சிவமயம்
காப்பு - வெண்பா
அருணைப் பதிற்றுப்பத் தந்தாதி பாடிக்
கருணைக் கடலமுதைக் கண்டு - தருண
மடவார் மயலுமற்று வாழ்வதற்குக் காவல்
கடவா ரணத்தின் கழல் .
நூல்- அறுசீர் ஆசிரியம்
பூவாழ் புலவன் மறைமுதலாப்
புகல்நூல் முழுதும் புகழருணைக்
கோவாம் ஒருவன் அருட்பேறே
குறித்தும் தமியேன் கொதிப்பானேன்
காவார் கரம்ஐந் துடையானும்
கதிவேற் குகனும் கருதுதுணை
ஆவான் முயலும் தவத்தீரே
அடியேன் எதிர்வந் தறையீரே (1)
அறையும் கழற்பூண் குலவுதிரு
அடியால் இயமன் தனையட்டாய் !
உறையும் அருணா புரிக்கோயில்
உட்போய் வணங்கும் உணர்வுடையார்
தறையும் பிலமும் தருநிழலும்
தரினும் பொருந்தார் தவம்புரியார்
மறையும் கருதார் ஒருநால்வர்
வழுத்தும் தமிழால் மகிழ்வாரே (2)
வாரார் முலையார் நடம்பயிலும்
மறுகில் முதிர்சூல் வளையுலவும்
சீரார் அருணைப் பதியாளும்
சிவனே இமையோர் தினம்பரவும்
காரார் களத்தெம் பெருமானே!
கண்மூன் றுடைய காரணனே
நீரார் சடிலத் திறையோனே
நின்சேய் எனும்பேர் விழைந்தேனே. (3)
தேனார் இதழித் தொடைமுடியும்
திருக்கண் இமையாத் தெருள்முகமும்
ஊனார் மழுமான் உறுதோளும்,
உண்ணா முலையாள் உறையிடமும்,
கானார் புலித்தோல் மருங்கும், மலர்க்
கழலும் குலவக் கருணைபொழிந்(து)
ஆனார் மிசைவந் தருணைநகர்
அறிய ஒருக்கால் அருளாயோ. (4)
அருள்வாழ் வதனைப் பெரிதும்விழைந்(து)
அயரும் தமியேன் அகிலத்திற்
பொருள்வீ றதனா லிறுமாக்கும்
பொல்லார் இகலப் புலர்கின்றேன்
சுருள்பூங் குழலார் அணங்காடும்
சோணா சலத்தெம் பெருமானே
இருள்வே தனைதீர் அடியவரோ(டு)
இருக்கும் பெருஞ்சீ ரீந்தருளே. (5)
ஈந்தின் கனியும் நறுந்தேனும்
இலையும் கிழங்கும் எயினர்குழாம்
மாந்திக் களிக்கும் நெடுஞ்சாரல்
மருவும் சோண வரையானே
ஏந்தி இறுமாந் தெழுமுலையார்
இச்சைக் கடலூ(டு) இடைவுறுநான்
நீந்திக் கரைசேர்ந் துனதிருதாள்
நினையேன் ஒருகை நீட்டாயோ. (6)
நீட்டும் துதிக்கை கயிலையென
நிலவி, இரண்டா யிரமருப்புக்
காட்டும் களிற்றாய் அருணைநகர்க்
கடவு ளானே கடையேனை
ஆட்டும் தொழிலுன் றனதாம் என்(று)
அடியார் பலரீண் டறைந்தமொழி
கேட்டும் தளர்ந்தேன் என்செய்வேன்
கிருபைத் திவலை தெறியாயோ. (7)
ஆயும் கலைமுற் றுடைவாள்மூக்(கு)
அரிந்தாய் எனத்தேர்ந்(து) அவற்றிடைப்போய்
மாயும் பிழைதீர்ந் தெழுத்தைந்தால்
வழிபட் டுயர்சீர் வழங்காயோ
காயும் கனல்வெற் பெனநீண்டாய்!
கரியோன் மலரோன் அறிவரியாய்
பேயும் கணமும் பெரிதார்க்கும்
பிணக்காட் டினும்வாழ் பெருமானே. (8)
மானேந் தியகை யுடையானே!
மழமால் விடைமேல் வருவானே!
பானேர் மொழியாள் அமர்பாகா!
பசும்பொற் சிலையாய் எனக்கூவும்
நானே வலிதுன் திருவருணை
நகர்வந் தடைந்தேன், நலம்புரிவாய்
ஏனேன் எனமுன் ஒருநால்வர்
எதிர்சென் றதுமெய் யெனுமாறே. (9)
மாறு படுந்தா னவர்தமக்கும்
வளங்கள் அளித்தாய் எனமுதுநூல்
கூறு மொழிகேட் டுனையடைந்தேன்
கொல்லா நலமே குறித்துள்ளேன்
வேறு நெறியார் களிநோக்கி
வெருளத் தகுமோ? விநாயகனோ (டு)
ஆறு முகத்தாற் பயந்தானே!
அண்ணா மலையென் றமர்வானே (10)
கலி நிலைத்துறை
அமரர் தந்துயர் பொறுக்கொணா(து) அழுதருள் செய்தோன்
கமல வேதியன் தலையிலேற் றருந்திய கடவுள்
குமர வேட்பயந் தொருசுடர் வேற்படை கொடுத்தோன்
எமனை வென்றவன் அருணையூர் எந்தமக் கினிதே. (11 )
இனிய பாற்கடற் றுயின்றவற் காழியொன் றீந்தோன்
தனிய னாவட நீழலுற் றன்றோரு சதுரர்
கனிய மெய்ப்பொருளுதவிய காரணக் கடவுள்
பனிய றாப்பொழில் அருணைகண் டுய்ந்துளார் பலரே. (12)
பலர்மு னாள்வரம் பெறக்கொடுத் தருளிய பரமன்
திலக வாணுதற் கவுரிபங் குடையவன் சிலம்பென்(று)
இலகு மூர்ப்பெயர் கழறினார் பெறுங்கதி யெய்தற்கு
அலகில் மாதவம் புரிவது கருதிடின் அவமே. (13)
அவல நெஞ்சொடு சந்ததம் போர்பொரு தயர்வேன்
தவமு டிந்துனை விடையின்மேற் காண்பதெத் ததியோ
பவள வாயுமை பங்கனே! பற்றலர் எரியச்
சுவண மாமலை விற்கொளும் சோணமால் வரையே. (14)
மால வன்விடை யுருக்கொடு சுமக்கும்வாழ் வுறுவான்
சூல முத்திரை தரித்துநின் றேத்திய சுடராங்
கால காலனைக் கனல்வரை யாமெனக் காணும்
சீலம்தாள் மலர்த் தாதுகொண் டுயர்ந்ததென் சிரமே. (15)
சிரமொ ரைந்துறு சோதியை, மலரவன் திருமால்
பரவும் ஆதியைப், பழுதுறா அருணையம் பதியின்
அரசை நாடொறும் பணிந்துயர்ந்(து) அவன்மக வாகி
இரவ லோர்குலங் களைந்திடல் என்னது விருப்பே. (16)
விருப்பும் ஏனைய வெறுப்புமற் றருணையின் மேவிப்
பொருப்பு மேனியம் பரமனைப் புகழ்நலம் பொருந்தில்
கருப்பு வில்லியும் பிரமனும் மறலியும் கலங்கி
நெருப்பு நேருறு பஞ்செனத் தொலைவது நிசமே. (17)
நிசமெ லாந்திகழ் அருணையிற் குடிகொளும் நிமலன்
அசமு கத்தின னாகிடத் தக்கனை யடர்த்தோன்
பசலை யார்முலைப் பங்குடைச் சங்கரன் பழைய
குசவ னார்தலை யணிந்தவீ றுணர்ந்தவன் குருவே. (18)
குருவும் தெய்வமு மாகிய பசுபதி குறைதீர்
அருணை மாநகர்க் காவலன் ஆனினத் தரசில்
வருப ராபரன் அல்லது மற்றொரு தெய்வம்
ஒருவர் கூறினும் அவனருட் செயலென லுயர்வே. (19)
உயர்ந்த சோணவெற் பாமென நிலவிய ஒருவன்
வயங்கொள் மால்விடை மேல்மழு மானுடன் வருவோன்
முயங்கு பூண்முலை யாளுடன் ஆடிய முறைதேர்ந்(து)
இயங்கு பேரறி வுடையவர் எங்குலத் திறையோ. (20)
இறைவ னேஅரு ணாபுரி ஈசனே
மறைய வன்றலை யிற்பலி வாங்குவாய்
முறையு னக்கென முன்னிநின் றேத்திடிற்
குறைவு றாதகு ணக்கடல் எய்துமே. (21 )
எய்து முப்புரம் அன்றெரி செய்தவன்
பைதி கழ்ந்த பணியணிப் பண்ணவன்
கைதை மாமலர்க் கைத்தவெற் பாயநாள்
வைத வாமழு மான்எவண் உற்றதே. (22)
உற்ற தொண்டர் உறுகணெ லாமறச்
செற்ற பான்மைச் சிவன்வடி வாமெனப்
பெற்ற தாய் பிறங்கலைச் சூழுவார்
அற்ற மோர்மருப் பானையொப் பாவரே. (23)
ஆவ தைக்குளம் அஞ்சலு றார்களாம்
பாவ மாந்தர் படுகளம் பார்ப்பவர்
தேவ தேவன் திருவரு ணாபுரி
மேவல் உண்டென மேதினி சொன்னதோ. (24)
சொன்ன வில்லுடைச் சோணவெற் பாதிபன்
புன்ன கைத்தழல் போய்ப்புரஞ் சுட்டதும்
கன்னல் மாரனைக் கண்ணெரி செய்ததும்
இன்ன வாறென் றியம்பவொண் ணாததே. (25)
ஆத வன்மதி அங்கியுங் கண்களாம்
நாத னாகிய நல்வரை மீதுறப்
போதல் நாடிப் புகழ் இழந் தான்அரி
பாதம் வேண்டிப் பரிசுபெற் றானரோ. (26)
ஆனு ளானை அருணையிற் சென்றுகண்(டு)
ஊனும் நெஞ்சும் உருகத் துதிபுரிந்(து)
யானு மென்னதும் இன்றிய சீர்பெறிற்
கூனும் வார்சிலைக் கொற்றவன் அஞ்சுமே. (27)
அஞ்சு பூதமும் ஆகிஅப் பாலுமாய்
நஞ்சு தின்றுயர் நாதனு மானவெற்(பு)
எஞ்சு றாநலம் என்றனக் கீயுமேல்
விஞ்சு தீயர்வெ ருண்டொழி வார்களே. (28)
வாரி யிற்றுயில் வண்புகழ் மால்விடும்
தேரி னற்கருள் செய்தவன் சேர்வதாம்
ஊரி னத்துள் உயர்அரு ணாபுரிச்
சீரி யர்க்கெழில் தேவர்ஒவ் வார்களே. (29)
ஒவ்வ லின்றி உயர்அரு ணாபுரிச்
செவ்வ னற்கிரிச் சித்தன்முன் தேவராற்
பவ்வ நஞ்சைப் பருகிய தோர்கலார்
தவ்வ வெல்லும் சதுரரைச் சார்மினே. (30)
வெண்டளைக் கலிப்பா
மின்னிலங்கும் வேற்படையாய் வெஞ்சூர னைத்தடிந்த
பன்னிருகைச் செவ்வேட் பயந்தான் இருக்குமிடம்
கன்னி அணங்கார் கலபமயி லோடாடும்
தென்னிசையும் சாரற் றிருவருணை மாநகரே. (31)
மாநாகம் என்பும் மலரிதழி பூண்டபிரான்
ஆநாகம் ஓங்கும் அருணையூர்க்கு ஆசைகொண்டோர்
காநாகத் தோர்திருவும் கற்பனையாம் என்றுணர்ந்து
தீநாகம் அன்னநெஞ்சை செற்றுவக்க வல்லாரே. (32)
வல்லார் பலர்தாமும் வாழ்த்திசைக்கும் வான்மழுவார்
கல்லால் நீழற் கடவுளார் கண்ணு தலார்
அல்லார் களத்தார் அருணைப் பதியடைந்தாற்
பொல்லாரும் உண்மைப் புகழ்பொருந்த வாழ்வாரே. (33)
வாழை நறுங்கனித்தேன் வாய்க்கால் முதிர்ந்தாறாய்த்
தாழையுறு நெய்தற் றலம்புரக்கும் தண்சாரல்
மாழைபொரு சோண வரையான் மழைவிடைமேல்
ஏழைபங்க னாவான் எமக்கினிய பெம்மானே. (34)
பெம்மான், புராரி, பிறை சூடும் பீடுடையான்,
எம்மான், என் றேத்தும் இயல்புடைய மேலோரைப்
பொய்ம்மான் விழியார் புணர்முலைநேர் பொன்முடியான்
வெம்மான் மலர்க்கணைகள் வேதனைகள் செய்யாவே. (35)
செய்யாள் அகலாத் திருவருணை மாநகரத்(து)
ஐயா னனத்தெம் அரசே! அருட்கடலே!
மையாரும் நெஞ்சத்தால் வாடித் தளர்வேனைப்
பொய்யாளர்க்(கு) அஞ்சாப் புகழுதவி யாண்டருளே. (36)
ஆண்ட குருவாகி அன்றொருவன் முற்றோன்றி
வேண்டலெல்லாம் நல்கி விளையாடல் உண்மை என்றால்
மாண்டழியா வண்ணமென்முன் மால்விடைமேல் வந்தருள்வாய்
நீண்ட புகழ்ச் சோணகிரி நின்ற பெருமானே. (37)
மானியார் நெஞ்சம் மகிழச் சமணொழித்த
கோனில் ஒருவன் குலவும் நலம் காட்டாயோ
வேனில் மகவேளை வெந்துவிழப் பார்த்தோனே
ஆனியுறாத் தொல்சீர் அருணைப் பதியானே. (38)
யானிடைந்து வாட்டமுறும் இந்நாளி லென்னுடனே
நானிலத்தோர் தாமும் நலியப் புரிந்தாயே
பானிறத்து வெண்ணீறும் பாம்பும் புனைந்தோனே
தேனிழியும் தண்சாரற் றென்னருணை வெற்பானே. (39)
வெற்பனைய கொங்கைநல்லாள் மேவும் இடப்பாகர்
சிற்பரமாஞ் சோணவரைச் சித்தாஎன் றேங்குமென்னைச்
சொற்பனத்தில் அவ்வாறு சொல்லவைத்தோன் வேறுளனோ
பொற்பமைந்த சீலம் புனையும் புயத்தானே. (40)
அறுசீராசிரியம்
புயங்க மாலிகைப் பரமனை அருணைவான் பொருப்புடைப் புத்தேளைக்
கயங்கொள் வார்கடற் பிறந்துல கழவருங் கடுவமர் களத்தானை
வயங்கு லாவிய மழுவொடு சூலமும் வைத்தகைப் பெருமானை
முயங்கு பூண்முலைப் பானுகர்ந் தருந்தமிழ் மொழிபவர் பிறவாரே. (41)
பிறவி வேர்களைந் தம்பலத் தாடிய பெய்கழற் பெறவேண்டி
அறவும் வாட்டமுற் றஞ்செழுத் தோதிடும் அறிவுடைப் பெரியோரைக்
குறவர் வேலனை வழிபடும் அருணையங் குன்றழைத் திடலோர்ந்தும்
பறவை போல்மனம் சுழல்வது தவிர்க்கிலாப் பாவமென் பகர்வேனே. (42)
பகலை, ஆயிரங் கண்ணனை. வேதனைப் பாற்கடற் றுயின்றோனைத்
தகர மோதியும் தக்கனார் ஒண்முடி தழலுறப் பெய்தாரான்
நிகரி லாதுயர் அருணைமா நகர்ப்புகழ் நினைப்பவ ரெவரேனும்
சகள மூர்த்தியொப் பார்எனத் தெளிந்தவர் தமைத்தொழச் சலியேனே. (43)
சலிக்கும் நெஞ்சகத் தொருசிறு தமியனேன்தழல்வரைப் பெருமானைப்
புலிக்கும் வீடருள் புனிதனை அரவணி பொலிந்தமற் புயத்தானை
எலிக்கும் வார்கடற் புவிமுழு துதவிடும் இறைவனைத் துதிகூறிக்
கலிக்கு மைந்தர்நேர் புலையரை யனுதினம் கறுவிடப் பெற்றேனே. (44 )
பெற்ற மேறிய பெருத்தகைக் கடவுளைப் பிரமன்மா லறியாத
கொற்ற மால்வரை யுருக்கொளும் பரமனைக் குறித்துநின் றெழுத்(து)ஐந்தும்
சொற்ற மேலவர் பெறும்பய னுணர்ந்துமென் தொடக்குறு மடநெஞ்சம்
குற்ற மாயிரம் புரிந்திடத் துணிவுறு கொடிய நீர் கொளலென்னே. (45)
என்னை வாவெனக் கருணையால் அழைத்தவன் எழில்மலி கமலப்பூப்
பொன்னை வாணியைப் பணிகொளும் மலைமகற் புணர்ந்தவன் புரமூன்றும்
முன்னை நாள்எரித் தமரரைப் புரந்தவன் முதிர்புகழ் அருணேசன்
தன்னை நாடிய சதுரருக் களித்தசீர் தரின்மிக நலமாமே. (46)
நலஞ்செய் தாயென மகிழ்வுறாத் தாதையை நானிலத் தினர்காண
வலஞ்செய் வாள்கொடு தறித்தவற் கருளிய வரதனை மாற்றேறும்
பொலஞ்செய் மாமதில் அருணையிற் றுதிசெயும் புண்ணியம் வீண்போமேல்
அலஞ்செய் தீயவர்அ தட்டல்கேட் டஞ்சியுள் அயர்வது மலிவாமே. (47)
மலியும் மூரலங் கணிகையர் நடஞ்செய மயிலினம் மனநாணும்
மெலிவில் சீர்திகழ் அருணையூர்ப் பரமநீ வியன்தமிழ்ப் புலவோர்தம்
கலியெ லாமறக் கனன்றது மெய்யெனிற் கடையனேன் மிடியாலே
புலிமுன் ஓர்சிறு மறியெனத் தளர்ந்துளம் புலர்வது தவிர்ப்பாயே. (48 )
பாய லாமெனப் பணிமிசைக் கிடந்தருள் பழுத்துயிர் முழுதாளும்
மாய னார்விழி சுமந்தநின் பதங்களை மறந்துநான் உய்வேனோ
தூய வாண்நகை அணங்கினர் நடம்பயில் சோணவெற் புடையானே
நீய லாதொரு துணையிலை வேற்ற நிறைந்தநீ யிரங்காயே. (49)
இரங்கும் நெஞ்சினர் மிடியினாற் றளரவும் ஏனைய குணத்தோராம்
குரங்கர் ஆர்வமுற் றுலவவும் செய்யுமிக் கொடுமையை மறவாயோ
வரங்கள் வேணமட் டரக்கரும் பெறச்செயும் வளரருட் சிவனேநன்
மரங்கள் நீடிய சாரலஞ் சோணமால் வரைஎன வந்தோனே. (50)
கலி விருத்தம்
வந்தூர் மலர்மா ரனைவென் றொருசேய்
தந்தூ ரலர்தாங் கவுணர்த் தடியச்
செந்தூ ரிலனுப் பினர்சேர் அருணை
முந்தூ ரெனவே தமொழிந் திடுமே. (51)
மொழியும் புகழ்மூ தருணைப் பதியிற்
கழியும் பர்கள்கண் டுதொழும் பரமன்
வழியும் கரணைத் தணிவா ரிதியூ(டு)
இழியும் தவம்என் றெனைஎய் துவதே. (52)
எய்யா மல்இகழ்ந் தவர்முப் புரமும்
பொய்யா கநகைத் தருள்புண் ணியனார்
செய்யார் அருணைச் சிவனார் அவரை
மெய்யா ளர்விரும் பிவணங் குவரே. (53)
குவளைத் தடவா விகுலா வருணைச்
சிவனைப் பலசித் தர்களுக்(கு) அனையாம்
அவளைப் புணர்அண் ணலைநண் ணுகிலார்
கவலைப் பிணிகொண் டுகயங் குநரே. (54)
கயமா முகனைக் கடியக் களிறா
வியனார் பிடிமே விவிநா யகனைப்
பயனீள் மலிபா ரில்அளித் தவர்வாழ்
உயர்சோ ணவரைக் கெதிர்ஓ தரிதே. (55)
ஓதக் கடலோங் கறாலு துலகின்
மீதக் கினியாகி விளங் குமலை
நாதர்க் கிருநால் வர்கள்எய் தியதால்
வாதச் சமயங் கள்மடங் கியதே. (56)
மடமா தர்மயக் கம்மிகுந்(து) அவர்தம்
தடமா மலர்தஞ் சமெனத் தவியேன்
படமா டியபாம் பணிவாய் அருணைத்
திடமால் வரைமீ துறசிற் பரனே. (57)
பரவும் தவர்பா வமறக் களைவான்
வரமிஞ் சியவாய் மலரைந் துடையான்
உரகம் புனைவான் உறுதென் னருணைக்(கு)
இரவின் றியிலங் கியதோர் மலையே. (58)
மலையா கியவிற் கொளும்வண் மையினான்
அலையா றமரும் சடையான் அருணைக்(கு)
உலைவே துமிலா துயர்சீர் உறல்கண்(டு)
இலைவேல் இறையா னையொடின் புறுமே. (59)
இன்புற் றிமையோர் களிருப் பதுவேட்(டு)
அன்புற் றழு(து) அக் கமளித் தபிரான்
வன்புற் றுயர்வாள் மழுவான் அருணை
முன்புற் றெவர்முத் தியுறா தவரே. (60)
கலி விருத்தம்
தவளவாள் நகைமினார் தகைநினைத் தலமரும்
பவமொழிந் துன்னையே பரவுசீர் அருள்வையோ
அவமுறார் மருவுதென் அருணையங் கோயிலுட்
சிவபிரா னேநெடும் செஞ்சடைச் சிந்தனே. (61)
சித்தர்வாழ் வெட்டும்நின் றிருவருட் டிவலையென்(று)
உத்தமச் சுருதியால் உணர்வதும் பிழைகொலோ
மத்தமும் புனலும்வான் மதியமும் புனைசடைப்
பித்தனே அருணையின் பெருமலைத் தலைவனே. (62)
தலையில்வெண் தூவலைச் சசியுடன் புனையும் நீ
மலைதரும் புதல்வியார் மக்களோ டென்னைவைத்(து)
உலைவுறா தாளின்மற் றொருவரும் பழிசொலார்
கலைவலார் துதிசெயும் கனல்வரைக் கடவுளே. (63)
கடல்விடம் பருகும்நீ கடையனேன் அழுதுதீர்த்
திடலையும் சிறுதயின் றினியபே றருளிடிற்
புடவியோர் இகழ்வரோ பொருவிலா அருணையின்
திடமதிட் கோயிலிற் றிகழ்வுறும் தெய்வமே. (64)
தெய்வமங் கையர்நடம் செயும்எழிற் சினகரத்(து)
ஐவகைக் கடவுளர்க்(கு) அரசனாம் அமலனே
மைவரும் சோணமால் வரையில்வந் தணுகினேன்
மெய்வழக் கினனெனா மிளிர்வுறப் புரிவையே. (65)
புரிசடைப் பகவனே புலவருட் கருதல்கண்(டு)
எரியெழும் படிநகைத் திகலறுத்(து) இடபமாம்
அரிமிசைக் குலவுவாய் அருணைவெற் பணுகுமென்
பிரியமுற் றுதவியிப் பிழையறக் கலைவையே. (66)
களையெனும் கொடியர்தம் களையறக் களைவதால்
இளையநின் புதல்வனொத் திலகுவான் யாவனோ?
வளையலம் புறுகையாள் மருவுபங் குடையவா
தளையதாம் வினைகெடும் தழல்வரைக் கிழவனே. (67)
கிழவன்என் றருணையங் கிரியினின் றருள்செயும்
பழமைசால் பகவனே பனிவரைக் குமரிதன்
அழகுகண் டுருகுவாய்! அறுமுகக் குழவிதன்
மழலையென் றெளியனேன் வனைதமிழ் புனைவையே. (68)
புனையிழைக் கொடியனார் புணர்முலைக்(கு) உருகுபாழ்
வினையறுத் தருளமால் விடையின்மேல் வருவையோ
நனைசடைப் புனிதனே! நாவலூர் நாவலன்
வனைதமிழ்க் கவிதையாய் வளரணா மலையனே. (69)
மலயவெற் புடையகோன் மகிழ்வுறக் கரகமூ(டு)
இலகுநீர் சொரியும்நின் இயல்புணர்ந் தணுகினேன்
அலகில்சீர் பொலியநீ(டு) அருணமால் வரையினிற்
குலவுமெய்க் கடவுளே குறைபொறுத் தருள்வையே. (70)
அறுசீர்விருத்தம்
அருள்மிகத் தரும்பெம் மானை அருணமால் வரையுள் ளானைப்
பொருள்நயக் கவிதை வேட்டுப் பூவைபால் நடந்தான் தன்னை
இருள்மலி குழலாள் பாகத் திறைவனை இறைஞ்சா தாரை
மருள்மலப் பிணிகள் மூன்றும் வருத்துமென் றுணர்ந்தேன் மன்னோ. (71)
மன்னவன் முடிமேற் றாளும், வளமிகும் அருணைக் காவல்
முன்னவன் அடிகீழ்த் தங்கள் முடியும்வைத் துயர்ந்த மேலோர்
பொன்னவன் கணவன் என்றும் பொதுமறை புகன்றோ னென்றும்
இன்னவர் போலும் பஃறே(வு) என்னவும்இங் கிலங்கு வாரே. (72)
இலங்கையோன் கதறத் தாளின் எழில்விர லதனால் ஊன்றுன்
வலங்கொள்வான் அருணைக் கோயில் வாயிலில் வடிவேற் சேயும்
துலங்குசெம் புகர்க்கை யானும் துவாரபா லகர்போல் நின்றால்
மலங்கெடா அயன்மால் வாழ்வை வகுத்தெவண் உரைக்கலாமே. (73)
உரைக்கரும் பசும்பொன் ஓங்கல் ஒருகையால் பிடித்த பெம்மான்
பரைக்கிடப் பாக மீந்த பசுபதி, பழுதில் சோண
வரைக்குள்அன் றொருக்காற் றோன்றி மாலயன் வழக்குத் தீர்த்தோன்
திரைக்கடல் விடமுண் ணானேல் தேவர்தம் சிறப்பென் னாமே. (74)
சிறப்புறும் அருணை மூதூர்ச் சிலம்பினைத் தினம்சூழ் வார்க்கு
மறப்பொடு நினைப்பும் தீர்ந்த மாதவம் பலிக்கும், அப்பாற்
பிறப்புடன் இறப்பும் நீங்கும், பெருங்கதி யடைவா ரென்று
மறப்பில்வாக் குடைய வேத மாமுனி வகுத்தா னன்றே. (75)
தானொடு நானு மான சமரசா னந்த வாழ்க்கை
தேனொடு பாலும்போலச் சிறியனேற் கினிக்கச் செய்துஆள்
மீனொடும் இணையாம் உண்கண் மெல்லியல் விளங்கும் பாகா!
வானொடும் உரைக்கொண் ணாத வளந்திகழ் அருணை யானே. (76)
ஆனினம் சொரியும் தீம்பால் அருவிசூழ் அருணைக் குன்றிற்
தேனினம் முரலும் கொன்றைத் திருத்தொடை முடித்த நாதன்
நானினந் துயருற் றேங்க நல்குர வுயர்த்து மாகில்
ஊனினம் புசிப்பார் தங்கள் உவகையும் உயரு மன்றே. (77)
மன்றிடை நடிக்கும் தாளால் வளமலி அருணை யூரிற்
குன்றில்நின் றருளும் பான்மை கூறினும் தேறி டாரை
வென்றிவில் மதவேள் பூவும், வேதியன் திரிகை, தானும்
கொன்றிடு மறலி தண்டும், குலைவுறப் படுத்து மன்றே. (78)
படுத்தபுட் குரவன் போலும், பவளவான் களிறு போலும்
அடுத்தசேய் இருவர் தம்மோ(டு) அருந்தமிழ் விரகன் தன்னை
எடுத்தநின் இடத்தாள் என்னை இடுக்கிடில் இளப்பம் கொல்லோ
கொடுத்தலே தொழிலாக் கொண்டு குலவுதென் அருணைக் கோவே. (79)
கோவைவாய்க் கவுரி பாகா! கொழுமழுப் படைக்கை யானே
ஆவையூர்ந் துலகைச் சூழ்வாய்! அருணைமா நகருள் ளானே
பாவைநீ இகழா துன்பொற் பதங்களிற் புனைவா யாகில்
தேவைபோல் அளவில் கோடி சித்திகள் செய்வேன் இன்னே. (80)
எண் சீர்
இன்னலெனும் பெருங்கடலிற் குளிக்கும் தீயேன்
இகபரசா தனங்குறிப்பார்க் கினிமை கூறேன்
வன்னமுலைப் பேதைநல்லார்க் குருகும் நெஞ்சேன்
மழவிடைமேல் உனைநாடி மகிழ்வ தென்றோ
தென்னரு ணைப் பதியாளும் சிவனே, கற்றூண்
திரைநீரில் மிதப்பவும்முன் செய்யும் தேவே
நின்னருளே தஞ்சமன்றி வேறொன் றில்லேன்
நினைத்தபயன் பெறுமாறு நிகழ்த்தி யாளே. (81)
ஆளாயேல் எவ்வணுய்வேன் இந்நாள் காறும்
அடியனேன் படுத்துயரம் அறியாய் கொல்லோ
தோளாண்மை அருளாண்மை இரண்டும் நல்கித்
தொழும்பரோடு இருத்தியருட் சுகத்திற் றோய்ப்பாய்
வாளாய கண்ணிஉண்ணா முலையாள் பங்கா!
வாதவூர் அடிகளுக்கா மதுரை யூரில்
வேளாய வழுதியர்கோன் கரத்தி லேந்தும்
வேத்திரத்தின் அடிகொண்டாய் வெறுத்தி டேலே. (82)
வெறுக்கரிய நலங்காட்டும் அருணை மூதூர்
வேதியனே இருவருக்கா வெற்பாய் நின்றாய்
முறுக்கெயிற்றுச் சமனுலகில் அமணர்ச் சேர்க்கும்
முருந்துநகைக் குருந்துணர்ந்த முதல்வா! முந்நீர்க்
குறுக்கனைதீர்ந் துயர்திருமால் பாவந் தீர்த்தாய்
குவலயத்தில் அனைவோரும் குலைச்செய் வாராம்
மறுக்கமுறப் பொருவானைக் காணா முன்னம்
மலரடிநீ யளித்தாலும் மருவி டேனே. (83)
மருமலியும் கொன்றைதும்பை கரந்தை ஆத்தி
மத்தமதி கொக்கிறகு மருவும் சென்னிக்
குருமணியே முதலையுண்ட மதலை ஈந்த
கோமானே என்னளவும் கொடுமை செய்யேல்
அருமறையோ டாகமமும் முழங்கும் தொல்சீர்
அருணையூர் அணுகியும்நான் அயர லாமோ
கருமமுத லாயமல மூன்றும் போக்கிக்
கழலிணைகட் காளாக்கிக் காத்தி டாயே. (84)
காத்தகிலம் உண்டுமிழ்ந்த நெடியோன் காணாக்
கமலமலர்ப் பதம்நோவக் காட்டிலேகிப்
பார்த்தனுடன் போர்புரிந்து கணையொன் றீந்த
பசுபதியே; அமரர்குழாம் பயந்த காலம்
நீத்தநெடும் கடல்விடமார்ந்(து) அபயம் ஈந்த
நிமலனே! அருணவெற்பா நின்ற தேவே!
பூத்தமல ரேந்தியுனக் கான பூசை
புரிந்துவக்கும் ஆசைவிஞ்சிப் புலர்கின் றேனே. (85)
தேனமரும் கொன்றையுடன் எருக்கும் பூண்டாய்!
தேவருக்கும் அவுணருக்கும் திறலீந் தாள்வாய்!
கானமலி பூஞ்சோலை நிலவுஞ் சாரற்
கனகவெற்பி லிருந்துநெடுங் கனலா நின்றாய்!
போனகத்துக் கலையாதுன் அடியார் கூட்டம்
பொலிவதுகண் டிறுமாக்கும் புகழ்ச்சி வேண்டி
நானருணைப் பதியில்வந்தேன் கண்டாய், இன்னே
நரையேற்றிற் றுலங்கியுண்மை நவின்றி டாயே. (86)
நவிலருஞ்சீர் ஈசானத் தொருவற் போற்றி,
நமச்சிவாய னைப்புகழ்ந்து, நால்வாய் வேழங்
கவின்மலியும் குகவேள்பாங் கொளிரும் வாயிற்
கனசிகரி வாழ்த்தெடுத்தும் கவன்றேன் கண்டாய்!
துவிதநலம் தெரித்தருளாற் கலந்து கொள்ளும்
சோதியே! அருணைநகர்ச் சுயம்பே! முன்னாள்
அவிமறுத்தோன் தலைகொய்தாய்! இரங்கி யாட்கொண்(டு)
அடியார்தம் பெருங்கூட்டத் தமைத்தி டாயே. (87)
அமையனைய தோளியுண்ணா முலையாள் பங்கா
ஆயிரத்தெண் கலையானே! அருணை ஈசா!
சமையமெங்கும் புகுந்(து) அவற்றின் அடியார்க் கெல்லாம்
தண்ணருட்சீர் உதவியநீ தமிய னேனை
இமையவரின் மேலாக்கி யாள்வாய் கொல்லோ!
ஈனரினும் கடையாக்கி இகழ்வாய் கொல்லோ
தமையலது பொருள் வேறொன் றிலையென் பாரும்
தடுத்தெதிர்த்து வாதமிடத் தவிக்கின் றேனே, (88)
கின்னரிதாங் கியகரமும் சிறகும் கொண்ட
கிளிமொழியார் இசைபாடக் கிளரும் கோயில்
தென்னருணைப் பெருமானே! புலவன் ஏவத்
திருவாரூர் வீதியிற்போய்த் திரும்பும் தூதா!
கன்னல்வில்லி பொடியாக விழித்த கண்ணா!
கவிகோடி புனைந்தோனே! கனிவில் லாதேன்
சொன்னதுதிக் கிரங்கியருள் புரிந்தா யானால்
தூயபுகழ்க் கணியாகித் துலங்கு வேனே. (89)
துலங்கியவாள் எயிற்(று) உலக்கைக் கணங்கள் சூழச்
சுடுகாட்டில் ஒருபாதம் தூக்கி யாடி
இலங்கிழையாள் மனம்நாணக் களிக்கும் எந்தாய்!
எழிலருணைக் கிரியானே! இமையோர் போற்றும்
நலங்கிளர்வெண் ணீற்றரசே! என்று கூவும்
நானவமாப் போகாமே நலஞ்சற் றீந்தாள்!
விலங்கினம், ஊர்வன, பறவை யாதிஉண்டு
வீங்கும்உட லோர்பலரும் வெருளு மாறே. (90)
சந்தக்கவி - கலிநிலைத்துறை
தானதன தானதன தானதன தானதன தனதானா
மாறுபடும் வேள்விமுயல் மாதவர்கள் தாமருவு மடவாரோ(டு)
ஊறுபட மோகினியொ டேகிவரு சோணவரை உயர்வோதார்
கீறுபடு பாதிமதி போலுமென மூவரைகள் கிளர்சீரால்
நீறுபடர் மேனியில ராதியரை யாமணுவும் நினையேமே ( 91)
தானனத் தந்ததன தானனத் தந்ததன தானானா
ஏமனுக் கும் கொடிய வேதனுக் கும்கிளியில் ஏறீடார்
காமனுக் கும்பயமு றாதளிக் கும்கடவுள் காணீரோ!
தாமரைக் கண்கொளுமு ராரியொத் திங்கொளிர்கை சார்வானே!
நாமடுக் கும்பொருவில் சோணவெற் பொன்றுதினம் நாடீரே. (92 )
தானனத் தத்தான தானனத் தத்தான தத்தானா
நாடனைத் திற்சோண மால்வரைக் கொப்பேதும் நத்தாதா
பாடல்செப் பித்தேறு நாவலர்க் குட்சேறல் பற்றேனோ
சூடகக் கைப்பாவை பாகமுற் றுத்தோலு டுத்தோனே
வேடெனச் சிற்கான மாறெனச் சிற்போகம் வீற்றோனே. (93)
தத்தந்த தானதன தத்தந்த தானதன தன்னானா
விற்கொண்ட சோணகிரி யிற்றங்கி யாளுமுயர் விண்ணோனே
பொற்கொண்ட பாவலவ னுக்கின்ப மீயவொரு பொன்னேர்வாள்
இற்கொண்ட தாள்கருதி நிற்கின்ற மாதவரை எண்ணாதே
சொற்கொண்டு நாளுமிகழ் தற்கஞ்சி டார்களொடு துன்னேனே. (94)
தன்னதன தனனதன தன்னதன தனனதன - தன்னா
துன்னரிய திருவருணை என்னுமுயர் தலமுடைய தொல்லோனே
என்னளவும் மிகநினையும் நன்னலம துதவும்வலி யல்லாயோ
முன்னறிஞர் பலர்கவிதை சொன்னபடி யருளினைகொல் மொய்யார்பூ
உன்னடியி லிடுமுவகை தன்னையுத(வு) இனிய உயிர் உய்மாறே. (95)
தய்யந் தனத்தனன தய்யத் தனத்தனன தானத்தா
உய்யும் படிக்குரிமை சொல்லும்தொ ழிற்பரிய மோர் மெய்த்தேவு
ஐயும்ப யத்தொடுள மொல்குந் திறத்தையருள் ஆர்வத்தான்
மொய்யும் சிகிக்குலமும் மல்கும் குவட்டருண மால்வெற்போன்
எய்யும் கணைக்குணவு வையம்கு டிக்கும்அறல் ஏழுப்பே. (96)
தத்தனத் தானதன தத்தனத் தானதன - தாந்தானா
உப்புடைச் சீர்ப்பொழிலில் விப்பிரக் கூட்டமதில் ஓங்கூர்சூழ்
மெய்ப்புகழ்க் காட்டருண வெற்பினைப் போற்றுதவம் வீண்போமோ
மைப்புயற் போற்குலவு மொய்த்துமட் டார்த்தகுழல் மான்பாகா
முப்புரத் தார்ப்பொடிசெய் அத்தமற் றோட்குகனை மோந்தோனே. (97)
தாந்த தனதன தாந்த தனதன தாந்தானா
மோந்த கரமுறு தூங்கல் முகமுறு முத்தோன்மேல்
ஏய்ந்த பகைகொடு காய்ந்த குமரனை ஏற்றேயோர்
கூந்த லுமையிடை யேன்கொள் வது? பகர், கோட்கூறா
மாந்தர் வளர்பதி யாந்தென் அருணையில் வாய்த்தோனே. (98)
தாத்த தனதன தாத்த தனதன - தந்தானா
வாய்த்த அருணையர் ஏற்றி லநுதினம் வந்தாள்வார்
சாத்த னனைபுணர் தோட்கொள் பரர்உமை தன்பாலார்
பார்த்தன் வழிபடு மூர்த்தி அவரருள் பண்பாலே
தூர்த்தர் குலமற மாய்க்க முயல்பவர் துஞ்சாரே. (99)
தந்தத் தனத்ததன தந்தத் தனத்ததன தத்தானா
துஞ்சற் றவிர்த்தருளை மிஞ்சக் கொடுத்தமுது சொற்கேளா
வஞ்சர்ச் செகுக்கும்வலி துன்றித் திருத்தியுற வைக்காதோ
அஞ்சத் தினுக்கிணையில் பன்றிக் களப்பரிய ரத்தாவார்
நஞ்சக் களத்தரவர் தம்பொற் கழற்சரணம் நற்பூவே. (100)
நூற்பயன் - வெண்பா
பாடும் அருணைப் பதிற்றுப்பத் தந்தாதி
யூடு கவிஒன் றுணர்ந்தோர்க்கும் - நாடுநலம்
கைகூடும் முக்கட் கடவுளார் காட்சிதரும்
மெய்கூடும் பொய்தவிரு மே.
முற்றிற்று.