இறைவர் திருப்பெயர்: | அருணாசலேஸ்வரர், அண்ணாமலையார். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | அபீதகுஜாம்பாள், உண்ணாமுலை. |
தல மரம்: | |
தீர்த்தம் : | பிரம தீர்த்தம் , சிவகங்கை தீர்த்தம், அக்கினி தீர்த்தம், இந்திர தீர்த்தம் |
வழிபட்டோர்: | விசுவாமித்திரர், பதஞ்சலி, வியாக்ரபாதர், அகத்தியர், சனந்தனர், சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், பரணதேவ நாயனார், சேக்கிழார் ஆகியோர். |
திருமுறை பாடல்கள் பதிகங்கள் : சம்பந்தர் - 1. உண்ணாமுலை உமையாளொடும் (1.10), 2. பூவார்மலர்கொண் டடியார் (1.69); அப்பர் - 1. ஓதிமா மலர்கள் தூவி (4.63), 2. வட்ட னைமதி சூடியை (5.4), 3. பட்டி ஏறுகந் தேறிப் (5.5); மாணிக்கவாசகர் - 1. ஆதியும் அந்தமும் (8.7), 2. செங்கண் நெடுமாலுஞ் (8.8); பாடல்கள் : சம்பந்தர் - பெண்ணாண் எனநின்ற (1.84.2), அண்ணாமலை யீங்கோயும் (2.39.2), அண்ணாவுங் கழுக்குன்றும் (3.64.1); அப்பர் - தீர்த்தப் புனற் (6.7.2), ஊக முகிலுரிஞ்சு (6.16.5), கண்ணார்ந்த நெற்றி (6.21.8), விண்ணோர் பெருமானை (6.22.2), மூரி முழங்கொலி (6.23.5), அண்ணா மலையமர்ந்தார் (6.51.3), விண்ணோர் பரவ (6.82.2); சுந்தரர் - தென்னாத் தெனாத் (7.2.6), கடங்களூர் திருக்காரிக் (7.31.3), தேனைக் காவல் (7.47.7); மாணிக்கவாசகர் - வெளியிடை ஒன்றாய் (8.4.149), அண்ணா மலையான் (8.7.18), விண்ணாளுந் தேவர்க்கு (8.8.10); பரணதேவ நாயனார் - மதியாரும் செஞ்சடையான் (11.23.38,42); சேக்கிழார் - அண்ணாமலை மலை மேல் (12.21.313) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், அண்ணாமலை (12.28.970) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
இத்திருக்கோயிலின் கிழக்குக் கோபுரம் 217 அடி உயரம் - தமிழகத்திலேயே உயர்ந்து விளங்குகிறது. தெற்கு கோபுரம் - திருமஞ்சன கோபுரம், மேலக்கோபுரம் - பேய்க் கோபுரம், வடக்குக் கோபுரம் - அம்மணியம்மாள் கோபுரம் என்றழைக்கப்படுகிறது.
கோயிலுள் நுழைந்தவுடனே சர்வசித்தி விநாயகருக்கு வலப்பால் உள்ள பாதாள லிங்கேஸ்வரர் சந்நிதி - ரமணர் தவம் செய்த இடம்; தரிசிக்கத் தக்கது.
உள்ளே சென்றால் கம்பத்திளையனார் சந்நிதியும், ஞானப்பால் மண்டபமும் உள்ளன; 'அதலசேடனாராட' என்னும் திருப்புகழுக்கு முருகன் கம்பத்தில் வெளிப்பட்டு அருள் செய்த சந்நிதி.
சுப்பிரமணிய சந்நிதியில் பாம்பன் சுவாமிகளின் குமாரஸ்தவக் கல்வெட்டுள்ளது; அருகிலேயே அருணகிரிநாதரின் 'திருவெழுகூற்றிருக்கை' வண்ணத்தில் சலவைக் கல்லில் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக கோயில்களில் அஷ்டபந்தன மருந்து சாத்தி பிரதிஷ்டை செய்வது போலன்றி, இக்கோயிலில் அண்ணாமலையார் ஸ்வர்ணபந்தனம் (சுத்தமான தங்கத்தால் பந்தனம்) செய்யப் பெற்றுள்ளார்.
மூவர் - அருணாசலப் பெருமான், தங்கக் கவச நாகாபரணத்துடன் வைர விபூதி நெற்றிப்பட்டம் ஜொலிக்க காட்சித் தருகிறார்.
25 ஏக்கர் நிலப்பரப்பில் ஏழு பிரகாரங்களுடன் அமைந்துள்ள இத்திருக்கோயில் (திருவாசகத்தில்) திருவெம்பாவை பாடப்பட்ட சிறப்பினை உடையது.
குருநாமசிவாயர், குகைநமசிவாயர், அருணகிரியார், விருபாக்ஷதேவர், ஈசான்ய ஞானதேசிகர், தெய்வசிகாமணி தேசிகர் முதலியோர் இப்பதியில் வாழ்ந்த அருளாளர்கள்; இவர்களுள் பெரும் யோகியாகத் திகழ்ந்த தெய்வசிகாமணி தேசிகரின் வழியில் வந்த நாகலிங்க தேசிகர் என்பர் இராமேஸ்வரத்திற்கு யாத்திரையாகச் சென்றபோது, இராமநாதபுர ராஜா சேதுபதி அவர்களின் வேண்டுகோளையேற்று, இராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த ஐந்து கோயில்களின் நிர்வாகத்தைக் தாம் மேற்கொண்டதோடு குன்றக்குடியில் திருவண்ணாமலை ஆதீனம் என்ற பெயரில் ஓர் ஆதீனத்தையும் ஏற்படுத்தினார்; அதுவே 'குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்' என்று வழங்கப்பட்டுவருகின்றது.
நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் இத்தலத்தில் படியெடுக்கப்பட்டுள்ளன. இவை தமிழ், சம்ஸ்கிருதம், கன்னட மொழிகளில் உள்ளன. (கல்வெட்டுக்களின் விவரத்தை ஆலயத்தலவரலாற்று நூலில் விரிவாகக் காணலாம்.)
இக்கோயிலின் சிறப்பைப் பற்றிப் பாடியோரும் நூல்களும் :- நமசிவாய சுவாமிகள் - சார பிரபந்தம், திருச்சிற்றம்பல நாவலர் - அண்ணாமலையார் சதகம், (காஞ்சிபுரம்) பல்லாவரம் சோணாசல பாரதியார் - அண்ணாமலை கார்த்திகை தீப வெண்பா, சோணாசல வெண்பா, திருவருணைக் கலிவெண்பா, சோணாசல சதகம், வடலூர் இராமலிங்கசுவாமிகள் - திருவண்ணாமலை திருவருட் பதிகம், புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார் - அருணாசலேஸ்வரர் பதிகம், காஞ்சிபுரம் சபாபதி முதலியார்-அருணாசல பதிகம், யாழ்ப்பாணம் - நல்லூர் தியாகராஜப் பிள்ளை - அண்ணாமலையார் வண்ணம். இவையன்றி; உண்ணாமுலையம்மன் பதிகம், உண்ணாமுலையம்மன் சதகம், அருணாசலேஸ்வரர் அக்ஷரமாலை, அண்ணாமலை பஞ்சரத்னம் அருணாசல நவமணி மாலை, அருணாசல அஷ்டகம், அருணைக் கலம்பகம், திருவருணை வெண்பா முதலிய நூல்களும் உள்ளன.
வள்ளல் பச்சையப்பர் இக்கோயிலில் அர்த்த சாமக்கட்டளைக்கு ஒரு லட்சம் வராகன் வைத்துள்ள செய்தியைத் தெரிவிக்கும் கல்வெட்டொன்று கோயிலில் உள்ளது.
தல புராணங்கள் |
ஆசிரியர் |
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு. சென்னை, வேலூர், கடலூர், சிதம்பரம், சேலம், திருச்சி, விழுப்புரம் முதலிய பல இடங்களிலிருந்தும் பேருந்துகள் நிறைய உள்ளன. தொடர்பு : 04175-252438.