கணம்விரி குடுமிச் செம்மணிக் கவைநாக்
கறையணல் கட்செவிப் பகுவாய்ப்
பணம்விரி துத்திப் பொறிகொள்வெள் ளெயிற்றுப்
பாம்பணி பரமர்தம் கோயில்
மணம்விரி தருதே மாம்பொழில் மொழுப்பில்
மழைதவழ் வளரிளம் கமுகம்
திணர்நிரை அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே. 1
இவ்வரும் பிறவிப் பெளவநீர் நீந்தும்
ஏழையேற்(கு) என்னுடன் பிறந்த
ஐவரும் பகையே யார்துணை என்றால்
அஞ்சல்என் றருள்செய்வான் கோயில்
கைவரும் பழனம் குழைத்தசெஞ் சாலிக்
கடைசியர் களைதரு நீலம்
செய்வரம்(பு) அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே. 2
தாயின்நேர் இரங்கும் தலைவஓ என்றும்
தமியனேன் துணைவஓ என்றும்
நாயினேன் இருந்து புலம்பினால் இரங்கி
நலம்புரி பரமர்தம் கோயில்
வாயில்நேர் அரும்பு மணிமுருக்(கு) அலர
வளரிளம் சோலைமாந் தளிர்செந்
தீயின்நேர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே. 3
துந்துபி குழல்யாழ் மொந்தைவான் இயம்பத்
தொடர்ந்(து)இரு டியர்கணம் துதிப்ப
நந்திகை முழவம் முகிலென முழங்க
நடம்புரி பரமர்தம் கோயில்
அந்தியின் மறைநான்கு ஆரணம் பொதிந்த
அரும்பெறல் மறைப்பொருள் மறையோர்
சிந்தையில் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே. 4
கண்பனி அரும்பக் கைகள் மொட்டித்(து)என்
களைகணே! ஓலம்என்(று) ஓலிட்டு
என்பெலாம் உருகும் அன்பர்தம் கூட்டத்(து)
என்னையும் புணர்ப்பவன் கோயில்
பண்பல தெளிதேன் பாடிநின் றாடப்
பனிமலர்ச் சோலைசூழ் மொழுப்பில்
செண்பகம் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே. 5
நெஞ்சிடர் அகல அகம்புகுந்(து) ஒடுங்கும்
நிலைமையோ(டு) இருள்கிழித்(து) எழுந்த
வெஞ்சுடர் சுடர்வ போன்(று)ஒளி துளும்பும்
விரிசடை அடிகள்தங் கோயில்
அஞ்சுடர் புரிசை ஆழிசூழ் வட்டத்(து)
அகம்படி மணிநிரை பரந்த
செஞ்சுடர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே. 6
பூத்திரள் உருவம் செங்கதிர் விரியாப்
புந்தியில் வந்தமால் விடையோன்
தூத்திரள் பளிங்கில் தோன்றிய தோற்றம்
தோன்றநின் றவன்வளர் கோயில்
நாத்திரள் மறையோர்ந்(து) ஓமகுண் டத்து
நறுநெயால் மறையவர் வளர்த்த
தீத்திரள் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே. 7
சீர்த்ததிண் புவனம் முழுவதும் ஏனைத்
திசைகளோ(டு) அண்டங்கள் அனைத்தும்
போர்த்ததம் பெருமை சிறுமைபுக்(கு) ஒடுங்கும்
புணர்ப்புடை அடிகள்தம் கோயில்
ஆர்த்துவந்(து) அமரித்(து) அமரரும் பிறரும்
அலைகடல் இடுதிரைப் புனிதத்
தீர்த்தநீர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே. 8
பின்னுசெஞ் சடையும் பிறைதவழ் மொழுப்பும்
பெரியதங் கருணையும் காட்டி
அன்னைதேன் கலந்(து)இன் அமு(து)உகந்(து) அளித்தாங்(கு)
அருள்புரி பரமர்தம் கோயில்
புன்னைதேன் சொரியும் பொழிலகம் குடைந்து
பொறிவரி வண்டினம் பாடும்
தென்னதேன் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே. 9
உம்பர்நா(டு) இம்பர் விளங்கியாங்(கு) எங்கும்
ஒளிவளர் திருமணிச் சுடர்கான்(று)
எம்பிரான் நடஞ்செய் சூழல்அங் கெல்லாம்
இருட் பிழம்(பு) அறஎறி கோயில்
வம்புலாம் கோயில் கோபுரம் கூடம்
வளர்நிலை மாடமா ளிகைகள்
செம்பொனால் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே. 10
இருந்திரைத் தரளப் பரவைசூழ் அகலத்(து)
எண்ணிலங் கண்ணில்புன் மாக்கள்
திருந்துயிர்ப் பருவத்(து) அறிவுறு கருவூர்த்
துறைவளர் தீந்தமிழ் மாலை
பொருந்தருங் கருணைப் பரமர்தம் கோயில்
பொழிலகங் குடைந்துவண்(டு) உறங்கச்
செருந்திநின்(று) அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே. 11
திருச்சிற்றம்பலம்