மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்
மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்
மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்
மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே. 1
உலந்திலர் பின்னும் உளரென நிற்பீர்
நிலந்தரு நீர்தெளி யூனவை செய்யப்
புலந்திரு பூதங்கள் ஐந்தும் ஒன்றாக
வலந்தரு தேவரை வந்திசெய் யீரே. 2
கோயில்கொண் டன்றே குடிகொண்ட ஐவரும்
வாயில்கொண் டாங்கே வழிநின் றருளுவர்
தாயில்கொண் டாற்போல் தலைவன்என் உட்புக
வாயில்கொண்டு ஈசனும் ஆளவந் தானே. 3
கோயில்கொண் டான்அடி கொல்லைப் பெருமறை
வாயில்கொண் டான்அடி நாடிகள் பத்துள
பூசைகொண் டான்புலன் ஐந்தும் பிறகிட்டு
வாயில்கொண் டான் எங்கள் மாநந்தி தானே. 4
திருச்சிற்றம்பலம்