ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே !
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே !
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே !
சித்தத்துள் தித்திக்கும் தேனே !
அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே !
அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே. 1
இடர்கெடுத்(து) என்னை ஆண்டுகொண்(டு) என்னுள்
இருட்பிழம்பு அறஎறிந்(து) எழுந்த
சுடர்மணி விளக்கின் உள்ளொளி விளங்கும்
தூயநற் சோதியுள் சோதீ !
அடல்விடைப் பாகா ! அம்பலக் கூத்தா !
அயனொடு மாலறி யாமைப்
படரொளிப் பரப்பிப் பரந்துநின் றாயைத்
தொண்டனேன் பணியுமா பணியே. 2
தற்பரம் பொருளே ! சசிகண்ட ! சிகண்டா !
சாமகண்டா ! அண்ட வாணா !
நற்பெரும் பொருளாய் உரைகலந்து உன்னை
என்னுடை நாவினால் நவில்வான்
அற்பன்என் உள்ளத்து அளவிலா உன்னைத்
தந்தபொன் அம்பலத்து ஆடி !
கற்பமாய் உலகாய் அல்லைஆ னாயைத்
தொண்டனேன் கருதுமா கருதே. 3
பெருமையிற் சிறுமை பெண்ணொடுஆ ணாய்என்
பிறப்புஇறப்பு அறுத்தபே ரொளியே !
கருமையின் வெளியே கயற்கணாள் இமவான்
மகள்உமை யவள்களை கண்ணே !
அருமையின் மறைநான் கோலமிட் டரற்றும்
அப்பனே அம்பலத்து அமுதே
ஒருமையிற் பலபுக்கு உருவிநின் றாயைத்
தொண்டனேன் உரைக்குமாறு உரையே. 4
கோலமே மேலை வானவர் கோவே !
குணங்குறி இறந்ததோர் குணமே !
காலமே கங்கை நாயகா எங்கள்
காலகாலா! காம நாசா !
ஆலமே அமுதுண்டு அம்பலம் செம்பொற்
கோயில்கொண்டு ஆடவல் லானே !
ஞாலமே தமியேன் நற்றவத் தாயைத்
தொண்டனேன் நணுகுமா நணுகே. 5
நீறணி பவளக் குன்றமே ! நின்ற
நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே !
வேறணி புவன போகமே யோக
வெள்ளமே மேருவில் வீரா !
ஆறணி சடையெம் அற்புதக் கூத்தா
அம்பொன்செய் அம்பலத் தரசே !
ஏறணி கொடியெம் ஈசனே, உன்னைத்
தொண்டனேன் இசையுமாறு இசையே. 6
தனதன்நல் தோழா சங்கரா ! சூல
பாணியே! தாணுவே சிவனே !
கனகநல் தூணே! கற்பகக் கொழுந்தே
கண்கள்மூன் றுடையதோர் கரும்பே !
அனகனே குமர விநாயக சனக
அம்பலத்து அமரசே கரனே !
நுனகழல் இணையென் நெஞ்சினுள் இனிதாத்
தொண்டனேன் நுகருமா நுகரே. 7
திறம்பிய பிறவிச் சிலதெய்வ நெறிக்கே
திகைக்கின்றேன் தனைத்திகை யாமே
நிறம்பொன்னும் மின்னும் நிறைந்தசே வடிக்கீழ்
நிகழ்வித்த நிகரிலா மணியே !
அறம்பல திறங்கண்டு அருந்தவர்க்கு அரசாய்
ஆலின்கீழ் இருந்தஅம் பலவா !
புறஞ்சமண் புத்தர் பொய்கள்கண் டாயைத்
தொண்டனேன் புணருமா புணரே. 8
தக்கன்நல் தலையும் எச்சன்வன் தலையும்
தாமரை நான்முகன் தலையும்
ஒக்கவிண்(டு) உருள ஒண்திருப் புருவம்
நெறித்தரு ளியவுருத் திரனே !
அக்கணி புலித்தோல் ஆடைமேல் ஆட
ஆடப்பொன் னம்பலத்து ஆடும்
சொக்கனே எவர்க்கும் தொடர்வரி யாயைத்
தொண்டனேன் தொடருமா தொடரே. 9
மடங்கலாய்க் கனகன் மார்புகீண் டானுக்கு
அருள்புரி வள்ளலே ! மருளார்
இடங்கொள்முப் புரம்வெந்து அவியவை திகத்தேர்
ஏறிய ஏறுசே வகனே !
அடங்கவல் அரக்கன் அருள்திரு வரைக்கீழ்
அடர்த்தபொன் னம்பலத் தரசே !
விடங்கொள்கண் டத்துஎம் விடங்கனே ! உன்னைத்
தொண்டனேன் விரும்புமா விரும்பே. 10
மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டாது
அயன்திரு மாலொடு மயங்கி
முறைமுறை முறையிட்(டு) ஓர்வரி யாயை
மூர்க்கனேன் மொழிந்தபுன் மொழிகள்
அறைகழல் அரன்சீர் அறிவிலா வெறுமைச்
சிறுமையில் பொறுக்கும்அம் பலத்துள்
நிறைதரு கருணா நிலயமே ! உன்னைத்
தொண்டனேன் நினையுமா நினையே.
சிற்சபை: சுவாமி: ஆனந்தநடராஜ மூர்த்தி ; அம்பிகை: சிவகாமசுந்தரி மூலஸ்தானம்: ஸ்ரீமூலநாதர்; அம்பிகை: உமாபார்வதி 11
திருச்சிற்றம்பலம்