உறவா கியயோ கமும்போ கமுமாய்
உயிராளீ என்னும்என் பொன்னொருநாள்
சிறவா தவர்புரஞ் செற்ற கொற்றச்
சிலைகொண்டு பன்றிப்பின் சென்றுநின்ற
மறவா என்னும் மணிநீர் அருவி
மகேந்திர மாமலைமேல் உறையும்
குறவா என்னும் குணக்குன்றே என்னும்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 1
காடாடு பல்கணம் சூழக் கேழற்
கடும்பின் நெடும்பகற் கான்நடந்த
வேடா ! மகேந்திர வெற்பா ! என்னும்
வினையேன் மடந்தைவிம் மாவெருவும்
சேடா என்னும் செல்வர்மூ வாயிரம்
செழுஞ்சோதி அந்தணர் செங்கைதொழும்
கோடா என்னும் குணக்குன்றே என்னும்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 2
கானே வருமுரண் ஏனம் எய்த
களியார் புளினநற்கா ளாய்என்னும்
வானே தடவும் நெடுங் குடுமி
மகேந்திர மாமலை மேலிருந்த
தேனே என்னும் தெய்வவாய் மொழியார்
திருவாளர்மூ வாயிரவர் தெய்வக்
கோனே என்னும் குணக்குன்றே என்னும்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 3
வெறியேறு பன்றிப் பின்சென்(று) ஒருநாள்
விசயற்(கு) அருள்செய்த வேந்தே என்னும்
மறியேறு சாரல் மகேந் திரமா
மலைமேல் இருந்த மருந்தே ! என்னும்
நெறியே! என்னும் நெறிநின்ற வர்கள்
நினைக்கின்ற நீதி வேதாந்த நிலைக்
குறியே !என்னும் குணக்குன்றே ! என்னும்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 4
செழுந்தென்றல் அன்றில்இத் திங்கள் கங்குல்
திரைவீரை தீங்குழல் சேவின்மணி
எழுந்தின்று என்மேல் பகையாட வாடும்
எனைநீ நலிவதென் னேஎன்னும்
அழுந்தா மகேந்திரத்(து) அந்த ரப்புட்(கு)
அரசுக் கரசே ! அமரர்தனிக்
கொழுந்தே என்னும் குணக்குன்றே என்னும்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 5
கடுப்பாய்ப் பறைகறங்கக் கடுவெஞ் சிலையும்
கணையும் கவணும் கைக்கொண்(டு)
உடுப்பாய் தோல்செருப்புச் சுரிகை
வராக முன்னோடி விளியுளைப்ப
நடப்பாய் ! மகேந்திர நாத ! நாதாந்தத்(து)
அரையா என்பார்க்கு நாதாந்தபதம்
கொடுப்பாய் என்னும் குணக்குன்றே என்னும்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 7
சேவேந்து வெல்கொடி யானே ! என்னும்
சிவனே ! என் சேமத்துணையே என்னும்
மாவேந்து சாரல் மகேந்தி ரத்தில்
வளர்நா யகா ! இங்கே வாராய் என்னும்
பூவேந்தி மூவா யிரவர் தொழப்
புகழேந்து மன்று பொலிய நின்ற
கோவே ! என்னும் குணக்குன்றே ! என்னும்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 8
தரவார் புனம்சுனை தாழ்அருவித்
தடம்கல் லுறையும் மடங்கல் அமர்
மரவார் பொழில்எழில் வேங்கை எங்கும்
மழைசூழ் மகேந்திர மாமலைமேல்
சுரவா ! என்னும் சுடர்நீள் முடிமால்அயன்
இந்திரன் முதல்தே வர்க்கெல்லாம்
குரவா என்னும் குணக்குன்றே என்னும்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 9
திருநீ றிடாவுருத் தீண்டேன் என்னும்
திருநீறு மெய்த்திரு முண்டத்திட்டுப்
பெருநீல கண்டன் திறங்கொண்(டு) இவள்
பிதற்றிப் பெருந்தெரு வேதிரியும்
வருநீர் அருவி மகேந்திரப்பொன்
மலையின் மலைமக ளுக்கருளும்
குருநீ என்னும் குணக்குன்றே ! என்னும்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 10
உற்றாய் என்னும் உன்னையன்றி மற்றொன்(று)
உணரேன் என்னும் உணர்வுகள் கலக்கப்
பெற்றாய ஐந்தெழுத்தும் பிதற்றிப்
பிணிதீர வெண்ணீறிடப் பெற்றேன் என்னும்
சுற்றாய சோதி மகேந்திரம் சூழ
மனத்திருள் வாங்கிச் சூழாத நெஞ்சில்
குற்றாய் ! என்னும் குணக்குன்றே ! என்னும்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 11
வேறாக உள்ளத்(து) உவகை விளைத்(து)
அவனிச் சிவலோக வேதவென்றி
மாறாத மூவாயிர வரையும் எனையும்
மகிழ்ந்தாள வல்லாய் ! என்னும்
ஆறார் சிகர மகேந்திரத்(து) உன்
அடியார் பிழைபொறுப்பாய் மாதோர்
கூறாய் என்னும் குணக்குன்றே என்னும்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 12
திருச்சிற்றம்பலம்
அ௫ளியவர் : திருமாளிகைத்தேவர்
திருமுறை : ஒன்பதாம் திருமுறை
பண் : பஞ்சமம்
நாடு : சோழநாடு காவிரி வடகரை
தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)
சிறப்பு: திருமாளிகைத்தேவர் அருளிய கோயில் உறவாகிய யோகம் திருவிசைப்பா