பண்: நட்ட ராகம்
திருச்சிற்றம்பலம்
226.
பவளமால் வரையைப் பனிபடர்ந்(து)
அனையதோர் படரொளிதரு திருநீறும்
குவளை மாமலர்க் கண்ணியும் கொன்றையும்
துன்றுபொற் குழல்திருச் சடையும்
திவள மாளிகை சூழ்தரு தில்லை
யுள்திரு நடம்புரி கின்ற
தவள வண்ணனை நினைதொறும்
என்மனம் தழல்மெழு(கு)ஒக் கின்றதே. 1
227.
ஒக்க ஒட்டந்த அந்தியும் மதியமும் அலைகடல் ஒலியோடு
நெக்கு வீழ்தரு நெஞ்சினைப் பாய்தலும் நிறையழிந்(து) இருப்பேனைச்
செக்கர் மாளிகை சூழ்தரு தில்லையுள் திருநடம் வகையாலே
பக்கம் ஒட்டந்த மன்மதன் மலர்க்கணை படுந்தொறும் அலந்தேனே. 2
228.
அலந்து போயினேன் அம்பலக் கூத்தனே அணிதில்லை நகராளீ
சிலந்தியை அரசாள்க என்(று) அருள்செய்த தேவதே வீசனே
உலந்தமார்க் கண்டிக் காகிஅக் காலனை உயிர்செக வுதைகொண்ட
மலர்ந்த பாதங்கள் வனமுலை மேலொற்ற வந்தருள் செய்யாயே. 3
229.
அருள்செய்(து) ஆடுநல் அம்பலக் கூத்தனே ! அணிதில்லை நகராளீ
மருள்செய்(து) என்றனை வனமுலை பொன்பயப் பிப்பது வழக்கமோ
திரளும் நீள்மணிக் கங்கையைத் திருச்சடைச் சேர்த்திஅச் செய்யாளுக்(கு)
உருவம் பாகமும் ஈந்துநல் அந்தியை ஒண்ணுதல் வைத்தோனே. 4
230.
வைத்த பாதங்கள் மாலவன் காண்கிலன் மலரவன் முடிதேடி
எய்த்து வந்திழிந்(து) இன்னமும் துதிக்கின்றார் எழில்மறை அவற்றாலே
செய்த்தலைக் கமலம் மலர்ந்தோங்கிய தில்லை அம்பலத் தானைப்
பத்தியாற் சென்று கண்டிட என்மனம் பதைபதைப்(பு) ஒழியாதே. 5
231.
தேய்ந்து மெய்வெளுத்(து) அகம் வளைந்து அரவினை அஞ்சித்தான் இருந்தேயும்
காய்ந்து வந்துவந்(து) என்றனை வலிசெய்து கதிர்நிலா எரிதூவும்
ஆய்ந்த நான்மறை அந்தணர் தில்லையுள் அம்பலத்(து) அரன்ஆடல்
வாய்ந்த மாமலர்ப் பாதங்கள் காண்பதோர் மனத்தினை உடையேற்கே. 6
232.
உடையும் பாய்புலித் தோலும்நல் அரவமும் உண்பதும் பலிதேர்ந்து
விடைய(து) ஊர்வதும் மேவிடங் கொடுவரை, ஆகிலும் என்நெஞ்சம்
மடைகொள் வாளைகள் குதிகொளும் வயல்தில்லை அம்பலத்து அனலாடும்
உடைய கோவினை அன்றிமற்று ஆரையும் உள்ளுவது அறியேனே. 7
233.
அறிவும் மிக்கநல் நாணமும் நிறைமையும் ஆசையும் இங்குள்ள
உறவும் பெற்றநற் றாயொடு தந்தையும் உடன்பிறந் தவரோடும்
பிறிய விட்டுனை அடைந்தனன் ஏன்றுகொள் பெரும்பற்றப் புலியூரின்
மறைகள் நான்கும்கொண் டந்தணர் ஏத்தநன் மாநடம் மகிழ்வானே. 8
234.
வான நாடுடை மைந்தனே ! ஓஎன்பன் 'வந்தரு ளாய்' என்பன்
பால்நெய் ஐந்துடன் ஆடிய படர்சடைப் பால்வண்ணனேஎன்பன்
தேனமர் பொழில் சூழ்தரு தில்லையுள் திருநடம் புரிகின்ற
என் மாமணிப் பூணணி மார்பனே ! எனக்கருள் புரியாயே. 9
235.
புரியும் பொன்மதில் சூழ்தரு தில்லையுள் பூகரர் பலர்போற்ற
எரிய(து) ஆடும்எம் ஈசனைக் காதலித்(து) இனைபவள் மொழியாக
வரைசெய் மாமதில் மயிலையர் மன்னவன் மறைவல திருவாலி
பரவல் பத்திவை வல்லவர் பரமன(து) அடியிணை பணிவாரே. 10
திருச்சிற்றம்பலம்