உயர்கொடி யாடை மிடைபட லத்தின்
ஓமதூ மப்பட லத்தின்
பெயர்நெடு மாடத்(து) அகிற்புகைப் படலம்
பெருகிய பெரும்பற்றப் புலியூர்ச்
சியரொளி மணிகள் நிரந்துசேர் கனகம்
நிறைந்தசிற் றம்பலக் கூத்தா !
மயர்வறும் அமரர் மகுடந்தோய் மலர்ச்சே
வடிகள்என் மனத்துவைத் தருளே. 1
கருவளர் மேகத் தகடுதோய் மகுடக்
கனகமா ளிகைகலந் தெங்கும்
பெருவளர் முத்தீ நான்மறைத் தொழிலால்
எழில்மிகு பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் தெய்வப் பதிவிதி நிதியம்*
திரண்டசிற் றம்பலக் கூத்தா !
உருவளர் இன்பச் சிலம்பொலி அலம்பும்
உன்னடிக் கீழ(து)என் னுயிரே.
( * பதி வதி நிதியம் என்றும் பாடம்) 2
வரம்பிரி வாளை மிளிர்மடுக் கமலம்
கரும்பொடு மாந்துமே திகள்சேர்
பரம்பிரி செந்நெல் கழனிச் செங்கழுநீர்ப்
பழனம்சூழ் பெரும்பற்றப் புலியூர்ச்
சிரம்புரை முடிவா னவர்அடி முறையால்
இறைஞ்சுசிற் றம்பலக் கூத்தா
நிரந்தரம் முனிவர் நினைதிருக் கணைக்கால்
நினைந்துநின்(று) ஒழிந்ததென் நெஞ்சே. 3
தேர்மலி விழவில் குழலொலி தெருவில்
கூத்தொலி ஏத்தொலி ஓத்தின்
பேரொலி பரந்து கடலொலி மலியப்
பொலிதரு பெரும்பற்றப் புலியூர்ச்
சீர்நில(வு) இலயத் திருநடத் தியல்பில்
திழந்தசிற் றம்பலக் கூத்தா !
வார்மலி முலையாள் வருடிய திரள்மா
மணிக்குறங்(கு) அடைந்ததென் மதியே. 4
நிறைதழை வாழை நிழற்கொடி நெடுந்தெங்(கு)
இளங்கமுகு உளங்கொள்நீள் பலமாப்
பிறைதவழ் பொழில்சூழ் கிடங்கிடைப் பதணம்
முதுமதிற் பெரும்பற்றப் புலியூர்ச்
சிறைகொள்நீர்த் தரளத் திரள்கொள்நித் திலத்த
செம்பொற் சிற்றம்பலக் கூத்தா !
பொறை யணி நிதம்பப் புலியதள் ஆடைக்
கச்சுநூல் புகுந்ததென் புகலே. 5
அதுமதி இதுவென்(று) அலந்தலை நூல்கற்(று)
அழைப்பொழிந்(து) அருமறை அறிந்து
பிதுமதி வழிநின்(று) ஒழிவிலா வேள்விப்
பெரியவர் பெரும்பற்றப் புலியூர்ச்
செதுமதிச் சமணும் தேரரும் சேராச்
செல்வச் சிற்றம்பலக் கூத்தா !
மதுமதி வெள்ளத் திருவயிற்(று) உந்தி
வளைப்புண்(டு)என் னுள்மகிழ்ந் ததுவே. 6
பொருவரைப் புயத்தின் மீமிசைப் புலித்தோல்
பொடியணி பூணநூல் அகலம்
பெருவரை புரைதிண் தோளுடன் காணப்
பெற்றவர் பெரும்பற்றப் புலியூர்த்
திருமரு(வு) உதரத் தார்திசை யடைப்ப
நடஞ்செய்சிற் றம்பலக் கூத்தா !
உருமரு(வு) உதரத் தனிவடம் தொடர்ந்து
கிடந்த(து)என் உணர்வுணர்ந்(து) உணர்ந்தே. 7
கணியெரி விசிறு கரம்துடி விடவாய்க்
கங்கணம் செங்கைமற் றபயம்
பிணிகெட இவைகண்(டு) உன்பெரு நடத்திற்
பிரிவிலார் பெரும்பற்றப் புலியூர்த்
திணிமணி நீல கண்டத்(து)என் அமுதே !
சீர்கொள்சிற் றம்பலக் கூத்தா !
அணிமணி முறுவல் பவளவாய்ச் செய்ய
சோதியுள் அடங்கிற்(று)என் அறிவே. 8
திருநெடு மால்இந் திரன்அயன் வானோர்
திருக்கடைக் காவலின் நெருக்கிப்
பெருமுடி மோதி உகுமணி முன்றில்
பிறங்கிய பெரும்பற்றப் புலியூர்ச்
செருநெடு மேரு வில்லின்முப் புரம்தீ
விரித்தசிற் றம்பலக் கூத்தா !
கருவடி குழைக்கா(து) அமலச்செங் கமல
மலர்முகம் கலந்த(து)என் கருத்தே. 9
ஏர்கொள்கற் பகம்ஒத்(து) இருசிலைப் புருவம்
பெருந்தடங் கண்கள்மூன் றுடையுன்
பேர்கள்ஆ யிரம்நூறாயிரம் பிதற்றும்
பெற்றியோர் பெரும்பற்றப் புலியூர்ச்
சீர்கொள் கொக் கிறகும் கொன்றையும் துன்று
சென்னிச் சிற்றம்பலக் கூத்தா !
நீர்கொள்செஞ் சடைவாழ் மதிபுது மத்தம்
நிகழ்ந்தஎன் சிந்தையுள் நிறைந்தே. 10
காமனைக் காலன் தக்கன்மிக் கெச்சன்
படக்கடைக் கணித்தவன் அல்லாப்
பேய்மனம் பிறிந்த தவப்பெருந் தொண்டர்
தொண்டனேன் பெரும்பற்றப் புலியூர்ச்
சேமநற் றில்லை வட்டங்கொண்(டு) ஆண்ட
செல்வச்சிற் றம்பலக் கூத்தா !
பூமலர் அடிக்கீழ்ப் புராணபூ தங்கள்
பொறுப்பர்என் புன்சொலின் பொருளே. 11
திருச்சிற்றம்பலம்