logo

|

Home >

video-gallery >

63-nayanmar-drama-velluma-miga-vallar-meypporul-nayanar-tamil-dram

63 Nayanmar Drama-வெல்லுமா மிகவல்லார் - மெய்ப்பொருள் நாயனார் - தமிழ் நாடகம்

மெய்ப்பொருள் நாயனார் - தமிழ் நாடகம்

Velluma Miga Vallar

Meypporul Nayanar - Tamil Drama


 

 

திருச்சிற்றம்பலம்

வெல்லுமா மிக வல்லார் 
மெய்ப்பொருள் நாயனார் புராணம்

பின்குரல் : நன்மை மிகுந்த சேதி நாட்டின்கண் உள்ள மேன்மை பொருந்திய திருக்கோவலூரின்கண் உமையம்மை யாரை ஒரு பாகம் வைத்தருளும் சிவபெருமானிடத்துப் பத்திமை செய்தொழுகும் மலையமான் நாட்டின் அரசராம் மெய்பொருள் நாயனார் , நன்மை மிகுந்த மறைவழியில் உலகம் விளங்குதற்கு ஏதுவான பெருமை மிக்க நற் குணங்களைத் தாங்கி, பெருவிருப்போடு சிவபெருமானின் அடியவர் கட்கு அவர்தம் திருவுள்ளக் குறிப்புணர்ந்து பணிவிடை செய்து வருகிறார்.இதோ சேதி நாட்டு அரசவையில் திருநீற்றின் அன்பு நெறி காக்கும் அரசர் மெய்ப்பொருளாரும் அமைச்சர் பெருமக்களும் உரையாடுகின்றனர்.

காட்சி - 1

சேதிநாட்டு மன்னர், திருநீற்றின் அன்பு நெறி காக்கும் அரசர், மெய்ப்பொருள் வேந்தர் வாழ்க! வாழ்க!

மெய்பொருள் நாயனார் : சிவ! சிவ! அமைச்சரே, நம் சேதி நாட்டு மக்கள் சைவமாம் சமயம் சார்ந்து சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வம் இல்லெனும் திருநீற்றின் அன்பு நெறியில் வாழ்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இருப்பினும் நம் மக்களின் தேவைகளை முன்னமே அறிந்து அவர்களுக்கு ஆவண செய்யவேண்டியது நமது தலையாய கடமையாகும்.

அமைச்சர் : அலைவீசுகின்ற கங்கையைத் தாங்கிய திருச்சடையை யுடைய சிவபெருமானின் அடியவர் திருவேடத் தையே சிந்தை செய்யும் வேந்தே! நல்லாட்சி செலுத்துதற்குரிய அரசியல் நெறியில் நின்று வழிவழியாகப் போற்றி வரும் அறநெறியைத் தவறாமல் பாதுகாத்து, மலையனைய நெடிய தங்கள் தோள்வலியால் பகைவரை வென்று, தாங்கள் கூறிய சொற்களினின்றும் வேறுபடாது நன்னெறிகளைப் போற்றி வரும் குணங்களால் உயர்ந்து இருக்கும் தங்கள் அருளாட்சியின் கீழ் வாழ நம் சேதி நாட்டு மக்கள் அனைவரும் பெருந்தவம் செய்துள்ளனர்.

மெய்பொருள் நாயனார் : சிவ சிவ, அமைச்சரே, திருக்கோவலூர் வீரட்டம் உறையும் நம் இறைவருடைய திருவருளே நம்மை இயக்குகின்றது. விடையேறும் வித்தகரின் கருணையின்றி ஒரு அணுவும் அசையாது. நம் ஈசனாரின் அருளாணையின் வண்ணமே எம் முன்னோர்கள் போற்றி பாதுகாத்த திருநீற்றின் அன்பு நெறியில் இன்றும் வழுவாது நம் சேதி நாடு திகழ்கிறது.

அமைச்சரே, நம் நாட்டில் உள்ள அனைத்து சிவாலங்களிலும் விதிமுறைப்படி பூசைகள் நடைபெறுகின்றதா?

அமைச்சர் : ஆம் மன்னா! நம் சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருக்கோயில்கள் அனைத்திலும் தங்கள் ஆணையின்படி, நித்திய பூசைகளும் மற்றும் சிறப்பு வழிபாடுகளும் தவறாது நடந்து வருகின்றன. அரசே! தங்கள் அருளாட்சியில் நம் சேதி நாடெங்கும் மேன்மைகொள் திருநீற்றின் ஒளி நிறைந்து விளங்குகிறது. நம் நகர வீதிகளில் எங்கு பார்க்கினும் சிவனடியார்கள் நிறைந்துள்ளனர். திருநீறு, உருத்திராக்கம் அணிந்த திருவேடத்தினராய் அன்பர்களை காணும் போது, இது சேதி நாடா இல்லை திருக்கயிலாயமா என்று எண்ணத் தோன்றுகிறது!

மெய்பொருள் நாயனார் : சிவாய நம! அமைச்சரே, தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே. நம் இறைவர் அடியவர்கள் தாங்கும் திருவேடத்தில் நீக்கமற நிறைந்திருப்பார். அடியவர்கள் கொண்டுள்ள தவவேடம் சிவமாகவே எண்ணி வழிபட வேண்டியதாகும். இதுவே சைவ நீதியும் ஆகும். அமைச்சரே, தங்களுக்கு எவ்வாறு நம் நகரம் கையிலாயமாக காட்சியளித்ததோ, அது போலவே திருநீற்றின் வாரவேடத்தை காணும் போது, மன்றில் நடம் புரியும் வள்ளலின் அருட்கோலமே அடியேனுக்கு நினைவு வருகின்றது. சிவ சிவ! நாம் தேடிய செல்வங்களும், நம் முன்னோ ரால் ஈட்டப் பெற்று வழிவழியாகக் காத்துவரும் மற்ற செல்வங்களும் தில்லைப் பொன்னம்பலத்தில் ஆடல் செய்தருளுகின்ற பெருமானின் அடியவர்களுக்கே உரியனவாகும்

அமைச்சர் : வேந்தே! சிவனடியார்களின் குறிப்பறிந்து, அவர்கள் வேண்டுவனவற்றை விரும்பிய மனத்தினோடும் உள்ளம் நிறைந்த மகிழ்ச்சியோடும் குறைவற கொடுத்து உவக்கும் தங்கள் திருத்தொண்டின் பெருமை எங்கள் உரையில் அடங்குமோ?! சிவ சிவ!!

சேதிநாட்டு மன்னர், திருநீற்றின் அன்பு நெறி காக்கும் அரசர் வாழ்க! வாழ்க!

காட்சி - 2

முத்தநாதன் : அமைச்சரே! நான் என் செய்வேன். சேதி நாட்டின் மேல் பல முறை போர் தொடுத்தும், நான் தோற்று விட்டேனே! இதை விட பெரிய அவமானம் எனக்கு வேண்டுமா?

அமைச்சர் : உண்மைதான் அரசே! போர் களத்தில், மெய்ப்பொருள் வேந்தரின் வாள் மற்றும் தோள் வலிமையை கண்டு நம் படைகள் புறமுதுகிட்டு ஓடியது நமக்கு தீராப் பழியை தந்து விட்டது; என்று நான் கூறவில்லை; ஊரார் கூறுகிறார்கள். பக்கத்து நாட்டவர்களுக்கு நம் வீரம் கேளிப்பொருளாகிவிட்டது. போரிடுவதை விட நம் படைவீரர்கள் புறமுதுகு காட்டி ஓடுவதில் இப்போது கை தேர்ந்தவர்கள் என்று பெருமையாகவும் பேசிக்கொள்கிறார்கள்.

முத்தநாதன் : போதும் நிறுத்துங்கள். நீர் படை வீரர்களை சொல்கிறீரா? இல்லை என்னை சொல்கிறீரா?

அமைச்சர் : அரசே! மன்னிக்கவும்! நான் தங்களைச் சொல்லவில்லை.நம் படைகளின் தற்போதைய நிலையைத்தான் கூறினேன். அரசே! இப்போதுள்ள சூழ்நிலையில் சேதி நாட்டுடன் போரிட்டு வெல்வது என்பது இயலாத காரியம்.

முத்தநாதன் : அப்படியா வென்று காட்டுகிறேன்.மெய்பொருள் வேந்தனிடம் போரிலே தோற்றாலும், அவரை ஏதாவது சூழ்ச்சி செய்தாவது வெல்வேன்.(யோசிக்கிறான்)சேதி நாட்டு அரசன் சைவ சமயத்தின் மேல் அதிக பற்று கொண்டவன் அல்லவா?

அமைச்சர் : ஆமாம் மன்னா! சிவபெருமான் மீதும் சிவனடியார்கள் மீதும் அளவு கடந்த காதலை கொண்டவர். சிவனடியார்களை கண்டால் சிவமாகவே கண்டு வணங்கி அவர்கள் வேண்டுவதை வரையாது கொடுப்பவர்.

முத்தநாதன் : ஓ! அப்படியா! நான் அரண்மனைக்கு சென்றாலும் எனக்கும் அதே போல் கொடுப்பாரா?

அமைச்சர் : மன்னா! போர்க்களத்தில் மெய்பொருள் வேந்தர் கொடுத்ததை நானும் நம் படை வீர்களும் மறக்க வில்லை.தாங்கள் மறந்து விட்டீர்களா?

முத்தநாதன் : நான் முத்தநாதனாக சென்றால் தானே மெய்பொருள் வேந்தன் என்னை எதிர்ப்பான். அவ்வரசன் விரும்பும் சிவ வேடத்தை தாங்கிச் சென்றால், என்னையும் நிச்சயம் சிவமாகத்தான் பார்ப்பான்.தக்க தருணத்தில் நான் அவ்வரசனை வென்று விடுவேன்.எப்படி எனது திட்டம்?

அமைச்சர் : மன்னா! தங்கள் கூறியதை கேட்டு என் உள்ளம் நடுங்குகிறது. இது அரசியல் நெறிக்கும் தர்மத்திற்கும் புறம்பானதாக உள்ளது. வேறு ஏதாவது வழியில் முயற்சி செய்யலாமே.

முத்தநாதன் : மெய்பொருள் வேந்தனை யாராலும் நேருக்கு நேர் போரிட்டு வெல்ல முடியாது. சிவ வேடம் தாங்கி அவரை வெல்வதை தவிர வேறு வழியே இல்லை.இப்பொழுதே நான் சேதி நாடு செல்கிறேன்.

காட்சி - 3

தத்தன் : வர வேண்டும் அடியவரே! தங்களை வணங்குகிறேன். அரசர் தற்சமயம் துயில் கொண்டு இருக்கிறார்

முத்தநாதன் : யான் அவ்வரசனுக்கு உறுதி கூற வந்துள்ளேன், ஆதலின் நீ தடை செய்யாது இங்கு நிற்பாயாக

(முத்த நாதன் உள்ளே செல்கிறான்)

மெய்பொருள் நாயனார் : சிவ சிவ. ஆகா என்ன ஒரு திருவேடப் பொலிவு. திருநீற்றின் வார வேடம் தாங்கிய தங்களை கண்டு பெரும் பேறு பெற்றேன்.மங்கலம் பெருக என்வாழ்வே ஓர் உருவெடுத்து வந்தாற்போல தாங்கள் எழுந்தருளப் பெற்றது யாது கருதியோ?

முத்தநாதன் : வேந்தனே! உங்கள் தலைவர் சிவபெருமான் முற்காலத்தே அருளிச் செய்த சைவ ஆகம நூல்களுள் உலகில் வேறு எங்கும் கிடைத்திராத அரியதொரு நூலைக் கொண்டு வந்தேன்; உமக்கு உபதேசிப்பதற்காக!

மெய்பொருள் நாயனார் : சிவ சிவ! மிக்க மகிழ்ச்சி! தாங்கள் எழுந்தருளி உபதேசிப்பதினும் உயர்ந்த பேறு வேறு அடியேனுக்கு உண்டோ? சிவபெருமான் அருளிச் செய்த குற்றமற்ற இச்சிவாகம நூலை வாசித்து அதன் பொருள் விளங்க அருளிச் செய்ய வேண்டும்

முத்தநாதன் : வேந்தனே! மலரணிந்த கூந்தலையுடைய உன் தேவி இவ்விடத்தினின்றும் நீங்க, நானும் நீயும் மட்டும் இருக்கவேண்டும்.பின் நான் ஆகமத்தைக் கூறுகிறேன்.

மெய்பொருள் நாயனார் : சிவ சிவ! அப்படியே ஆகட்டும். (தேவியார் அங்கிருந்து செல்கிறார்).அடியவரே தாங்கள் இவ்வாசனத்தின் மீது அமர்ந்து அருளுங்கள். (முத்த நாதன் அமர்கிறான்)எம் நாயகர் அருளிச்செய்த ஆகமத்தைக் கூறுங்கள்.

பின் குரல் : தன் கையில் வைத்திருந்த வஞ்சனை யாகக் கொண்ட புத்தகப் பையைத் தன் மடியின் மேல் வைத்து, உள் ளிருந்த அப்புத்தகத்தைத் திறப்பவனைப்போல, விரும்பி மெய்பொருள் நாய னார் வணங்கும் சமயத்தில், அதனுள் மறைத்து வைத்திருந்த உடை வாளை எடுத்துத்தான் முன் கருதியவாறே செய்ய, மெய்பொருள் நாயனாரும் மெய்ம்மையான பொருளாகக் கொண்ட தவவேடத்தையே மெய்ப்பொருளாகக் கருதி வணங்கி வென்றார்.

மெய்பொருள் நாயனார் : சிவ சிவ! எம்பெருமானே! நமசிவாய!

தத்தன் : வேந்தே! எம் இறைவா!! தங்களுக்கு என்னவாயிற்று? சிவ சிவ! வஞ்சகனே! சிவனடியார் வேடத்தில் வந்து எம் மன்னவருக்கு தீங்கிழைத்த உன் சிரத்தை இப்போதே கொய்து விடுகிறேன்.

மெய்பொருள் நாயனார் : தத்தா! அவர் நமர் ஒன்றும் செய்துவிடாதே! நில்! தத்தனே! நில்! அவர் நம்மவர். அவர் அண்டர்பிரான் அடியார்கள் தாங்கும் தவ வேடம் தாங்கியுள்ளார்.உன்னால் அவருக்கு எந்த தீங்கும் நேரக்கூடாது.( என்றுகூறித் தம் நீண்ட கையினால் தடுத்து வீழ்ந்தார்.அரசியார் கதறுகிறார் )

தத்தன் : அரசே! எம் இறைவரே! அடியேன் தங்களுக்கு என் செய்ய வல்லேன்?

மெய்பொருள் நாயனார் : நம் எம் தலைவர் சிவபெருமானின் அடியவராகிய இவர் செல்லும் பொழுது யாராலும் எந்த இடையூறும் நேர்ந்து விடாது பாதுகாத்து நம் நாட்டின் எல்லையில் இவரைக் கொண்டுபோய் விடுவாயாக. சிவ சிவ

தத்தன் : சிவ சிவ , தங்கள் ஆணை மன்னா.(தத்தன் அழுதவாரே முத்தநாதனை அழைத்து செல்கிறார்)

காட்சி - 4

ஊரார் : இவன் தான் அந்த பாவி.நய வஞ்சகனே! சிவ வேடம் தரித்து இக்காரியத்தை செய்ய உனக்கு எப்படியடா மனம் வந்தது?

ஊரார் : திருநீற்றின் மேல் எல்லையிலா அன்பு கொண்ட நம் மன்னவருக்கு தீங்கு செய்த இவனை உயிரோடு திரும்பிச் செல்ல அனுமதிக்க முடியாது.

ஊரார் : இக்கொடியவனை இப்பொழுதே கொன்று விடுகிறேன்.

தத்தன் : சேதி நாட்டு பெருமக்களே. சற்று பொறுமையாக இருங்கள். பொய்த்தவ வேடம் கொண்ட இவன் உயிருடன் போதல் நம் இறைவனது ஆணை. விலகிச் செல்லுங்கள்.(தத்தன் அழுதவாரே செல்கிறார்)

காட்சி - 5

மெய்பொருள் நாயனார் : தேவி! தத்தன் எங்கே! அந்த அடியவருக்கு ஒரு ஆபத்தும் நேர்ந்து விடக் கூடாது?

தேவியார் : சுவாமி! தத்தன் விரைவில் வந்து விடுவார். தங்களை பிரிந்து இவ்வுலகில் நான் வாழ மாட்டேன். இறைவா! கோவிலூர் வீரட்டேசுவரா! என் சுவாமியை காப்பாற்றுங்கள்

தத்தன் : அரசே! தங்கள் ஆணையின் படி அவரை பாதுகாப்பாக நம் நாட்டு எல்லையில் கொண்டு விட்டு விட்டேன்.

மெய்பொருள் நாயனார் : நமசிவாய! என் மனம் இப்போது தான் நிம்மதி அடைந்தது. திருநீற்றின் அன்பு நெறி விளங்கும் நம் மண்ணிலே அவ்வடியவருக்கு எத்துன்பமும் நேர்ந்து விடக் கூடாது என்று மிகவும் அஞ்சினேன்.தத்தா இன்று நீ எனக்கு செய்த உதவியை யாவர் செய்ய வல்லவர்?

தத்தன் : சிவ சிவ! அரசே.

அமைச்சர் : வேந்தே! தங்களை இந்நிலையிலா நாங்கள் காண வேண்டும்.சிவ சிவ .

மெய்பொருள் நாயனார் : விதியினாலே முறையாகப் போற்றிக் காக்கத் தக்க திருநீற்றினிடத்து வைத்து வாழும் அன்பில் சோர்வு வாராது அதனை என்றும் பாதுகாத்து, இவ்வுலகில் ஆட்சி செலுத்தக் கடவீர்`.தேவி வருத்தப் படாதே! எல்லாம் ஈசன் திருவருள்.பொன்மன்றிலே அருட்கூத்து இயற்றுகின்ற எம் பெருமானின் திருவடியே எனக்குத் துணை. மன்றில் நடம் புரியும் எம் வள்ளலே! சிவ சிவ!

பின்குரல் : மெய்ப்பொருள் நாயனாருக்கு உமையம்மை யாரின் கணவராகிய சிவபெருமான், அவர்தம்மை மனத்தகத்து எண்ணியிருந்த வடிவே வடிவாக, அவர் முன்னிலையில் வெளிப் பட்டருளி, அவரை மேலான விண்ணுலகின்கண் வாழும் தேவர் களுக்கும் எட்டாத அருள் வடிவான தம் திருவடி நிழலில் கலந்து இன்புறுமாறு அருள் செய்து, அவர் தம்மை இடைவிடாது வணங்கி வாழும் பேற்றினையும் வழங்கியருளினார்.

திருச்சிற்றம்பலம்

 

For comments contact.

Related Content

63 Nayanmar Drama- உலகை வென்ற தாதையார் - சிறுத்தொண்டர் - தமி

63 Nayanmar Drama- திருமூலர் நாயனார் - நாடகம் Thirumoolar Na

63 Nayanmar Drama- கலை மலிந்த சீர் நம்பி - கண்ணப்ப நாயனார் -

63 Nayanmar Drama-வென்ற ஐம்புலனால் மிக்கார் - திருநீலகண்டக்

63 Nayanmar Drama-பேயாய நற்கணத்தார் - காரைக்கால் அம்மையார் -