திருச்சிற்றம்பலம்
காப்பு வெண்பா
அண்ணா மலைநாத ரார்ந்திடுபக்கத் தமர்ந்த
உண்ணா முலைப்பதிக மேவுரைக்க - ஒண்ணான
அந்திநிறத் தானீன்ற வண்ணலென மைந்துகரத்
தந்திமுகன் றாளே சரண்.
சந்தவிருத்தம்
திருவாருங் கூடுதனி லாறுவீடு தினமே யிருந்து முடிவிற்
பெருவீடு தன்னில் மணல்வீடுகட்டிப் பேயேன் பிழைக்க வசமோ
எரிகாடெனச் சொல் சுடுகாடு போமுன் னெளியேன்முன் வந்தருளுவாய்,
மருவார்ந்த வுண்ணாமுலை நாமதேவி வரவேணு மென்றனருகே. (1)
விலைமாதர் தங்கள் நிலையே மெய்யென்று விரிவான வுலகந்தனில்
அலைவாய்த் துரும்புபோலே யுழன்றவடியேனை யாராளுவார்
கலைதேடிக் காணாதொளிரு மப்ரசித்திக் கனத்தோர்கள் புகழுமண்ணா
மலைமேவு முண்ணாமுலை நாமதேவி வரவேணு மென்றனருகே. (2)
சீர்கொண்ட வகிலந் தனில்வாழு மாந்தர் செய்கொடி தப்பிதத்தை
ஏர்கொண்ட வுன்றன் வாளா லறுத்து மிரட்சிக்கு முலகம்மை நீ
ஆர்கண்டு நின்சீடருரை செப்பவல்ல வனாதரட்சகி நீயலோ
வார்கொண்ட வுண்ணாமுலை நாமதேவி வரவேணு மென்றனருகே. (3)
பிறைபோன்ற நெற்றிப்பறையம் பணத்திப் பரிபாலனத்தி புகழ்சேர்
நிறையோடுகின்ற திருவேனின் சீரை நிலையோடுசெப்ப வுளரார்
குறைவாழ்வை நீக்கி பதமீந்து ரட்சி கொடிபோலிடைப் பெணமுதே
மறைதேடு முண்ணாமுலை நாமதேவி வரவேணு மென்றனருகே. (4)
சென்னிக் குளிந்தைப் புனலைத் தரித்த சிவன்வாம பாகமதனில்
மின்னே ரெனச்சொன் மிகவேயிருக்கு மெல்லியற் கணுமையே
என்னைப்போ லேழை யகிலத்தி லில்லை யீடேறவைத்தா ளுவாய்
மன்னிக்கு முண்ணாமுலை நாமதேவி வரவேணு மென்றனருகே. (5)
பந்தார் குசத்தி பணிசேர் முகத்தி பதுமா சனத்திமாயி
நந்தார் கழுத்தி நாராயணத்த ரளினப்பதத் தின்னிசேர்
சிந்தா குலத்தை வந்தா தரித்து சீர்பெற்றிடச் சிறுவன்முன்
வந்தாள்க வுண்ணா முலைநாமதேவி வரவேண்டு மென்றனருகே. (6)
கொடிபோன் றிடைச்சி குறமாதுமாமி குணமான பூஷணத்தோன்
றிடியேறு போன்ற மிடியால் மெலிந்த யேழைக் கிரங்குசத்தி
நடையா லனத்தை மெலியச் செய்விக்கு நாராயணன் சகோதரி
வடிவார்ந்த வுண்ணா முலைநாமதேவி வரவேணு மென்றனருகே. (7)
சற்றாகிலுன்ற னுளமேயிரங்க யினிதாமசங்க ளேனோ
சித்தாந்தரூபி திவ்யப்பிரதாபி திருவார்ந்த தில்லையதனில்
எத்தால் விளைந்த கதைபோலிருக்கு தென்னன் மழையிப்பூமியில்
வற்றாத வுண்ணா முலைநாமதேவி வரவேண்டு மென்றனருகே. (8)
விரிவானபூமி தனில்வாழுமாந்தர் வெகுதப்பிதங்கள் செயினும்
அரிதானஞான மதுகொண்ட பேரை யணுகிப்புரந் தாளுவாய்
பெருவாழ்வளித்து பிரியத்தொ டென்னை பிரியாதிருக்க விப்போ
வருசெல்வியுண்ணா முலைநாமதேவி வரவேணு மென்றனருகே. (9)
ததியிந்தவேளை மதியிலாத தமியேனை ரட்சிப்பதற்
கெதியாருமில்லை யுனையன்றிவேறு கௌமாரி வீரியிந்தப்
பதிகத்தைநின்றன் சரணத்தி லொன்றைபரிவற் றுவைகுமெனையாள்
மதிசத்தியுண்ணா முலைநாமதேவி வரவேண்டு மென்றனருகே. (10)
முற்றிற்று