logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருவண்ணாமலைப் பதிகங்கள் -2 (திருக்குருகூர் ஸ்ரீமத் ஞானசித்த சுவாமிகள்)

திருக்குருகூர் ஸ்ரீமத் ஞானசித்த சுவாமிகள் இயற்றியது

கலிநிலைத்துறை

சீதப்புனலும் மதியுஞ்சென்னி சேர்த்தவாவென்
போதத்தொளியாரு மண்ணாமலைப் புண்ணியாநன்
னீதத்துடன்வாழ் பதினெண்கணம் நின்றுபோற்றும்
பாதத்தினிலென் றனையும்வரப் பண்ணுவாயே.  (1)

தேனார்மொழியாரு முண்ணாமுலைச் செல்வியோர்பால்
ஆனாயழல்போலு மண்ணாமலை யய்யனேயான்
றானாகவுன்ற  னடிக்கேவரச் சார்புமில்லேன்
மானாகமரைக் கிசைந்தோங்கிய வள்ளலேயோ.  (2)

தண்ணார்மதி போலுமுண்ணாமுலைத் தாயுமோர்பால்
அண்ணாமலை யாவடியேற்கு மருள்செய்கண்டாய்
எண்ணாதடியே னலைந்தேனினி யேனுமிங்ஙன்
பண்ணாலுனைப் பாடிநின்றாடப் பணித்துளாயே.  (3)

தேடுமயன் மாலறியாத் திருப்பதத்திற்
பாடும்படி யாகவென்றன்னுட் பதித்தநின்சீர்
கூடும்படிக்கு மருள்செய்யக் குலவிமன்று
ளாடும்படி யானதயாபர வண்ணலேயோ.  (4)

உன்னும்பொழு தேயுளத்தோங்கிய வுத்தமயான்
மன்னும்படி யார்க்குமண்ணாமலை  நாதனேவான்
மின்னும்படி யாம்பிறைவைத்தொரு மெல்லியார்தம்
பொன்னும்பதம் வைத்திடவுஞ்சிரம் பொறுத்ததேயோ. (5)

மானத்துடன் மாலயன்போரில் மயங்குகின்ற
வானத்தவர் விஞ்சையராதி மகிழ்ந்துளோங்க
ஞானக்கன லாகுமண்ணாமலை நாதனேமா
லேனத்துரு வாயெடுத்தேத்த விரங்குவோனே.  (6)

அன்னப்பறவை யுருக்கொண்டவ் வகண்டமுட்டி
உன்னப்பெரு வேதனமுள்ள முடைந்துளோங்கி
என்னப்ப முடியறிந்தேனென் றியம்பவந்தான்
சின்னப்படச் செய்யுமண்ணாமலைத் தேவனேயோ.  (7)

மாற்றுங்கரணங்க ளெலாங்கடந் தோங்கிமன்றுள்
போற்றும்படி யாயடியேற்கருள் புண்ணியாயான்
சாற்றுந்தமிழ்ப் பாவும்நின்றாளிற் றரித்துளன்பாய்
ஆற்றும்படி வருகவண்ணாமலை யாதிநீயே.  (8)

வாமந்தனில்வாழு முண்ணாமுலை மங்கையோர்பால்
தாமங்கமழு மலர்க்கொன்றைச் சடையுளாநின்
நாமம்புகழ்ந் தேத்துமண்ணாமலை நாதனேமேல்
தூமம்மணு வேனுமிலாதருட் சோதியானே.  (9)

படியாரித யம்பதியாது பணிந்துளோங்கும்
அடியார்நடு வைத்தவண்ணாமலை யப்பனேவெண்
பொடியாமத னாலட்டசித்தி பொருத்திடாயேல்
முடியாதினி யேனுநின்றனருள் மொழிந்திடாயே.  (10)

Related Content

திருவண்ணாமலைப் பதிகம் -1 (திருக்குருகூர் ஸ்ரீமத் ஞானசித்த சு