கோல மலர்நெடுங்கண் கொவ்வை
வாய்க்கொடி ஏரிடையீர்
பாலினை இன்னமுதைப்
பரமாய பரஞ்சுடரைச்
சேலுக ளும்வயல்சூழ் தில்லை
மாநகர்ச் சிற்றம்பலத்(து)
ஏலவுடை எம்இறையை
என்றுகொல் காண்பதுவே. 1
காண்பதி யான் என்றுகொல்
கதிர்மாமணி யைக்கனலை
ஆண்பெண் அருவுருவென்(று)
அறிதற்கு அரி தாயவனைச்
சேண்பணை மாளிகைசூழ்
தில்லைமாநகர்ச் சிற்றம்பலம்
மாண்புடை மாநடஞ்செய் மறையோன்
மலர்ப் பாதங்களே. 2
கள்ளவிழ் தாமரைமேல்
கண்டயனொடு மால்பணிய
ஒள்ளெரி யின்நடுவே உருவாய்ப்பரந்
தோங்கிய சீர்த்
தெள்ளிய தண்பொழில்சூழ்
தில்லைமாநகர்ச் சிற்றம்பலத்
துள்ளெரி யாடுகின்ற
ஒருவனை உணர்வரிதே. 3
அரிவையோர் கூறுகந்தான் அழகன்
எழில் மால்கரியின்
உரிவைநல் உத்தரியம்
உகந்தானும் பரார்தம்பிரான்
புரிபவர்க்(கு) இன்னருள்செய்
புலியூர்த்திருச் சிற்றம்பலத்(து)
எரிமகிழ்ந் தாடுகின்ற
எம்பிரான்என் இறையவனே. 4
இறைவனை என்கதியை
என்னுள்ளே உயிர்ப்பாகி நின்ற
மறைவனை மண்ணும் விண்ணும்
மலிவான் சுடராய் மலிந்த
சிறையணி வண்டறையும் தில்லை
மாநகர்ச் சிற்றம்பலம்
நிறையணி யாம் இறையை
நினைத்தேன் இனிப் போக்குவனே. 5
நினைத்தேன் இனிப்போக்குவனோ நிமலத்
திரளை நினைப்பார்
மனத்தி னுளேயிருந்த
மணியைமணி மாணிக்கத்தைக்
கனைத்திழி யுங்கழனிக்
கனகங்கதிர் ஒண்பவளம்
சினத்தோடு வந்தெறியும்
தில்லைமாநகர்க் கூத்தனையே. 6
கூத்தனை வானவர்தம் கொழுந்தைக்
கொழுந்தாய் எழுந்த
மூத்தனை மூவுருவின்
முதலைமுத லாகிநின்ற
ஆத்தனைத் தான்படுக்கும் அந்தணர்
தில்லை அம்பலத்துள்
ஏத்தநின் றாடுகின்ற
எம்பிரானடி சேர்வன்கொலோ 7
சேர்வன்கொலோ அன்னைமீர்
திகழும்மலர்ப் பாதங்களை
ஆர்வங்கொளத் தழுவி அணிநீ(று)
என் முலைக்கணியச்
சீர்வங்கம் வந்தணவும்
தில்லைமாநகர்ச் சிற்றம்பலத்(து)
ஏர்வங்கை மான்மறியன் எம்பிரான்
என்பால் நேசனையே. 8
நேசமு டையவர்கள் நெஞ்சுளே
யிடங்கொண் டிருந்த
காய்சின மால்விடையூர்
கண்ணுதலைக் காமருசீர்த்
தேசமிகு புகழோர்
தில்லைமாநகர்ச் சிற்றம்பலத்(து)
ஈசனை எவ்வுயிர்க்கும்
எம்மிறைவன்என்(று) ஏத்துவனே. 9
இறைவனை ஏத்துகின்ற
இளையாள்மொழி இன்றமிழால்
மறைவல நாவலர்கள்
மகிழ்ந்தேத்து சிற்றம்பலத்தை
அறைசெந்நெல் வான்கரும்பின்
அணியாலைகள் சூழ்மயிலை
மறைவல ஆலிசொல்லை
மகிழ்ந்தேத்துக வானெளிதே. 10
திருச்சிற்றம்பலம்