அல்லாய்ப் பகலாய் அருவாய்
உருவாய் ஆரா அமுதமாய்க்
கல்லால் நிழலாய் கயிலை
மலையாய் காண அருளென்று
பல்லா யிரம்பேர் பதஞ்சலிகள்
பரவ வெளிப்பட்டுச்
செல்வாய் மதில் தில்லைக்(கு)
அருளித் தேவன் ஆடுமே 1
அன்ன நடையார் அமுத
மொழியார் அவர்கள் பயில்தில்லைத்
தென்னன் தமிழும் இசையும்
கலந்த சிற்றம் பலந்தன்னுள்
பொன்னும் மணியும் நிரந்த
தலத்துப் புலித்தோல் பியற்கிட்டு
மின்னின் இடையாள் உமையாள்
காண விகிர்தன் ஆடுமே. 2
இளமென் முலையார் எழில்மைந்
தரொடும் ஏரார் அமளிமேல்
திளையும் மாடத்திருவார் தில்லைச்
சிற்றம் பலந்தன்னுள்
வளர்பொன் மலையுள் வயிர
மலைபோல் வலக்கை கவித்துநின்(று)
அளவில் பெருமை அமரர்
போற்ற அழகன் ஆடுமே. 3
சந்தும் அகிலும் தழைப்பீ
லிகளும் சாதி பலவுங்கொண்டு
உந்தி இழியும் நிவவின்
கரைமேல் உயர்ந்த மதில்தில்லைச்
சிந்திப் பரிய தெய்வப்
பதியுட் சிற்றம் பலந்தன்னுள்
நந்தி முழவங் கொட்ட
நட்டம் நாதன் ஆடுமே. 4
ஓமப் புகையும் அகிலின்
புகையும் உயர்ந்துமுகில்தோயத்
தீமெய்த் தொழிலார் மறையோர்
மல்கு சிற்றம் பலந்தன்னுள்
வாமத்(து) எழிலார் எடுத்த
பாதம் மழலைச் சிலம்பார்க்கத்
தீமெய்ச் சடைமேல் திங்கள்
சூடித் தேவன் ஆடுமே. 5
குரவம் கோங்கம் குளிர்புன்னை
கைதை குவிந்த கரைகள்மேல்
திரைவந் துலவும் தில்லை
மல்கு சிற்றம் பலந்தன்னுள்
வரைபோல் மலிந்த மணிமண்
டபத்து மறையோர் மகிழ்ந்தேத்த
அரவம் ஆட அனல்கை
ஏந்தி அழகன் ஆடுமே. 6
சித்தர் தேவர் இயக்கர்
முனிவர் தேனார் பொழில்தில்லை
அத்தா! அருளாய் அணியம்
பலவா! என்றென் றவரேத்த
முத்தும் மணியும் நிரந்த
தலத்துள் முளைவெண் மதிசூடிக்
கொத்தார் சடைகள் தாழ
நட்டம் குழகன் ஆடுமே. 7
அதித்த அரக்கன் நெரிய
விரலால் அடர்த்தாய் அருளென்று
துதித்து மறையோர் வணங்கும்
தில்லைச் சிற்றம் பலந்தன்னுள்
உதித்த போழ்தில் இரவிக்
கதிர்போல் ஒளிர்மா மணிஎங்கும்
பதித்த தலத்துப் பவள
மேனிப் பரமன் ஆடுமே. 8
மாலோ(டு) அயனும் அமரர்
பதியும் வந்து வணங்கிநின்(று)
ஆல கண்டா ! அரனே !
அருளாய் என்றென்(று) அவரேத்தச்
சேலா டும்வயல் தில்லை
மல்கு சிற்றம் பலந்தன்னுள்
பாலா டுமுடிச் சடைகள்
தாழப் பரமன் ஆடுமே. 9
நெடிய சமணும் அறைசாக்
கியரும் நிரம்பாப் பல்கோடிச்
செடியும் தவத்தோர் அடையாத்
தில்லைச் சிற்றம் பலந்தன்னுள்
அடிகள் அவரை ஆரூர்
நம்பி அவர்கள் இசைபாடக்
கொடியும் விடையும் உடைய
கோலக் குழகன் ஆடுமே. 10
வானோர் பணிய மண்ணோர்
ஏத்த மன்னி நடமாடும்
தேனார் பொழில்சூழ் தில்லை
மல்கு சிற்றம்பலத் தானைத்
தூநான் மறையான் அமுத
வாலி சொன்ன தமிழ்மாலைப்
பானேர் பாடல் பத்தும்
பாடப் பாவ நாசமே. 11
திருச்சிற்றம்பலம்
Previous
Next