இணங்கிலா ஈசன் நேசத்(து)
இருந்தசித் தத்தி னேற்கு
மணங்கொள்சீர்த் தில்லை வாணன்
மணஅடி யார்கள் வண்மைக்
குணங்களைக் கூறா வீறில்
கோறைவாய்ப் பீறற் பிண்டப்
பிணங்களைக் காணா கண்வாய் பேசா(து)
அப் பேய்க ளோடே. 1
எட்டுரு விரவி என்னை
ஆண்டவன் ஈண்டு சோதி
விட்டிலங்(கு) அலங்கல் தில்லை
வேந்தனைச் சேர்ந்தி லாத
துட்டரைத் தூர்த்த வார்த்தைத்
தொழும்பரைப் பிழம்பு பேசும்
பிட்டரைக் காணா கண்வாய் பேசா(து)
அப் பேய்க ளோடே. 2
அருள்திரள் செம்பொன் சோதி
அம்பலத் தாடுகின்ற
இருள்திரள் கண்டத் தெம்மான்
இன்பருக்(கு) அன்பு செய்யா
அரட்டரை அரட்டுப் பேசும்
அழுக்கரைக் கழுக்க ளாய
பிரட்டரைக் காணா கண்வாய் பேசா(து)
அப் பேய்க ளோடே. 3
துணுக்கென அயனும் மாலும்
தொடர்வரும் சுடராய் இப்பால்
அணுக்கருக்(கு) அணிய செம்பொன்
அம்பலத் தாடிக்(கு) அல்லாச்
சிணுக்கரைச் செத்தற் கொத்தைச்
சிதம்பரைத் சீத்தை ஊத்தைப்
பிணுக்கரைக் காணா கண்வாய்
பேசா(து) அப்பேய்க ளோடே. 4
திசைக்குமிக் குலவு சீர்த்தித்
தில்லைக் கூத்(து) உகந்து தீய
நசிக்கவெண் ணீற(து) ஆடும்
நமர்களை நணுகா நாய்கள்
அசிக்கஆ ரியங்கள் ஓதும்
ஆதரைப் பேத வாதப்
பிசுக்கரைக் காணா கண்வாய் பேசா(து)
அப் பேய்க ளோடே. 5
ஆடர(வு) ஆட ஆடும்
அம்பலத்(து) அமிர்தே என்னும்
சேடர்சே வடிகள் சூடத்
திருவிலா உருவி னாரைச்
சாடரைச் சாட்கை மோடச்
சழக்கரைப் பிழக்கப் பிட்கப்
பேடரைக் காணா கண்வாய்
பேசாது அப் பேய்க ளோடே. 6
உருக்கிஎன் உள்ளத் துள்ளே
ஊறலந் தேறல் மாறாத்
திருக்குறிப்(பு) அருளும் தில்லைச்
செல்வன்பாற் செல்லும் செல்வில்
அருக்கரை அள்ளல் வாய
கள்ளரை அவியாப் பாவப்
பெருக்கரைக் காணா கண்வாய்
பேசா(து)அப் பேய்க ளோடே. 7
செக்கர்ஒத்(து) இரவி நூறா
யிரத்திரள் ஒப்பாம் தில்லைச்
சொக்கர்அம் பலவர் என்னும்
சுருதியைக் கருத மாட்டா
எக்கரைக் குண்ட மிண்ட
எத்தரைப் புத்த ராதிப்
பொக்கரைக் காணா கண்வாய்
பேசாது அப் பேய்க ளோடே. 8
எச்சனைத் தலையைக் கொண்டு
செண்டடித்(து) இடபம் ஏறி
அச்சங்கொண்(டு) அமரர் ஓட
நின்றஅம் பலவற்(கு) அல்லாக்
கச்சரைக் கல்லாப் பொல்லாக்
கயவரைப் பசுநூல் கற்கும்
பிச்சரைக் காணா கண்வாய் பேசா(து)
அப் பேய்க ளோடே. 9
விண்ணவர் மகுட கோடி
மிடைந்தொளிர் மணிகள் வீசும்
அண்ணல்அம் பலவன் கொற்ற
அரசனுக்(கு) ஆசை இல்லாத்
தெண்ணரைத் தெருளா உள்ளத்(து)
இருளரைத் திட்டை முட்டைப்
பெண்ணரைக் காணா கண்வாய் பேசா(து)
அப் பேய்க ளோடே. 10
சிறப்புடை அடியார் தில்லைச்
செம்பொன்அம் பலவற்(கு) ஆளாம்
உறைப்புடை யடியார் கீழ்க்கீழ்
உறைப்பர்சே வடிநீ(று) ஆடார்
இறப்பொடு பிறப்பி னுக்கே
இனியராய் மீண்டும் மீண்டும்
பிறப்பரைக் காணா கண்வாய் பேசா(து)
அப் பேய்க ளோடே. 11
திருச்சிற்றம்பலம்