நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன் அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. |
7.39.1 |
398 | வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன் சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன் செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவார்க்கும் அடியேன் கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன் ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. |
7.39.6 |
399 | பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன் பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன் மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன் விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன் கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன் கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன் ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. |
7.39.7 |
400 | கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன் நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன் துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித் தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன் அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. |
7.39.8 |
401 | கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன் மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்குந் தஞ்சை மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன் புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன் அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. |
7.39.9 |
402 | பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன் திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன் முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. |
7.39.10 |
403 | மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல் வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன் திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன் என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன் இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன் அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார் ஆரூரில் அம்மானுக் கன்ப ராவாரே. |
7.39.11 |
திருச்சிற்றம்பலம்