(வெண்பா)
1. அருணிறை வான வமுதக் கடலே
விரிகதிரால் யாவும் விழுங்கு மருண
கிரிபரமான் மாவே கிளருளப்பூ நன்றாய்
விரிபரிதி யாக விளங்கு.
2. சித்திரமா மிஃதெல்லாஞ் செம்மலையே நின்பாலே
யுத்திதமாய் நின்றே யொடுங்கிடுமா னித்தியமு
நானென் றிதய நடித்திடுவை யாலுன்பேர்
தானிதய மென்றிடுவர் தாம்.
3. அகமுகமா ரந்த வமலமதி தன்னா
லகமிதுதா னெங்கெழுமென் றாய்ந்தே யகவுருவை
நன்கறிந்து முந்நீர் நதிபோலு மோயுமே
யுண்கணரு ணாசலனே யோர்.
4. வெளிவிடயம் விட்டு விளங்குமரு ணேசா
வளியடக்க நிற்கு மனத்தா லுளமதனி
லுன்னைத் தியானித்து யோகி யொளிகாணு
முன்னி லுயர்வுறுமீ துன்.
5. உன்னிடத்தி லொப்புவித்த வுள்ளத்தா லெப்பொழுது
முன்னைக்கண் டெல்லாமு முன்னுருவா யன்னியமி
லன்புசெயு மன்னோ னருணாச லாவெல்கு
மின்புருவா முன்னிலாழ்ந் தே
அருண கிரிரமண னாரியத்திற் கண்ட
வருமறையந் தக்கருத்தே யாகு மருணா
சலபஞ் சகமணியைத் தண்டமிழ்வெண் பாவா
லுலகுக் களித்தா னுவந்து.