logo

|

Home >

video-gallery >

history-of-thirumurai-composers-drama-anda-arasu-tamil-drama

History of Thirumurai Composers - Drama-ஆண்டஅரசு - திருநாவுக்கரசர் (அப்பர்) நாடகம் Anda Arasu - Thirunavukkarasar (Appar) Tamil Drama

aum namah shivaya

Welcome to the Spiritual Video Gallery from the Shaivam.org.

Drama

 


Aanda Arasu - Part 1 
Incidents from the life of thirunAvukkarasar. Part 1 - Emergence of the saint.

 

 

திருச்சிற்றம்பலம்

மணியினை மாமறைக்காட்டு மருந்தினை வண்மொழியாற்
திணியன நீள் கதவம் திறப்பித்தன; தெண் கடலிற் 
பிணியன கல் மிதப்பித்தன; சைவப் பெருநெறிக்கே 
மணியன நாவுக்கரையர் பிரான் தன் அருந்தமிழே. 

நாடகம் - 1 (பெருவாழ்வு பெற்றது)

காட்சி 1

இடம்: புகழனார் இல்லம்

(திலகவதியாரும் மருணீக்கியாரும் விளையாடிக் கொண்டிருக்கிறர்கள்.)

புகழனார் மாதினியாரிடம்: மாதினி! நம் செல்வங்கள் திலகவதியும் மருணீக்கியும் தம் குணத்தால் ஒருவரை ஒருவர் மிஞ்சுவர் போலும். இவர்கள் குணச்சிறப்பில் நாம் எவ்வாறு அவர்களுக்கு வழிகாட்டுவது? சிவபெருமான் தான் இக்குழந்தைகளைப் பேணவேண்டும். (ஆனந்தம் கலந்த பெருமூச்சு விடுகிறார்.)

காட்சி 2

(பின்குரல்): சிறிது காலம் சென்றபின் திலகவதியாருக்கு மாவீரர் கலிப்பகையாருடன் மணம் பேசி நிச்சயம் செய்கிறார் புகழனார். அப்போது வந்த ஒரு போரில் பங்குகொள்ள கலிப்பகையார் போர்முனைக்குச் செல்கிறார். இதற்கிடையில் புகழனாரும் மாதினியாரும் இவ்வுடல் நீத்து விண்ணுலகு எய்துகின்றனர். கலிப்பகையாரும் போரில் உயிர் நீக்கிறார். தழுவி வளர எல்லாப் பற்றுகளும் அற்ற நிலையில் திலகவதி என்ற அக்கொடி வாயக் கருதுகிறது.)

இடம்: புகழனார் இல்லம்

(திலகவதியார் நஞ்சுண்ன முற்படுகிறார். மருணீக்கியார் ஓடி வந்து அவர் திருவடிகளில் வீழ்கிறார்.)

மருணீக்கியார்: அன்னையும் தந்தையும் இல்லாத போழ்தும் அக்கா, உங்களை வணங்கி இதுவரை உயிர் வாழ்ந்தேன். இனி நீங்களும் என்னை விட்டுச் செல்ல நினைத்தால் அதன் முன் நான் இவ்வுலகை விட்டு நீங்குவேன்.

(நச்சுக் கிண்ணத்தைப் பறித்து உண்ண முற்படுகிறார். திலகவதியார் தட்டி விடுகிறார்.)

திலகவதியார்: (அழுதுகொண்டே) தம்பீ! இல்லை தம்பீ! நீ வாழவேண்டும். உன் பெருவாழ்வுக்கேனுமாவது நான் வாழ்வேன். சிவபெருமானே! சிவபெருமானே! (கட்டித் தழுவுகிறார்.)

காட்சி 3

பின்குரல்: மருணீக்கியார் பல அறங்கள் செய்வதில் தம் கருத்தைச் செலுத்துகிறார். அவர்து அறச்சாலையில் ....

இடம்: மருணீக்கியார் அறச்சாலை

(மருணீக்கியார் வருவோர்க்குத் தண்ணீர் அளித்துக் கொண்டிருக்கிறார். அவர் தமக்குள்)

மருணீக்கியார்: இவ்வுலக வாழ்க்கை தான் எத்தகையது. தந்தை தாயை இழந்தேன். அக்கா திலகவதியாரும் அம்பொன் மணி நூல் தாங்காது துறவுக் கோலத்தில் உள்ளார். நிலை பேறான பொருள் தான் என்ன?

(சமணர் அவ்வழிச் செல்கின்றார்.)

சமணர்: நாமே நம் துன்பங்களுக்குக் காரணம். நாமே நம்மை உயர்த்திக்கொள்ள வேண்டும். அறம் ஒன்றே இறுதியானது. இவ்வுடல் இன்பத்தை முழுதும் நீத்து உடலைத் தவம் என்னும் தீயில் வாட்டினால் இவை எல்லாவற்றிலிருந்தும் விடுதலை அடையலாம். கடவுளால் ஆவதில்லை. அவர் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? அத்தி நாத்தி!!

மருணீக்கியார்: ஒருவேளை இவர்கள் சொல்வது தான் உண்மையோ? அறத்தால் நாமே தான் துன்பம் நீங்கவேண்டுமோ? அச்சமணர் பின் செல்வோம்.

காட்சி 4

பின்குரல்: மருணீக்கியார் எது உண்மை எனக்காணும் நோக்கில் அறவுரைகளல் ஈர்க்கப்பட்டு சமணரானார். அயராத தமது ஆர்வத்தால் சமணர்கள் எல்லாம் மேலாகக் கொண்டாடுகின்ற தருமசேனர் என்ற பெரும்பதவியும் பெற்றார். இங்கு அவர்தம் குல முதல் திலகவதியரோ...)

இடம்: திருவதிகை வீரட்டம்

திலகவதியார்: (சிவபெருமானை வழிபட்டுப் பணி செய்து கொண்டு) சிவபெருமானே! தருமசேனனாம்! சமணர்க்கெல்லாம் தலைவனாம்! தேசமெல்லாம் புகழ்ந்து தேவன் என்று இருக்கினும் ஈசா! உன் உறவுக்கு இணையாகுமா? தவமென்று நினைத்து உண்மைப் பொருள் அறியாது அவத்தில் வீழ்ந்த என் தம்பியைத் தாங்கள் தான் வீழாது காத்தருளவேண்டும். (தேம்புகிறார்.)

சிவபெருமான்: உன்னுடைய மனக்கவலையை ஒழி! உன்னுடன் பிறந்தான் முன்னமே முனியாகி என்னை அடையத் தம் முயன்றான். எல்லாமும் தன் கருமமே என்று கட்டுண்டிருக்கும் தருமசேனனை நாம் இறைச்சத்தி காட்டிச் சூலை தந்தாள்வோம்!

காட்சி 5

இடம்: திருவதிகை வீரட்டம்

(திலகவதியார் உழவாரப்பணி செய்து கொண்டிருக்கிறார். தருமசேனர் அவர் திருவடியில் வந்து வீழ்கிறார்.)

தருமசேனர்: அக்கா! நம் குலத்தின் தவக்கொழுந்தே! கொடுமையான சூலை என் வயிற்றைக் குதறுகின்றது. வலிக்கின்றது அக்கா, வலிக்கின்றது! சமணர்களும் இது அவருடைய மந்திர தந்திரங்களால் தீர்க்கமுடியாதது என்று ஒன்றும் புரியாதவராய் அஞ்சிக் கைவிட்டார்கள். இனி உங்கள் திருவடியே சரணடைந்தேன். தாங்கமுடியவில்லை அக்கா! சற்றும் தாமதிக்காது உய்ந்து கரையேறும் வழி காட்டுங்கள் அக்கா!

திலகவதியார்: உண்மையை உணராத ஆரம்பச் சமயக் குழி விழுந்தீர்! எழுந்திரீர்!

(தருமசேனருக்குத் திலகவதியார் திருநீறு அளிக்கிறார். உழவாரப்படை கையில் கொடுக்கிறார். தருமசேனர் உழவாரப்பணி செய்துகொண்டு பாடுகிறார்.)

கூற்றாயினவாரு விலக்கிகிலீர் கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே.

தருமசேனர்: ஆ! என் வலி போய்விட்டது!! சிவபெருமானே! அருக்கனிற் சோதி அமைத்து, மதியில் தண்மை வைத்து, தீயில் வெம்மை செய்து, நீரில் இன்சுவை நிகழ்த்தி, மண்ணில் திண்மை வைத்து எனப் பலபலவற்றையும் எம் போன்ற உயிர்களை உய்ய வைக்கத் தாங்கள் படைத்து நிற்கும் பெருங்கருணையை மறந்து அறம் இருக்க மறம் விலைக்குக் கொண்டேனே! இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே!

சிவபெருமான்: சொல்வளம் மிக்க பாடலிற் சிறந்த தொடுத்துப் பதிகம் பாடினீர்! இனி உமது திருநாமம் நாவுக்கு அரசு என்று உலகு ஏழினும் நயப்புற மன்னுக!

திருநாவுக்கரசர்: நானடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே! நானடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே! (ஆடுகின்றார்.)

 

ஆடுகின்றார்.)


thirunAvukarasar - Part 2 - Appudhi adikaL

 

 

 

திருச்சிற்றம்பலம்

தனமாவது திருநாவுக்கரசின் சரணம் என்னா
மனமார் புனற்பந்தர் வாழ்த்தி வைத்து ஆங்கு அவன் வண் தமிழ்க்கே
இனமாத் தனது பெயர் இடப் பெற்றவன் எங்கள் பிரான்
அனமார் வயல் திங்கள் ஊரினில் வேதியன் அப்பூதியே.

நாடகம் - 2 (பெருவாழ்வு வழங்கியது)

காட்சி 1

இடம்: திங்களூர்த் தண்ணீர்ப் பந்தல்

திருநாவுக்கரசர்: இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.

ஆ! என்ன! ஆண்ட அரசு தண்ணீர்ப் பந்தலா? அதென்ன அங்கு தெரிவது? ஆண்ட அரசு அமுதுண் சாலை! சிவ சிவ! சிந்தை திருந்தா அடியேனை அன்றோ இறைவன் திருநாவுக்கரசு என விளித்தார். (அங்கு இருப்பவரிடம்) இத்தகைய பெயர் இட்டு இங்கு அறம் செய்து வருபவர் யார்?

அருகிலுள்ளவர்: அதுவாங்கையா! இந்த ஊரில அப்பூதி அடிகள்ன்னு ஒருத்தர் இருக்காரு. திருநாவுக்கரசருன்னா அவருக்கு உசிரு. வீட்டுக்குப் பேரும்

திருநாவுக்கரசு, மாட்டுக்குப் பேரும் திருநாவுக்கரசு, புள்ளைங்க பேரும் திருநாவுக்கரசு, பந்தல், சத்திரம், குளம் அவரு செய்யற எல்லாப் பணிக்கும் திருநாவுக்கரசு தான் பேரு. இதை ஏன் கேக்குறீங்க? அவரு வீட்டுல இருக்குற மரக்காலு, உழக்குக்குக் கூடப் பேரு திருநாவுக்கரசு தான்! திருநாவுக்கரசு திருநாவுக்கரசு திருநாவுக்கரசு - எல்லாமே திருநாவுக்கரசு தான் அவருக்கு. இந்த கொஞ்ச தூரம் போனீங்கன்னா திருநாவுக்கரசு இல்லம்ன்னு போட்டு அவரு வீடு இருக்கும்.

திருநாவுக்கரசர்: சிவ சிவ! அவரை உடனடியாகச் சென்று காண்பேன்!

காட்சி 2

இடம்: அப்பூதி அடிகளார் இல்லம்

(திருநாவுக்கரசர் வருகிறார்.)

அப்பூதி அடிகள்: சிவ சிவ! வரவேண்டும் வரவேண்டும்! முடிவில் தவம் செய்தேன்! தூய வெண்ணீறு துதைந்த பொன் மேனியும், தாழ்வடமும், நாயகன் சேவடி தைவரு சிந்தையும், நைந்துருகிப் பாய்வது போலன்பு நீர் பொழி கண்ணும், சிவபெருமான் திருவடி போற்றும் செஞ்சொல்லும் உடைய கருணைபுரி வடிவுடையீர்! தாங்கள் இம்மனையில் எழுந்தருள என்ன பேறு செய்தேன்?!

திருநாவுக்கரசர்: நம் அன்பிற்கினிய பெருமானைத் திருப்பழனத்தில் வழிபட்டு வருகின்றோம். வழிக்கரையில் நீர் வைத்த இனிய தண்ணீர்ப்பந்தர் கண்டு அதுபோன்ற பல அறங்களும் செய்யும் உம் பெருமை கேட்டு இங்கு வந்தோம். ஆமாம், சிவபெருமான் அடியார்களுக்காகத் தாங்கள் வைத்த தண்ணீர்ப் பந்தலில் உம் பெயர் எழுதாமல் வேறொரு பெயர் ஏன் எழுதியிருக்கிறிர்கள்?

அப்பூதி அடிகள்: (அதிர்ந்து போய்) நன்றாகத்தான் சொன்னீரோ? அமணர்களோடு சேர்ந்துகொண்டு பல்லவன் செய்த கொலைபாதகச் சூழ்ச்சிகளையெல்லாம் வென்று ஆண்ட அவர் திருப்பெயரோ வேறொரு பெயர்? சிவபெருமான் திருவடிக்குத் திருத்தொண்டு செய்து இம்மையிலேயே உய்யலாம் என்று என் போல்வாரும் தெளிய நின்ற அத்திருத்தொண்டின் பெயரோ வேறொரு பெயர்? பொங்கு கடற் கல் மிதப்பில் போந்தேறும் அவர் பெருமை அங்கணர் தம் புவனத்தில் அறியாதார் ஆர் உளரே! மங்கலமாந் திருவேடத்துடன் இன்று இவ்வகை மொழிந்தீர்! எங்குறைவீர்? நீர் தாம் யார்? சொல்லும்!

திருநாவுக்கரசர்: வீழ்ந்த அமண் சமயத்திலிருந்து கரையேற நம் தலைவனால் சூலை நோய் என்ற அருளால் ஆட்கொள்ளப்பட்ட தேற்றமில்லாத சிறுமையேன் யான்.

அப்பூதி அடிகள்: (உளம் நைய) திருநாவுக்கரசர் பெருமானா! (அடியற்ற மரம் போலத் திருநாவுக்கரசர் திருவடிகளில் வீழ்ந்து பற்றிக் கொள்கிறார். அரசர் அவரை வணங்கி எடுக்கிறார்.) பெருவாழ்வு பெற்றேன் பெருவாழ்வு பெற்றேன்! (துணைவியார், மூத்த இளைய திருநாவுக்கரசு அரசரை வணங்குகின்றார்கள்.) அடிகளே! தாங்கள் எம் மனையில் திருவமுது செய்தருளினால் வாழ்வின் பயன் என மகிழ்வோம்!

திருநாவுக்கரசர்: கறைக்கண்டன் அடியார்கள் வீட்டில் திருவமுது செய்தலன்றோ சாலச்சிறந்தது. உம் விருப்பப்படியே ஆகட்டும்.

அப்பூதிஅடிகள்: (துள்ளிக் குதித்து) என் தவமெல்லாம் இன்று பலன் கண்டது. (துணைவியாரிடம்) ஆண்ட அரசுகள் அமுது செய்ய அறுசுவை உணவு செய்வோம்.

(மூத்த திருநாவுக்கரசிடம்) பெருமானார் அமுது செய்ய நல்ல குருத்து வாழை இலை கொண்டு வா!

மூத்த திருநாவுக்கரசு: என் தவமே தவம். ஆளுடைய அரசுகள் அமுது செய்ய நல்ல தாய் தந்தையர் ஏவ நான் பணி செய்யப் பெற்றேன். உய்ந்தேன் உய்ந்தேன்....(ஒடுகிறார்.)

காட்சி 3

இடம்: அப்பூதி அடிகளார் இல்லம்

(மூத்த திருநாவுக்கரசு வாயில் நுரை கொப்பளிக்க இலையைத் தாயாரிடம் கொடுத்து விழுகின்றார்.)

அப்பூதி அடிகளாரும் துணைவியாரும்: (உளம் பதைத்து) சிவ சிவ! பாம்பு கடித்துள்ளது! சிவபெருமானே!

அப்பூதி அடிகள்: (உடன் தேற்றிக் கொண்டு துணைவியாரிடம்) இது தெரியாவண்ணம் பெருமானாரை அமுது செய்விப்போம்.

(பாயில் மூத்த திருநாவுக்கரசைச் சுற்றி வைக்கிறார்கள்.)

 

வைக்கிறார்கள்.)


Aanda Arasu - Part 3 
thiruvavukkarasar - Part 3 - Apputhi adikaL

 

 

 

காட்சி 4

இடம்: அப்பூதி அடிகளார் இல்லம்

(திருநாவுக்கரசர் திருவமுது செய்ய அமர்ந்துள்ளார். திருவமுது பறிமாறும் முன் திருநீறு அளிக்கிறார்.)

திருநாவுக்கரசர்: மூத்த புதல்வர் எங்கே?

அப்பூதி அடிகள்: இப்போது இங்கு அவன் உதவான்.

திருநாவுக்கரசர்: (திடுக்குற்று) என்ன சொன்னீர்? இது கேட்டு என் உள்ளம் நடுங்குகின்றது. என்ன ஆயிற்று? உண்மையைச் சொல்லுங்கள்.

அப்பூதி அடிகள்: (வருந்தி) பெரியீர்! வாழைக்குருத்து அரிகின்ற பொழுது பாம்பு தீண்டி இறந்தான். தங்களுக்குத் திருவமுது படைப்பதென்னும் பேறு தடைப்படக் கூடாதெனக் கருதிப் பாயில் சுற்றி வைத்து வந்தோம்.

திருநாவுக்கரசர்: நன்று நீர் செய்தது! இப்படி யார் செய்வார்! அவ்வுடலை உடன் சிவபெருமான் திருக்கோயிலுக்குக் கொண்டு வருக.

காட்சி 5

இடம்: திருக்கோயில்

திருநாவுக்கரசர்: பத்துக்கொலாம் அவர் பாம்பின் கண் பாம்பின் பல்
பத்துக்கொலாம் எயிறும் நெரிந்து உக்கன
பத்துக்கொலாம் அவர் காயப்பட்டான் தலை
பத்துக்கொலாம் அடியார் செய்கை தானே.

(மூத்த திருநாவுக்கரசு உயிர் பெற்று எழுகிறார். திருநாவுக்கரசர் அவருக்குத் திருநீறு அளிக்கிறார். ஊரார் அதிசயித்து வணங்குகின்றனர்.)

அப்பூதி அடிகள்: திருவைந்தெழுத்தின் துணையால் கல்லே தெப்பமாக மிதந்தவரால் ஆகாத ஒன்று தான் எது? ஆயினும் பெரியோர் அமுது செய்ய இவன் சிறிது இடையூறு செய்துவிட்டான். சிவ சிவ!

திருநாவுக்கரசர்: வஞ்சித்து என் வளை கவர்ந்தான் வாரானே ஆயிடினும்
பஞ்சிக்கால் சிறகன்னம் பரந்தார்க்கும் பழனத்தான்
அஞ்சிப்போய்க் கலி மெலிய அழல் ஓம்பும் அப்பூதி
குஞ்சிப் பூவாய் நின்ற சேவடியாய் கோடியையே.

 

கோடியையே.


Aanda Arasu - Part 4 
thirunavukkarsar and thirugyanasambandhar meeting at thiruppunthuruththi.

 

 

 

திருச்சிற்றம்பலம்

பாடிய செந்தமிழால் பழங்காசு பரிசில் பெற்ற
நீடிய சீர்த் திருஞானசம்பந்தன் நிறை புகழான்
நேடிய பூந்திருநாவுக்கரசோடு எழில் மிழலைக்
கூடிய கூட்டத்தினால் உளதாய்த்து இக் குவலயமே.

நாடகம் - 3 (சைவத்தின் புண்ணியக் கண் இரண்டு)

காட்சி 1

இடம்: திருப்பூந்துருத்தி

(திருஞானசம்பந்தர் சிவிகை வருகின்றது. பெரும் கூட்டம். ஒருபுறமிருந்து திருநாவுக்கரசர் வருகின்றார்.)

திருநாவுக்கரசர்: திருஞானசம்பந்தர் முத்தமிழ்ப் பாண்டிய மண்டலத்திலே மேன்மைகொள் சைவ நன்னெறி நிறுவி எளியேனைக் காண இங்கு வந்துகொண்டிருக்கிறாரா? ஆளுடைய பிள்ளையாரை நாம் எதிர் சென்று இறைஞ்சவேண்டும்.

(கூட்டத்திற்குள் விரைகின்றார். சிவிகையைத் தாம் தூக்குகின்றார்.)

திருஞானசம்பந்தர்: சிவ சிவ! அப்பர் இப்போது எங்குள்ளார்?

திருநாவுக்கரசர்: ஒப்பரிய தவம் செய்தேன். அதனால் இப்பொழுது உம் அடிகள் தாங்கி வரப் பெற்று உய்ந்தேன்.

(திருஞானசம்பந்தர் சிவிகையிலிருந்து குதிக்கின்றார். அப்பரை வணங்குகின்றார்.)

திருஞானசம்பந்தர்: அப்பர் பெருமானே? இவ்வாறு தாங்கள் செய்தருளலாமோ?

திருநாவுக்கரசர்: வாழி திருத்தொண்டென்னும் வான் பயில் தான் ஓங்குதற்குச் சூழும் பெருவேலி ஆனீர்! திருஞானசம்பந்தர்க்கு எவ்வாறு செய்ய்த் தகுவது?

(தொழுகின்றார்.)

கூட்டமெல்லாம்: (அவர்களை வணங்கி) சைவத்தின் புண்ணியக் கண்கள் இரண்டே உமைப் பணிந்து உய்கின்றோம்!! உமைப் பணிந்து உய்கின்றோம்!! ஹர ஹர! ஹர ஹர!!

 

ஹர!!


Aanda Arasu - Part 5 
Reclaiming the pazaiyARai vadathaLi temple from jains.

 

 

 

வாயிருந் தமிழே கற்றும் ஆளுறா 
ஆயிரம் சமணும் அழிவாக்கினான்

நாடகம் - 4 - பழையாறை வடதளி கோயில் மீட்பு

இடம்: பழையாறை வடதளி

(திருநாவுக்கரசர் திருப்பழையாறை வடதளி விமானத்தை வணங்குகின்றார். சமணர்கள் எதிர்க்கின்றனர்.)

சமணர்: ஏனையா! சைவ சமயத்தவர் போல் இருக்கின்றீர்! இது எங்கள் சமணர் விமானம். நீங்கள் இதனை வணங்கி உங்கள் சடையர் திருக்கோயில் என்று குழப்பம் விளைவிக்க வேண்டாம்.

அப்பர்: என்னது சமணர் பொய்கொள் விமானமா? பழையாறை வடதளி உறையும் சிவபெருமானை முன்னமே தொழுது சென்றிருக்கின்றேனே! என்ன வஞ்சம் செய்துள்ளீர்கள்?

சமணர்: (கலக்கமும் கோபமும் கலந்து) வஞ்சனையாவது, சூழ்ச்சியாவது! நீர் உம் வேலையைப் பார்த்துக்கொண்டு போகும்!

அப்பர்: என் கடன் பணி செய்து கிடப்பதே! (அருகில் அமர்கிறார்) இறைவா! மந்த அமணர்கள் வஞ்சனையால் மறைத்த உம்முடைய திருக்கோயிலைத் தெளிவுபடக் காட்டும்! உம்மை வணங்கியல்லாது இவ்விடம் விட்டுப் போகேன்! அதுவரை உண்ணா நோன்பு இருப்பதே எம் உறுதி! நமச்சிவாய நமச்சிவாய 

இடம்: சோழன் அரண்மனை

(சோழன் கனவில் இறைவர் அருள்கிறார்.)

இறைவர்: சோழ மன்னா! பழையாறை வடதளியில் நம்முடைய திருக்கோயிலை சமணர்கள் மறைத்து அவர்கள் விமானம் என்று கூறித் திரிகின்றனர். அது சிவாலயம் என்பதற்கான அடையாளங்களை நீ கண்டு கொள்வாய்! அவ்வடையாளங்களைக் கண்டு அங்கே எம்மைக் காணாது செல்வதில்லை என்ற உறுதியுடன் உண்ணா நோன்பிருக்கும் திருநாவுக்கரசின் உள்ளக் கருத்தினை நிறைவு செய்து இழந்த திருக்கோயிலை மீட்பாய்!

சோழன் (கனவிலிருந்து எழுந்து): இறைவா! இது என்ன வியப்பு! தங்கள் கட்டளையை இப்பொழுதே சிரமேற்கொண்டு செய்கிறேன்! 

இடம்: பழையாறை வடதளி

(சோழன் வந்து வடதளியைச் சோதனை செய்கிறான்.)

சமணர்: சந்தேகமே வேண்டாம் மன்னா! இது எங்கள் சமண விமானம் தான்!

சோழன்: உங்கள் வஞ்சனைக்கோர் அளவில்லையா? ஏதோ உங்கள் தத்துவங்களைக் கூறுவீர்கள்! மக்களுக்குத் தொண்டு செய்வீர்கள் என்று சமயப் பொறையால் இருக்க, நீங்களோ உண்ட வீட்டில் இரண்டகம் செய்யும் வகையாக சிவனார் திருக்கோயிலை உங்கள் சமயக் கூடமாக மாற்றி விட்டீர்கள். போதாததற்கு உங்கள் கூடம் தான் என்று குழப்பமும் செய்கின்றீர்கள். இது சிவனார் ஆலயம் என்பதற்கு இங்கு அமைந்திருக்கும் இடபமும், திருக்கோயில் அமைப்பும் பிற அடையாளங்கள் எல்லாம் சாட்சி சொல்லுகின்றன. உங்கள் பொய்க்கதை நீண்ட நாள் நிலைக்காது! உண்மையை ஒப்புக்கொள்கின்றீர்களா இல்லையா?

சமணர்: (அச்சம் அவமானத்துடன்) உண்மை தான் மன்னா! எங்கள் சமயக் காழ்ப்புணர்ச்சியால் இவ்வாறு செய்துவிட்டோ ம்!

சோழன்: இவ்விடத்தை விட்டு நீங்கள் எல்லோரும் ஒழியுங்கள்!

அமைச்சரே! இத்தூர்த்தர்கள் மறைப்பாக எழுப்பிய பொய்களை நீக்கிச் சிவபெருமான் திருக்கோயிலை இனிது விளங்குமாறு உடன் செய்யுங்கள்!

அமைச்சர்: உத்தரவு மன்னா! 

(கோயில் விமானம் விளங்க இருக்கின்றது. சோழன் வருகின்றார்.)

அமைச்சர்: மன்னா! சமணர்கள் மறைத்த இந்தப் பழையாறை வடதளி ஒரு அற்புதமான சிவாலயம். இப்பொழுது அது அருமையாக வெளிப்பட்டு நிற்கின்றது மன்னா! நீதி நெறி வழுவா உன்னுடைய செங்கோல் வாழ்க!

சோழன்: அற்புதம்! நீதியாம் ஏறுயர்த்த சிவபெருமான் தக்க சமயத்தில் வந்து எனக்கு உணர்த்தி ஆட்கொண்டார். அமைச்சரே, இத்திருக்கோயில் வழிபாட்டிற்குத் தேவையான நிபந்தங்கள் எல்லாம் செய்யுங்கள். உடனடியாக நாம் உண்ணா நோன்பிருக்கும் திருநாவுக்கரசு நாயனாரை வணங்குவோம்.

(அப்பரிடம் வந்து)

திருநாவுக்கரசர் பெருமானே! தயா மூல தன்மம் என்னும் சைவ நல்வழி நடக்கும் பெரியவரே! சிவபெருமானின் திருக்கோயில் பாழியாகாது மீட்கப்பட வேண்டும் என்று தாங்கள் கொண்ட உறுதியும் அதற்குத் தாங்கள் மேர்கொண்ட உறுதி தளராத அறவழியும் இறைவர் திருவருள் மூலம் உணரப்பெற்றேன்! சிவபெருமானின் திருக்கோயில் பொலிவோடு காட்சி அளிக்கின்றது. இனித் தாங்களும் அடியார் பெருமக்களும் சிவபெருமானைப் பழையாறை வடதளியில் வழிபட எவ்விதத் தடையும் இல்லை. தாங்கள் சிவபெருமானை வழிபட்டு இவ்விடம் உற்ற பழியைத் தீர்க்க வேண்டும்.

(அப்பர் வழிபட வருகின்றார்.)

தலையெலாம் பறிக்கும் சமண் கையருள்
நிலையினான் மறைத்தால் மறைக்கொண்ணுமே
அலையினார் பொழில் ஆறை வடதளி 
நிலையினான் அடியே நினைந்துய்ம்மினே

மூக்கினால் முரன்றோதியக் குண்டிகை 
தூக்கினார் குலந் தூரறுத்தே தனக்
காக்கினான் அணியாறை வடதளி
நோக்கினார்க்கில்லையால் அரு நோய்களே

வாயிருந் தமிழே படித்து ஆளுறா
ஆயிரஞ் சமணும் அழிவாக்கினான்
பாயிரும் புனல் ஆறை வடதளி
மேயவன் என வல்வினை வீடுமே.

திருக்கோயில் மீட்ட திருநாவுக்கரசர் வாழ்க வாழ்க!

 

Related Content

பொன்னனையாள் நாடகம் The History of Ponnanaiyal enacted as Dra

பட்டினத்தார் நாடகம்

63 Nayanmar Drama- உலகை வென்ற தாதையார் - சிறுத்தொண்டர் - தமி

63 Nayanmar Drama- திருமூலர் நாயனார் - நாடகம் Thirumoolar Na

63 Nayanmar Drama- கலை மலிந்த சீர் நம்பி - கண்ணப்ப நாயனார் -