வானவர்கள் வேண்ட
வளர்நஞ்சை உண்டார்தாம்
ஊனமிலா என்கை
ஒளிவளைகள் கொள்வாரோ
தேனல்வரி வண்டறையும்
தில்லைச்சிற்றம்பலவர்
நானமரோ என்னாதே
நாடகமே ஆடுவரே. 1
ஆடிவரும் கார்அரவும்
ஐம்மதியும் பைங்கொன்றை
சூடிவருமா கண்டேன்
தோள்வளைகள் தோற்றாலும்
தேடியிமை யோர்பரவும்
தில்லைச்சிற்றம் பலவர்
ஆடிவரும் போதருகே
நிற்கவுமே ஒட்டாரே. 2
ஒட்டா வகைஅவுணர்
முப்புரங்கள் ஓர்அம்பால்
பட்டாங்(கு) அழல்விழுங்க
எய்துகந்த பண்பினார்
சிட்டார் மறையோவாத்
தில்லைச்சிற்றம் பலவர்
கொட்டா நடமாடக்
கோல்வளைகள் கொள்வாரே. 3
ஆரே இவைபடுவார்
ஐயங் கொளவந்து
போரேடி என்று
புருவம் இடுகின்றார்
தேரார் விழவோவாத்
தில்லைச்சிற் றம்பலவர்
தீராநோய் செய்வாரை
ஓக்கின்றார் காணீரே. 4
காணீரே என்னுடைய
கைவளைகள் கொண்டார்தாம்
சேணார் மணிமாடத்
தில்லைச்சிற் றம்பலவர்
பூணார் வனமுலைமேல்
பூஅம்பால் காமவேள்
ஆணாடு கின்றவா
கண்டும் அருளாரே. 5
ஏயிவரே வானவர்க்கும்
வானவரே என்பாரால்
தாயிவரே எல்லார்க்கும்
தந்தையுமாம் என்பாரால்
தேய்மதியம் சூடிய தில்லைச்
சிற்றம் பலவர்
வாயின கேட்டறிவார்
வையகத்தார் ஆவாரே. 6
ஆவா ! இவர்தம்
திருவடிகொண்டு அந்தகன்தன்
மூவா உடலவியக்
கொன்றுகந்த முக்கண்ணர்
தேவா மறைபயிலும்
தில்லைச்சிற்றம் பலவர்
கோவா இனவளைகள்
கொள்வாரோ என்னையே. 7
என்னை வலிவாரார் என்ற
இலங்கையர் கோன்
மன்னும் முடிகள்
நெரித்த மணவாளர்
செந்நெல் விளைகழனித்
தில்லைச் சிற்றம்பலவர்
முன்னந்தான் கண்டறிவார் ஒவ்வார்
இம் முத்தரே. 8
முத்தர் முதுபகலே
வந்தென்றன் இல்புகுந்து
பத்தர் பலியிடுக
என்றெங்கும் பார்க்கின்றார்
சித்தர் கணம்பயிலும்
தில்லைச்சிற்றம் பலவர்
கைத்தலங்கள் வீசிநின்
றாடுங்கால் நோக்காரே. 9
நோக்காத தன்மையால்
நோக்கிலோம் யாமென்று
மாற்காழி ஈந்து
மலரோனை நிந்தித்துச்
சேக்காத லித்தேறும்
தில்லைச்சிற்றம்பலவர்
ஊர்க்கேவந்(து) என்வளைகள்
கொள்வாரோ ஒண்ணுதலீர்! 10
ஒண்ணுதலி காரணமா
உம்பர் தொழுதேத்தும்
கண்ணுதலான் தன்னைப்
புருடோத்தமன் சொன்ன
பண்ணுதலைப் பத்தும்
பயின்றாடிப் பாடினார்
எண்ணுதலைப் பட்டங்கு
இனிதா இருப்பாரே. 11
திருச்சிற்றம்பலம்