logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

சோணசைலப் பதிகம் (சோணாசல பாரதி)

திருச்சிற்றம்பலம் 

சோணாசல பாரதி இயற்றிய

        எழுசீர் விருத்தம் 

உவப்புறு மாதிப்  பெரும்பதக் கனியே
    யுள்ளம் வாழமுதே யென்கோ
தவப்பெருந் தகையோர்க் கருட்பத மளிக்குஞ்
    சாமியே சாமியே யென்கோ
நவப்பெருங் கருணை நல்கிடக் கிடைத்த
    ஞானபோ தனமுத லென்கோ
துவப்பெரு நிலையர்க் கருள்புரி கின்ற
    சோணமா சைலநின் றனையே.  (1)

நிறைவிலா வமுதக் குழம்பெனுங் கடலே
    நிமலவுண் ணிலையனே யென்கோ
குறைவெலாந் தவிர்க்குங் குணமுகி லென்கோ
    குளிர்ந்தவெண் டிங்களே யென்கோ
சிறையெலாங் கடத்தித் திருவடிக் காளாய்ச்
    செய்திடுஞ் சித்தனே யென்கோ
துறையெலாங் கடந்தோர்க் கருள்புரி கின்ற
    சோணமா சைலநின் றனையே.   (2)

அன்றுதொட் டடியே னகம்வள ரமுதே
    யண்டவா வாண்டவா வென்கோ
மன்றுனின் றோங்கும் வரதனே யென்கோ
    மன்னுமா ருயிர்க்கர சென்கோ
நன்றருட் டயையிந் நாளினி லெனக்கும்
    நல்கிய நண்பனே யென்கோ
தொன்றுதொட் டுளோர்க் கருள்புரி கின்ற
    சோணமா சைலநின் றனையே.  (3)

கணைநிகர் கலைமா மதியம ததனிற்
    கனல்படக் கலந்தசீ ரென்கோ
இணையிலா தெழுந்த வின்னமு தத்தனி
    விலகிய சோதியே யென்கோ
பணையெனப் பருத்தேன் செய்பவ மெல்லாம்
    பரிகரித் திடுமருந் தென்கோ
துணைபெறு மடியார்க் கருள்புரி கின்ற
    சோணமா சைலநின் றனையே.  (4)

எடுத்தநற் பதத்துளொ லித்திடு நாதத்
    தியற்கையி லுறுஞ்சுக மென்கோ
கெடுத்ததத் துவரின் மயக்கினைத் தவிர்க்க
    கிளம்பிய பானுவே யென்கோ
அடுத்தடுத் தெனக்குள றிவினை விளக்கு
    மருட்பிர காசமே யென்கோ
கொடுத்தநல் லன்பர் தமிழினுக் கிரங்குஞ்
    சோணமா சைலநின் றனையே.  (5)


மோக்கமே விரும்பு முனிவர்கட் கருள்செய்
    முக்கணா முக்கணா வென்கோ
கோக்களுக் கிரங்கிக் குணமதை யருளுங்
    கொற்றவா குறைகற் றென்கோ
ஏக்கமே யுடைய யேற்கின்னருள் புரியு
    மெந்தையே யெந்தையே யென்கோ
தூக்கமேய கற்றஞ் சுத்தர்கட் கருளுஞ்
    சோணமா சைலநின் றனையே.  (6)

ஓய்வுறா தடியையுன் னுவோர்க் கெளிதா
    முண்மையே யுண்மையே யென்கோ
தேய்வுறா தன்பர்க் கிரங்கிநன் னிலைமேற்
    சிற்சுக மருள்பவா வென்கோ
மாய்வுறா ரகத்தினு ணர்விடைத் ததும்பும்
    வடிவமே வடிவமே யென்கோ
தோய்வுறா தெனையுந் தொழுதிடப் பணித்த
    சோணமா சைலநின் றனையே.   (7)

பதியெலாங் கடந்த பரம்பர வெளியிற்
    பரவிய சோதியே யென்கோ
சதியெலாந் தவிர்த்துத் தன்மையே யருளுஞ்
    சம்புவே சம்புவே யென்கோ
கதியெலாங் கடந்துங் கருணையிற் கனியுங்
    கண்ணியர்க் குறுசுக மென்கோ
துதியெலாம் பெறுமெய்ச் சுத்தர்கட் கருளுஞ்
    சோணமா சைலநின் றனையே.  (8)

வாக்கும் மனத்து மதியினும் வயங்கி
    மலப்பிணி யகற்றுமன் னென்கோ
நோக்கும் போதுதித்த நுண்ணறி வென்கோ
    நூல்வழிப் பட்டிடா தருளைப்
போக்குறும் பேர்க்கட் பொருந்திடா தென்கோ
    பூரண வத்துவா யுளத்திற்
றூக்குபொற் பாதந் துலங்கவெற் கருளுஞ்
    சோணமா சைலநின் றனையே.  (9)

அலைவிலா தடியார்க் கரியநற் பதமே
    யற்புதக்  கூத்தனே யென்கோ
உலைவிலாக் கனியே யொழுகி யரசமே
    புலர்ந்திடாச் சோதியே யென்கோ
மலைவிலா ரகத்தே கிடைத்திடும் ஞான
    மாணிக்க மலையதே யென்கோ
தொலைவிலா தெளியேற் கருண்மிகப் புரியுஞ்
    சோணமா சைலநின் றனையே. (10)

 
        முற்றும் 

Related Content