(எழுசீர்விருத்தம்)
1. கருணையா லென்னை யாண்டநீ யெனக்குன்
காட்சிதந் தருளிலை யென்றா
லிருணலி யுலகி லேங்கியே பதைத்திவ்
வுடல்விடி லென்கதி யென்னா
மருணனைக் காணா தலருமோ கமல
மருணனுக் கருணனா மன்னி
யருணனி சுரந்தங் கருவியாய்ப் பெருகு
மருணமா மலையெனு மன்பே.
2. அன்புரு வருணா சலவழன் மெழுகா
யகத்துனை நினைந்துநைந் துருகு
மன்பிலி யெனக்குன் னன்பினை யருளா
தாண்டெனை யழித்திட லழகோ
வன்பினில் விளையு மின்பமே யன்ப
ரகத்தினி லூறுமா ரமுதே
யென்புக லிடநின் னிட்டமென் னிட்ட
மின்பதெற் கென்னுயி ரிறையே.
3. இறையுனை நினையு மெண்ணமே நண்ணா
வெனையுன தருட்கயிற் றாலீர்த்
திறையுயி ரின்றிக் கொன்றிட நின்றா
யென்குறை யியற்றின னேழை
யிறையினிக் குறையென் குற்றுயி ராக்கி
யெனைவதைத் திடலெதற் கிங்ங
னிறைவனா மருணா சலவெண முடித்தே
யேகனா வாழிநீ டூழி.
4. ஊழியில் வாழு மாக்களி லென்பா
லூதியம் யாதுநீ பெற்றாய்
பாழினில் வீழா தேழையைக் காத்துன்
பதத்தினி லிருத்திவைத் தனையே
யாழியாங் கருணை யண்ணலே யெண்ண
வகமிக நாணநண் ணிடுமால்
வாழிநீ யருணா சலவுனை வழுத்தி
வாழ்த்திடத் தாழ்த்துமென் றலையே.
5. தலைவநீ யென்னைக் களவினிற் கொணர்ந்துன்
றாளிலிந் நாள்வரை வைத்தாய்
தலைவநின் றன்மை யென்னவென் பார்க்குத்
தலைகுனி சிலையென வைத்தாய்
தலைவநான் வலைமான் றனைநிக ராதென்
றளர்வினுக் கழிவுநா டிடுவாய்
தலைவனா மருணா சலவுள மேதோ
தமியனார் தனையுணர் தற்கே.
6. தற்பர நாளுந் தாளினிற் றங்கித்
தண்டலர் மண்டுக மானேன்
சிற்பத நற்றே னுண்மல ரளியாச்
செய்திடி லுய்தியுண் டுன்ற
னற்பதப் போதி னானுயிர் விட்டா
னட்டதூ ணாகுமுன் பழியே
வெற்புரு வருண விரிகதி ரொளியே
விண்ணினு நுண்ணருள் வெளியே.
7. வெளிவளி தீநீர் மண்பல வுயிரா
விரிவுறு பூதபௌ திகங்கள்
வெளியொளி யுன்னை யன்றியின் றென்னின்
வேறுயா னாருளன் விமலா
வெளியதா யுளத்து வேறற விளங்கின்
வேறென வெளிவரு வேனார்
வெளிவரா யருணா சலவவன் றலையில்
விரிமலர்ப் பதத்தினை வைத்தே.
8. வைத்தனை வாளா வையகத் துய்யும்
வழியறி மதியழித் திங்ஙன்
வைத்திடி லார்க்கு மின்பிலை துன்பே
வாழ்விதிற் சாவதே மாண்பாம்
பைத்தியம் பற்றிப் பயனறு மெனக்குன்
பதமுறு மருமருந் தருள்வாய்
பைத்திய மருந்தாப் பாரொளி ரருண
பருப்பத வுருப்பெறு பரனே.
9. பரமநின் பாதம் பற்றறப் பற்றும்
பரவறி வறியரிற் பரமன்
பரமுனக் கெனவென் பணியறப் பணியாய்
பரித்திடு முனக்கெது பாரம்
பரமநிற் பிரிந்திவ் வுலகினைத் தலையிற்
பற்றியான் பெற்றது போதும்
பரமனா மருணா சலவெனை யினியுன்
பதத்தினின் றொதுக்குறப் பாரேல்.
10. பார்த்தனன் புதுமை யுயிர்வலி காந்த
பருவத மொருதர மிதனை
யோர்த்திடு முயிரின் சேட்டையை யொடுக்கி
யொருதன தபிமுக மாக
வீர்த்ததைத் தன்போ லசலமாச் செய்தவ்
வின்னுயிர் பலிகொளு மிஃதென்
னோர்த்துய்மி னுயிர்கா ளுளமதி லொளிரிவ்
வுயிர்க்கொலி யருணமா கிரியே.
11. கிரியிது பரமாக் கருதிய வென்போற்
கெட்டவ ரெத்தனை கொல்லோ
விரிதுய ராலிப் பிழைப்பினில் விழைவு
விட்டுடல் விட்டிட விரகு
கருதியே திரிவீர் கருத்தினு ளொருகாற்
கருதிடக் கொலாமலே கொல்லு
மருமருந் தொன்றுண் டவனியி லதுதா
னருணமா திரமென வறிவீர்.