பதிக வகை: கிண்கிணி
மையல் மாதொரு கூறன் மால்விடை யேறி மான்மறி யேந்தியதடம் கையன் கார்புரை யும்கறைக் கண்டன் கனல்மழுவான் ஐயன் ஆரழல் ஆடு வான்அணி நீர்வயல் தில்லை அம்பலத்தான் செய்ய பாதம் வந்தென் சிந்தையுள்ளிடம் கொண்டனவே. 1
பதிக வகை: திருத்துடை
சலம்பொற் றாமரை தாழ்ந்தெ ழுந்த தடமும் தடம்புனல் வாய்மலர் தழீஇ அலம்பி வண்டறையும் அணி யார்தில்லை அம்பலவன் புலம்பி வானவர் தானவர் புகழ்ந்(து) ஏத்த ஆடுபொற் கூத்தனார் கழல் சிலம்பு கிண்கிணி என் சிந்தையுள்ளிடங் கொண்டனவே. 2
பதிக வகை: பூணூல், கச்சு
குருண்ட வார்குழல் கோதை மார்குயில் போன்மிழற்றிய கோல மாளிகை திரண்ட தில்லை தன்னுள் திருமல்கு சிற்றம் பலவன் மருண்டு மாமலை யான்மகள் தொழ ஆடுங் கூத்தன் மணிபுரை தரு திரண்ட வான்குறங்கென் சிந்தை யுள்ளிடங் கொண்டனவே. 3
பதிக வகை: திருமேனி, வயிறு, உந்தி
போழ்ந்தி யானை தன்னைப் பொருப்பன் மகள்உமை அச்சங் கண்டவன் தாழ்ந்த தண்புனல்சூழ் தடமல்கு சிற்றம்பலவன் சூழ்ந்த பாய்புலித் தோல்மிசைத் தொடுத்து வீக்கும் பொன்நூல் தன்னினொடு தாழ்ந்த கச்ச தன்றே தமியேனைத் தளர்வித்ததே. 4
பதிக வகை: அணிகள்
பந்த பாசமெலாம்அறப் பசுபாசம் நீக்கிய பன்முனிவரோ(டு) அந்தணர் வணங்கும் அணியார் தில்லை அம்பலவன் செந்தழல் புரைமேனியும் திகழும் திருவயிறும் வயிற்றினுள் உந்திவான்சுழி என்உள்ளத்துள்ளிடங் கொண்டனவே. 5
பதிக வகை: திருக்கைகள் முதலியன
குதிரை மாவொடு தேர்பல குவிந்(து) ஈண்டு தில்லையுள் கொம்ப னாரொடு மதுரவாய் மொழியார் மகிழ்ந்தேத்து சிற்றம் பலவன் அதிர வார்கழல் வீசி நின்றழ காநடம்பயில் கூத்தன் மேல்திகழ் உதர பந்தனம் என்னுள்ளத் துள்ளிடங் கொண்டனவே. 6
பதிக வகை: பல், காது முதலியன
படங்கொள் பாம்பணை யானொடு பிரமன் பரம்பரமா அருளென்று தடங்கையால் தொழவும் தழலாடுசிற் றம்பலவன் தடங்கை நான்கும்அத் தோள்களும் தடமார்பினில் பூண்கள் மேற்றிசை விடங்கொள் கண்ட மன்றே வினையேனை மெலிவித்தவே. 7
பதிக வகை: திருமுகம் முதலியன
செய்ய கோடுடன் கமலமலர் சூழ்தரு தில்லை மாமறை யோர்கள் தாந்தொழ வையம் உய்யநின்று மகிழ்ந்தாடு சிற்றம் பலவன் செய்யவாயின் முறுவலும் திகழும் திருக்காதும் காதினின் மாத்திரைகளோ(டு) ஐய தோடும் அன்றே அடியேனை ஆட்கொண் டனவே. 8
பதிக வகை: திருமுடி
செற்றுவன் புரந்தீ எழச்சிலை கோலி ஆரழல் ஊட்டினான் அவன் எற்றி மாமணிகள் எறிநீர்த் தில்லை அம்பலவன் மற்றை நாட்டம் இரண்டொடு மலரும் திருமுக மும்முகத்தினுள் நெற்றி நாட்டம் அன்றே நெஞ்சு ளேதிளைக் கின்றனவே. 9
தொறுக்கள் வான்கமல மலர்உழக்கக் கரும்பு நற்சாறு பாய்தர மறுக்கமாய்க் கயல்கள் மடைபாய் தில்லை அம்பலவன் முறுக்கு வார்சிகை தன்னொடு முகிழ்த்தஅவ் அகத்து மொட்டொடு மத்தமும் பிறைக்கொள் சென்னி யன்றே பிரியா(து) என்னுள் நின்றனவே. 10
தூவி நீரொடு பூஅவை தொழு(து) ஏத்து கையின ராகி மிக்கதோர் ஆவி உள்நிறுத்தி அமர்ந்தூறிய அன்பினராய்த் தேவர் தாந்தொழ ஆடிய தில்லைக் கூத்தனைத் திருவாலி சொல்லிவை மேவ வல்லவர்கள் விடையான்அடி மேவுவரே. 11