logo

|

Home >

video-gallery >

thiruvilaiyadal-drama-curing-the-fever-of-pandiyan-thiruvilaiyadal-puranam

Thiruvilaiyadal Drama-பாண்டியன் சுரம் தீர்த்த திருவிளையாடல் - நாடகம் (Curing the fever of Pandiyan - Thiruvilaiyadal puranam)

Thiruvilaiyadal Drama


புனிதவாய் மலர்ந்தழுதார் (சம்பந்தர்) - பகுதி-2 - ஆலவாய் எழுந்தருளியது

 

 

 

 

 

 

 

 

 

 

 

அரன் நாமமே சூழ்க

(திருஞானசம்பந்தர் திருஆலவாய் எழுந்தருளல்)

காட்சி - 1.

இடம் : திருவாலவாய் எல்லை.

[பாண்டி நாட்டில் சைவம் தழைக்கும் பொருட்டு மங்கையர்க்கரசியார் அழைப்பின்பேரில் திருஞானசம்பந்தப் பெருமான் திருஆலவாய்க்கு எழுந்தருள் புரிகின்றார்; திருஆலவாயின் எல்லையிலேயே பாண்டி நாட்டின் முதலமைச்சரான குலச்சிறையார் திருஞானசம்பந்தரை வரவேற்கும் பொருட்டு காத்திருக்கின்றார். திருஞானசம்பந்தர் திருஆலவாய் எல்லையை அடைந்தவுடன் குலச்சிறையார் ஓடிச்சென்று நிலத்தில் வீழ்ந்து திருஞானசம்பந்தரை வணங்குகின்றார்.]

அடியார் : பெருமானே! பாண்டிய மன்னரது தலைமை மந்திரி குலச்சிறையார் எழுந்தருளியுள்ளார்.

(திருஞானசம்பந்தர் சிவிகையிலிருந்து இறங்குகின்றார்.)

சம்பந்தர் : சோழ மன்னரது திருமகளாகிய மங்கையர்க்கரசி அம்மையாருக்கும், திருந்திய சிந்தையினை உடைய தங்களுக்கும் நமது சிவபெருமனுடைய திருவருள் பெருகும் நன்மைதான் சிறந்துள்ளது.

குலச்சிறையார் : சென்ற காலத்திலே பழுதின்றி நின்ற திறமும், இனி எதிர்காலத்தில் வரும் சிறப்புடைய திறமும் இன்று தேவரீர் எழுந்தருளப் பெற்ற பெரும் பேற்றினால் விளங்கும். நன்றி இல்லாத நெறியிலே அழுந்திய இந்நாடும் நற்றமிழ் அரசனும் உய்தி பெற்று வெற்றி கொள்ளும் திருநீற்றின் ஒளியினில் விளங்கும் மேன்மையினையும் பெற்றோம்.

சம்பந்தர் : நமது இறைவர் எழுந்தருளியிருக்கும் திருஆலவாய் திருக்கோயில் எங்குள்ளது?

குலச்சிறையார் : பெரிய உயர்ந்த கோபுரங்கள் தோன்றுகின்ற இதுவே இறைவனார் விரும்பி வீற்றிருக்கும் திருஆலவாய் திருக்கோயில்.

(திருஞானசம்பந்தப் பெருமானும், குலச்சிறையாரும் திருஆலவாய் திருக்கோயிலுக்குள் செல்கின்றனர் - மங்கையர்க்கரசியார் திருக்கோயிலின் மருங்கே மிகப் பணிவோடு நிற்கிறார்.)

மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழ லுருவன் பூதநா யகனால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவா யாவதும் இதுவே.

வெற்றவே யடியார் அடிமிசை வீழும் விருப்பினன் வெள்ளைநீ றணியுங்
கொற்றவன் றனக்கு மந்திரி யாய குலச்சிறை குலாவி நின்றேத்தும்
ஒற்றைவெள் விடையன் உம்பரார் தலைவன் உலகினில் இயற்கையை யொழிந்திட்
டற்றவர்க் கற்ற சிவனுறை கின்ற ஆலவா யாவதும் இதுவே. 

குலச்சிறையார் : பெருமானே! கூப்பிய கைத்தளிர்களை உடைய அம்மையார், சோழ மன்னரது திருமகளார் பாண்டிமாதேவி, மங்கையர்க்கரசியார்.

(மங்கையர்க்கரசியார் திருஞானசம்பந்தர் திருவடிகளில் வீழ்கிறார்.)

மங்கையர்க்கரசியார் : கவுணியர் குலத் தலவரே! புரமெரித்தார் திருமகனாராகிய தேவரீர் இங்கு எழுந்தருள யானும் எனது பதியும் செய்த பெருந்தவம் என்னவோ!?

சம்பந்தர் : சுற்றும் பரவிய பரசமயத்தின் இடையே திருத்தொண்டின் நெறியில் வாழ்கின்ற இடையறாது அன்புடையவர்களாகிய உங்களைக் காணும் பொருட்டுதான் யான் இங்கு வந்தேன்.

மங்கையர்க்கரசியார் : சிவசிவ! (திருஞானசம்பந்தரை வணங்குகின்றார். அம்மையார் நாத்தழுதழுக்க வணங்குகிறார். பிறகு குலச்சிறையார்ப் பார்த்து) குலச்சிறையாரே, நம்மை ஆளுடைய பிள்ளையாருக்கும், அவருடன் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்றத் திருத்தொண்டர்களுக்கும் தங்கும் இடம் மற்றும் தேவையானவை எல்லாம் தயாராக இருக்கின்றதா?

குலச்சிறையார் : அரசியாரே! தங்கள் உத்தரவின்படி பிரமபுரத் திருமகனாரும், அவர்தம் திருக்கூட்டத்தினரும் தங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மங்கையர்க்கரசியார் : சிவ சிவ! மிக்க மகிழ்ச்சி

அணங்கு வீற்றிருந்த சடைமுடி ஆலவாயண்ணல் திருவடிகள் போற்றி போற்றி!

 

 

திருஞானசம்பந்தர் பாண்டி நாடு வந்திருப்பதைச் சமணர்கள் கேள்வியுற்றல்

காட்சி - 2.

இடம் : வீதி.

[திருஞானசம்பந்தப் பெருமான் அடியவர்களுடன் மங்கையர்க்கரசியார் ஏற்பாடு செய்த்திருந்த திருமடத்தில் இரவு தங்கி இருக்கின்றார். அடியார் பெருமக்கள் திருஞானசம்பந்தர் பாடியருளியத் திருப்பதிகங்களை ஓதிக்கொண்டிருக்கின்றனர்.]

நீல மாமிடற், றால வாயிலான்
பால தாயினார், ஞாலம் ஆள்வரே

அடிகள் ஆலவாய்ப், படிகொள் சம்பந்தன்
முடிவி லின்றமிழ்ச், செடிகள் நீக்குமே

சமணன் - 1: கேட்டுமுட்டு.... கேட்டுமுட்டு.... என் செவிகளால் இச்சத்தத்தைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை; யார் இவர்கள்?!

சமணன் - 2: யாரோ திருஞானசம்பந்தராம்; பாண்டிய நாட்டில் நம் சமயத்தை அழித்து சைவ சமயத்தை நிலைநாட்ட வந்துள்ளாராம். சடையனுக்கு ஆளான அவர்கள் தங்கியிருக்கும் மடத்திலிருந்து தான் இந்தச் சத்தம் வருகின்றது; கேட்டுமுட்டு கேட்டுமுட்டு.

சமணன் - 1: கேட்டுமுட்டு.... கேட்டுமுட்டு.... இந்தப் பெரும் பழியினை மன்னவனாகிய பாண்டியனை அடைந்து சொல்வோம்.

காட்சி - 3.

இடம் : அரசவை.

சமணர்கள் அரசனை காண வருகின்றனர்

[மன்னன் அரசவையில் அமர்ந்து, தம் அமைச்சர்களுடன் அரசு காரியங்களை விவாதித்துக் கொண்டிருக்கின்றான். அப்பொழுது சமணர்கள், திருஞானசம்பந்தர் திருஆலவாய்க்கு வந்திருக்கும் செய்தியைக் குற்றமாக கூற வருகின்றனர்.]

சமணர்கள் : கேட்டுமுட்டு.... கேட்டுமுட்டு.... தென்னவனே பெரும்பழி நேர்ந்து விட்டது.

மன்னன் : நீங்கள் அனைவரும் இங்கு வருவதற்கு காரணம் என்ன?! ஏன் இத்தனை பதற்றமாக இருக்கிறீர்கள்?!

சமணன் - 1: பாண்டிய மன்னா! உனது மதுரை மாநகரில் சைவ வேதியர்கள் வந்து தங்கியுள்ளனர்; கண்டுமுட்டு.... கண்டுமுட்டு....

மன்னன் : அடிகளே! இதனைக் கேட்டதால் எனக்கும் கேட்டுமுட்டு; கண்நுதலானுடைய அடியார்கள் இன்று ஆலவாயில் அணைந்த காரணம் என்ன அவர்கள் யார்?!

சமணன் - 2: யாரோ சடையனிடம் ஞானம் பெற்றவராம்; திருஞானசம்பந்தராம். எங்களை வாதில் வெல்லவும், உன்னுடைய சமயத்தை நிந்தனை செய்யவும் தம் கூட்டத்தோடு இங்கு வந்துள்ளாராம்.

மன்னன் : அடிகளே, நாம் இதற்கு என்ன செய்யலாம், நீங்களே ஒரு வழி கூறுங்கள்?

சமணன் - 1: சடையனிடம் ஞானம் பெற்ற அச்சிறுவன் தங்கியிருக்கும் மடத்தில் நம்முடைய மந்திரத் தொழிலால் நெருப்பை விளைவித்தால் நம்மைக் கண்டு அஞ்சி இந்நகரை விட்டே சென்று விடுவார்கள்.

மன்னன் : அடிகளே! செய்யத்தக்கது இதுவேயானால் அவ்வாறே செய்க.

திருஞானசம்பந்தர் தங்கியிருக்கும் மடத்திற்கு சமணர்கள் தீ வைத்தல் 
காட்சி - 1.

இடம் : திருஞானசம்பந்தர் தங்கியிருக்கும் திருமடம்.

[திருஞானசம்பந்தர் தம் அடியார் பெருமக்களுடன் தங்கி இருக்கும் திருமடத்திற்கு, சமணர்கள் தம் வஞ்சகத்தால் இரவில் தீ வைக்கின்றனர்.]

சமணன் - 1: அத்தி.... நாத்தி.... இக்துப் பிக்இப்.... இக்துப் பிக்இப்.... அத்தி.... நாத்தி.... இக்துப் பிக்இப்.... இக்துப் பிக்இப்.... என்ன இது.... நம் மந்திரத்தால் நம்மால் நெருப்பை உண்டாக்க முடியவில்லையே.!?!!

சமணன் - 2: பாண்டிய மன்னன் இதனை அறிந்தால் நமது நெறியின்பால் மனம் வைக்க மாட்டான்; நம்மையும் அழித்துவிடுவான்.

சமணன் - 1: அப்படியானால் என்ன செய்வது?!

சமணன் - 2: மந்திரத்தால் ஆகாதெனினும், நம் தந்திரத்தால் இதனை நிறைவேற்றியே ஆகவேண்டும்.

சமணன் - 1: தந்திரத்தாலா.... நீ என்ன சொல்கின்றாய்!?

சமணன் - 2: உமக்கு ஒன்றும் புரியவில்லையா?! நெருப்பைக் கொண்டு வா, நாமே சென்று அந்த மடத்திற்கு தீயை வைத்துவிட்டு வந்துவிடுவோம்.

சமணன் - 1: ஆகா என்ன அருமையான யோசனை; வா அப்படியே செய்து விடுவோம்; இக்துப் பிக்இப்.... இக்துப் பிக்இப்.... அத்தி.... நாத்தி.... அருகா....

[திருஞானசம்பந்தர் தம் அடியார்களுடன் தங்கியிருக்கும் திருமடத்திற்கு சமணர்கள் வஞ்சகத்தால் தீ வைக்கிறார்கள்.]

சிவனடியார் : [அலறியவாறு மிகவும் பதற்றத்துடன்] வையகம் உய்ய வந்த மறைக்குல வள்ளலே, நம்மை அழிக்கும் பொருட்டு வஞ்சக மனமுடைய சமணர்கள் நம் திருமடத்திற்கு தீ வைத்து விட்டனர்.

சம்பந்தர் : சிவ! சிவ! சிவனடியார்கள் தங்கும் திருமடத்திற்கு தீ வைப்பதா?! பாவிகள்! இது என் பொருட்டாயினும், இறைவனுடைய அடியார்களுக்கு அது பொருந்துமோ?! அரசன் காவல் புரியும் நீதிமுறை வழுவி விட்டது.

[பிள்ளையார் “செய்யனே திருவாலவா யையனே...” என்ற பதிகம் பாடுகின்றார். ‘பையவே செல்க’ என்பதன் காரணம்]

செய்ய னேதிரு ஆலவாய் மேவிய
ஐய னேயஞ்ச லென்றருள் செய்யெனைப்
பொய்ய ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
பைய வேசென்று பாண்டியற் காகவே

சமணர்கள் பிள்ளையார் தங்கியிருந்த திருமடத்திற்கு தீ வைத்த செய்தி கேட்டு மங்கையர்க்கரசியார் மனம் வேதனையுற்று புலம்புதல்
காட்சி - 5.

இடம் : அரண்மனை அந்தப்புரம்.

பின்குரல் : [அரசி மங்கையர்க்கரசியார் அந்தப்புரத்தில் அமர்ந்து, திருஞானசம்பந்தருக்கும், அவருடன் வந்திருந்த அடியார் பெருமக்களுக்கும் இந்நாட்டில் நேர்ந்துவிட்ட தீங்கினையும், அதற்கு காரணம் நானே என்றும் தாங்கொண்ணா வேதனையில் புலம்பிக்கொண்டிருக்கின்றார்.]

மங்கையர்க்கரசியார் : சிவ! சிவ! பிள்ளையார் இருந்த மடத்திற்கு வஞ்சக அமணர்கள் நெருப்பு வைத்து விட்டனர், பாவிகள்! ஆலவாய் அண்ணல் திருவருளால் பிள்ளையாருக்கும் அடியவர்களுக்கும் தீங்கு நேரவில்லையெனினும், பிள்ளையாரை இத்தீயவர் நாட்டிலே வரும்படி அழைத்த நாம் உயிர் துறந்து விடுவதே இதற்குத் தீர்வாகும்.

மெய்க்காப்பாளர் : பாண்டிமா தேவியாரே! அரசருக்கு வெப்பு நோய் ஏற்பட்டு, மிகவும் துயருறுகின்றார்.

மங்கையர்க்கரசியார் : சிவ! சிவ! சுவாமித் தங்களுக்கு என்னவாயிற்று?! செந்தமிழ்ச் சொக்கநாதா... என் நாதனையும், இந்நாட்டையும் காத்தருள் புரிவாயாக

வெப்பு நோயால் பாண்டிய மன்னன் படுக்கையில் கிடந்து வேதனை படுதல்
காட்சி - 6.

இடம் : அரண்மனை.

பின்குரல் : [வெப்பு நோயுற்ற பாண்டிய மன்னன் படுக்கையில் கிடந்து சொல்லொண்ணா வேதனையில், தான் அரசன் என்பதையும் மறந்து துடி துடித்து கதறிகொண்டிருக்கின்றான்.]

சமணன் - 1: [மன்னனின் வெப்பு நோயை நீக்கும் பொடுட்டு, மயிற்பீலியால் மன்னனின் உடலில் தடவிக்கொண்டே, மெதுவாக அவர்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்] நேற்றிரவில் நாம் செய்த செயலினால் வந்த விளைவுதானே இது!?!

சமணன் - 2: வெப்பினால் மயிற்பீலியே கருகிவிட்டதே! நீரை ஊற்று, நீரை ஊற்று.

சமணன் - 1: [நீரை மயிற்பீலியிலும், மன்னன் உடலிலும் தெளித்துக் கொண்டே] இல்லை... இல்லை... வெப்பினால் மயிற்பீலி கருகவில்லை; இந்த மயிற்பீலி மிகவும் மென்மையாக இருக்கின்றது அதனால்தான்.

சமணன் - 2: ஓகோ... அப்படியா...!?! அதானே பார்த்தேன்.

மன்னன் : என் உடலில் பெருகி எரியும் வெப்பு நோய்க்கு நெய் சேர்த்தாற்போல நீரைத் தெளிக்கின்றீர்களே! நீங்கள் ஒருவரும் என் கண்முன்னே நில்லாது அகன்று போங்கள்.

மங்கையர்க்கரசியார் : சுவாமி, இச்சமணர்கள் செய்த தீய செயலினாலேயே, இவ்வெப்பு நோய் தங்களைப் பொருந்தியுள்ளது. இதை இவர்கள் தீர்க்க முற்பட்டால் அது மேலும் பெருகுமேயன்றி, குறையது. இதற்கு தீர்வு செய்ய வல்லது ஆளுடைய பிள்ளையாரது திருவருளேயாகும்.

மன்னன் : தேவி, இவர்களது செய்கையெல்லாம் என்னைத் துன்புறுத்தும் இந்நோய்க்கும் அதனைப் பெருக்குவதற்கும் காரணமாய் இருந்தன. திருஞானசம்பந்தர் அருளினாலே இந்நோய் நீங்க வல்லது என்றால், அவரை உடனே அழையுங்கள். இந்நோயினை தீர்த்து வெற்றி கொள்ளும் நெறியின்கண் நான் சேர்வேன்.

பின்குரல் : [அரசியாரின் அழைப்பின்பேரில், மன்னனின் நெப்பு நோயைத் தீர்க்கும் பொருட்டு, திருஞானசம்பந்தர் அங்கே எழுந்தருளுகின்றார்.]

மன்னன் : [திருஞானசம்பந்தர் எழுந்தருள மன்னன் அவரை வணங்கி, தமது முடியின் பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஆசனத்தில் அமரும்படி செய்கையால் காட்டுகின்றார்.] தங்களால் வாழ்வு பொருந்துதலைப் பெற்ற தங்கள் பதி யாது?

திருஞானசம்பந்தர் : திருக்கழுமலமே நாம் கருதும் ஊராகும். [பிள்ளையார் “பிரமனூர்...” எனத் தொடங்கும் பதிகம் பாடுகின்றார்.]

பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குருப் பெருநீர்த் தோணி 
புரமன்னு பூந்தராய் பொன்னஞ் சிரபுரம் புறவஞ் சண்பை 
அரன்மன்னு தண்காழி கொச்சை வயமுள்ளிட் டங்காதி யாய
பரமனூர் பன்னிரண்டாய் நின்றதிருக் கழுமலம் நாம்பரவு மூரே

[சமணர்கள் திருஞானசம்பந்தரைச் சூழ்ந்து மிகுந்த கோபத்துடன் வாது செய்ய அழைக்கின்றனர்.]

சமணன் - 1: அத்தி... நாத்தி... அருகனே கடவுள்; எம்மோடு வாது செய்யத் தயாரா? எம்முடைய தத்துவ ஞானமே உயர்ந்தது.

திருஞானசம்பந்தர் : உங்கள் சமய நூல்களின் பொருளையும் அதன் முடிந்த முடிபையும் உள்ளபடி பேசுங்கள்.

மங்கையர்க்கரசியார் : சுவாமி! திருஞானசம்பந்தப் பெருமான் சிறுபிள்ளை, இச்சமணர்கள் எண்ணில்லாதவர்கள்; அரசே, தங்களது வெப்பு நோயை, வல்லவராகிய பிள்ளையார் தீரும் வண்ணம் அருள் செய்வார்; அதன்பின் இச்சமணர்கள் வாது செய்து வல்லவரானால் பேசட்டும்.

மன்னன் : தேவி, நீ வருந்த வேண்டாம்; அருகர்களாகிய நீங்களும், சிவபெருமானுடைய அடியவராகிய இவரும் எம்மைக் கொண்ட இவ்வெப்பு நோயை ஒழியச் செய்து தத்தமது தெய்வங்களின் உண்மைத் தன்மையை எனக்கு விளக்குங்கள்.

திருஞானசம்பந்தர்: அரசியாரே! இக்கொடிய அமணர் பெருங்கூட்டம் முன் பால்மணம் மாறாப் பாலகன் என்று என்னைக் கண்டு நீ வருந்தவேண்டாம். ஆலவாய் அண்ணல் என்னோடு இருப்பதால் நாம் உஆர்க்கும் எளியோம அல்லோம்.

[திருஞானசம்பந்தர் “மானின் நேர்விழி...” பதிகம் பாடுகின்றார்.]

மானின்நேர்விழி மாதராய்வழு திக்குமாபெருந் தேவிகேள்
பானல்வாயொரு பாலனீங்கிவன் என்றுநீபரி வெய்திடேல்
ஆனைமாமலை ஆதியாய இடங்களிற்பல அல்லல்சேர்
ஈனர்கட்கெளி யேனலேன்திரு ஆலவாயரன் நிற்கவே

மன்னன் : இந்நோயை நீங்கள் இருவீரும் தனித்தனியே முயன்று தீர்க்க வேண்டும். இந்நோயைத் தீர்த்தவரே வாதில் வெற்றி பெற்றவர்.

சமணன் - 2: மாமன்னா, நாங்கள் உமது உடலின் இடப்பாகத்தின் வெப்பு நோயை முதலில் மந்திரித்து, எம் தெய்வம் அருகனுடைய அருளினாலேயே தீர்ப்போம்.

[சமணர்கள் அத்தி, நாத்தி, அத்தி, நாத்தி என்று கூறிக்கொண்டே மயிற்பீலியினால் மன்னனின் இடப்பாகத்தில் தடவியவாறு வெப்பு நோயை தீர்க்க முயற்சிக்கிறார்கள்; மன்னனுக்கு வெப்பு மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது.]

மன்னன் : [கோபங்கொண்டு, சமணர்களைப் பார்த்து] போதும் நிறுத்துங்கள்... உங்கள் செய்கையினால் வெப்பு நோய் அதிகரிக்கின்றதே தவிர குறைந்தபாடில்லை. [மன்னன் திருஞானசம்பந்தரைப் பார்த்து, தழுதழுத்த குரலில்] நீங்கள் என் வேதனையைப் போக்குங்கள்; நீங்கள் என் வேதனையைப் போக்குங்கள்.

திருஞானசம்பந்தர் : உம்முடைய வலப்பாகத்து வெப்பு நோயினை திருஆலவாய் இறைவனது திருநீறே நிலைபெற்ற மந்திரமும், மருந்துமாகித் தீர்க்கும்.

[திருஞானசம்பந்தர் “மந்திரமாவது நீறு...” திருப்பதிகம் பாடி திருநீற்றினை அரசனது வலப் பாகத்து உடலில் பூசுகின்றார்.]

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு 
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு 
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு 
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே

மன்னன் : [பெரும் மகிழ்ச்சியுடன் பிள்ளையாரைப் பார்த்து] பெருமானே... பெருமானே... எனது வலப்பக்கத்தின் வெப்புநோய் தீர்ந்து உடல் குளிர்ந்து விட்டது; என்ன அதிசயம்; நரகம் ஒரு பக்கமும், வீட்டின்பம் மற்றொரு பக்கமும்; கொடிய நஞ்சின் நுகர்ச்சி ஒரு பக்கமும், சுவை அமுதின் நுகர்ச்சி மற்றொரு பக்கமும் இருப்பது போல் உள்ளதே. என் உடல் ஒன்றின் இடமாகவே இருவினைகளின் இயல்பையும் அடையப்பெற்றேன். கொடிய தொழிலுடைய சமணர்களே, நீங்கள் தோற்றுவிட்டீர்கள்; என் கண்முன்னே நிற்காதீர்கள்; இங்கிருந்து அகன்று விடுங்கள். என்னை உய்யும்படி ஆட்கொண்டருளிய மறைக்குல வள்ளலாரே..., இவ்வெப்பு நோய் முழுவது நீங்கும்படி தாங்கள் அருள்புரியுங்கள்.

[திருஞானசம்பந்தர் மன்னனின் இடப்பக்க வெப்பு நோயினையும் நீக்கியருளுகின்றார்.]

ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப் 
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன் 
தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச் 
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே

மன்னன் : [தன் உடல் நோய் முற்றிலும் நீங்கப்பெற்ற மன்னன், பிள்ளையாரை வணங்கியபடி உணர்ச்சி வசப்பட்டு பேசுதல்] ஆகா அற்புதம்... அற்புதம்... பல நாள் பட்டினி கிடந்தவனுக்கு பால் சோறு புகட்டுவதுபோல் உள்ளது தங்களின் கருணை.

குலச்சிறையார் : [சம்பந்தப் பெருமானைப் பார்த்து] பெருமானே, நாங்கள் பெருமை பெற்றோம்.

மங்கையர்க்கரசியார் : இன்றைய நாளே உறுதி பெறப் பிறந்தவர்கள் ஆயினோம்; எங்கள் மன்னர் பிறவியில் வராத மேன்மையும் அடைந்தனர்.

மன்னர் : மானமொன்றில்லா சமணர்கள் முன்னே வலிய நோய் நீங்கும்படி தங்கள் திருவடிகளைச் சேர்ந்து நான் உய்ந்தேன்.

திருஞானசம்பந்தர் : உங்கள் சமய வாய்மையை நீங்கள் இப்பொழுது பேசுங்கள்.

சமணர்கள் : [தங்களுக்குள் பேசிகொள்கின்றார்கள்] இவரை தர்க்கத்தால் வெள்ள இயலாது; அனல் மற்றும் புனல் வாதங்களால் வெல்வோம்.

சமணன் - 1: உண்மை கொள்கைகள் உள்ளபடியினை கண்முன்னே நிறுத்திக் காட்டுதல் இன்றியமையாதது.

மன்னர் : என்னை பற்றிய வெப்பு நோயைத் தீர்க்க இயலாது தோல்வியுற்றீர்கள்; இனி உமக்கு என்ன வாது வேண்டி இருக்கிறது!?

சமணன் - 1: என்ன வாது என்றால், உண்மைப் பொருளை ஏட்டினில் எழுதி நெருப்பினில் இட்டால், அது வேகாது இருப்பதுவே வெற்றி; இதுவே அனல் வாதம்.

திருஞானசம்பந்தர் : நீர் சொல்லிய வழி நன்று; வேந்தன் முன்பு நீங்கள் கூறியவாறே வாதம் செய்து முடிபு கொள்ள முன்வாருங்கள்.

சமணர்கள் : [எல்லோரும் ஒரே குரலாக] நாங்கள் தயார்.

மன்னர் : காவலர்களே! அரச சபையின் முன்னே வெப்புடைய தழலை அமையுங்கள்.

காவலர்கள் : [ஒரே குரலாக] ஆகட்டும் அரசே!

Related Content

63 Nayanmar Drama - மங்கையர்க்கரசியார் - நின்றசீர் நெடுமாறர்

63 Nayanmar Drama-thirugnanasambandhar drama - Tamil video

63 Nayanmar Drama-ஆண்டஅரசு - திருநாவுக்கரசர் (அப்பர்) நாடகம்

Thiruvilaiyadal drama -Tamil devotional video - Samanarai k

The History of Muruga Nayanar