தாண்டவம் புரிய வல்ல
தம்பிரானாருக்கு அன்பர்
ஈண்டிய புகழின் பாலார்
எல்லையில் தவத்தின் மிக்கார்
ஆண்ட சீர் அரசின் பாதம்
அடைந்தவர் அறியா முன்னே
காண் தகு காதல் கூரக்
கலந்த அன்பினராய் உள்ளார். 1
களவு பொய் காமம் கோபம்
முதலிய குற்றம் காய்ந்தார்
வளம் மிகு மனையின் வாழ்க்கை
நிலையினார் மனைப் பால் உள்ள
அளவைகள் நிறைகோல் மக்கள்
ஆவொடு மேதி மற்றும்
உள எலாம் அரசின் நாமம்
சாற்றும் அவ்வொழுகல் ஆற்றார். 2
வடிவு தாம் காணார் ஆயும்
மன்னுசீர் வாக்கின் வேந்தர்
அடிமையும் தம்பிரானார் அருளும்
கேட்டவர் நாமத்தால்
படி நிகழ் மடங்கள் தண்ணீர்ப்
பந்தர்கள் முதலாய் உள்ள
முடிவு இலா அறங்கள் செய்து
முறைமையால் வாழும் நாளில். 3
பொருப்பரையன் மடப் பிடியின்
உடன் புணரும் சிவக்களிற்றின்
திருப் பழனம் பணிந்து
பணி செய் திருநாவுக்கரசர்
ஒருப் படு காதலில் பிறவும்
உடையவர் தம்பதி வணங்கும்
விருப்பினொடும் திங்களூர்
மருங்கு வழி மேவுவார். 4
அளவில் சனம் செலவு ஒழியா
வழிக்கரையில் அருள் உடையார்
உளம் அனைய தண் அளித்தாய்
உறுவேனில் பரிவு அகற்றிக்
குளம் நிறைந்த நீர்த் தடம்
போல் குளிர் தூங்கும் பரப்பினதாய்
வளம் மருவும் நிழல் தரு
தண்ணீர்ப் பந்தர் வந்து அணைந்தார். 5
வந்து அனைந்த வாகீசர்
மந்த மாருத சீதப்
பந்தர் உடன் அமுதமாம்
தண்ணீரும் பார்த்து அருளிச்
சிந்தை வியப்புற வருவார்
திருநாவுக்கரசெனும் பேர்
சந்தம் உற வரைந்து அதனை
எம் மருங்கும் தாம் கண்டார். 6
இப் பந்தர் இப் பெயர் இட்டு
இங்கு அமைத்தார் யார் என்றார்க்கு
அப் பந்தர் அறிந்தார்கள் ஆண்ட
அரசு எனும் பெயரால்
செப்பருஞ் சீர் அப்பூதி
அடிகளார் செய்து அமைத்தார்
தப்பின்றி எங்கும் உள சாலை
குளம் கா என்றார். 7
என்று உரைக்க அரசு கேட்டு
இதற்கு என்னோ கருத்து என்று
நின்ற வரை நோக்கி அவர்
எவ்விடத்தார் என வினவத்
துன்றிய நூல் மார்பரும் இத்
தொல் பதியார் மனையின் கண்
சென்றனர் இப்பொழுது அதுவும் சேய்த்து
அன்று நணித்து என்றார். 8
அங்கு அகன்று முனிவரும்
போய் அப்பூதி அடிகளார்
தங்கும் மனைக் கடைத்தலை முன்
சார்வாக உள் இருந்த
திங்களூர் மறைத் தலைவர் செழும்
கடையில் வந்து அடைந்தார்
நங்கள் பிரான் தமர் ஒருவர்
எனக் கேட்டு நண்ணினார். 9
கடிது அணைந்து வாகீசர் கழல்
பணிய மற்று அவர் தம்
அடி பணியா முன் பணியும்
அரசின் எதிர் அந்தணனார்
முடிவில் தவம் செய்தேன்கொல்
முன்பொழியும் கருணை புரி
வடிவுடையீர் என் மனையில் வந்து
அருளிற்று என் என்றார். 10
ஒரு குன்ற வில்லாரைத்
திருப் பழனத்துள் இறைஞ்சி
வருகின்றோம் வழிக் கரையில்
நீர் வைத்த வாய்ந்த வளம்
தருகின்ற நிழல் தண்ணீர்ப்
பந்தரும் கண்டத் தகைமை
புரிகின்ற அறம் பிறவும் கேட்டு
அணைந்தோம் எனப் புகல்வார். 11
ஆறணியும் சடை முடியார்
அடியார்க்கு நீர் வைத்த
ஈறில்பெருந் தண்ணீர்ப் பந்தரில்
நும் பேர் எழுதாதே
வேறு ஒரு பேர் முன் எழுத
வேண்டிய காரணம் என் கொல்
கூறும் என எதிர் மொழிந்தார்
கோதில் மொழிக் கொற்றவனார். 12
நின்ற மறையோர் கேளா
நிலை அழிந்த சிந்தையராய்
நன்று அருளிச் செய்திலீர் நாணில்
அமண் பதகர் உடன்
ஒன்றிய மன்னவன் சூட்சி திருத்
தொண்டின் உறைப் பாலே
வென்றவர் தம் திருப்பேரோ வேறு
ஒரு பேர் என வெகுள்வார். 13
நம்மை உடையவர் கழல் கீழ்
நயந்த திருத் தொண்டாலே
இம்மையிலும் பிழைப்பது என
என் போல்வாரும் தெளியச்
செம்மை புரி திருநாவுக்கரசர்
திருப் பெயர் எழுத
வெம்மை மொழி யான் கேட்க
விளம்பினீர் என விளம்பி. 14
பொங்கு கடல் கல் மிதப்பில்
போந்து ஏறும் அவர் பெருமை
அங்கணர் தம் புவனத்தில்
அறியாதார் யார் உளரே
மங்கலம் ஆம் திரு வேடத்துடன்
இன்று இவ்வகை மொழிந்தீர்
எங்கு உறைவீர் நீர் தாம்
யார் இயம்பும் என இயம்பினார். 15
திரு மறையோர் அது மொழியத்
திரு நாவுக்கரசர் அவர்
பெருமை அறிந்து உரை செய்வார்
பிற துறையின் நின்றேற
அருளும் பெரும் சூலையினால்
ஆட் கொள்ள அடைந்து உய்ந்த
தெருளும் உணர்வு இல்லாத
சிறுமையேன் யான் என்றார். 16
அரசு அறிய உரை செய்ய
அப்பூதி அடிகள் தாம்
கர கமலம் மிசை குவியக்
கண் அருவி பொழிந்து இழிய
உரை குழறி உடம்பு எல்லாம்
உரோம புளகம் பொலியத்
தரையின் மிசை வீழ்ந்து அவர்
தம் சரண கமலம் பூண்டார். 17
மற்றவரை எதிர் வணங்கி
வாகீசர் எடுத்து அருள
அற்றவர்கள் அரு நிதியம் பெற்றார்
போல் அரு மறையோர்
முற்றவுளம் களி கூர
முன் நின்று கூத்தாடி
உற்ற விருப்புடன் சூழ
ஓடினார் பாடினார். 18
மூண்ட பெரு மகிழ்ச்சியினால்
முன் செய்வது அறியாதே
ஈண்ட மனை அகத்து
எய்தி இல்லவர்க்கும் மக்களுக்கும்
ஆண்ட அரசு எழுந்து அருளும்
ஓகை உரைத்து ஆர்வம் உறப்
பூண்ட பெரும் சுற்றம் எலாம்
கொடு மீளப் புறப்பட்டார். 19
மனைவியார் உடன் மக்கள்
மற்றும் உள்ள சுற்றத்தோர்
அனைவரையும் கொண்டு இறைஞ்சி
ஆராத காதலுடன்
முனைவரை உள் எழுந்து அருளுவித்து
அவர் தாள் முன் விளக்கும்
புனை மலர் நீர் தங்கள்
மேல் தெளித்து உள்ளும் பூரித்தார். 20
ஆசனத்தில் பூசனைகள் அமர்
வித்து விருப்பினுடன்
வாசம் நிறை திருநீற்றுக் காப்பு
ஏந்தி மனம் தழைப்பத்
தேசம் உய்ய வந்த வரைத்
திரு அமுது செய்விக்கும்
நேசம் உற விண்ணப்பம் செய
அவரும் அது நேர்ந்தார். 21
செய்தவர் இசைந்த போது
திரு மனையாரை நோக்கி
எய்திய பேறு நம்பால்
இருந்தவாறு என்னே என்று
மைதிகழ் மிடற்றினான் தன்
அருளினால் வந்தது என்றே
உய்தும் என்று உவந்து கொண்டு
திரு அமுது ஆக்கல் உற்றார். 22
தூய நற் கறிகள் ஆன
அறுவகைச் சுவையால் ஆக்கி
ஆய இன் அமுதும் ஆக்கி
அமுது செய்து அருளத் தங்கள்
சேயவர் தம்மில் மூத்த
திருநாவுக்கு அரசை வாழை
மேய பொற் குருத்துக் கொண்டுவா
என விரைந்து விட்டார். 23
நல்ல தாய் தந்தை ஏவ நான்
இது செயப் பெற்றேன் என்று
ஒல்லையில் விரைந்து தோட்டத்துள்
புக்குப் பெரிய வாழை
மல்லல் அம் குருத்தை ஈரும்
பொழுதினில் வாள் அரா ஒன்று
அல்லல் உற்று அழுங்கிச் சோர
அங்கையில் தீண்டிற்று அன்றே. 24
கையினில் கவர்ந்து சுற்றிக்
கண் எரி காந்துகின்ற
பை அரா உதறி வீழ்த்துப்
பதைப்பு உடன் பாந்தள் பற்றும்
வெய்ய வேகத்தால் வீழா
முன்னம் வேகத்தால் எய்திக்
கொய்த இக் குருத்தைச் சென்று
கொடுப்பன் என்று ஓடி வந்தான். 25
பொருந்திய விட வேகத்தில்
போதுவான் வேகம் உந்த
வருந்தியே அணையும் போழ்து
மாசுணம் கவர்ந்தது யார்க்கும்
அரும் தவர் அமுது செய்யத்
தாழ்க்க யான் அறையேன் என்று
திருந்திய கருத்தினோடும் செழுமனை
சென்று புக்கான். 26
எரிவிடம் முறையே ஏறித் தலைக்
கொண்ட ஏழாம் வேகம்
தெரிவுற எயிறும் கண்ணும்
மேனியும் கருகித் தீந்து
விரியுரை குழறி ஆவி விடக்
கொண்டு மயங்கி வீழ்வான்
பரி கலக் குருத்தைத் தாயார் பால்
வைத்துப் படி மேல் வீழ்ந்தான். 27
தளர்ந்து வீழ் மகனைக் கண்டு
தாயரும் தந்தை யாரும்
உளம் பதைத்து உற்று நோக்கி
உதிரம் சோர் வடிவு(ம்)மேனி
விளங்கிய குறியும் கண்டு
விடத்தினால் வீழ்ந்தான் என்று
துளங்குதல் இன்றித் தொண்டர்
அமுது செய்வதற்குச் சூழ்வார். 28
பெறல் அரும் புதல்வன் தன்னைப்
பாயினுள் பெய்து மூடிப்
புற மனை முன்றில் பாங்கு
ஓர் புடையினில் மறைத்து வைத்தே
அற இது தெரியா வண்ணம்
அமுது செய்விப்போம் என்று
விறல் உடைத் தொண்டனார் பால்
விருப்பொடு விரைந்து வந்தார். 29
கடிது வந்து அமுது செய்யக்
காலம் தாழ்கின்றது என்றே
அடிசிலும் கறியும் எல்லாம்
அழகுற அணைய வைத்துப்
படியில் சீர்த் தொண்டனார் முன் பணிந்து
எழுந்து அமுது செய்து எம்
குடி முழுதும் உய்யக் கொள்வீர்
என்று அவர் கூறக் கேட்டு. 30
அரும் தவர் எழுந்து செய்ய அடி
இணை விளக்கி வேறு ஓர்
திருந்தும் ஆசனத்தில் ஏறிப்
பரிகலம் திருத்தும் முன்னர்
இருந்து வெண் நீறு
சாத்தி இயல்புடை இருவருக்கும்
பொருந்திய நீறு நல்கிப்
புதல்வர்க்கும் அளிக்கும் போழ்தில். 31
ஆதி நான்மறை நூல்
வாய்மை அப்பூதியாரை நோக்கிக்
காதலர் இவர்க்கு மூத்த
சேயையும் காட்டும் முன்னே
மேதகு பூதி சாத்த
என்றலும் விளைந்த தன்மை
யாதும் ஒன்று உரையார் இப்போது
இங்கு அவன் உதவான் என்றார். 32
அவ்வுரை கேட்ட போதே
அங்கணர் அருளால் அன்பர்
செவ்விய திரு உள்ளத்து ஓர்
தடு மாற்றம் சேர நோக்கி
இவ்வுரை பொறாது என் உள்ளம்
என் செய்தான் இதற்கு ஒன்று உண்டால்
மெய் விரித்து உரையும் என்ன
விளம்புவார் விதிர்ப்பு உற்று அஞ்சி. 33
பெரியவர் அமுது செய்யும் பேறு
இது பிழைக்க என்னோ
வருவது என்று உரையார் ஏனும்
மாதவர் வினவ வாய்மை
தெரிவுற உரைக்க வேண்டும்
சீலத்தால் சிந்தை நொந்து
பரிவொடு வணங்கி மைந்தர்க்கு
உற்றது பகர்ந்தார் அன்றே. 34
நாவினுக்கரசர் கேளா நன்று
நீர் புரிந்த வண்ணம்
யாவர் இத் தன்மை செய்தார்
என்று முன் எழுந்து சென்றே
ஆவி தீர் சவத்தை நோக்கி
அண்ணலார் அருளும் வண்ணம்
பாவிசைப் பதிகம் பாடிப் பணி
விடம் பாற்று வித்தார். 35
தீ விடம் நீங்க உய்ந்த
திரு மறையவர் தம் சேயும்
மேவிய உறக்கம் நீங்கி
விரைந்து எழுவானைப் போன்று
சேவுகைத்தவர் ஆட் கொண்ட
திருநாவுக்கரசர் செய்ய
பூவடி வணங்கக் கண்டு
புனித நீறு அளித்தார் அன்றே. 36
பிரிவுறும் ஆவி பெற்ற
பிள்ளையைக் காண்பார் தொண்டின்
நெறியினைப் போற்றி வாழ்ந்தார் நின்ற
அப் பயந்தார் தாங்கள்
அறிவரும் பெருமை அன்பர்
அமுது செய்து அருளுதற்குச்
சிறிது இடையூறு செய்தான் இவன்
என்று சிந்தை நொந்தார். 37
ஆங்கவர் வாட்டம் தன்னை
அறிந்து சொல்அரசர் கூட
ஓங்கிய மனையில் எய்தி அமுது
செய்து அருள உற்ற
பாங்கினில் இருப்ப முந்நூல் பயில்
மணி மார்பர் தாமும்
தாங்கிய மகிழ்ச்சி யோடும்
தகுவன சமைத்துச் சார்வார். 38
புகழ்ந்த கோமயத்து நீரால்
பூமியைப் பொலிய நீவித்
திகழ்ந்த வான் சுதையும் போக்கிச்
சிறப்புடைத் தீபம் ஏற்றி
நிகழ்ந்த அக் கதலி நீண்ட
குருத்தினை விரித்து நீரால்
மகிழ்ந்துடன் விளக்கி ஈர்வாய் வலம்
பெற மரபின் வைத்தார்**
( ** மன்னுவித்தார் என்றும் பாடம் ). 39
திருந்திய வாச நன்னீர்
அளித்திட திருக்கை நீவும்
பெருந்தவர் மறையோர் தம்மைப்
பிள்ளைகளுடனே நோக்கி
அரும் புதல்வர்களும் நீரும் அமுது
செய்வீர் இங்கு என்ன
விரும்பிய உள்ளத்தோடு மேலவர்
ஏவல் செய்வார். 40
மைந்தரும் மறையோர் தாமும் மருங்கு
இருந்து அமுது செய்யச்
சிந்தை மிக்கு இல்ல மாதர்
திரு அமுது எடுத்து நல்கக்
கொந்து அவிழ் கொன்றை
வேணிக் கூத்தனார் அடியாரோடும்
அந் தமிழ் ஆளியார்
அங்கு அமுது செய்தருளினாரே. 41
மாதவ மறையோர் செல்வ
மனையிடை அமுது செய்து
காதல் நண்பு அளித்துப் பன்னாள்
கலந்து உடன் இருந்த பின்றை
மேதகு நாவின் மன்னர்
விளங்கிய பழன மூதூர்
நாதர் தம் பாதம் சேர்ந்து
நற்றமிழ்ப் பதிகம் செய்வார். 42
அப்பூதி அடிகளார் தம்
அடிமையைச் சிறப்பித்து ஆன்ற
மெய்ப் பூதி அணிந்தார் தம்மை
விரும்பு சொல் மாலை வேய்ந்த
இப்பூதி பெற்ற நல்லோர்
எல்லையில் அன்பால் என்றும்
செப்பு ஊதியம் கைக்
கொண்டார் திருநாவுக்கரசர் பாதம். 43
இவ் வகை அரசின் நாமம்
ஏத்தி எப் பொருளும் நாளும்
அவ்வரும் தவர் பொற்றாளே என
உணர்ந்து அடைவார் செல்லும்
செவ்விய நெறியது ஆகத்
திருத் தில்லை மன்றுள் ஆடும்
நவ்வியம் கண்ணாள் பங்கர்
நற்கழல் நண்ணினாரே. 44
மான் மறிக் கையர் பொற்றாள்
வாகீசர் அடைவால் பெற்ற
மேன்மை அப்பூதியாராம்
வேதியர் பாதம் போற்றிப்
கான் மலர்க் கமல வாவிக்
கழனி சூழ் சாத்த மங்கை
நான் மறை நீல நக்கர்
திருத் தொழில் நவிலல் உற்றேன். 45
திருச்சிற்றம்பலம்
அ௫ளியவர் : சேக்கிழார்
திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை
பண் :
நாடு :
தலம் :
சிறப்பு: திருத்தொண்டர் புராணம் - முதற் காண்டம் - திருநின்ற சருக்கம் - அப்பூதி அடிகள் நாயனார் புராணம்