logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

அருணாசலேஸ்வரர்  பதிகம்

காப்பு வெண்பா

ஆதியயன் மாலடி முடியைக் காண்பரிய
சோதிவரை யாகிநின்ற தூயனொளிர் -  பாதிமதி
கற்றைச் சடைக்கணிந்த கண்ணுதலைப் போற்றவெங்க
ளொற்றைக் கொம்பன் றுணைத்தா ளுண்டு. 

        ஆசிரிய விருத்தம்

ஓதுமலை துல்லிய விபூதிமலை கைலைய னுறைந்தமலை மந்திரமலை
    உத்தமமெய்ஞ் ஞானியர் தபோதனர்கள் சூழுமலை யோங்குமலை யழியாமலை
சோதிமலை யிருகண் களிக்குமலை மெய்யடியர் தொழுதுருகு சோணமலையே
    துங்கபத்திரி யமுனை கலைவாணி தீர்த்தமலி சுனையருகி லொளிர்மாமலை
வேதமலை சித்திர விநோதமலை யென்னன்னையர் வேண்டுமலை காண்டமலையே
    வினைதீர்க்க வந்தமலை கனகாபி ஷேகமலை வீறுமலை யேறுமலையே
ஆதிமலைமீ துறை யநாதியே யென்னையா ளருணாசலக் கடவுளே
    அரகர மகேசனே பரமகுரு வீசனே யணியணாமலை வாசனே.    (1)

காளத்தி நாதராய்க் கழுகா சலத்தராய்க் காசிதனில் விசுவேசராய்க்
    கச்சியே கம்பராய் வேளூர் வயித்தியராய்க் கமலமலர் தன்னிலுறைபுத்
தேளுக்கு மாலுக்கு மெட்டாத சோதியாய்த் திருவொற்றியூர்த் தியாகராய்த்
    தென்மதுரை யிற்சொக்க ராய்க்காழி தன்னிற்றிருத் தோணியப்பர் தாமாய்
நாளச சரோருகத் தடமேவு தென்றில்லை நடராஜராய் விரிஞ்சை
    நகர்வழித் துணை லிங்கராய்த் திருச்செங்காட்டு நம்பரா யடியார்களை
ஆளக்கடைக்க ணருள்செய விளங்கிய வெங்க ளருணாசலக் கடவுளே
    அரகர மகேசனே பரமகுரு வீசனே யணியணா மலைவாசனே.  (2)

பாணிச் செழுஞ்சடைப் பரமனே யுலகிலுறு பத்தர் கோடிகளேற்றிடும்
    பாதபங் கேருகா சங்கர சதாசிவா பாலநேத்ரா சாம்பவா
பூணிற் பொலிந்தமா தேவிபங்காசர்ப்ப பூஷண நீலகண்டா
    பூதநாதா தற்ப ராசிற்ப ரா சர்வபூரணா சதுராரணா
சேணிற் பொலிந்த பண்ணவர்கணெடு மாலயன் சிந்தனைசெய் தேவ தேவா
    திகழ்சிகரமேரு கோதண்டா வகண்டா சிதம்பரா கருணாகரா
ஆணிப்பொன்னே நாயினேன் றன்னை யாளுவா யருணாசலக் கடவுளே
    அரகரமகேசனே பரமகுருவீசனே யணியணாமலைவாசனே.  (3)

சூலமொடு மான்மழு கபாலமுங் கைக்கொண்ட துங்கமிகு சிவசங்கரா
    சுற்றிவந் துன்கோயில் பத்தியுடனே தொழுது சொல்லுமென் றொல்லையைக் கேள்
வாலிபந்தன்னிலே யொருநலமு மெய்திடா வறுமைவந் தெனை வருத்த
    வண்புவியி லொருசாண் வயிற்றினை வளர்க்க வுளம் வாடினேன் றேடிவந்தேன்,
சாலவஞ்சித் தெனைக் கைவிடினு நாயினேன் சாமியுனை விடுவதில்லை
    தள்ளாம லுன்பாத பதுமநிதி தந்திடத் தயைசெய்வ துன்பாரமே
ஆலவிட மருவுமணி நீலகண்டத்தனே யருணாசலக் கடவுளே
    அரகர மகேசனே பரமகுரு வீசனே யணியணாமலை வாசனே. (4)

தேவர்துதி தேவராய் வாழ்விக்கு மீசராய் செகதலக் கர்த்தவ்யமாய்த்
    தெய்வீக மாமுசித வைபோக ராயனே சிந்தைநொந் தினிதுவாடி
மாவுலகில் கொலை களவு கட்காம மாதிய வகுத்தவைம் பாதங்கள்
    மனத்தச்சமில்லா தியற்றினேனோ வுன்னைவந் தித்திடாத குறையோ
கூவென்ற சத்தமுன் செவிக்கொண்டு கேளாத கொடுமைதா னென்னையனே
    குழவியழு குரல்கேட்ட தாய்போல வந்தெனது குறைதவிர்த் தானையனே,
ஆவிக்குநீ துணை யலாதுவே றில்லை யென்  னருணாசலக் கடவுளே
    அரகர மகேசனே பரமகுரு வீசனே யணியணாமலை வாசனே.  (5)

மாணிக்க ரப்பர்சுந் தரர்புனித சம்பந்தர் மாதவத்தோர் தமக்கும்
    வரமே யளித்த சிவபோக வுண்ணாமலை வல்லிதனிடப் பாகனே
காணிக்கை கொண்டட்ட திசையுளோர் நசையோடு கனிந்து பூசனை புரிந்து
    கவினுற்ற விருகரஞ்சிர மிசை குவித்தேத்து கர்த்தனே கைலையரசே
வீணுக்குதித்துவாழ் நாள் கழித்துப் புவியில் மெலிவிசாரக் கடலினில்
    வீழ்ந்தலைந் திடுமென தரும்பவ மகற்றாத விதமென்னமோ வையனே
ஆணித்தரத்து வெண்முத்தமே யத்தனேயருணாசலக்கடவுளே
    அரகர மகேசனே பரமகுரு வீசனே யணியணாமலை வாசனே. (6)

நீயெனது தெய்வமென் றுன்கோயில் வலம்வந்து நேயமொடு கொண்டாடிநன்
    நினைவோடு பணிபவர்க் கழிவிலாப் பதவியும் நிறை செல்வமுங் கனதையும்
தேயுசம் மிக்கவுண்டாயுளும் நூறுண்டு தென்புண்டு வன்பு முண்டு
    தியானிக்க நினைவுமுண் டிகையுண் டுயர்கல்வி தெளிவுண்டு ஞானமுண்டு
வாயுண்டு கவிசொலக் கேட்கவுஞ் செவியுண்டு வாழ்வுண்டு தாழ்வில்லையே
    வல்லாண்மை யுண்டுமிகு நல்லோரிணக்கமது மாறாது தாழ்வுறாது
ஆயுளாரோக்யமும் பெருகவருள்வாவிசூ ழருணாசலக் கடவுளே
    அரகர மகேசனே பரமகுரு வீசனே யணியணா மலைவாசனே. (7)

காலுடன் கைகளு நடுக்குற் றிடாமுனங் கழறுநாக் குளறு முன்னங்
    கண்கள்பஞ் சடையுமுன் றுன்பம்வந் தெய்துமுன் காலன்வந் தணுகாமுனம்
தோலுஞ் சுருங்கித் திரைந்துநரையொடுமூப்புதோன்றுமுன் னிருமன் முதலாம்
    தொல்வினை வாரமுனம் பல்வரிசை வீழுமுன் றொனியிட்டி மனைவி மக்கள்
மாலுற் றழாமுனம் பாலன்றனக்குமுன் வந்தெனைக் காப்ப தாதோ
    மரணத் தயர்ந்திடுந் தருணத்தி லுன்றன் மலர்ப்பத முவந்தருளுவாய்
ஆலத்தை யமுதுசெயு மமலனே யாதியே யருணாசலக்கடவுளே
    அரகர மகேசனே பரமகுரு வீசனே யணியணாமலை வாசனே.  (8)

வீணாயிவ் வவனியி லுதித்தவந்தழனேர் விசாரத்தினாலென துளம்
    வெந்துமிக நொந்துன்னை வந்தடுத்தேனென்ன விதமான பாதகங்கள்
நாணாது செய்தகொடி யேனெனு மென்பிழையை நம்பனே நீபொறுத்து
    நலமெலாந் தந்துன்னடிக்கமல மலர்தன்னை நாடவெனை யடிமை கொள்வாய்,
சோணாடர்போற்று  மிறைவா சங்கரா மஹாதேவா த்ரிலோகநாத
    சித்தாகின் னாருரக ரரகர வெனச்சொலிச் சேவிக்கு மறைநாயகா
ஆணாய்ப் பெண்ணா யலியதான வென்னையனே யருணாசலக்கடவுளே
    அரகர மகேசனே பரமகுரு வீசனே யணியணாமலை வாசனே.  (9)

இந்திரன் றீர்த்தமுட னக்கினித் தீர்த்தமும் யமதரும தீர்த்தமுதலாய்
    இயனிருதி தீர்த்தமும் வருண தீர்த் தமுமக்கியமென்னும் வாயுவு தீர்த்தமும்
விந்தைக் குபேர தீர்த்தமும் மலமேவுமீ சான தீர்த்தமு
    முவந்த மிளிர்முலைப் பால் தீர்த்த நளிதமிழ் பயந்தமுனி வேண்டுமுயர் தீர்த்தமி கவே,
சந்தரச்சரச்சுவதி தீர்த்தமு மிலக்கமித் தாய் தீர்த்தமுங் கௌதமர்
    தன்றீர்த்தமுஞ் சக்கரத்தீர்த்தமுநந்தி தகைதீர்த்தமும் பிரமமாம்,
அந்தமலி தீர்த்தங்கள் விந்தைபுடை சூழுதுல வருணாசலக்கடவுளே
    அரகர மகேசனே பரமகுரு வீசனே யணியணாமலை வாசனே.  (10)

கூட்டமிகு மடியார்கள் கூட்டுறவிலாமடமைகொண்ட முழுமூடன் வித்யா
    குருசீடனாய்க் கல்வி கல்லாத மூடனுன் கூறுசரிதந் தன்னையே
கேட்டதறியயனுனது நாட்டமறியே நன்மை கிளர்பாத நான்குமறியேன்
    கெந்தாட்சதைக்கூவிளங்கொண்டு பூசனைசெய் கிரியையறி யாதமூடன்
பாட்டுமறியேன் வினைக ளோட்டவறியேன் கவிப்பத் துமிவை யர்த்தமுடனே
    பகரவறியேனுனைப்பரவவறியேன் செய்த பாவமேதோ வறிகிலேன்
ஆட்டி வைத்தே மன்கை காட்டிக் கொடா தருள்செய்யருணாசலக்கடவுளே
    அரகரமகேசனே பரமகுரு வீசனே யணியணா மலைவாசனே.  (11)

        அருணாசலேஸ்வரர் பதிகம் முற்றிற்று.

Related Content