logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

அருணாசல அக்ஷரமணமாலை (ரமணர்)

(ரமணர்)

காப்பு

அருணாசல வரற்கேற்ற வக்ஷரமண மாலைசாற்றக்
கருணாகர கணபதியே கரமருளிக் காப்பாயே.

நூல்

அருணா சலசிவ அருணா சலசிவ
அருணா சலசிவ அருணாசலா!
அருணா சலசிவ அருணா சலசிவ
அருணா சலசிவ அருணாசலா!

1.    அருணா சலமென வகமே நினைப்பவ
ரகத்தைவே ரறுப்பா யருணாசலா (அ)

2.    அழகுசுந் தரம்போ லகமும் நீயுமுற்
றபின்னமா யிருப்போ மருணாசலா (அ)

3.    அகம்புகுந் தீர்த்துன் னககுகை சிறையா
யமர்வித்த தென்கொ லருணாசலா(அ)

4.    ஆருக் காவெனை யாண்டனை யகற்றிடி
லகிலம் பழித்திடு மருணாசலா (அ)

5.    இப்பழி தப்புனை யேனினைப் பித்தா
யினியார் விடுவா ரருணாசலா (அ)

6.    ஈன்றிடு மன்னையிற் பெரிதருள் புரிவோ
யிதுவோ வுனதரு ளருணாசலா (அ)

7.    உனையே மாற்றி யோடா துளத்தின்மே
லுறுதியா யிருப்பா யருணாசலா (அ)

8.    ஊர்சுற் றுளம்விடா துனைக்கண் டடங்கிட
வுன்னழ கைக்காட் டருணாசலா (அ)

9.    எனையழித் திப்போ தெனைக்கல வாவிடி
லிதுவோ வாண்மை யருணாசலா (அ)

10.    ஏனிந்த வுறக்க மெனைப்பிற ரிழுக்க
விதுவுனக் கழகோ வருணாசலா (அ)

11.    ஐம்புலக் கள்வ ரகத்தினிற் புகும்போ
தகத்தினீ யிலையோ வருணாசலா (அ)

12.    ஒருவனா முன்னை யொளித்தெவர் வருவா
ருன்சூ தேயிது வருணாசலா (அ)

13.    ஓங்கா ரப்பொரு ளொப்புயர் வில்லோ
யுனையா ரறிவா ரருணாசலா (அ)

14.    ஒளவைபோ லெனக்குன் னருளைத் தந்தெனை
யாளுவ துன்கட னருணாசலா (அ)

15.    கண்ணுக்குக் கண்ணாய்க் கண்ணின்றிக் காணுனைக்
காணுவ தெவர்பா ரருணாசலா (அ)

16.    காந்த மிரும்புபோற் கவர்ந்தெனை விடாமற்
கலந்தெனோ டிருப்பா யருணாசலா (அ)

17.    கிரியுரு வாகிய கிருபைக் கடலே
கிருபைகூர்ந் தருளுவா யருணாசலா (அ)

18.    கீழ்மே லெங்குங் கிளரொளி மணியென்
கீழ்மையைப் பாழ்செய் யருணாசலா (அ)

19.    குற்றமுற் றறுத்தெனைக் குணமாய்ப் பணித்தாள்
குருவுரு வாயொளி ரருணாசலா (அ)

20.    கூர்வாட் கண்ணியர் கொடுமையிற் படாதருள்
கூர்ந்தெனைச் சேர்ந்தரு ளருணாசலா (அ)

21.    கெஞ்சியும் வஞ்சியாய்க் கொஞ்சமு மிரங்கிலை
யஞ்சலென் றேயரு ளருணாசலா (அ)

22.    கேளா தளிக்குமுன் கேடில் புகழைக்
கேடுசெய் யாதரு ளருணாசலா (அ)

23.    கையினிற் கனியுன் மெய்ரசங் கொண்டுவ
கைவெறி கொளவரு ளருணாசலா (அ)

24.    கொடியிட் டடியரைக் கொல்லுனைக் கட்டிக்
கொண்டெஙன் வாழ்வே னருணாசலா (அ)

25.    கோபமில் குணத்தோய் குறியா யெனைக்கொளக்
குறையென் செய்தே னருணாசலா (அ)

26.    கௌதமர் போற்றுங் கருணைமா மலையே
கடைக்கணித் தாள்வா யருணாசலா (அ)

27.    சகலமும் விழுங்குங் கதிரொளி யினமன
சலச மலர்த்தியி டருணாசலா (அ)

28.    சாப்பா டுன்னைச் சார்ந்துண வாயான்
சாந்தமாய்ப் போவ னருணாசலா (அ)

29.    சித்தங் குளிரக்கதி ரத்தம்வைத் தமுதவா
யைத்திற வருண்மதி யருணாசலா (அ)

30.    சீரை யழித்துநிர் வாணமாச் செய்தருட்
சீரை யளித்தரு ளருணாசலா (அ)

31.    சுகக்கடல் பொங்கச் சொல்லுணர் வடங்கச்
சும்மா பொருந்திடங் கருணாசலா (அ)

32.    சூதுசெய் தென்னைச் சோதியா தினியுன்
சோதி யுருக்காட் டருணாசலா (அ)

33.    செப்படி வித்தைகற் றிப்படி மயக்குவிட்
டுருப்படு வித்தைகாட் டருணாசலா (அ)

34.    சேரா யெனின்மெய் நீரா யுருகிக்கண்
ணீராற் றழிவே னருணாசலா (அ)

35.    சையெனத் தள்ளிற் செய்வினை சுடுமலா
லுய்வகை யேதுரை யருணாசலா (அ)

36.    சொல்லாது சொலிநீ சொல்லற நில்லென்று
சும்மா விருந்தா யருணாசலா (அ)

37.    சோம்பியாய்ச் சும்மா சுகமுண் டுறங்கிடிற்
சொல்வே றென்கதி யருணாசலா (அ)

38.    சௌரியங் காட்டினை சழக்கற்ற தென்றே
சலியா திருந்தா யருணாசலா (அ)

39.    ஞமலியிற் கேடா நானென் னுறுதியா
னாடிநின் னுறுவே னருணாசலா (அ)

40.    ஞானமில் லாதுன் னாசையாற் றளர்வற
ஞானந் தெரித்தரு ளருணாசலா (அ)

41.    ஞிமிறுபோ னீயு மலர்ந்திலை யென்றே
நேர்நின் றனையென் னருணாசலா (அ)

42.    .தத்துவந் தெரியா தத்தனை யுற்றாய்
தத்துவ மிதுவென் னருணாசலா (அ)

43.    தானே தானே தத்துவ மிதனைத்
தானே காட்டுவா யருணாசலா (அ)

44.    திரும்பி யகந்தனைத் தினமகக் கண்காண்
டெரியுமென் றனையென் னருணாசலா (அ)

45.    தீரமி லகத்திற் றேடியுந் தனையான்
றிரும்பவுற் றேனரு ளருணாசலா (அ)

46.    துப்பறி வில்லா விப்பிறப் பென்பய
னொப்பிட வாயே னருணாசலா (அ)

47.    தூய்மன மொழியர் தோயுமுன் மெய்யகந்
தோயவே யருளென் னருணாசலா (அ)

48.    தெய்வமென் றுன்னைச் சாரவே யென்னைச்
சேர வொழித்தா யருணாசலா (அ)

49.    தேடா துற்றநற் றிருவரு ணிதியகத்
தியக்கந் தீர்த்தரு ளருணாசலா (அ)

50.    தைரிய மோடுமுன் மெய்யக நாடயான்
றட்டழிந் தேனரு ளருணாசலா (அ)

51.    தொட்டருட் கைமெய் கட்டிடா யெனிலியா
னட்டமா வேனரு ளருணாசலா (அ)

52.    தோடமி னீயகத் தோடொன்றி யென்றுஞ்சந்
தோடமொன் றிடவரு ளருணாசலா (அ)

53.    நகைக்கிட மிலைநின் னாடிய வெனையரு
ணகையிட்டுப் பார்நீ யருணாசலா (அ)

54.    நாணிலை நாடிட நானா யொன்றிநீ
தாணுவா நின்றனை யருணாசலா (அ)

55.    நின்னெரி யெரித்தெனை நீறாக் கிடுமுன்
னின்னருண் மழைபொழி யருணாசலா (அ)

56.    நீநா னறப்புலி நிதங்களி மயமா
நின்றிடு நிலையரு ளருணாசலா (அ)

57.    நுண்ணுரு வுனையான் விண்ணுரு நண்ணிட
வெண்ணலை யிறுமென் றருணாசலா (அ)

58.    நூலறி வறியாப் பேதைய னென்றன்
மாலறி வறுத்தரு ளருணாசலா (அ)

59.    நெக்குநெக் குருகியான் புக்கிட வுனைப்புக
னக்கனா நின்றனை யருணாசலா (அ)

60.    நேசமி லெனக்குன் னாசையைக் காட்டிநீ
மோசஞ் செயாதரு ளருணாசலா (அ)

61.    நைந்தழி கனியா னலனிலை பதத்தி
னாடியுட் கொள்நல மருணாசலா (அ)

62.    நொந்திடா துன்றனைத் தந்தெனைக் கொண்டிலை
யந்தக னீயெனக் கருணாசலா (அ)

63.    நோக்கியே கருதிமெய் தாக்கியே பக்குவ
மாக்கிநீ யாண்டரு ளருணாசலா (அ)

64.    பற்றிமால் விடந்தலை யுற்றிறு முனமருள்
பற்றிட வருள்புரி யருணாசலா (அ)

65.    பார்த்தருண் மாலறப் பார்த்திலை யெனினருள்
பாருனக் கார்சொல்வ ரருணாசலா (அ)

66.    பித்துவிட் டுனைநேர் பித்தனாக் கினையருள்
பித்தந் தெளிமருந் தருணாசலா (அ)

67.    பீதியி லுனைச்சார் பீதியி லெனைச்சேர்
பீதியுன் றனக்கே னருணாசலா (அ)

68.    புல்லறி வேதுரை நல்லறி வேதுரை
புல்லிட வேயரு ளருணாசலா (அ)

69.    பூமண மாமனம் பூரண மணங்கொளப்
பூரண மணமரு ளருணாசலா (அ)

70.    பெயர்நினைத் திடவே பிடித்திழுத் தனையுன்
பெருமையா ரறிவா ரருணாசலா (அ)

71.    பேய்த்தனம் விடவிடாப் பேயாப் பிடித்தெனைப்
பேயனாக் கினையென் னருணாசலா (அ)

72.    .பைங்கொடி யாநான் பற்றின்றி வாடாமற்
பற்றுக்கோ டாய்க்கா வருணாசலா (அ)

73.    பொடியான் மயக்கியென் போதத்தைப் பறித்துன்
போதத்தைக் காட்டினை யருணாசலா (அ)

74.    போக்கும் வரவுமில் பொதுவெளி யினிலருட்
போராட் டங்காட் டருணாசலா (அ)

75.    பௌதிக மாமுடற் பற்றற்று நாளுமுன்
பவிசுகண் டுறவரு ளருணாசலா (அ)

76.    மலைமருந் திடநீ மலைத்திட வோவருண்
மலைமருந் தாயொளி ரருணாசலா (அ)

77.    மானங்கொண் டுறுபவர் மானத்தை யழித்தபி
மானமில் லாதொளி ரருணாசலா (அ)

78.    மிஞ்சிடிற் கெஞ்சிடுங் கொஞ்ச வறிவனியான்
வஞ்சியா தருளெனை யருணாசலா (அ)

79.    மீகாம னில்லாமன் மாகாற் றலைகல
மாகாமற் காத்தரு ளருணாசலா (அ)

80.    முடியடி காணா முடிவிடுத் தனைநேர்
முடிவிடக் கடனிலை யருணாசலா (அ)

81.    மூக்கிலன் முன்காட்டு முகுரமா காதெனைத்
தூக்கி யணைந்தரு ளருணாசலா (அ)

82.    மெய்யகத் தின்மன மென்மல ரணையினா
மெய்கலந் திடவரு ளருணாசலா (அ)

83.    மேன்மேற் றாழ்ந்திடு மெல்லியர்ச் சேர்ந்துநீ
மேன்மையுற் றனையென் னருணாசலா (அ)

84.    மைமய னீத்தருண் மையினா லுனதுண்
மைவச மாக்கினை யருணாசலா (அ)

85.    மொட்டை யடித்தெனை வெட்ட வெளியினீ
நட்டமா டினையென் னருணாசலா (அ)

86.    மோகந் தவிர்த்துன் மோகமா வைத்துமென்
மோகந்தீ ராயென் னருணாசலா (அ)

87.    மௌனியாய்க் கற்போன் மலரா திருந்தான்
மௌனமி தாமோ வருணாசலா (அ)

88.    யவனென் வாயின் மண்ணினை யட்டி
யென்பிழைப் பொழித்த தருணாசலா (அ)

89.    யாருமறி யாதென் மதியினை மருட்டி
யெவர்கொளை கொண்ட தருணாசலா (அ)

90.    ரமணனென் றுரைத்தேன் ரோசங் கொளாதெனை
ரமித்திடச் செயவா வருணாசலா (அ)

91.    ராப்பக லில்லா வெறுவெளி வீட்டில்
ரமித்திடு வோம்வா வருணாசலா (அ)

92.    லட்சியம் வைத்தரு ளஸ்திரம் விட்டெனைப்
பட்சித்தாய் பிராணனோ டருணாசலா (அ)

93.    லாபநீ யிகபர லாபமி லெனையுற்று
லாபமென் னுற்றனை யருணாசலா (அ)

94.    வரும்படி சொலிலை வந்தென் படியள
வருந்திடுன் றலைவிதி யருணாசலா (அ)

95.    வாவென் றகம்புக்குன் வாழ்வரு ளன்றேயென்
வாழ்விழந் தேனரு ளருணாசலா (அ)

96.    விட்டிடிற் கட்டமாம் விட்டிடா துனையுயிர்
விட்டிட வருள்புரி யருணாசலா (அ)

97.    வீடுவிட் டீர்த்துள வீடுபுக்குப் பையவுன்
வீடுகாட் டினையரு ளருணாசலா (அ)

98.    வெளிவிட்டே னுன்செயல் வெறுத்திடா துன்னருள்
வெளிவிட் டெனைக்கா வருணாசலா (அ)

99.    வேதாந் தத்தே வேறற விளங்கும்
வேதப் பொருளரு ளருணாசலா (அ)

100.    வைதலை வாழ்த்தா வைத்தருட் குடியா
வைத்தெனை விடாதரு ளருணாசலா (அ)

101.    அம்புவி லாலிபோ லன்புரு வுனிலெனை
யன்பாக் கரைத்தரு ளருணாசலா (அ)

102.    அருணையென் றெண்ணயா னருட்கண்ணி பட்டேனுன்
னருள்வலை தப்புமோ வருணாசலா (அ)

103.    சிந்தித் தருட்படச் சிலந்திபோற் கட்டிச்
சிறையிட் டுண்டனை யருணாசலா (அ)

104.    அன்பொடுன் னாமங்கே ளன்பர்த மன்பருக்
கன்பனா யிடவரு ளருணாசலா (அ)

105.    என்போலுந் தீனரை யின்புறக் காத்துநீ
யெந்நாளும் வாழ்ந்தரு ளருணாசலா (அ)

106.    என்புரு கன்பர்த மின்சொற்கொள் செவியுமென்
புன்மொழி கொளவரு ளருணாசலா (அ)

107.    பொறுமையாம் பூதர புன்சொலை நன்சொலாப்
பொறுத்தரு ளிஷ்டம்பின் னருணாசலா (அ)

108.    மாலை யளித்தரு ணாசல ரமணவென்
மாலை யணிந்தரு ளருணாசலா (அ)

அருணா சலசிவ அருணா சலசிவ
அருணா சலசிவ அருணாசலா!
அருணா சலசிவ அருணா சலசிவ
அருணா சலசிவ அருணாசலா!

அருணா சலம்வாழி யன்பர் களும்வாழி
அக்ஷர மணமாலை வாழி.

Related Content

அருணாசல நவமணிமாலை (ரமணர்)

அருணாசலப் பதிகம் (ரமணர்)

அருணாசல அஷ்டகம் (ரமணர்)

அருணாசல பஞ்சரத்னம் (ரமணர்)