சேதி நன்னாட்டு நீடு திருக்
கோவலூரின் மன்னி
மாதொரு பாகர் அன்பின் வழி
வரு மலாடர் கோமான்
வேத நல் நெறியின் வாய்மை
விளங்கிட மேன்மை பூண்டு
காதலால் ஈசர்க்கு அன்பர் கருத்து
அறிந்து ஏவல் செய்வார். 1
அரசியல் நெறியின் வந்த
அறநெறி வழாமல் காத்து
வரை நெடுந்தோளால் வென்று
மாற்றலர் முனைகள் மாற்றி
உரை திறம்பாத நீதி
ஓங்கு நீர்மையினின் மிக்கார்
திரை செய் நீர்ச்சடையான் அன்பர்
வேடமே சிந்தை செய்வார். 2
மங்கையைப் பாகமாக உடையவர்
மன்னும் கோயில்
எங்கணும் பூசை நீடி
ஏழிசைப் பாடல் ஆடல்
பொங்கிய சிறப்பின் மல்கப்
போற்றுதல் புரிந்து வாழ்வார்
தங்கள் நாயகருக்கு அன்பர் தாளலால்
சார்பு ஒன்று இல்லார். 3
தேடிய மாடு நீடு
செல்வமும் தில்லை மன்றுள்
ஆடிய பெருமான் அன்பர்க்கு
ஆவன ஆகும் என்று
நாடிய மனத்தினோடு நாயன்மார்
அணைந்த போது
கூடிய மகிழ்ச்சி பொங்கக் குறைவு
அறக் கொடுத்து வந்தார். 4
இன்னவாறு ஒழுகும் நாளில் இகல்
திறம் புரிந்து ஓர் மன்னன்
அன்னவர் தம்மை வெல்லும்
ஆசையால் அமர் மேற்கொண்டு
பொன் அணி ஓடை யானைப்
பொரு பரி காலாள் மற்றும்
பன் முறை இழந்து தோற்றுப்
பரிபவப் பட்டுப் போனான். 5
இப்படி இழந்த மாற்றான்
இகலினால் வெல்ல மாட்டான்
மெய்ப் பொருள் வேந்தன் சீலம்
அறிந்து வெண் நீறு சாத்தும்
அப்பெரு வேடம் கொண்டே
அற்றத்தில் வெல்வான் ஆகச்
செப்பரு நிலைமை எண்ணித்
திருக் கோவலூரில் சேர்வான். 6
மெய் எல்லாம் நீறு பூசி
வேணிகள் முடித்துக் கட்டிக்
கையினில் படை கரந்த
புத்தகக் கவளி ஏந்தி
மை பொதி விளக்கே என்ன
மனத்தினுள் கறுப்பு வைத்துப்
பொய் தவ வேடம் கொண்டு
புகுந்தனன் முத்த நாதன். 7
மா தவ வேடம் கொண்ட
வன்கணான் மாடம் தோறும்
கோதை சூழ் அளக பாரக்
குழைக் கொடி ஆட மீது
சோதி வெண் கொடிகள் ஆடுஞ்
சுடர் நெடு மறுகில் போகிச்
சேதியர் பெருமான் கோயில்
திருமணி வாயில் சேர்ந்தான். 8
கடை உடைக் காவலாளர்
கை தொழுது ஏற நின்றே
உடையவர் தாமே வந்தார் உள்
எழுந்து அருளும் என்னத்
தடை பல புக்க பின்பு
தனித் தடை நின்ற தத்தன்
இடை தெரிந்து அருள வேண்டும்
துயில் கொள்ளும் இறைவன் என்றான். 9
என்று அவன் கூறக் கேட்டே
யான் அவற்கு உறுதி கூற
நின்றிடு நீயும் என்றே
அவனையும் நீக்கிப் புக்குப்
பொன் திகழ் பள்ளிக் கட்டில்
புரவலன் துயிலு மாடே
மன்றலங் குழல் மென் சாயல்
மா தேவி இருப்பக் கண்டான். 10
கண்டு சென்று அணையும் போது
கதும் என இழிந்து தேவி
வண்டலர் மாலையானை எழுப்பிட
உணர்ந்து மன்னன்
அண்டர் நாயகனார் தொண்டராம்
எனக் குவித்த செங்கை
கொண்டு எழுந்து எதிரே சென்று
கொள்கையின் வணங்கி நின்று. 11
மங்கலம் பெருக மற்று என்
வாழ்வு வந்து அணைந்தது என்ன
இங்கு எழுந்து அருளப் பெற்றது
என் கொலோ என்று கூற
உங்கள் நாயகனார் முன்னம் உரைத்த
ஆகம நூல் மண்மேல்
எங்கும் இலாதது ஒன்று கொடு
வந்தேன் இயம்ப என்றான். 12
பேறு எனக்கு இதன் மேல்
உண்டோ பிரான் அருள் செய்த இந்த
மாறில் ஆகமத்தை வாசித்து
அருள்செய வேண்டும் என்ன
நாறு பூங் கோதை மாதுந்
தவிரவே நானும் நீயும்
வேறு இடத்து இருக்க வேண்டும்
என்று அவன் விளம்ப வேந்தன். 13
திருமகள் என்ன நின்ற
தேவியார் தம்மை நோக்கிப்
புரிவுடன் விரைய
அந்தப்புரத்திடைப் போக ஏவித்
தரு தவ வேடத்தானைத் தவிசின்
மேல் இருத்தித் தாமும்
இரு நிலத்து இருந்து போற்றி
இனி அருள் செய்யும் என்றான். 14
கைத் தலத்து இருந்த வஞ்சக்
கவளிகை மடி மேல் வைத்துப்
புத்தகம் அவிழ்ப்பான் போன்று புரிந்த
அவர் வணங்கும் போதில்
பத்திரம் வாங்கித் தான் முன்
நினைந்த அப் பரிசே செய்ய
மெய்த் தவ வேடமே மெய்ப்பொருள்
எனத் தொழுது வென்றார். 15
மறைத்தவன் புகுந்த போதே மனம்
அங்கு வைத்த தத்தன்
இறைப் பொழுதின் கண் கூடி
வாளினால் எறியல் உற்றான்
நிறைத்த செங் குருதி சோர
வீழ்கின்றார் நீண்ட கையால்
தறைப் படும் அளவில் தத்தா
நமர் எனத் தடுத்து வீழ்ந்தார். 16
வேதனை எய்தி வீழ்ந்த
வேந்தரால் விலக்கப் பட்ட
தாதனாந் தத்தன் தானும்
தலையினால் வணங்கித் தாங்கி
யாது நான் செய்கேன் என்ன
எம்பிரான் அடியார் போக
மீதிடை விலக்கா வண்ணம் கொண்டு
போய் விடு நீ என்றார். 17
அத் திறம் அறிந்தார் எல்லாம்
அரசனைத் தீங்கு செய்த
பொய்த் தவன் தன்னைக் கொல்வோம்
எனப் புடை சூழ்ந்த போது
தத்தனும் அவரை எல்லாம் தடுத்து
உடன் கொண்டு போவான்
இத் தவன் போகப் பெற்றது
இறைவனது ஆணை என்றான். 18
அவ்வழி அவர்கள் எல்லாம்
அஞ்சியே அகன்று நீங்கச்
செவ்விய நெறியில் தத்தன்
திருநகர் கடந்து போந்து
கை வடி நெடுவாள் ஏந்தி
ஆளுறாக் கானஞ் சேர
வெவ் வினைக் கொடியோன் தன்னை
விட்ட பின் மீண்டு போந்தான். 19
மற்று அவன் கொண்டு போன
வஞ்சனை வேடத்தான் மேல்
செற்றவர் தம்மை நீக்கித் தீது
இலா நெறியில் விட்ட
சொல் திறம் கேட்க வேண்டிச்
சோர்கின்ற ஆவி தாங்கும்
கொற்றவன் முன்பு சென்றான்
கோமகன் குறிப்பில் நின்றான். 20
சென்று அடி வணங்கி நின்று
செய் தவ வேடம் கொண்டு
வென்றவற்கு இடையூறு இன்றி
விட்டனன் என்று கூற
இன்று எனக்கு ஐயன் செய்தது
யார் செய வல்லார் என்று
நின்றவன் தன்னை நோக்கி நிறை
பெரும் கருணை கூர்ந்தார். 21
அரசியல் ஆயத்தார்க்கும்
அழிவுறும் காதலார்க்கும்
விரவிய செய்கை தன்னை
விளம்புவார் விதியினாலே
பரவிய திரு நீற்று அன்பு
பாது காத்து உய்ப்பீர் என்று
புரவலர் மன்றுள் ஆடும் பூங்
கழல் சிந்தை செய்தார். 22
தொண்டனார்க்கு இமயப் பாவை
துணைவனார் அவர் முன் தம்மைக்
கண்டவாறு எதிரே நின்று
காட்சி தந்தருளி மிக்க
அண்ட வானவர் கட்கு எட்டா
அருள் கழல் நீழல் சேரக்
கொண்டவா இடை அறாமல்
கும்பிடும் கொள்கை ஈந்தார். 23
இன்னுயிர் செகுக்கக் கண்டும்
எம்பிரான் அன்பர் என்றே
நன் நெறி காத்த சேதி
நாதனார் பெருமை தன்னில்
என் உரை செய்தேன் ஆக இகல்
விறன் மிண்டர் பொற் தாள்
சென்னி வைத்து அவர் முன் செய்த
திருத் தொண்டு செப்பல் உற்றேன். 24
திருச்சிற்றம்பலம்
அ௫ளியவர் : சேக்கிழார்
திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை
பண் :
நாடு :
தலம் :
சிறப்பு: திருத்தொண்டர் புராணம் - முதற் காண்டம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் - மெய்ப்பொருள் நாயனார் புராணம்