logo

|

Home >

video-gallery >

63-nayanmar-drama-kalimalaintha-sirnambi-kannappa-nayanar-tamil-drama

63 Nayanmar Drama- கலை மலிந்த சீர் நம்பி - கண்ணப்ப நாயனார் - தமிழ் நாடகம்

 

திருச்சிற்றம்பலம்

கண்ணப்ப நாயனார் புராண - நாடகம்

காட்சி - 1.

இடம் : வேடவர் பதி - உடுப்பூர்.

நாகன் : தத்தை நமக்குத் திருமணம் ஆகி பல ஆண்டுகள் சென்று விட்டன. நமக்கு இன்னும் மகப்பேறு வாய்க்கவில்லை. எனக்குப் பின் நம் வேடவர் குலத்தை தலைமை ஏற்று நடத்த நமக்கு ஒரு புதல்வர் இல்லாதது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது.

தத்தை : வருத்தப்பட வேண்டாம் சுவாமி! நம் குலம் காக்கும் கடவுள் நமக்கு நிச்சயம் திருவருள் புரிவார்.

நாகன் : செவ்வேள் ஏந்திய நம் முருகப்பெருமானுக்கு பெருவிழா எடுத்து அவரிடம் விண்ணப்பம் செய்வோம். “முருகா எம் குலத்தைக் காத்தருள்வாயாக.”

காட்சி - 2.

இடம் : முருகன் திருக்கோயில்.

நாகன் : கந்தக் கடவுளே தேவரீருக்காக சேவல் கோழிகளையும் அழகிய மயில்களையும் காணிக்கையாக அளிக்கிறேன். என் குலம் காக்கும் செந்தில் பெருமானே என் மரபு தலைத்து ஓங்கும் பொருட்டு, எநமக்கு ஒர் புதல்வனை அருளிச் செய்யுங்கள் சுவாமி.

தேவராட்டி : முருகா! கிரௌஞ்ச மலையினைப் பிளந்த தலைவனே! என்றும் வெற்றியே உடையவனே! எங்கள் தலைவருக்கு மகப் பேற்றினை அருள்வாயாக; கந்தா! கடம்பா! கதிர்வேலா! கார்த்திகேயா! அருள்வாயாக.

மற்ற வேடுவர்கள் : வெற்றிவேல் முருகனுக்கு அரோ...ஹரா!

(வேடுவர்கள் ஆடிப்பாடி முருகப் பெருமானை வழிபாடு செய்கின்றனர்.)

காட்சி - 3.

இடம் : நாகன் இல்லம்.

பின்குரல் : முத்தமிழ் கடவுள் முருகப் பெருமானின் திருவருளினால், தத்தைக் கருவுற்று இவ்வுலகம் உய்யும்படி பெறற்கரிய ஓர் அரும்புதல்வனை ஈன்றெடுத்தாள்.

வேடுவப் பெண் : தலைவியம்மா, இதோ பாருங்கள் உங்கள் அழகிய மகனை; அவன் கண்களைக் காணுங்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றது?!

தேவராட்டி : தலைவரே! இப்புதல்வன் பிறந்த இவ்வேளையில் பெருமைக்குரிய நல்ல குறிகளை நான் கண்டேன். தங்கள் புதல்வன் அளவில்லாப் புகழையுடையவனாகத் திகழ்வான்.

(நாகன் குழந்தையை வாங்கி கையில் ஏந்தியவாறு)

நாகன் : அடேயப்பா! என்னால் தூக்கக்கூட முடியாத அளவிற்குத் “திண்” என்று இருக்கின்றானே! இனி இவனை “திண்ணன்” என்றே அழைக்கலாம்.

(வேடுவர்கள் மகிழ்ச்சியால் ஆர்ப்பரிக்கின்றார்கள்.)

காட்சி - 4.

இடம் : நாகன் இல்லம்.

பின்குரல் : ஆண்டுகள் பல சென்றன; திண்ணனார் சிறு வயதிலேயே புலி, கரடி, மற்றும் பன்றி குட்டிகளுடன் விளையாடிப், பிறரையும் மகிழ்வித்து, வில் வித்தைப் பயிலும் பருவத்தை அடைந்தார்ன்.

நாகன் : மகனே! நீ இப்பொழுது வில்வித்தை பயிலும் பருவத்தை அடைந்து விட்டாய்; உனக்கு வில் தொழிலில் மேம்பட்ட முதியவரைக் கொண்டு முறையாகப் பயில்விக்கிறேன்.

திண்ணனார் : தங்கள் ஆணைத் தந்தையே!

நாகன் : வேலேந்தும் நம் கடவுள் முருகப் பெருமானின் கருணையினால் நீ சிலைத் தொழிலில் சிறந்து விளங்குவாயாக!

திண்ணனார் : தந்தையே வேடுவர் குலத் தலைவராகிய தங்களுக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் தங்கள் ஆணையை நிறைவேற்றுவேன்.

காட்சி - 5.

இடம் : நாகன் இல்லம்.

பின்குரல் : வில் தொழிலை முறையாகப் பயின்று, யாவரும் அதிசயிக்கும் வண்ணம் திண்ணனார் வில் வித்தையில் சிறந்து விளங்கினார். மலையைச் சிலையாக வளைத்தார் ஈசன் அருளினால் திண்ணனாரும் வீரம் செறிந்த சிலை வேடராய் விளங்கினார். இந்த நிலையில் நாகன் முதுமையடைகின்றார்.

வேடுவர்-1 : தலைவரே! நம் பகுதியில் வனவிலங்குகள் அதிகரித்துவிட்டன.ளின் அச்சுறுத்தல் மிகவும் அதிகமாகிவிட்டது; குறிப்பாக, வலிமை பொருந்திய புலி, கரடி, காட்டுப் பன்றி மற்றும் மான்கள் அதிகம் உள்ளன.ளின் தொல்லை அதிகரித்துவிட்டன. நாம் மாதங்களில் செய்யும் வேட்டைத் தொழில் இம்முறை காலதாமதமாகி விட்டது. குறித்த நாட்களில் வேட்டைச் செயல்கள் நிகழாது போனதால்தான் இவ்வாறெல்லாம் நடக்கின்றன. தாங்கள் தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்.

நாகன் : வேடுவர்களே! நான் தளர்ச்சி பெறும் மூப்பினை அடைந்துவிட்டேன். இதுவரை கானகங்களைக் காத்து வந்த நான், வில் தொழிலிலும் ஈடுபட முடியாத நிலையில் உள்ளேன்; ஆகையினால், என் மகன் திண்ணனை உங்கள் தலைவனாக நீங்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

வேடுவர்-2 : இத்தனைக் காலமும் தங்களுடைய சிலை ஆட்சியின் கீழ் இனிது வாழ்ந்திருந்தோம். தங்கள் ஆணையின் வழியிலே நிற்பதைத் தவிர எங்களுக்கு வேறு நெறி உண்டோதிண்ணனாரைத் தலைவராக ஏற்றுக்கொள்கிறோம்?!.

வேடுவர்-1 : அத்தனேதலைவரே! விறல் வீரம் உடைய திண்ணனை தங்கள் மரபிலே மிகவும் மேன்மை அடையவே பெற்றளித்தீர்கள். சிலை வேடராகிய தங்கள் மகனுக்கு இம்மலையாட்சி உரிமையை கொடுத்து அருளுவது சாலவும் பொருத்தமே.

நாகன் : மலைகளில் பொருந்திய பெருங்காட்டில் என் மகன் கண்ணி வேட்டைக்குப் போவதற்காகக் காட்டுத் தெய்வங்கள் மகிழுமாறு பழிகளை பலி ஊட்ட வேண்டும். அதனைச் செய்ய நம் மரபின் வழிவழி வந்த தேவராட்டியாரை அழையுங்கள்.

வேடுவர்கள் : உத்தரவு தலைவரே!

காட்சி - 6.

இடம் : உடுப்பூர்.

தேவராட்டி : தலைவரே! எனக்கு இதற்குமுன் எந்நாள்களிலும் காணப்படாத மிக நல்ல குறிகள் காணப்பட்டது. தங்கள் மைந்தன் வெற்றி பொருந்திய சிலை வேடன் திண்ணன் தங்கள் அளவில் மட்டும் அமையாது மேம்படுகின்றான். வன தெய்வங்கள் மகிழும்படி நான் காடுபடி ஊட்டச் செய்கிறேன்.

நாகன் : மிக்க மகிழ்ச்சி தேவராட்டியாரே!

(திண்ணனார் தந்தையின் திருவடிகளில் விழுந்து வணங்குகின்றார். நாகன் தன் மகனை ஆரத் தழுவி புலித் தோல் ஆசனத்திலே வீற்றிருக்கும்படி செய்கின்றான்.)

நாகன் : மகனே! என்னுடைய மூப்பினால் இனியும் வேட்டையாட இயலாது. என்னிலும் மேலாக நீ நிலைபெற்ற மலையர்களாகிய இவ்வேடர்குலக் காவலை மேற்கொண்டு பகைப் புலன்களை வென்று, மாவேட்டையாடி, உனது மரபு உரிமையாகிய தலைமையை என்றும் தாங்குவாயாக!

(நாகன் உடைத் தோலையும் சுரிகையையும் தன் மகன் திண்ணனாரிடம் கொடுக்கின்றார்.)

வேடுவர்கள் : வேடர் குலத் தலைவர், வாழ்க! வாழ்க!!

திண்ணனார் : தந்தையே! தாங்கள் காட்டிய வழியில் நின்று சிலைத் தொழில் புரிந்து நம் வேடர் குலக் காவலை மேற்கொள்வேன்.

நாகன் : மகனே, நம்முடைய குலத்தவராகிய வேடர்களுக்கு உற்றத் துணையாக இருந்து, வில்லினால் விளையும் வளம் குறையாது சிறப்போடு வாழ்வாயாக! நல் வேட்டைகள் உனக்கு வாய்க்கும். நீ தாமதியாது இவ்வேடர்களுடனே வேட்டையாடச் செல்வாயாக!

வேடுவர்கள் : வேடர் குலத் தலைவர் திண்ணனார், வாழ்க! வாழ்க!!

காட்சி - 7.

இடம் : அடர்ந்த வனப்பகுதி.

திண்ணனார் : அடேயப்பா! எவ்வளவு பெரிய காட்டுப் பன்றி; வலிமைப் பொருந்திய இப்பன்றியை எதிர்கொண்டு வேட்டையாட வேண்டும்.

(திண்ணனார் பன்றியைப் பின்தொடர்ந்து செல்கின்றார்.)

நாணன் : ஏய் காடா! நம் தலைவர் எங்கே எதனைப் பின்தொடர்ந்து ஓடுகிறார்?!

காடன் : நம் தலைவர் மிகப் பெரியதோர் பன்றியைப் பின்தொடர்ந்து தான் மட்டும் தனியே செல்கிறார்! அவருக்கு இது கன்னி வேட்டை; வா நாமும் அவரைப் அவருக்கு உறுதுணையாகப் பின்தொடர்ந்து செல்வோம்.

காட்சி - 8.

இடம் : அடர்ந்த வனப்பகுதி.

பின்குரல் : திண்ணனார் வலிமை மிக்க அப்பன்றியினை எதிர்கொண்டு, வில்லினைப் பயன்படுத்தாது, தம் உடைவாளினால் வீழ்த்தினார்.

நாணன் : ஆ! எவ்வளவு பெரிய பன்றி! வில்லினைப் பயன்படுத்தாது இக்கேழலை நேருக்கு நேர் எதிர்கொண்டு வீழ்த்திய வீரரே!

காடன் : தலைவரே! நம் குலத்திற்கே பெருமை சேர்த்தீர்கள்! தங்ளின் இவ்வீரச் செயலை தங்கள் தந்தையார் அறிந்தால் மிகவும் பெருமைப்படுவார்.

வெகுதூரம் தொடர்ந்து ஓடி வந்ததால் எங்களுக்கு மிகவும் களைப்பாக இருக்கின்றது. இப்பன்றியைச் சமைத்து உண்டு, பின் தண்ணீர் பருகி, வெற்றிக்கொள்ளும் வேட்டைக் காட்டினை சென்றடைவோம்.

திண்ணனார் : நாணனே இங்கு தண்ணீர் எங்குள்ளது?

நாணன் : தலைவரே, இத்தேக்கு மரச் சோலையைக் கடந்து சென்றால், பொன்முகலி ஆற்றினைக் காணலாம்.

திண்ணனார் : இப்பன்றியை கொண்டு வாருங்கள், நாம் அங்கே செல்வோம்.

(அனைவரும் அப்பன்றியுடன் பொன்முகலி ஆற்றினை அடைகின்றனர்.)

நாணனே! அதோ...! தெரிகிறது பார்! அம்மலையின் அருகே செல்வோம் வா.

நாணன் : தலைவரே! அங்கு நாம் சென்றால் நல்ல காட்சியே காண்போம். சேணுயர் திருக்காளத்தி மலையின்மேல் குடுமித்தேவர் இருப்பார்; அவரை நாம் கும்பிடலாம்.

திண்ணனார் : இம்மலையை நோக்கிச் செல்லும்போது என்மேல் உள்ள பாரம் குறைவது போலுள்ளது! அங்கே செல்லும் பேராசையில் என் மனம் முன்னமே அங்கே சென்றே விட்டது. அங்கே குடுமித்தேவர் இருக்குமிடத்திற்கு என்னை அழைத்துச் செல்வாயாக.

திண்ணனார் : காடனே, இங்கு நெருப்பு உண்டாக்கி இப்பன்றியினை சமைத்து வை! நாங்கள் இம்மலைக்குச் சென்றுவிட்டு வந்துவிடுகிறோம்.

காடன் : உத்தரவு தலைவரே!

பின்குரல் : திருக்காளத்தி மலையின் உச்சியில் அதிர்கின்ற ஐந்து தேவ துந்துபி ஓசைகள் கடல் முழக்கம்போல் முழங்கத் திண்ணனார் வியப்புறுகிறார்.

திண்ணனார் : நாணனே இது என்ன ஓசை?!

நாணன் : தேன் பொருந்திய மலர்களில் இருந்து வரும் தேனீக்கள் மொய்த்து மீள எழுகின்றதால் உண்டாகும் ஒலிபோல் உள்ளது.

பின்குரல் : திருக்காளத்திமலை தென்கயிலை ஆதலின், இங்கும் பிரமன் முதலாகிய தேவர்கள் வந்து வழிபடுவர்; அவ்வழிபாட்டின்போது உண்டாகும் ஒலியே தேவதுந்துபி ஒலியாகும். அதனை நாணன் அறியாததால், தேனீக்களால் உண்டாகும் ஒலியாக இருக்கலாம் என்று நாணன் கூறினான். திண்ணனார் முன்பு செய்த தவத்தின் ஈட்டத்தால் முடிவில்லாத இன்பமாகிய அன்பினை எடுத்துக்காட்ட அளவில்லா ஆர்வம் பொங்கி நிலைபெற்ற பெருங்காதலுடன் தீரா வேட்கையோடும் தம் ஊணும் உளமும் உருக அத்திருமலையில் ஏறிச் செல்கின்றார். தத்துவங்கள் என்கின்ற பெருகும் படிகளை ஏறி, சத்தியே வடிவமாகிய சிவத்தை அணையும் சிவ யோகிகள் போல திண்ணனார் திருக்காளத்திமலை உச்சியை நோக்கிச் செல்கின்றார்.

காட்சி - 8.

இடம் : திருக்காளத்திமலை.

பின்குரல் : திருக்காளத்தி அப்பரைத் திண்ணனார் கண்டவுடன் காளத்தி அப்பரின் கருணைமிகுந்த அருட்திருநோக்கம் திண்ணனார்மேல் பொருந்த இப்பிறவியின் முன்னைச் சார்புகள் அவரை விட்டு அகல, பொங்கிய ஒளியின் நிழலிலே ஒப்பற்ற அன்பே தமது உருவமாக ஆயினார்.

திண்ணனார் : குடுமித்தேவரே! அடியேனிடம் நீர் அகப்பட்டீர்! எங்கள் குலத்தினரைப் போல யானை, கரடி, புலி முதலிய கொடிய விலங்குகள் திரியும் இக்காட்டிலே உம்முடன் துணையாய் ஒருவரும் இல்லாமல் இருக்கின்றீரே! ஓ! கெட்டேன்! நீர் மட்டும் இம்மலையில் தனியே இருப்பதா?! இந்தப் பச்சிலையோடு பூவும் நீரும் வார்த்து அவ்வழகு செய்தவர் யாரோ?

நாணன்: எனக்குத் தெரியும். முன்பொரு நாள் நாங்கள் வேட்டையாட வந்தபோது குளிர்ந்த நீராட்டி, இலையும் பூவும் சூட்டி, படையல்கள் முன்பு வைத்து வழிபட்டான் ஒரு பார்ப்பான். இன்றும் அவன் தான் இதெல்லாம் செய்திருக்கவேண்டும்.

திண்ணனார்: ஓ! திருக்காளத்தி நாயனாருக்கு உகந்த செய்கை இவை தானோ?! இதுவே கடைப்பிடிப்பேன்.

பின்குரல் : திண்ணனார் காளத்தி அண்ணலாரைக் கட்டிப்பிடித்துக்கொண்டு பிரியமாட்டாத அன்பினால் உருகுகிறார்.

திண்ணனார் : இந்த மலையிலே எம்தேவருக்கு அமுது செய்ய இறைச்சி இடுவாரும் இல்லை, இவரை என்னால் பிரியவும் முடியாது; நான் என் செய்வேன்?! நாதனே! தேவரீர் அமுது செய்ய நல்ல மெல்லிய இறைச்சியை நானே குற்றமறத் தெரிந்து அமைத்துக் கொண்டு இங்கு வருவேன். ம்... உமக்கு யார் துணையாக இங்கு இருப்பது?! உம்மை விட்டு பிரியவும் மனமில்லை, அதே வேளையில் நீர் பசியோடு இருப்பதைக் கண்டு என்னால் பொறுக்கவும் முடியவில்லை. நான் சென்று உமக்காக இறைச்சி கொண்டு விரைந்து வருகின்றேன்.

காட்சி - 9.

இடம் : பொன்முகலி ஆற்றங்கரை.

காடன் : தலைவரே! தாங்கள் வேட்டையாடிய பன்றியினை சிறப்பான முறையில் சமைத்து வைத்திருக்கின்றேன்; மலைக்குச் சென்ற நீங்கள் திரும்பி வர ஏன் இவ்வளவு தாமதம்?!

நாணன் : காடா! திண்ணனார், மலையில் குடுமித்தேவரைக் கண்டு, வங்கினைப் பிடித்துக்கொண்டு விடாத வலிய உடும்பைபோல, நீங்காதவராய் விட்டார். குடுமித்தேவர் உண்ணுவதற்கு இறைச்சி கொண்டுசெல்வதற்கே இங்கு வந்துள்ளார். குடுமித்தேவருக்கு ஆளான இவர், தம் குலத்தலைமையையே விட்டுவிடுவார் போலுள்ளது.

காடன் : தலைவரே! என்ன காரியம் செய்தீர்கள்?! குடுமித்தேவரின்பால் என்ன மயக்கம் கொண்டீர்கள்?! வேடுவராகிய எங்களுக்கு தாங்கள் முதல்வர் அல்லவா!

பின்குரல் : காடன் இவ்வாறு கேட்க, திண்ணனார் அவன் முகத்தைக் கூட நோக்காதவராய், பன்றியின் மிக்க சுவையுடைய தசைகளைச் சுவைத்துப் பார்த்து, இனியவற்றையெல்லாம் குடுமித்தேவருக்கென எடுத்துவைத்தார். திண்ணனார் தன் வயிற்றுப் பசியைச் சற்றும் உணராதவராய், திருக்காளத்தி கண்ணுதலாருக்கே அமுது செய்விக்கும் நோக்கிலேயே இருந்தார்.

காடன் : திண்ணனார் தெய்வ மயக்கம் கொண்டுள்ளார்; இதனை நாம் எவ்வாறு தீர்ப்பது?!

நாணன் : நாம் ஊருக்குச் சென்று தேவராட்டி மற்றும் நாகனோடு வந்து இதனைத் தீர்க்க வேண்டும். வா செல்லலாம்.

காட்சி - 10.

இடம் : குடுமித்தேவர் திருக்கோயில்.

பின்குரல் : காளத்தி அப்பருக்கு ஊண் அமுதை திருந்த அமைத்து இறைவனைத் திருமஞ்சனம் ஆட்ட எண்ணி, தமது தூய வாயினில் பொன்முகலி திருநதியின் தூய நீரினைக் கொண்டு, பறித்த தூய திருப்பள்ளித் தாமங்களைத் தமது தலையிலே சொறுகிக்கொண்டவராய்செருகிக்கொண்டவராய், குடுமித்தேவரை நோக்கி விரைந்து வருகின்றார். குடுமித்தேவரைக் கண்ட திண்ணனார் “இறைவன் மிகவும் பசியால் இளைத்து விட்டனரோ?!” என்று வருந்துகின்றார். சிவனார்மேல் இருந்த நிர்மால்யத்தை தமது அழகியச் செருப்பினாலே விலக்கி, தம் புனித வாயிலிருந்த திருமஞ்சன நீரை, விளைந்த அன்பினை உமிழ்வாரைப் போல விமலனார் திருமுடியின்மேல் விட்டார். தலைமிசைக் கொண்டு வந்த திருப்பள்ளித் தாமத்தைக் காளத்தியப்பரை வணங்கி அவர்தம் திருமுடியின்மேல் சாத்தி, தான் அன்போடு கொண்டுவந்த ஊண் அமுதை ஏற்று அருளுமாறு வேண்டுகிறார்.

திண்ணனார் : நாயனீரே! கொழுப்பினை உடைய தசைகளையெல்லாம் தெரிந்து, அறிந்தெடுத்து, கோலினில் கோத்து, நெருப்பினில் பதம் பொருந்தக் காய்ச்சி, பின் பல்லினால் அதுக்கி, நாவினால் இனிய சுவை ஆராய்ந்து பார்த்து படைத்த இவ்விறைச்சி சால அழகியது; நாயனீரே! அமுது செய்தருளும்.

பின்குரல் : இன்னவாறு இனிய மொழிகளைச் சொல்லி அமுதூட்டிய திண்ணனார், இரவு வரவும், கொடிய விலங்குகளால் குடுமித்தேவருக்கு ஆபத்து நேரிடும் என்று அஞ்சி, உண்மையினின்றும் வேறுபடாத செம்மையாகிய அன்பினை மனத்தினுள் தாங்கி, திருக்கையிலே வில்லையும் தாங்கி இறைவரின் அருகே கரிய மலைபோல் நீங்காது நின்றனர். தேவர்களும் காணுதற்கரிய சிவபெருமானை ஆசை பெருக ஆராத அன்பினாலே கண்டுகொண்டபடியே நேர்பெற நோக்கி நின்றார், நீண்ட இருள் நீங்கும்படியும் நின்றார். சிவந்த தீச்சுடரின் ஒளிபோல மிக்க ஒளி வீசும் பெரிய சோதி மரங்களாலும், மந்திகள் கற்பொந்துகளில் வைத்த முத்து மணிகளின் ஒளிகளாலும் ஐம்புலன்களையும் அடக்கிய அருமுனிவர்களின் அரிய பெருஞ்சோதியாலும் எந்தையார் திருக்காளத்தி மலையில் இரவு என்று ஒன்று இல்லையாம்.

காட்சி - 11.

இடம் : குடுமித்தேவர் திருக்கோயில்.

பின்குரல் : கருங்கடல் என நின்ற கண் துயிலாத வீரர் திண்ணனார், பகலவன் தோன்றியவுடன் திருக்காளத்தி அப்பரின் திருஅமுதிற்க்காக வேட்டைக்குச் சென்றனர். அப்போது சிறப்பு மிக்க சிவாகமங்களின் விதிப்படி கொய்த மலர்களும், நறும்புனலும் முதலான பூசனைப் பொருட்களைக் கொண்டு காளத்தி நாதரை நியதியாய் வழிபாடு செய்து வரும் தவமுடைய சிவகோசரியார் என்ற ஆதிசைவ முனிவர் அனைந்தனர். காளத்தியார் முன் இருந்த இறைச்சியும் எலும்பையும் கண்டு, தூரத்தே தாண்டி ஓடினார்.

சிவகோசாரியார் : சிவ சிவா, ஓ! கெட்டேன்! யாரிந்த அநுசிதத்தைச் செய்தது?! இதனை யாருக்கும் அஞ்சாத வேடர்களே செய்திருக்க வேண்டும். தேவதேவா! ஈசனே! உமது திருமுன்பே இவ்வநுசிதத்தைச் செய்து போவதா?! இவ்வண்ணம் அநுசிதம் வந்து புகுவதற்கும் தேவரீர் திருவுள்ளம் செய்வதா?! உரிய காலத்தில் தேவரீருக்குப் பூசனை செய்யவேண்டுமே! முதலில் இதனைச் சுத்தம் செய்துவிட்டு, பொன்முகலி ஆற்றில் மீண்டும் புனலாடி வருவேன்.

பின்குரல் : காளத்தியார் முன் இருந்த இறைச்சி மற்றும் எலும்புகளுடன் கிடந்த அடிச்சுவடுகளையும் திருஅலகினால் சுத்தம் செய்து பொன்முகலி ஆற்றில் நீராடி, முன்னே அநுசிதத்தால் ஏற்பட்ட பழுது தீர பவித்ரமாகிய செயல்களைச் செய்து ஆகம விதியின்படி சிவபூசனை செய்து திருக்காளத்தி முதல்வனார் கழல் பணிந்தார்.

காட்சி - 12.

இடம் : குடுமித்தேவர் திருக்கோயில்.

பின்குரல் : காளத்தி அப்பருக்காக வேட்டைத் தொழிலைச் செய்து முன்பு போலவே தீராத அன்பினால் ஊணமுது ஆக்கி குடுமித்தேவரிடத்து வருகின்றார் திண்ணார்.

திண்ணனார் : நாயனீரே! இந்த ஊனணமுது நேற்றளித்தைவிட மிகவும் சிறந்தது; பன்றி இறைச்சியோடு, மான், கலை, மரை, கடமை என்ற இவ்வகைகளில் ஏற்ற இறைச்சி அமுதாக்கப்பட்டுள்ளது; அடியேனும் சுவைக் கண்டேன்; தேனும் கூட கலந்துள்ளது. இது தித்திக்கும், நாய்னீரே! அமுது செய்தருளும்.

பின்குரல் : இன்னவண்ணம் திண்ணனார் ஒழுக, சிவகோசரியார் தினந்தோறும் திண்ணனார் செய்யும் பூசனையினால், மிகத் தளர்வடைந்து அதனைத் தீமை என்று எண்ணி, ஆகமங்களில் சொன்ன விதிப்படி நீக்கி, அர்ச்சனைச் செய்து, அந்நெறியில் ஒழுகுவாராயினார். இந்நிலையில் நானனும் காடனும் போய் நிகழ்ந்தவற்றைச் செய்திகளாக நாகனுக்குச் சொல்ல, அனைவரும் தேவராட்டியுடன் வந்து திண்ணனார் மனதை மாற்ற முயற்சித்து அதிலே தோல்வியுற்று அவரைக் கைவிட்டு அகன்று போயினார். முன்னைப் பசுப்போத உருவமாறி சிவபோத வடிவினராய் இருக்கும் திண்ணனார், நாகன் தேவராட்டி முதலிய வன வேடர்களின் கருத்தின் அளவில் அமைவரோ?! அமையார்.

காட்சி - 13.

இடம் : சிவகோசரியார் இல்லம்.

சிவகோசரியார் : திருக்காளத்தி கண்ணுதல் பெருமானே! என்நாயகரே! மலைமேல் மருந்தாய் இருக்கும் தேவரீரிடத்து அநுசிதங்களை தினமும் செய்பவரை இதுவரைக் கண்டிலேன்; உம்முடைய திருவருளினாலே இதனை நீக்கி அருள வேண்டும். சிவ சிவ!

(சிவகோசரியார் உறங்கிக்கொண்டிருக்கின்றார்.)

அசரீரி : அன்பனே! நீ அவனை வன்திறல் வேடுவன் என்று நினையாதே! அவனின் நற்செயலை நாம் உரைப்பக் கேட்பாயாக! 
 அவனுடைய வடிவம் முழுதும் நம்மிடத்து வைத்த அன்பு மயமேயாகும்.
 அவனுடைய அறிவு முழுவதும் நமை அறியும் அறிவேயாம்.
 அவனுடைய செயல்கள் எவையாயினும் அவையெல்லாம் நமக்கு இனியனவே ஆகும்.
 அவனுடைய நிலை இத்தன்மையுடையது என்பதை நீ அறிவாயாக!
நாளை நீ நம் அருகே அவன் காணாதபடி மறைந்திருப்பாயாக! அவனின் செயல்களை நாம் காட்ட, எம்மிடத்து அவனுடைய அன்பிருக்கும் தன்மையை நீ அறிவாய்! உனது மனக் கவலையை ஒழிவாயாக!

சிவகோசரியார் : இறைவா! வேதநாயகனே! ஆகமங்கள் மொழிந்தவனே! என்னே உனது கருணை! உண்மை அன்பினாலே உன்னை வழிபடுவோருக்கு நீர் செய்யும் அருள்திறம் தான் என்னே!

காட்சி - 14.

இடம் : குடுமித்தேவர் திருக்கோயில்.

பின்குரல் : இறைவன் கனவில் அருளியபடி சிவகோசரியார் காளத்தியப்பரை பூசித்துவிட்டு, திண்ணனார் அறியாவண்ணம் பின்புறமாக மறைந்து நிற்க்கின்றார். இன்று திண்ணனார் காளத்தியப்பரை வழிபட ஆரம்பித்து ஆறாவது நாளாகும். கருமுகிலென நின்ற கண்படார் வில்லியார் திண்ணனார் திருக்காளத்தி அப்பருக்காகத் தனிப்பெரும் வேட்டையாடி முன்புபோலவே புனித வாயில் திருமஞ்சன நீரும், தலையிலே மலர்களும் கொண்டவராய் காளத்தி அப்பரை வழிபட வருகின்றார். வரும் வழியில் தீமை காட்டும் சகுனங்கள் தோன்ற “என் அத்தனாருக்கு என்ன ஆனதோ” என்ற மன பதைபதப்புடன் ஓடி வருகின்றார். திண்ணனாரின் அன்பின் திறத்தினை இத்திருந்து உலகம் அறியும் பொருட்டு, காளத்தியார் அவர்தம் திருக்கண்களுள் ஒன்றிலிருந்து குருதி பீறிட்டு வழியும்படி செய்கிறார்.

திண்ணனார் : தேவரே! ஓ... கெட்டேன்! என்ன ஆயிற்று தாங்களுக்கு?! தங்களின் திருக்கண்களிலிருந்து குருதி வெள்ளம்போல் பாய்ந்து வருகின்றதே! குடுமித்தேவரே என்னாயிற்று...!

(இறைவனாரின் கண்களில் வழிந்தோடும் குருதியினை தாங்கொண்ணாதவராய்த் துடைக்கின்றார்.)

“யாரிதைச் செய்தார்?!”

(வில்லினை எடுத்து யாரேனும் தெரிகிறார்களா? என்று சுற்றும் பார்க்கிறார்.)

“இதனைக் கொடிய வேடர்கள் யாரேனும் செய்தனரா?! இல்லை, கொடிய விலங்கினங்கள் செய்தனவா?! தெரியவில்லையே!”

பின்குரல் : கையில் சிலையுடன் சுற்றும் முற்றும் இப்பாதகம் செய்தார் யாரேனும் இருக்கின்றனரா? என்று தேடுகின்றார். ஆனால் ஒருவரையும் காணாது மீண்டும் நாயனார்பால் வந்து நீடிய சோகத்தோடு, காளத்தியப்பரைக் கட்டிக்கொண்டு கதறி அழுகின்றார்.

திண்ணனார் : எம் பரமனாருக்கு பாவியேன் கண்டபடி இவ்வாறு அடுத்தது என்னோ?! உயிரினும் இனியவராகிய என் அத்தனாருக்கு அடுத்தது என்னோ?! வந்து மேவினார் பிரியமாட்டாத விமலனாருக்கு இங்கு அடுத்தது என்னோ?! யான் ஒன்றும் அறிந்திலேன்.

பின்குரல் : அவ்வனத்தில் இருக்கும் மூலிகை மருந்துகளை எல்லாம் தேடி கொண்டு வந்து, காளத்தியார் திருக்கண்ணில் பிழிந்து பார்த்தும், கொட்டும் அக்குருதி நில்லாததைக் கண்டு, சொல்லொணா துயர் கொள்கிறார்.

திண்ணனார் : தேவரே! இனி இதற்கு என்ன தீர்வு செய்யவல்லேன்!

(யோசிக்கின்றார்.)

“ஆ! கண்டுகொண்டேன்! ஊனேணே ஊணுனுக்கு மருந்து! ஆம் ஊணேனே ஊணுனுக்கு உற்ற நோய் தீர்ப்பது!” “எனது கண்ணை அம்பினாலே தோண்டி, அத்தனாருக்கு அப்பினால், எந்தையார் கண்ணிற்கு நேர்ந்த நோயினுக்கு இதுவே மருந்தாகி பெருகி ஓடும் குருதியும் நிற்கக் கூடும். சற்றும் தாமதியாது இதைச் செய்வேன்.”

பின்குரல் : உலகிற்குக் கண்ணாக விளன்ங்கும் காளத்தி அண்ணலாருக்காக திண்ணனார் தன் கண்ணை இடந்து அப்ப, காளத்தியார் திருக்கண்ணிலிருந்து பெருகியோடும் குருதியும் நின்றது. இதனைக் கண்ட திண்ணனார், சொல்லொண்ணா ஆனந்தத்தில், தம் மலைபோன்ற தோள்களைக் கொட்டினார்; சந்தோசத்தில் கூத்துமாடினார்.

திண்ணனார் : நான் செய்த இந்த யோசனை மிகவும் நன்று! குடுமித்தேவரே! தேவரீர் கண் கொண்ட நோய் நீங்கியது. இனி உம்மை விட்டு ஒரு கணமேனும் பிரியவே மாட்டேன்.

பின்குரல் : தமது வலத் திருக்கண்ணை தோண்டி இறைவனுக்கு அப்பிய வள்ளலாராகிய திண்ணனார் தம் எல்லையில்லா அன்பின் திண்மையை மேலும் உலகின்ற்குக் காட்டுதற் பொருட்டு, காளத்தியப்பர் தமது இடக்கண்ணிலிருந்தும் செங்குருதி பாய்ந்துவர செய்தார்.

திண்ணனார் : ஓ! கெட்டேன்! இடது கண்ணிலும் குருதி பாய்ந்து வருகின்றதே! நான் அஞ்சமாட்டேன் இந்நோய் தீர்க்கும் மருந்து என்னிடம் உள்ளது! எனக்கு இன்னும் ஒரு கண் எஞ்சியுள்ளது; அக்கண்ணை இடந்து தேவரீர் கண்ணில் அப்பி, இந்நோயினைத் தீர்ப்பேன்.

பின்குரல் : ஏற்கனவே தம் வலக் கண்ணை இடந்து அப்பிய திண்ணனார், தம் இடக் கண்ணையும் இடந்து அப்ப துணிகின்றார், இடக்கண்ணையும் எடுத்துவிட்டால் காணும் திறனை இழந்துவிடுவோம் என்பதாலும், காளத்தியார் தம் இடக்கண்ணிலே சரியாக பொருந்தும்படி தம்கண்ணை அப்ப வேண்டும் என்று எண்ணியவாரும் திண்ணனார் ஆதியும் அந்தமுமில்லா அருட்பெருஞ் சோதியாகிய இறைவனார் தம் திருக்கண்ணிலே இடக்காலினை ஊன்றிக் கொண்டு, மனதில் நிறைந்து எழுந்த விருப்தோடும் ஒப்பற்ற ஒர் அம்பினை எடுத்து, அதனை தம் கண்ணில் ஊன்ற, தேவதேவராகிய காளத்தி நாதர் அதனை தரியாது, இறைவரது திருக்கை தோன்றி, கண்ணினை இடக்க முயற்சித்த திண்ணனார் தம் கரத்தினை தடுத்து, தம் அமுத திருவாக்கினால் “கண்ணப்ப நிற்க” என்று அருளினார்.

அசரீரி : கண்ணப்ப நிற்க! கண்ணப்ப நிற்க!! கண்ணப்ப நிற்க கண்ணப்ப நிற்க!!!

பின்குரல் : கண்ணப்பர் தமது கண்ணை இடந்து அப்பிய காலத்தும், மற்றைக் கண்ணை இடக்க முற்படும்போது இறைவன் திருக்கரமே தோன்றி தடுத்ததையும் ஞானப் பெருமுனிவராகிய சிவகோசரியார் கண்டு அதிசயித்து சிவானந்தத்தில் மூழ்கினர். மறைகள் ஆர்த்தன! தேவர்கள் பூமாரி பொழிந்தனர்!

அசரீரி : ஒப்புயர்வற்றவனே! எமது வலது பக்கத்தில் எப்போதும் நிற்பாயாக!

- திருச்சிற்றம்பலம் -

For comments contact.

Related Content