1. அசலனே யாயினு மச்சவை தன்னி
லசலையா மம்மையெதி ராடு மசல
வுருவிலச் சத்தி யொடுங்கிட வோங்கு
மருணா சலமென் றறி.
2. சத்திய சிற்சுக மன்றிப் பரவுயிர் சாரயிக்க
மர்த்தவத் தத்வ மசியரு ணப்பொரு ளாமசலத்
தர்த்தங் கனமது வாகுஞ்செவ் வாடக வாரொளியா
முத்தி நினைக்க வருளரு ணாசல முன்னிடவே.
3. அருணா சலத்திலுறு கருணா கரப்பரம
னருணார விந்த பதமே
பொருணாடு சுற்றமொடு வருணாதி பற்றியுள
மருணாட லற்று நிதமுந்
தெருணா டுளத்தினின லருணாடி நிற்குமவ
ரிருணாச முற்று புவிமேற்
றருணா ருணக்கதிரி னருணாளு முற்றுசுக
வருணால யத்தி லிழிவார்.
4. அண்ணா மலையுனை யெண்ணா னெனவெனை
யண்ணாந் தேங்கிட வெண்ணாதே
மண்ணா மலவுட லெண்ணா வகமென
மண்ணா மாய்ந்திட வொண்ணாதே
தண்ணா ரளிசெறி கண்ணா டொருகிறி
பண்ணா தென்னிரு கண்ணாளா
பெண்ணா ணலியுரு நண்ணா வொளியுரு
வண்ணா லென்னக நண்ணாயே.
5. சீரான சோணகிரி சிறக்க வாழுஞ்
சிற்சொருப னாமிறையே சிறிய னேன்றன்
பேரான பிழையெல்லாம் பொறுத்துக் காத்துப்
பின்னுமிவன் பாழிதனில் வீழா வண்ணங்
காரான கருணைவிழி கொடுப்பா யின்றேற்
கடும்பவத்தி னின்றுகரை யேற மாட்டே
னேரான துண்டோதாய் சிசுவுக் காற்று
நிகரற்ற நலனுக்கு நிகழ்த்து வாயே.
6. காமாரி யென்றுநீ யன்பரா லென்றுமே
கதித்திடப் படுகின்றா
யாமாமெ யுனக்கிது வாமாவென் றையுறு
மருணாச லேச்சுரனே
யாமாயி னெங்ஙனந் தீரனே சூரனே
யாயினும் வல்லனங்கன்
காமாரி யாகுமுன் காலரண் சரண்புகு
கருத்தினுட் புகவலனே.
7. அண்ணா மலையா யடியேனை
யாண்ட வன்றே யாவியுடற்
கொண்டா யெனக்கோர் குறையுண்டோ
குறையுங் குணமு நீயல்லா
லெண்ணே னிவற்றை யென்னுயிரே
யெண்ண மெதுவோ வதுசெய்வாய்
கண்ணே யுன்றன் கழலிணையிற்
காதற் பெருக்கே தருவாயே.
8. புவிக்குட் பொங்கிடும் புவிச்சொற் புங்கவன்
புரிக்குட் புண்ணியன் சுழிக்குட் சுந்தரன்
றவற்குச் சுந்தரஞ் சதிக்குற் பன்னனந்
தலத்திற் புன்புலன் சழக்கிற் றுன்புறுந்
தவிக்குத் துஞ்சிடும் படிக்குத் தன்னுளந்
தழைக்கத் தன்பத மெனக்குத் தந்தனன்
சிவக்கச் சின்மயஞ் செழிக்கத் தன்மயஞ்
செகத்திற் றுன்னுசெம் பொருப்புச் செம்மலே.
9. அம்மையு மப்பனு மாயெனைப் பூமியி லாக்கியளித்
தம்மகி மாயையெ னாழ்கடல் வீழ்ந்துயா னாழ்ந்திடுமுன்
னென்மன மன்னி யிழுத்துன் பதத்தி லிருத்தினையால்
சின்மய னாமரு ணாசல நின்னருட் சித்ரமென்னே.