logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருவருணைத் தனிவெண்பா (குகைநமசிவாய சுவாமிகள்)

திருச்சிற்றம்பலம் 

திருவண்ணாமலையின்கண் எழுந்தருளியிருந்த குகைநமசிவாய சுவாமிகள் அருளிச்செய்த


சொன்னந் தருங்குருவே சோணா சலத்தானே
இன்னம் பிறந்தாலு மிப்படிநின் - சன்னிதியை
நாடக் கிடைத்திடுமோ நன்னெஞ்சே நாமவரைக்
கூடக் கிடைத்திடுமோ கூறு.                1

சம்பா வமுதும் சருக்கரைத்தே னெய்பாலும்
தென்பாகத் தந்தருளுந் தேசிகா-என்பார்க்கே
வந்தருள் சோணேச வயதுநூ றுங்கொடுத்துத்
தந்தருள்வாய் நின்பதமே தான்.            2

ஆரிருக்க லாமே யருணேசரே  யுலகில்
நீரொருத்த ரல்லாமல்  நேடுங்கால் -நீரும்
பிறவா மலேயிருந்தீர் பின்பிறந்தா ரெல்லாம்
இறவாரோ மண்மீ தினில்.                3

வானவரு மிந்திரனு மாலொடய னுஞ்சென்று
போனவிடம் புன்முளைத்தும் போகாதோ-தானமுதாய்
அத்த ரருணேச ரன்பாக நஞ்சுதனை
புத்தியுட னுண்ணாத போது.                4

சோணா சலனைத் துதியாமற் றொல்லுலகில்
வீணாசை கொண்டிருந்து விட்டோமே-பூணாரம்
பெண்டிர்மக்கள் சுற்றம் பெருவாழ் வெனக்கருதி
உண்டி தனக்கா யுழன்று.                5

ஓதி யுரைத்தாலு மூண்படுக்கை யற்றாலும்
மாதசைத்தன் னெஞ்சின மறந்தாலும்- நீதி
வழுவாமற் சோணகிரி வள்ளலே யன்பு
தழுவாம லாமோ தவம்.                6

அங்கனையார் மேல்வைத்த வாசையிலே நூற்றிலொரு
பங்கருணை யீசன்மேற் பற்றினால்-சங்கையற
வத்தவின் பம்பெறலா மாராய்ந்து நெஞ்சமே
நித்தந் தவம்பெறலா நீ.                7

இந்தவரந் தானே யெமக்கமைய நீகுருவாய்
வந்ததிருக் கோலத்தை மாறாமல்-சிந்தைதனில்
வைச்சிருக்க வுச்சியிலே வைத்தபதத் தைக்கருத்தில்
தைச்சிருக்க சோணாச லா.                8

உண்ண வுடுக்க வொருகுடைக்கீழ் வையமெலாம்
பண்ணப் பணந்தேடப் பாவிக்க- எண்ணியிடும்
அந்தநாள் பின்னிட் டடியே னுனைத்துதிப்ப
தெந்தநாள் சோணேச னே.                9

மண்ணுபொன் னாகாதோ மாற்றான் விலகானோ
பண்ணுந் தவங்கள் பலியாவோ-நண்ணுபுகழ்
விண்ணும் பரவும் விமல வருணகிரி
அண்ணல் புரிந்தா லருள்.                10

மானமிலி பொய்யன் மனங்கனிவி லாதபுத்தி
யீனனிவ னென்று மிகழாதே-ஞான
உருவே யருணகிரி ஓநமசி வாய
குருவே யெனையாண்டு கொள்.            11

ஆதிமறை தேடரிய அண்ணா மலையாருக்
கேதுமுடி யேதடியென் றேத்துவே-நீதி
ஒளியே திருமேனி யும்பருக்கு மெட்டா
வெளியே யவரிருக்கும் வீடு.                12

ஆயாசந் தீர்க்கு மருணேச ரேதமியேன்
மாயாம லொன்றுதர மாட்டீரோ-ஓயாமல்
ஊசலுக்கு நேரா யுழலுமனந் தானொருவர்
வாசலுக்குப் போகா வரம்.                13

பல்லுயிரைக் கொன்ற பழிநீங்கு நீங்காத
புல்லறிவு நீங்கும் புலைநீங்கு-கொல்லவந்த
கூற்றுவனு நீங்கும் குவலயத்திற் சோணகிரி
போற்றுந் தவத்தோர்க்கப் போது.             14

சிந்தையினால் வாக்கினால் செய்தொழிலால் பார்வையினால்
வந்தபிறப் பிறப்பும் வன்பிணியும்-எந்தைகுரு
நாதனெனச் சோணகிரி நம்பனென மால்தேடும்
பாதனெனப் போமே பறந்து.                15

பொல்லாத வென்பிறவிப் புண்ணுக் கொருமருந்து
சொல்லா யருணகிரிச் சோதியே- எல்லாரும்
போற்ற நடம்புரியும் புண்ணியா நான்மறைகள்
ஏற்றுஞ் சிவலோக னே.                16

சூலங் கரத்திருக்கச் சோதிமழு மானிருக்க
ஆலமுண்ட கண்டத் தழகிருக்க-வேளை
விழித்த விழியிருக்க மெய்போக ராயா
தரித்ததென்ன தாமதமோ தான்.            17

அடைக்கலமாச் சோணகிரி யப்பனடி சார்ந்தோம்
கடைப்பிறவி முந்நீர் கடந்தோம் -படைக்குமந்த
முண்டகனை யும்மதியோம் மூரிக் கடாவெறும்
கண்டகனை யும்மதியோங் காண்.            18

இந்தப் பிறப்பி லிரங்காத தேவரீர்
எந்தப் பிறப்பி லிரங்குவீர்-சிந்தைக்
கனியே யருணகிரிக் கண்ணுதலே பொல்லாத்
தனியே னிடர்தீரத் தான்.                19

ஆயபிணி முந்நூற் றறுபதுக்குங் கூடாகி
மாயுமுட லைச்சுமக்க மாட்டேனே -தோயுமதி
அப்பணியும் வேணி யருணேசரே தமியேற்
கிப்பிறவி மாற்றீ ரினி.                20

பொழுதுதிக்கச் சாமமெனும் போதே யெழுந்து
முழுகிவெண் ணீற்றினின் மூழ்கி- தொழுதுனது
பொன்னான சேவடியைப் போற்ற விறைஞ்சருணை
மன்னா தருவாய் வரம்.                21

வையமுழு தும்படைத்து வாழு மருணகிரி
ஐய னமைத்தபடி யெல்லாம்- நொய்யமனம்
நூறா யிரமாக நோக்கிடினு மெள்ளளவு
பேறா ததிற்குறை யாது.                22

ஆகா வழியே யடியேன் பிறந்திருந்து
போகா வழியருளப் போகாதோ-வாகா
வருணையனே யன்பர்க் கனவரத மான
கருணையனே கண்பார்த் தருள்.            23

சையிலே நீயிருக்கக் கன்னெஞ்ச னேனுலகப்
பொய்யிலே வீழ்ந்தழிந்து போவேனோ-மெய்யிலே
நீறா வுனைத்துதிக்கு நேசருளத் திற்கருப்பஞ்
சாறா மருணா சலா.                24

நெற்றிவிழி கண்மூன்று நித்திரையோ சோணேசா
பற்றுமழு சூலம் பறிபோச்சோ-சற்றும்
அபிமான மின்றோ வடியார்க ளெல்லாம்
சபிமாண்டு போவதே தான்.                25

ஆண்ட குருவை யறியாத மானிடர்கள்
தூண்டி லிடவொருத்தி தோன்றினாள்- நீண்டபுகழ்
திக்கெல்லாம் போற்றுதிரு வண்ணா மலைதனில்வாழ்
எக்கலா தேவி யிவள்.                26

குற்ற லரிசி குறைந்தநாட் போதாதோ
வெற்றிலைக்குங் கேடுவர வேண்டுமோ-நித்தநித்த
மண்ணா மலைநாதா வைம்ப தரைக்காசுக்
கெண்ணிவிற்ற தற்குவந்த தென்.              27

கோள ரிருக்குமூர் கொன்றாலுங் கேளாவூர்
காளையரே நின்று கதறுமூர்-நாளும்
பழியே சுமக்குமூர் பாதகரே வாழுமூ
ரழியாவூ ரண்ணா மலை.                28

வீடுதருஞ் சோணகிரி வித்தகனார் சத்தியுடன்
நீடுதே ரேறியவர் நிற்கின்றார்- ஓடி
வடம்பிடிக்க வாருங்கள் வந்தவர்க்கு முத்தி
யிடங்கிடைக்கும் பாருங்க ளின்று.            29

பூமாலை சாத்திப் புவிபுகழ்சோ ணாசலர்க்குப்
பாமாலை சூட்டிப் பலகாலு-நாமாலை
பண்ணா யிரம்பாடிப் பார்த்திருக்க நாயேற்குக்
கண்ணா யிரம்வேண்டுங் காண்.            30

எனக்குத் தனக்கென் றிகலியைந்து பூதம்
தனக்குத் தனக்கே தலையாய்-மனக்குவசம்
ஆவதில்லை சோணகிரி யையர் விதைநீக்கப்
போவதில்லை போகாப் பொறி.            31

போகாப் பொறியாய்ப் புலனைந்துங் கூடியவித்
தேகாதி தள்ளுகைக்குந் தேட்டமா-யோகா
விருக்கு மருணகிரி யீசா விதனை
யுருக்கும் வகையே துரை.                32

தாயிலுநல் லாரினிய தந்தையினுந் தானல்லார்
ஆயிலரு ணேச ரடியேற்கு-மாயவுடல்
நோகப் பொருந்துவரோ நூறு வயதிருந்தும்
சாகப் பொருந்துவரோ சாற்று.            33

பத்தர்களை வரவென்றும் பாவிகளைப் போவென்றும்
முத்திவழி யீதென்று மூதலிக்கும் -சத்தியமே
அன்னவயல் சூழருணை யண்ணாமலை நாதர்
சன்னிதியி றூதுதிருச் சங்கு.                34

நச்சரவம் பூண்டானை நன்றாய்த் தொழுதவன்றன்
இச்சையிலே தானு மிருப்பதுவும்-பிச்சைதனை
வாங்குவது முண்பதுவும் வந்துதிரு வாசலிலே
தூங்குவதுந் தானே சுகம்.                35


        திருவருணைத் தனிவெண்பா முற்றும்.

            திருச்சிற்றம்பலம் 

Related Content

அண்ணாமலையார் வண்ணம் (நல்லூர் தியாகராச பிள்ளை)

உண்ணாமுலையம்மன் பதிகம்

திருவண்ணாமலைப் பதிகங்கள் -2 (திருக்குருகூர் ஸ்ரீமத் ஞானசித்த

திருவண்ணாமலைப் பதிகம் -1 (திருக்குருகூர் ஸ்ரீமத் ஞானசித்த சு

திருவருணைக் கலம்பகம்