logo

|

Home >

video-gallery >

thiruvilaiyadal-drama-upadesam-to-manikkavasagar

திருவிளையாடல் நாடகம் - வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம் Thiruvilaiyadal Drama - Upadesam to Manikkavasagar

aum namaH shivAya

Drama

 


ஞானநாடகம் (மாணிக்கவாசகர்) - ஆட்கொண்ட பிரான் - பகுதி-2 - வாதவூரடிகளுக்கு உபதேசித்தது

 

 

காட்சி - 3

இடம்:- திருப்பெருந்துறை

பின் குரல்:- இறைவர் குரு வடிவினராய் ஒரு குருந்த மரத்தின் நிழலில் எழுந்தருளி இருக்க அவரைச் சுற்றி சிவ கண நாதர்கள் சீடர்களாக விளங்கின÷. அவ்வழி சென்றுகொண்டிருக்கும் திருவாதவூரர் திருவைந்தெழுத்தின் இனிய ஓசை கேட்டு ஈர்க்கப்படுகின்றார்.

திருவாதவூரர்:- குருந்த மர அடியில் அந்தண கோலத்தினராய் கையில் சின்முத்திரையுடன் விளங்கும் இக் குருபரனைக் காணும்போது, அம்பலத்தில் ஆடிய ஆனந்த வடிவமும், கல்லால் மரத்தின் கீழ் சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்த வடிவமும் எனக்கு எளிதாகத் தோன்றுகின்றது போல் உள்ளதே! சிவ சிவா!

பின் குரல்:- ஞான தேசிக வடிவினராய் இருக்கும் இறைவன் திருவுருவத்தைக் கண்டு திருவாதவூரர் உள்ளும் புறமும் உருக செய்வதறியாது சிரசின் மேல் கைகூப்பி நிற்கிறார். இறைவர் தம் செந்தாமரை போன்ற சேவடியை திருவாதவூரர் தலைமேற்ல் வைத்துத் திருவடி தீக்கை அளிக்கிறார். பின்னர் அவருக்கு சூக்கும பஞ்சாக்கரத்தை உபதேசித்தும் பாசக்கட்டை அறுக்கிறார். திருவாதவூரருக்குப் போக்கும் வரவும் இல்லாத பூரண வடிவமும், மெய்ம்மையான ஆனந்தமும் உண்டாயிற்று

இறைவர்:- அன்பனே! செந்தமிழ்ச் சொற்களாகிய மாணிக்கங்களை பதித்து, அன்பெனும் கயிற்றில் கோர்த்து மாலை சாத்தும் தொண்டனாகிய நீ இன்று முதல் மாணிக்கவாசகன் என்றே அழைக்கப்படுவாய்.

மாணிக்கவாசகர்:- கருவுரும் ஆருயிர் உண்மை இது என்று காட்டவல்ல குருபரனே! கோகழி ஆண்ட குருமணியே! நாயிற்கடையாய் கிடந்த அடியேற்கு தாயிற் சிறந்த தயாவான தத்துவனே, என் செல்வமே, சிவபரம்பொருளே! தேவாணர் உடைய தனிபெருங்கருணைக்கு யான் இலன் ஒர் கைம்மாறு சிவ சிவ! சிவ சிவ!

பாடல்:- தந்ததுன் தன்னைக் கொண்டதென் தன்னைச்
சங்கரா ஆர்கொலோ சதுரர்
அந்தமொன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்
யாது நீ பெற்றதொன்று என்பால்
சிந்தையே கோயில் கொண்ட எம் பெருமான்
திருப்பெருந் துறையுறை சிவனே
எந்தையே ஈசா உடலிடம் கொண்டாய்
யானிதற் கிலன் ஓர்கைம் மாறே 

 

 


ஞானநாடகம் (மாணிக்கவாசகர்) - ஆட்கொண்ட பிரான் - பகுதி-3 - திருப்பெருந்துறை உறை கோயில் காட்டியது

 

 

 

காட்சி - 4

இடம்:- திருப்பெருந்துறை

மாணிக்கவாசகர்:- சிவபெருமான் எனக்குச் செய்த கருணையை என்னென்பது? யார் பெறுவார் இப்பேரருள்? இக்காயத்தில் அடைப்புண்டு கிடந்த என்னை குருபரனார் திருவருள் வெள்ளத்தால் அந்தமிலாத அகண்டத்தோடு சேர்த்தனர். இத்துனை காலமாக இது என்னுடையது, இது என்னுடையது அல்ல என்றெல்லாம் மாய வலைப்பட்டு அல்லவா கிடந்தேன்! இனி யான் ஆர்? எனது ஆர்? பாசம் ஆர்? ஆர் உற்றார்? ஆர் அயலார்? இறைவன் ஒருவனே எல்லாவற்றிற்கும் உரிமை உடையவன். நம் ஒவ்வொருவரிடம் இருப்பதெல்லாம் அவன் கொடுத்து வைத்திருப்பதே. நம்மிடத்திலே முன்பே இருந்ததும் இல்லை. நிலையாக நம்மிடம் இருக்கப் போவதும் இல்லை. தனு கரண புவன போகங்கள் யாவும் அப்படியே! இவற்றின் மீது ஆசையுற்று பொய் உரிமை கொண்டாடாது, இவற்றை இறைவனை நோக்கிய நம் பயணத்தில் நல்ல கருவிகளாகப் பயன்படுத்திக் கொள்வதே அறிவுடைய செயல்! எம் பெருமானுக்கு அழகிய ஆலயம் அமைக்கவேண்டுமே! குதிரை வாங்குவதற்காக கொண்டு வந்த செல்வம் நிறையவே இருக்கின்றது. இப்பூமி சிவன் உய்யக் கொ ள்கின்றவாறு ஆகையால் இச்செல்வத்தை குருபரனாய் ஆண்டுகொண்டு அருளிய திருப்பெருந்துறை உறை சிவபெருமானுக்கும் அவருடைய வழிபாட்டிற்க்கும் கொ டுத்தலே சாலச் சிறந்தது, எந்தையே! ஈசா!

பின் குரல்:- தன்னிடமிருந்த செல்வத்தைக்கொண்டு குருந்தமர நிழலில் தமக்கு அருள் புரிந்த சிவபெருமானுக்கு நல்லதொரு ஆலயம் எழுப்பினார். இறைவனார் அருளியது போல் செந்தமிழ்ப் பாமாலைகள் திருப்பெருந்துறை உறையும் சிவனாருக்கு பாடல்களைப் பாடிக்கொண்டு தம்மிடம் இருந்த செல்வங்கள் அனைத்தையும் திருப்பணிகளுக்கும் அடியார் பெருமக்களுக்குமே செலவிட்டார்.

மாணிக்கவாசகர்:- இதயப் பாசுரம் பாடுகிறார்.

பாடல்:- இன்றெனக் கருளி இருள்கடிந் துள்ளத்து
எழுகின்ற ஞாயிறே போன்று
நின்ற நின் தன்மை நினைப்பற நினைந்தேன்
நீயலால் பிறிதுமற் றின்மை
சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாம்
திருப்பெருந் துறையுறை சிவனே
ஒன்றும் நீ யல்லை அன்றியொன் றில்லை
யாருன்னை அறியகிற் பாரே

சேவகர்:- பெருமானே! பாண்டிய மன்னரிடமிருந்து ஒலை வந்துள்ளது, குதிரை வரும் செய்தியைப் பற்றி உடனடியாகத் தெரிவிக்குமாறு கட்டளையிட்டுள்ளார்,

மாணிக்கவாசகர்:- எம்பெருமானே! ஞான தேசிகராய் விளங்கும் பரம்பொருளே! பாண்டிய மன்னன் கொடுத்த பொருளை தேவாணர் ஆலயத் திருப்பணிக்கும் அடியார் பெருமக்களுக்கும் செலவிடும் சிந்தையை அளித்தீர், இனி பாண்டிய நாட்டிற்கு எவ்வாறு குதிரைகளை கொண்டு செல்வது, மன்னனுக்கு என்ன பதில் கூறுவது, விடையவனே! திருவருள் வகை யாதோ?!

அசரீரி:- மாணிக்கவாசகனே! பாண்டிய மன்னனுக்கு எத்தன்மையிலும் குதிரைகள் வந்து சேரும் என்று தெரிவித்து ஓலை எழுதி அனுப்புக, நாம் பாண்டிய மன்னன் மகிழுமாறு குதிரைகளை பின்னே கொண்டு வருகின்றோம். நீ முன்னே மதுரையை அடைந்து இருக்க.

மாணிக்கவாசகர்:- இறைவா! என்னே உனது தனிப்பெருங்கருணை, வேண்டத்தக்கது அறிவோய் நீ, வேண்ட முழுதும் தருவோய் நீ!

பாடல்:- வேண்டத் தக்க தறிவோய் நீ வேண்ட முழுதுந் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற் கரியோய்நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே 

 

காட்சி - 5

இடம்:- மதுரை, மாணிக்கவாசகர் இல்லம்.

பின் குரல்:- இறைவர் அருள் ஆணையை ஏற்று மாணிக்கவாசகர் மதுரை வருகிறார். பாண்டிய மன்னனை சந்தித்து குதிரைகள் விரைவில் வந்து சேரும் என்றும், அக்குதிரைகளால் பாண்டியன் துரகபதி என்னும் சிறப்புப் பெயரைப் பெறுவான் என்றும் கூறினார். இதனைக்கேட்ட பாண்டிய மன்னன் திருவாதவூரரைப் பாராட்டி வெகுமதிகள் பல அளித்தான். மாணிக்கவாசகர் தனது திருமனைக்கு எழுந்தருள்கிறார். அவரது உறவினர்கள் அவரை இன்னும் திருவாதவூரராகவே பார்க்கின்றனர்.

உறவினர்-1 (பெரியவர்) :- திருவாதவூரரே! அமைச்சர் பொருப்பினை ஏற்றால் அரசனுக்கு ஏற்றவாறு நடந்துகொள்ளுதல் வேண்டும் என்று அற நூல் வல்லுனர்கள் கூறுவார்கள், அது உமக்கு தெரியாததா?

உறவினர்-2:- அரசியலும், அமைச்சியலும் தெரிந்த நீவீர் நடந்துகொண்ட விதம் பொருத்தம்தானோ? நாங்கள் உமக்கு அறிவுரை கூறத் தக்கது யாது உள்ளது?

உறவினர்-1 (பெரியவர்) :- மறு நாள் குதிரைகள் வருவதாக சொன்னீரே, நாளை குதிரைகள் வரவில்லை என்றால் யாது செய்வீர்?

உறவினர்-2:- உம்மைச் சார்ந்துள்ள உறவினர்கள், நண்பர்கள், நல்லோர்கள் முதலானவர்களைக் காப்பது உமது கருத்து அல்லையோ?

மாணிக்கவாசகர்:- உறவினர்கள், நண்பர்கள், துன்பம், இன்பம், உடற்பற்று, பொருட்பற்று, சினம், பெருமை, சிறுமை, நல்வினை, தீவினை முதலானவை யாவும் திருப்பெருந்துறை உறை ஈசன் அருளால் விட்டொழிந்தேன். இனி எனக்குத் தாய், தந்தை, ஆசான் என யாவும் சிவபெருமானே, சிவனடியாரே உறவினர்கள், உருத்திராக்கமே ஆபரணம், பாண்டியன் என்னைத் தண்டித்தாலும், பரிசு அளித்தாலும் எனக்கு ஒன்றே. நான் சிவபெருமானை என்றும் மறவேன்.

உறவினர்கள்:- இவருக்கு என்ன ஆயிற்று? ஏன் இப்படி பேசுகின்றார்? பாண்டிய மன்னன் என்ன செய்யப் போகின்றார் என்று தெரியவில்லையே?

பாடல்:- உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனியமையும்
குற்றாலத் தமர்ந்துறையும் கூத்தா உன் குரை கழற்கே
கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே

 

Related Content

History of Thirumurai Composers - Drama-திருவிளையாடல் நாடகம்

ஓரியூரினில் உகந்து இனிதருளிப் பாரிரும் பாலகன் ஆகிய பரிசும் -

திருவிளையாடல் நாடகம் - திருமுகம் கொடுத்த படலம் Thiruvilaiya

Hindu Shaiva Devotional Video - Manikkavasagar Drama

Hindu Shaiva Devotional Video -ஞான நாடகம்