திருச்சிற்றம்பலம் பேயாய நற்கணத்தார்காரைக்கால் அம்மையார் புராணம்பெறினும் பிறிதியாதும் வேண்டேம் எமக்கீது காட்சி 1 பின்குரல் : மானமிகும் அறநெறியின் வழிநின்று, வாய்மை யினின்றும் குறைவு படாத சிறப்பினை உடைய பெரு வணிகர்களின் குடிகள் நெருங்கி விளங்கும் பதி,, வளைவுகளையுடைய சங்குகளைக் கடலலைகள் சுமந்து எடுத்துக் கொண்டுவர, அவை மேல் ஏறி அடுத்திருக்கும் கழிக் கானல்களில் உலவுகின்ற வளமிக்க அழகு பொருந்திய காரைக்கால் ஆகும்.அப்பதியிலே வணிகர் குலத்தலைவராகிய தனதத்தனாரின் தவத்தால், அவரிடத்தில் திருமகள் தோன்றினாள் எனக் கருதுமாறு, மேன்மேலும் மிகுகின்ற பேரழகு பொருந்திய புனிதவதியார் பிறந்தருளினார். புனிதவதியார் தளர்நடை கற்கும் பருவத்தில், அரவினை அணிந்த சிவபெருமான் திருவடிகளில் அடிமை செய்துவரும் தன்மை பெறுதற்கு அடங்காத பேரன்பு மேலோங்க வரும் மொழிகளை பயின்று வருவாராயினார்.தனதத்தனாரும் அவர் தம் மனைவியாரும் புனிதவதியாரின் சிவபக்தியை கண்டு வியக்கின்றனர். இடம் : தனதத்தனார் இல்லம் (புனிதவதியார் ஐந்தெழுத்தை கணித்துக் கொண்டு இருக்கிறார்) பிறந்து மொழிபயின்ற பின்னெலாம் காதல் சிறந்து உன் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும் மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே எஞ்ஞான்று தீர்ப்ப திடர் தனதத்தனார் : நம் செல்வ மகள் புனிதவதியின் சிவபக்தியை பார்த்தாயா? நித்தமும் சிவாலயம் செல்வதை தன் கடமையாக கொண்டிருக்கிறாள். எந்நேரமும் சிவ நாமத்தை கூறியவாறும், சிவன் கழலை சிந்தித்தவாறுமே இருக்கிறாள். இவளை இவ்வாறு காணுதல் மனதிற்கு எத்தனை நிறைவாக இருக்கின்றது. மனைவியார் : ஆமாம் சுவாமி, ஆனேற்றை ஊர்தியாக உடைய, இறைவரிடத்தில் மிகுந்த அன்புடையளாய் திகழ்கிறாள் நம் மகள்; மற்ற குழந்தைகளுடன் விளையாடும் போதும், சிவபெருமானின் பெருமைகளைக் கூறியும், மண்ணில் சிவலிங்கம் பிடித்தும் விளையாடுகிறாள். (புனிதவதியார் ஒடி வருகிறார் ) புனிதவதியார் : அம்மா! அப்பா! நான் சிவாலயம் சென்று நம் இறைவனை வணங்கி வருகிறேன். தனதத்தனார் : சென்று வா மகளே! பிறை சூடிய இறைவனின் திருவருள் உனக்கு என்றும் துணையாக இருக்கும். தேவி, இத்தகு சிறப்பு வாய்ந்த ஞான குழந்தையை நமக்கு மகளாக அளித்த இறைவனுக்கு நாம் என்ன கைம்மாறு செய்யமுடியும்? சிவ சிவ மனைவியார்: உண்மைதான் சுவாமி. புனிதவதியை மகளாகப் பெறுவதற்கு நாம் பெரும் தவம் செய்திருக்கிறோம் காட்சி 2 பின்குரல் : சிறுமியருடன் விளையாடும் விளையாட்டுக்களிலெல்லாம், வளரும் பிறைமதியைச் சூடிய சடையினை உடைய சிவபெருமானின் திருவார்த்தை களையே வாயில் வருவனவாகப் பயின்றும், அடியவர்கள் வந்தால், அவர்களைத் தொழுதும் , காண்போர் அனைவரும் போற்றும்படி வளர்ந்து திருமண பருவத்தினை அடைந்தார்.சிறப்புமிக்க கடற்கரைப் பட்டினமாகிய நாகப் பட்டினத்தில், நிதிபதி எனும் பெயருடன் உலகில் பெருமை பெறும் புகழுடைய வணிகர் , தான் பெற்ற பரமதத்தன் எனும் குலமகனுக்கு ஒத்த குலமரபில் பிறந்த இவ்வம்மையாரை, மணம் நேரும் பொருட்டு மாடங்கள் நிறைந்த காரைக்கால் எனும் வளநகரில் அறிவுடைப் பெருமக்களை வரவிடுததார். நிதிபதியின் மகனான பரமதத்தனுக்கு, நம் முன்னோரின் மரபினுக்குப் பொருந்தும் முறையால் மணம் செய்து தருக பெரியோர்கள் கேட்க, தன்தத்தனாரும் மகிழ்ந்து இசைந்து திருமணம் நிச்சயித்தனர். மணவினை ஆற்றுதற்குரிய முறைமையினைக் கூறும் நூல்களில் கூறியவாறே, மணத்தின் முன் செயத்தகும் செயல்களை யெல்லாம் செய்து முடித்து, தளிர் போன்ற திருவடிகளையும், மென்மையான புன்முறுவலையும், மயில்போன்ற சாயலையும் உடைய புனிதவதியாரை, மாலையணிந்த காளை போன்ற பரமதத்தனுக்கு மகிழ்ச்சி பொருந்திய சுற்றத்தார் போற்றத் திருமணம் செய்வித்தார்கள் (திருமணம் நடைபெறுகின்றது.மணமக்களை பெரியோர்கள் ஆசிர்வதிகின்றனர்) தனதத்தன் : நீங்கள் இருவரும் எல்லா வளங்களையும் பெற்று சிறப்போடு வாழ்வீர்களாக! (நிதிபதியிடம்) இவர்களுக்காகத்தான் காரைக்கால் திருநகரிலேயே ஒரு அழகிய மாளிகை அமைத்துள்ளேன். இவர்கள் அம்மாளிகையில் இருந்து இல்லற வாழ்வை செம்மையாக நடத்த வேண்டுமென்பது என்னுடைய பேர் விருப்பம். நிதிபதி : அடேயப்பா! புனிதவதியின் மீதுதான் தங்களுக்கு எவ்வளவு அன்பு? புனிதவதியை எங்கள் மருமகளாக நினைக்க வில்லை.தங்கள் அருமை மகளை, எங்கள் மகளாகவே காண்கிறோம் தனதத்தன் மனைவி : எங்கள் உயிரினும் இனிய மகள், தவப் புதல்வி எங்கள் அருகிலேயே இருப்பதை விட எங்களுக்கு ஆனந்தம் வேறில்லை. நிதிபதி மனைவி : அப்படியே ஆகட்டுமே. நாகையும் காரைக்காலும் அடுத்தடுத்த ஊர்கள் தானே! மணமக்கள் இக்காரைக்காலிலேயே இருக்கட்டுமே. பரமதத்தன் : தங்கள் விருப்பப்படியே செய்கிறோம் தனதத்தன் : மிக்க மகிழ்ச்சி! காட்சி 3 பின்குரல் : தனதத்தன் தங்கள் குடிக்குப் புனிதவதியார் ஒரே மகளாராக இருக்குங் காரணத்தால், தம்மைப் பிரிந்து ஒலிமிகுந்த கடல்சூழ்ந்த நாகப்பட்டினத்திற்கு அவர் போகாமல், கணவனுடனே காரைக்காலிலேயே இருந்து இல்லறம் நடத்த, தம் இல்லத்தின் அருகே அழகிய மாளிகை ஒன்றை அமைத்தான் தன் மகளை மணம் செய்து கொடுத்ததனால் மகிழ்ச்சி மீதூர இருக்கும் தனதத்தன், தம்பால் உள்ள அளவற்ற செல்வங்களைக் கொடுக்க, ஏற்ற ஒப்பற்ற பெருஞ்சிறப்பினை உடைய நிதிபதியின் மகனாய பரமதத்தனும், மிக்க பெருவிருப்பினால் அம் மனையில் தங்கித், தம்குல மரபிற்கேற்ப வாணிகம் புரிந்து, அத் துறையில் மேன்மை பெற்று விளங்கினான்.அவ்விடத்து அவன்தன் இல்வாழ்க்கைக்கு அரிய துணையாய் விளங்குகின்ற அழகிய கூந்தலையுடைய புனிதவதியார் தாமும், விடையேறும் வித்தகரின் திருவடிக்கீழ் மீதூர்ந்த அன்பு பொருந்திய பெருவிருப்பு இடையறாது நாளும் பெருக, மனையறத்தின் மாண்பு வழுவாது அதனைச் செய்து வருவார் ஆயினார். எவ்வுயிர்களும் விரும்புதற்குரிய சிவ பெருமானின் அடியவர்கள் தம் இல்லத்திற்கு வரின், அவர்களுக்கு நல்ல திருவமுதினை அளித்தும், செம்பொன்னும், நவமணிகளும், வளமான சிறந்த ஆடைகளும் முதலான பொருள்களைத் தகுதி அறிந்து தம் அன்பினால் தொடர்ந்து அவ்வடியவருக்குக் கொடுத்தும், தேவர்க்குத் தலைவனாகிய சிவபெருமான் திருவடியின் கீழ் வைத்த உணர்வு மேன்மேலும் பெருகுமாறு ஒழுகிவரும் நாள்களில், ஒரு நாள் பரமதத்தனிடம், அவனைக் காண வந்த சிலர் இரு மாங்கனிகளைக் கொடுக்க, அவற்றைப் பெற்றுக் கொண்ட அவன், அவர் விரும்பும் குறைகளை நிறைவேற்றிக் கொடுத்துப் பின், `இம்மாங்கனிகள் இரண்டையும் இல்லத்தில் கொடுத்து விடுமாறு பணியாளிடம் கூறினான். இடம் : புனித வதியார் இல்லம். பணியாள் : அம்மா! அம்மா! புனிதவதியார் : யாரது…? இதோ வருகிறேன் பணியாள் : அம்மா!, இந்த இரண்டு மாங்கனிகளையும் ஐயா தங்களிடம் கொடுத்து வருமாறு கூறினார் புனிதவதியார் : அப்படியா! சரி கொடுங்கள். பணியாள்: வருகிறேன் அம்மா! புனிதவதியார்: ஆகட்டும். பின்குரல் : கணவன் அனுப்பிய இரு மாங்கனி களையும், கையில் பெற்றுக் கொண்ட புனிதவதியார், தன் கணவருக்கு கொடுக்க வேண்டுமென்று ஓரிடத்தில் வைக்கின்றார்.இந்நிலையில் சிவ பெருமானின் அடியவர் ஒருவர் மிகுந்த பசியோடு அம்மையார் திரு மனையுள் புகுந்தார் சிவனடியார் : சிவாயநம! சிவாயநம! சிவாயநம! ஹர ஹர மகாதேவா! சம்போ மகாதேவா! சிவாயநம! சிவாயநம! சிவாயநம! (புனிதவதியார் :ஓடோடி வருகிறார்) புனிதவதியார் : வர வேண்டும் அடியவரே!வர வேண்டும்! தங்களை வணங்குகிறேன். எங்கள் இல்லத்திற்கு தாங்கள் எழுந்தருளியது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. சிவனடியார் : தாயே! அடியேன் பல தலங்களுக்கு சென்று கங்கையை சடையில் சூடிய எம் தலைவராம் சிவபெருமானை வணங்கி வருகிறேன். வரும் வழியில், தாங்கள் சிவனடியார்களுக்கு திருஅமுது அளித்து போற்றும் பண்பினை அறிந்து அடியேனும் இங்கு வந்தேன். அடியேனுக்கு மிகவும் பசியாக இருக்கிறது. புனிதவதியார் :சிவ சிவ! ஆனேற்றையுடைய எம் இறைவனின் அடியவரே தேடிப் பெறுதற்கரிய விருந்தாக இங்கு வருவாரானால், இதன் மேலும் பெறத்தக்கதொரு பேறு இல்லை. அடியவரே, தாங்கள் இங்கே எழுந்தருளி திருஅமுது செய்ய இசைந்தது அடியேன் செய்த தவம். இவ்வாசனத்தில் அமர்ந்தருளுங்கள். (புனிதவதியார் மனையுள் விரைந்து செல்கிறார்) புனிதவதியார் : சிவ சிவ ! தற்சமயம் அடியவர் திருவமுது செய்வதற்குச் சோறு மட்டுமே உள்ளது.கறியமுது இன்னும் செய்யவில்லையே!அதனை செய்ய முற்பட்டால், பசியுடன் இருக்கும் அடியவர் திருஅமுது செய்ய காலம் தாழ்த்த நேரிடும்.சிவ சிவ ! ம்ம்ம்ம். . . நம் கணவர் அளித்த இரண்டு மாங்கனிகளில், ஒன்றைக் கொண்டு, திருஅமுது செய்துவிடலாம். பின்குரல் : வேதங்கள் மொழிந்தபிரான் மெய்யடியாரின் நிலையினைக் கண்டு, `சிவபெருமானின் அடியவர் தம் பசியைத் தீர்ப்பேன்` எனச் சென்று, அவர்தம் திருவடி களை விளக்க நீரை முன்னர்க் கொடுத்து, உண்கலமாகிய இலையை இட்டு, தம் பிறவியைத் தீர்க்கும் நல்விருந்தாகக் கொண்டு, இனிய உணவை ஊட்டுவாராகி. ந்றுமணம் பொருந்திய தாமரை மீது இருக்கும் திருமகளை ஒத்த புனிதவதியார், அது பொழுது கறியமுது உதவாத நிலையில் திருவமுது மட்டும் செய்யப்பட்டிருக்க விடையவன்தன் அடியாரேபெறலரிய விருந்தானால் பேறிதன்மேல் இல்லை, எனும் கருத்தினராய், அவ்வடியவர் அமுது செய்வதற்குரிய செயலை ஏற்பாராய் கணவனால் இல்லத்தில் வைக்கவெனக் கொடுக்கப் பட்டுத் தம்மிடத்திருந்த நல்ல மணம் பொருந்திய மாங்கனிகள் இரண்டில் ஒன்றைக் கொண்டு, மிக விரைந்து வந்து இலையில் படைத்து, மகிழ்ச்சி மீதூர, துன்பத்தைத் துடைத்தருளும் அவ் வடியவர் தமக்கு அமுதுசெய்வித்தார் (அடியவர் திருஅமுது செய்கிறார்) சிவனடியார் : (சாப்பிட்டுக்கொண்டே) இனிமையான உணவு அம்மா! புனிதவதியார் : சிவ சிவ! சிவனடியார் : (கைக்கழுவிய பிறகு) அம்மையே, மிகுந்த பசியோடு இருந்த எனக்குச் சுவைமிக்க இனிய திருஅமுதினை அளித்தீர்கள். புனிதவதியார் : சிவ சிவ! கறைக்கண்டன் அடியவர்களுக்கு திருஅமுது செய்வித்தல் தானே இம்மண்ணில் பிறந்தோர் பெறும் பயன்! அப்பயனை இன்று அடியேனுக்கு தாங்கள் அருளிச் செய்தீர்கள் சிவனடியார் : (திருநீறு கொடுத்துக்கொண்டு) சிவபெருமான் திருவருள் தங்களுக்கு நிறைந்து இருக்கட்டும்! சிவாய நம! புனிதவதியார் : சிவ சிவ! காட்சி 4 பின்குரல் : மூப்பினால் வருகின்ற தளர்ச்சியினாலும், முதிர்ந்து, விரைந்து, உணவுகொள்ளும் விருப்பத்தை எழுவிக்கும் வயிற்றுத் தீயாய பசியின் நிலையினாலும், அயர்ச்சியுற்று வந்த திருத்தொண்டர், வாய்ப்பாக அமைந்ததும் மென்மையானதும், சுவை பொருந்தியதுமான அம்மையார் அளித்த உணவினை மாங்கனியோடு இனிது உண்டு, மலர்கள் அணிந்த மென்மையான கூந்தலையுடைய அம்மையாரது அன்பு மிக்க விருதோம்பலைப் பாராட்டிப் விடை பெற்றுச் சென்றார்.அடியவர் சென்ற பின்பு , நண்பகல் வேளையில் புனிதவதியாரின் கணவனார் பரமதத்தன் மனைக்கு வருகிறார். இடம் : புனித வதியார் இல்லம். பரமதத்தன் : புனிதவதி! புனிதவதி!! புனிதவதியார் : வாருங்கள் சுவாமி. பரமதத்தன் : புனிதவதி! மிகுந்த பசியோடு வந்துள்ளேன். புனிதவதியார் : இதோ இப்பொழுதே உணவு பரிமாறுகின்றேன்.தாங்கள் இவ்வாசனத்தில் அமருங்கள். (புனிதவதியார் திருஅமுது பரிமாறுகிறார். இனிய உணவைக் கறிவகைகளுடன் வைக்கும் முறையில் வைத்ததன் பின், சிறப்புப் பொருந்திய கணவன் தான் முன்பு மனையிடத்து அனுப்பிவைத்த நல்ல சுவைமிக்க மாங்கனிகளில் எஞ்சியிருந்த ஒன்றை, கொண்டு வந்து இலையில் இட்டனர்) பரமதத்தன் : ஆகா! புனிதவதி உன்னுடைய அருமையான சமையலை விரும்பி உண்ணவும் நீ அன்போடு பரிமாறுவதைக் காணவும் எவ்வளவு ஆர்வத்தோடு வருகின்றேன் தெரியுமா? ம்ம்ம்ம் கறிவகைகள் எல்லாம் நல்ல சுவை! ஆகா! இந்த மாங்கனி மிகவும் இனிய சுவை உடையதாய் உள்ளது. புனிதவதியார் : சுவாமி! இது தாங்கள் கொடுத்ததாக பணியாள் கொடுத்த மாங்கனி தான்! பரமதத்தன் : அப்படியா! ஆகா என்ன அருமையான பழம்! ஆமாம்! அவன் இரண்டு பழங்கள் கொடுத்து இருப்பானே! மற்றொன்றையும் எடுத்து வா! புனிதவதியார் : ம்..ம்.. இதோ எடுத்து வருகிறேன் சுவாமி! பின்குரல் : கணவனார் கேட்க , அப்பழத்தைத் தாம் கொண்டு வரச் செல்வார் போல அவ்விடத்தினின்று புனிதவதியார் நீங்கினார் புனிதவதியார் : இறைவா, எம்பெருமானே, கண்ணுதல் கடவுளே! நான் என் செய்வேன்? மற்றொரு மாங்கனியை உன் அடியவருக்காக கொடுத்து விட்டேன். இப்பொழுது, மற்றொரு கனியை என் கணவர் எடுத்து வருமாறு பணித்துள்ளார். அம்மை அப்பா! கயிலை நாதா! அடியேனுக்கு அருள்வீராக! பின்குரல் :சிவபெருமான் திருவடிகளைத் தம் மனத்தில் பொருந்த வைத்து, திருவருள் உணர்வே உணர்வாகக் கொண்டு உணரும் அளவில், அப்பெருமானின் திருவருளால், தாழ்ந்த கூந்தலையுடைய, அம்மையாரது திருக்கையினிடத்து மிக இனிமை பொருந்திய தொரு மாங்கனி வந்து தோன்றியது. புனிதவதியார் : எம்பெருமானே உன் கருணையே கருணை! சிவ சிவ பின்குரல் : புனிதவதியார் இறைவன் அளித்த மாங்கனியை , மிக மகிழ்வுடன் கணவருக்கு அளிக்கிறார். பரமதத்தன் : ஆகா! என்ன ஒரு சுவை! இது போன்ற ஒரு சுவையை இதுவரை உண்ட எந்த ஒரு கனியிலும் கண்டதில்லை. புனிதவதி!,இது முன்பு நான் தந்த மாங்கனிகளில் ஒன்று அன்று; இது மூவுலகிலும் பெறுதற்கரிய கனியாகும், இதனை நீ எங்கே பெற்றாய்? புனிதவதியார் (தமக்குள்) : இறைவா! நீ எனக்குச் செய்த பேரருள் திறனைப் பிறரிடத்துச் சொல்லத் தக்கதன்று. ஆனால் அதே நேரத்தில் நிலை பெற்றிருக்கும் கற்பு மேம்பாட்டால், கணவன் கேட்ட மெய்ம்மையான வினாவிற்கு உரிய விடையைக் கூறாது பொய் கூறுதல் அறமன்று. என் செய்வேன்! அடியார் இடர் தீர்க்கும் பெருமானே! எவ்வாறாயினும் உண்மையை உரைப்பதே கடமையாம்! பரமதத்தன் : புனிதவதி, ஏன் தயங்குகிறாய்! இக்கனியினை நீ எங்கே பெற்றாய்? புனிதவதியார் : சுவாமி , நீங்கள் கொடுத்த இரண்டு மாங்கனிகளில் ஒன்றை பசியோடு வந்த சிவனடியார் ஒருவருக்கு அளித்தது விட்டேன். மற்றோர் மாங்கனியை எடுத்து வா என்று நீங்கள் பணித்த போது, செய்வதறியாது, மின்னார் செஞ்சடை அண்ணல் எம் இறைவனிடம் வேண்டினேன்.அவர் தம் தனிப்பெருங்கருணையினால் ஒரு மாங்கனியை அளித்தார்.அம்மாங்கனியைத் தான் தாங்கள் உண்டு "மூவுலகிலும் பெறுதற்கரிய கனியாகும்" என்று கூறினீர்கள்.சிவ! சிவ! பரமதத்தன் : (ஏளனச் சிரிப்புடன்) புனிதவதி! என்ன விளையாடுகிறாயா! நீ நாள்தோறும் வணங்கும் சிவபெருமான் இக்கனியை கொடுத்தாரா? என்னால் நம்ப முடியவில்லை! புனிதவதியார் : சிவ சிவ !சுவாமி! அவ்வாறு கூறாதீர்கள்! ஈசனுடைய திருவருளை சந்தேகிக்க வேண்டாம்! பரமதத்தன் : புனிதவதி! நீ கூறுவதை நான் நம்ப தயாராக இல்லை.`இக்கனி சிவபெருமானின் திருவருளால் பெற்றது உண்மையாயின், இன்னமும் இது போன்ற ஒரு கனியை அவர் அருளால் பெற்றுக் காட்டு, பார்க்கலாம். அப்போது தான் நான் நம்புவேன். புனிதவதியார் : சுவாமி! ஏன் நம்ப மறுக்கிறீர்கள்? இறைவனுடைய திருவருளைச் சோதித்துப் பார்ப்பது சரியன்று சுவாமி! என் செய்வது! சரி அடியார்க்கு உற்றவிடத்து உதவும் பெருமான் சிவபெருமான் தானே! அவரிடம் விண்ணப்பிகின்றேன்! சிவபரம்பொருளே! கைலாய நாதா! என் செல்வமே ! தேவரீர் இவ்விடத்து இன்னுமொரு கனியதனை அளித்து அருள் செய்யாவிட்டால் என்சொல் பொய்யாகிவிடும். பின்குரல் : இவ்வாறு அம்மையார் வேண்ட மாங்கனி ஒன்று திருவருளால் அவர் கையகத்து வந்து பொருந்துதலும், அக்கனியைத், தன் கணவன் கையில் கொடுத்தலும், அவனும் அதிசயித்து அதனை வாங்கினான்.வாங்கிய வணிகனும் தன்கையில் இருந்த மாங்கனியைப் பின்பு காணாதவனாகித் அச்சம் மீதூர, மனம் தடுமாறினான். பரமதத்தன் (தனக்குள்): ஆ! இது என்ன அதிசயம்! எங்கிருந்தோ ஒரு அதிசயக் கனி புனிதவதியின் கைக்கு வந்தது. என் கையில் பட்டவுடன் அம்மாங்கனி மறைந்து விட்டதே! புனிதவதி நீ மானுடப் பெண் அல்ல. நீ ஒரு தெய்வப் பிறவி,உன் சிவபக்தியை சந்தேகித்த என்னை மன்னித்து விடு. (பரமதத்தன் புனிதவதியாரை கண்டு அஞ்சி விலகிச் செல்கிறான்) புனிதவதியார் :சிவ சிவ ! சுவாமி! என்ன ஆயிற்றூ உங்களுக்கு? ஏன் விலகிச் செல்கிறீர்கள்? சுவாமி! சுவாமீ!! காட்சி 5 பின்குரல் : புனிதவதியாருக்காக இறைவனே மாங்கனி அளித்ததையும், அம்மையாரின் சிவபக்தியையும் கண்டு வியந்து அச்சம் கொண்ட பரமதத்தன், அம்மையாரை மானுடர் அல்லாத வேறொரு தெய்வம் என்று கருதி, அவரை விட்டு நீங்க முடிவுசெய்தான்.தன் சுற்றத்தாரிடம் கடல் கடந்து வாணிபம் செய்து பெருஞ்செல்வம் ஈட்டி வருகிறேன் என்று கூறி விடை பெற்றுச் சென்றான்.திரைகடல் ஓடி திரவியம் தேடி அளவற்ற பல வாழ்க்கை வளங்களையும் ஏற்படுத்திக் கொண்டு பாண்டி நாட்டில் ஒரு கடற்கரைப் பட்டினத்தின் கண் வந்து சார்ந்தான்.அங்கோர் வணிகனின் மகளை திருமணம் செய்து பெருமை மிக்கதோர் பெண் பிள்ளையைப் பெற்றான்.அப்பெண் மகவிற்கு ஒப்பற்ற பெருமை பொருந்திய தெய்வத்தன்மை வாய்ந்த புன்திவதியார் எனும் திருநாமமும் சூட்டினான்.புனிதவதியாரோ இது ஏதும் அறியாதவராக இல்லத்தில் அறவழியில் இருந்துகொண்டிருக்கின்றார். வந்(து)ஆய் பவரை இல்லாமயில் முட்டை இளையமந்தி பந்தா(டு) இரும்பொழில் பல்வரை நாடன்பண் போஇனிதே கொந்தார் நறுங்கொன்றைக் கூத்தன்தென் தில்லை தொழார்குழுப்போல் சிந்தா குலமுற்றப் பற்றின்றி நையும் திருவினர்க்கே இடம் : புனிதவதியார் இல்லம் (உறவினர் ஒருவர் ஓடோடி வருகிறார்) உறவினர் : ஐயா! ஐயா! இப்பொழுதுதான் பாண்டி நாட்டில் இருந்து ஒரு செய்தி வந்தது. நிதிபதி : என்ன செய்தியா?! உறவினர் : ஆமாமம்! பரமதத்தன் பாண்டிநாட்டில் உள்ள ஒரு பட்டினத்தில் இருக்கிறாராம். தனதத்தன்: என்ன பரமதத்தர் பாண்டிய நாட்டில் இருக்கிறாரா?! உண்மையாகவா சொல்கிறீர்கள்?! நிதிபதி : வாணிபத்திற்குச் சென்றவன் இங்கு வராமல் பாண்டிய நாட்டிற்கு ஏன் சென்றான்?! நிதிபதி மனைவி : ஏன் என்று தெரியவில்லையே! நாம் உடனே பாண்டி நாடு சென்று பரமதத்தனைப் பார்த்தாக வேண்டும். தனதத்தன் : நம் செல்வம் புனிதவதியையும் அழைத்துச் செல்லலாம். இவளைப் பரமதத்தனாரிடம் சேர்ப்பிக்க வேண்டும். நிதிபதி : ஆமாம் அது தான் சரி! புனிதவதி! நாம் அனைவரும் இன்றே பாண்டிநாடு செல்வோம். உன் கணவரிடம் உன்னை ஒப்படைத்து விட்டு வருகின்றோம். வாருங்கள் நாம் அனைவரும் பாண்டிய நாடு செல்வோம்! காட்சி 6 பின்குரல் : புனிதவதியாரை தாமரை இருக்கையில் வீற்றிருக்கும் ஒப்பற்ற திருமகள் என ஏற்றிக் கொண்டு, விரும்புதற்குரிய திரைச் சீலையை அச்சிவிகையில் சூழக்கட்டி, விருப்பம் பொருந்திய சுற்றத்தார்களும் மாதர் கூட்டமும் சூழ, பாண்டிய நாடு நோக்கிச் சென்றனர்.செந்தமிழ்த் திருநாடாகிய பாண்டிய நாட்டைச் சேர்ந்து, பரமதத்தன் இருக்கும் பட்டினத்தின் பக்கம் வந்து, ஒப்பற்ற குலமுதல்வியாரைக் கொண்டு வந்து சேர்ந்திருக்கும் தன்மையை பரமதத்தனுக்கு தெரிவிக்குமாறு சிலரை அனுப்பினர்.இதனை அறிந்த பரமதத்தனும், மனத்தில் அச்சம் கொண்டு, தான் திருமணம் செய்து கொண்ட மனைவியையும் பெற்றெடுத்த பெண் மகவையும் கொண்டு, `அவர்கள் என்னிடம் வருமுன் நானே அவர்பால் செல்வேன்` என்று கருதிய வண்ணம், புனிதவதியார் இருக்கும் இடம் நோக்கி வந்தான். இடம் : பாண்டி நாட்டு பட்டின நகர். பரமதத்தன் : அம்மையே! தங்கள் திருவடியை வணங்குகிறேன்! புனிதவதியார் : சிவ! சிவ ! சுவாமி! தாங்கள் என்ன செய்கிறீர்கள்! (புனிதவதியார் அஞ்சி ஒதுங்குகிறார்) பரமதத்தன் : அம்மையே! நான் தங்களது அருளால் தான் வாழ்கிறேன் .நான் பெற்ற இக்குழந்தைக்கும் தங்களின் புனித நாமத்தைத் தான் சூட்டியுள்ளேன். தாங்கள் எங்களுக்கு நல்லாசி வழங்க வேண்டும். புனிதவதியார் : சிவ! சிவ ! நிதிபதி: பரமதத்தா! உனக்கு என்ன ஆயிற்று? நீ உன் மனைவியை வணங்குவது என்னவோ? இது ஒரு கணவன் செய்யும் செயலா ? நிதிபதி மனைவி : மகனே! உனக்கு என்ன ஆயிற்று? ஏன் இவ்வாறெல்லாம் செய்கிறாய்? வாணிபம் செய்யச் சென்ற உன்னைக் காணாது நாங்கள் அனைவரும் பெருந்துயரம் அடைந்தோம்.புனிதவதி உன் மனைவி அல்லவா? அவளை ஏற்க வேண்டியது உன்னுடைய கடமையாகும். பரமதத்தன் : அம்மா! இவர் மானுடப் பிறவி அல்லர், நன்மையும் பெருமையும் பொருந்திய தெய்வமே ஆவர் என்பதை அறிந்தே நான் நீங்கி வந்தேன். நான் பெற்ற இக்குழந்தைக்கும் என் குலதெய்வமாகிய இவர் பெயரையே இட்டுள்ளேன்; ஆதலால் தான் அவருடைய அழகிய திருவடிகளை வணங்கினேன். நீங்களும் இவரை அவ்வாறே வணங்குங்கள். நிதிபதி: இவனுக்கு என்ன பித்து பிடித்து விட்டதா? ஏன் இவ்வாறு பேசுகிறான்? பின்குரல் : பரமதத்தன் இவ்வாறு சொல்ல, அதனைக் கேட்ட சுற்றத்தார்களும், இன்னதென்று தெளியவாராத நிலையில் அதிசயித்து நின்றார்கள். மணம் பொருந்திய கூந்தலையுடைய அம்மையாரும் பரமதத்தன் கூறிய சொற்களைக் கேட்டு, கொன்றை அணிந்த நீண்ட சடையினையுடைய சிவபெருமானின் ஒலிக்கின்ற கழலினை அணிந்த திருவடிகளைப் போற்றி, மனம் ஒன்றிய அகநோக்கின் மீதூர்வால் உரைசெய்வாராகினார் புனிதவதியார் : எம்பெருமானே! பிறந்து மொழி பயின்ற காலம் முதல் உன் சேவடியே சிந்திக்கும் பேற்றினை அடியேனுக்கு அருளினாய். திருக்கயிலை நாதா! இவ்விடத்து இவ்வணிகன் குறிக்கொண்ட கொள்கை இதுவாகும். இனி இவன் பொருட்டுத் தாங்கி நிற்கும் இவ்வழகு பொருந்திய தசைகளாலாய இவ்வுடலை கழித்துவிட்டு, உலக இடர்பாடுகள் எம்மைத் தீண்டா வண்ணம் பேய் வடிவத்தை அளித்து, நின் திருவடிகளையே போற்றுமாறு அடியேனுக்கு தேவரீர் அருள வேண்டும்! பின்குரல் : இவ்வாறு புனிதவதியார் வணங்கி நின்ற பொழுது, மன்றுள் ஆடிவரும், கூத்தப் பெருமானின் திருவருளினாலே, மேலாய நெறியை அடையும் உணர்வு மீதூர, தாம் வேண்டிய அதனையே பெறுவாராய், உடம்பில் தசையும் அதன்வழி வெளிப்பட்டு நிற்கும் அழகும் ஆகிய இவற்றையெல்லாம் உதறி, எலும்பே உடம்பாக வானுலகம் மண்ணுலகம் எல்லாம் வணங்கத்தக்க பேயாகிய சிவகணத்துள் ஒன்றாம் நிலைமையைப் பெற்றார்.எங்கும் மலர்மழை பொழிந்தது. வான துந்துபி முழக்கம் உலகெலாம் நிறைந்து பெருகத் தேவர்களும் முனிவர்களும் ஒருங்கு கூடி மகிழ்ந்தனர். சிவகணங்கள் அனைத்தும், ஆடலும், பாடலும் நிகழ்த்தி அகமகிழ்வு பெற்றன. முன் இருந்த எண்ணற்ற பல சுற்றத்தார்களும் தொழுது, அஞ்சி அங்கு நின்றும் அகன்றனர்.உள்ளிருந்து எழுந்த ஞானத்தினால் உமையொரு கூறனாகிய சிவபெருமானை வணங்கி `அற்புதத் திருவந்தாதி` எனும் அரிய நூலை அதுபொழுது அருளிச் செய்து , `அழகிய சிவந்த திருவடிப் போதுகளைப் போற்றுகின்ற நல்ல சிவபூத கணங்களுள் நானும் ஒன்றானேன்` என விரும்பிப் பாடினார். (அம்மையார் அற்புதத் திருவந்தாதி` பாடுகிறார்) உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக் கரைவினாற் காரைக்காற் பேய்சொல் - பரவுவார் ஆராத அன்பினோ டண்ணலைச்சென் றேத்துவார் பேராத காதல் பிறந்து பின்குரல் : பெறற்கரிய பேய் வடிவம் பெற்ற அம்மையார், சிவபெருமானின் நுண்ணிய கீர்த்திகளைக் கூறும் இரட்டை மணிமாலையினையும், அந்தாதித் தொடை அமையப் பாடி அருளுகிறார். (அம்மையார் திருஇரட்டைமணிமாலை பாடுகிறார்) காட்சி 7 பின்குரல் : பொருந்திய பேருணர்வு மேன்மேலும் எழுதலால், மும்மதில் களையும் முன்னாளில் அழித்தவராகிய சிவபெருமான் எழுந்தருளி யிருக்கும் உயர்ந்த கயிலாய மலையினை அடைதற்குரிய பேரருள் கூடுதலால், அதனை அடையத் தக்க வழியை நினைந்து வந்தார்.அம்மையின் தோற்றத்தைக் கண்டு உலகத்தவர் அஞ்சி ஓடுகின்றனர். ஊரார்-1: ஆ! அங்கே பாரு…! எலும்போடு ஒரு உருவம் வருகிறது; பார்த்தாலே பயமாக இருக்கிறது. ஊரார் -2 : ஆஆஆ...! பே...! பே...! பே...! பே...ய்...! பேய்! வா தப்பித்து ஓடி விடலாம்! அம்மை : சிவ! சிவ! தேவர்களுக்கெல்லாம் தலைவனாய சிவபெருமான் என்னை அறிவாராகில், இவ்வுலகினர்க்கு யான் எவ்வடிவைத் தாங்கினால் என்ன? சிவ! சிவ! பின்குரல் : தம்மைக் கண்டவர்கள் வியந்து அச்சம் பொருந்த அவ்விடத்தினின்றும் ஓட, தேவர்களுக்கெல்லாம் தலைவனாய பெருமான் என்னை அறிவாராகில், நிலையற்ற உடலை உயர்வாக நினைக்கும் இவ்வுலகினற்க்கு யான் எவ்வடிவைத் தாங்கினால் என்ன? என்று அம்மை அருளினார். (துறவி ஒருவர் வருகின்றார்.) துறவி: என்னப்பா! பேயறைந்தது போல் நின்று கொண்டுள்ளீர்கள்? ஊரார் 1: ஆமாஞ்சாமி! இப்பதான் ஒரு பேய் இப்படியே போச்சு! காரைக்காற் பேயாம்! துறவி: ஆகா! காரைக்காற் பேயாரா! தாயே! (விழுந்து வணங்கி வழித்தடத்தை ஒற்றிக் கொள்கிறார்.) ஊரார் 2: என்ன சாமி, இப்படி விழுந்து கும்பிடுறீங்க! துறவி: அப்பா அந்த அம்மையைத் தொழுவதற்கு என்ன பேறு செய்திருக்க வேண்டும்!? ஊரார் 1: என்ன சாமி சொல்லுறீங்க? போயும் போயும் ஒரு பேய் உருவத்தைப் இம்பூட்டு வணங்கணுமா?! துறவி: அப்பா, பேய் எப்படி இருக்கும் சொல்லப்பா. ஊரார்2: பெரிய்ய்ய வாயி, ஒட்டிப் போன வயிறு, இப்படித்தான் இருக்கும் பேயி. துறவி: எவ்வளவு சாப்பிட்டாலும் வயிறு நிறையாமல் ஒட்டி இருப்பது தான் அது. ஆமா, ஊருல உன்ன நாலு பேரு மதிக்கிறங்களா? ஊரார் 1: என்னங்க சாமி இப்படி கேட்டுப்புட்டீங்க?! எங்க ஊருக்கு நான் தான நாட்டாண்மை. என்னைய மதிக்காமலா? ஆனா என்ன எனக்கு நம்ம நாட்டோட ராசா மாதிரி போறப்ப வற்றப்ப எல்லாம் பூப்போட்டு வரவேற்பாங்கன்னு ஆசை. ம்ம்ம்ம். என் வினை, ராசாவாப் பொறக்கலை. துறவி: பார்த்தாயா. ஊருக்கே நாட்டாண்மையாக இருந்தாலும் உனக்கு அரச பதவி மேல் ஆசை. அந்த அரசனுக்குப் பேரரசனாக மாட்டோமா என்று உளைச்சல். இப்படித்தான் பதவி, பணம், புகழ் என்று நாம் எவ்வளவு பேயாக நிம்மதியின்றி அலைகின்றோமல்லவா? நம்மை விட மோசமானாதா பேய்கள்? ஊரார் 1: உண்மை தான் சாமி! நிம்மதியா இருந்து பல நாளாச்சு. எப்பப் பார்த்தாலும் அடுத்தவனப் பார்த்துப் பார்த்தே ஒரே உளச்சல்! ஊரார் 2: அது சரி சாமி! காரைக்கால் அம்மையாரு அவ்வளவு பெரியவங்கன்னா அவங்களுக்கு ஏன் பேய் உருவம்? துறவி: அவங்க நம்மளைப் போல உலகியலுக்காகப் பேயாக அலையறவங்க இல்லை! உலகம் வியக்கின்ற இளமையையும் அழகையும் துச்சமென உதறிவிட்டு இறைவனோடு எப்போதும் ஆடும் பேய்க் கணமாகும் பெரும் பேற்றினை வேண்டிப் பெற்றவர். ஊரார் 1: ஆமா சாமி! நான் கூடக் கேள்விப்பட்டிருக்கிறேன், சிவபெருமான் பேயோடு ஆடுறாராமே, அது என்ன பேய்? துறவி: சிவபெருமான் தான் இன்பமே உருவாக இருந்துகொண்டு, தன்னை நாடும் உயிர்களுக்கு இன்பத்தை இடைவிடாது அருளிக்கொண்டிருக்கின்றார். அந்த இன்பத்தை முத்தி நிலையில் உள்ள ஆன்மாக்கள் அனுபவித்துக் கொண்டே இருக்கும். அவை எப்பொழுதும் “போதும்” என்று திகட்டி விட்டுவிடுவதில்லை. அதனைக் குறிப்பதே இறைவனுடன் ஆடும் பேய்கள். பேயுருவம் இல்லாமல் பேயாக அலையும் நமக்கும், பேய் உருவத்துடன் இறைவனையே எண்ணி இறவாத இன்ப அன்பு செய்யும் அம்மையாருக்கும் வித்தியாசம் தெரிந்து கொண்டீர்களா? ஊரார்: சாமி, இப்பத்தான் புரிஞ்சுச்சு, சிவபெருமான் பேயோடு ஆடுறதும், காரைக்கால் பேயாரோட பெருமையும். துறவி: அந்தப் பெண்களின் திலகமாம் காரைக்கால் அம்மையாரின் பாடல்களை மனமுருக ஓதி வாருங்கள். அது தான் உலகியற் பேய்களாக அலைதலை தவிர்த்து பேரின்பச் சிவபெருமான் கழல்களில் சேர்க்கும். ஊரார்: இன்று முதல் அப்படியே செய்யிறோம் சாமி. நமச்சிவாய, நமச்சிவாய காட்சி 8 பின்குரல் : வட திசையிலுள்ள தேசங்களை எல்லாம் மன வேகத்தினும் விரைந்து சென்று, மாலையென மலரும் கொன்றை மாலையை அணிந்தும், கையில் சூலத்தை ஏந்தியும், நின்றருளுகின்ற சிவபெருமான் வீற்றிருக்கும் பேரொளிப் பிழம்பாக விளங்கும் திருக் கயிலையின் அருகு சென்ற அம்மையார், மேலும் காலால் நடந்து செல்லுதலை விடுத்துத் தலையால் நடந்து சென்றார் இடம் : திருக்கயிலை அம்மை : என் அப்பன் எழுந்தருளி இருக்கும் திருகையிலையில் என் காலடி படலாமா? எம் இறைவனை தலையாலே நடந்து சென்று தரிசிப்பேன். பின்குரல் : தலையினால் நடந்து சென்று பெருமான் எழுந் தருளியிருக்கும் கயிலை மலையின் மேல் ஏறும் பொழுது, மகிழ்ச்சியினால் அன்பு மேன்மேலும் பெருக, இளம் பிறையாகிய மாலையை அணிந்த வில்லைப் போன்ற நெற்றியினை உடைய இறைவனின் இட மருங்கில் அமர்ந்திருக்கும் பார்வதியம்மையின் திருக்கண் பார்வை அம்மையின் மீது பொருந்தியது.உலகினை ஈன்ற உமையம்மை தம் திருவுள்ளத்தில் வியப்புக் கொண்டருளி தம் பெருமானை நோக்கி வினவுகிறார் உமையம்மை : சுவாமி ! தலையினால், நடந்து இங்கு ஏறிவரும் எலும்புடம்பு பெற்ற இவ்வடிவின் அன்பு தான் என்னே! இறைவர் : உமையே! எலும்புக்கூடாக வரும் இவள் நம்மைப் பேணி வரும் அம்மையே ஆவாள்.மற்றும் இப்பேய் வடிவாம் பெருமை பொருந்திய வடிவத்தையும் நம்மிடம் வேண்டிப் பெற்றுக் கொண்டவள். (காரைக்கால் அம்மையாரை நோக்கி)i அம்மையே! அம்மையார் : அப்பா! இறைவர் : அம்மையே வருக! இவ்விடத்து நம்மிடம் நீ வேண்டும் வரம் யாது? அம்மையார் : எம்பெருமானே! நின்பால் என்றும் இறவாத இன்ப அன்பு வேண்டும், இனிப் பிறவாதிருக்கும் வரம் வேண்டும், மீண்டும் பிறவி உளதாயின் உன்னை என்றும் மறவாது இருக்கும் வரம் வேண்டும்; இவற்றோடு இன்னும் ஒன்று வேண்டும், அறவா! நீ ஆடும்போது, நான் மகிழ்ந்துபாடி உன் அடியின்கீழ் இருக்கவும் வேண்டும். இறைவர் : அம்மையே! விளக்கமுடைய தென்திசையில் எப்போதும் அழியாத வாழ்வைத் தரும் பழையனூர் என்னும் பழம் பதியில் உள்ள திருவாலங்காட்டில், நாம் ஆடுகின்ற பெருங்கூத்தைக் கண்டு, எப்பொழுதும் மகிழ்வுடன் கூடி எம்மைப்பாடிக் கொண்டு இருப்பாயாக அம்மையார் : எம்பெருமானே! வேத முதல்வனே! விண்ணோர் தலைவனே! தேவரீர் திருவடிக்கீழ் இருக்கும் பெரும் பேற்றினை அருளிய தங்கள் கருணையை அடியேன் எவ்வாறு போற்றுவேன்! சிவ சிவ ! மகாதேவா! கயிலை நாதா! சிவபரம்பொருளே! எம் இறைவா! நின்தாள் போற்றி! போற்றி!! காட்சி 9 பின்குரல் : திருகையிலையில் தாம் வேண்டியவாறு அருளைப் பெற்றவராகிய அம்மையாரும், நான்மறைகளின் முடிவாக என்றும் நிலைத்து நிற்பவர் என்று போற்றப்பெறும் இறைவரிடம் விடைபெற்றுக் கொண்டு, வணங்கிச் சென்று, சொலற்கரிய பேரன்பினால், விளங்கு கின்ற திருவாலங்காடு எனும் ஒப்பற்ற திருப்பதியைத் தலையினால் நடந்துசென்று, கோயிலுள் புகுந்து, அப்பெருமானின் திருமுன்பு அடைந்தார். இடம் : திருஆலங்காடு திருகோயில் அம்மை : குறைவில்லா நிறைவே! கோதிலா அமுதே! குணபெருங்குன்றே! ஈறிலா ஈசனே! திருஆலங்காடுறையும் சிவக்கொழுந்தே! உலகெலாம் விரும்பிப் போற்றிவரும் உன் திருக்கூத்தினைத் தொழுது உன் அடியின் கீழ் இருக்கும் பெரும் பேற்றினை அடியேனுக்கு அருளிச்செய்த இறைவா! போற்றி! போற்றி!! பின்குரல் : வந்தடைந்த திருவாலங்காட்டில், மேலுள்ள அண்டங்களைப் பொருந்த நிமிர்ந்து ஆடுகின்ற திருக் கோலத்தைக் கண்டபொழுது `கொங்கை திரங்கி` எனத் தொடங்கும் மூத்த நற்பதிகத்தை, எவ்வுயிர்க்கும் தாம் வாழ் முதலாய் இருப்பது அன்றித் தமக்கு ஒரு வாழ்முதல் இல்லாத இறைவரின் திருமுன்பு பாடினார். (அம்மையார் மூத்த திருப்பதிகம் பாடுகிறார்) பின்குரல் : நறுமணம் கமழ்கின்ற கொன்றை மாலையை அணிந்த சிவபெருமானின் திருக்கூத்தினை, அவர் திருமுன்பே வணங்கிப் போற்றும் நற்பேற்றால் பொங்கியெழும் விருப்பம். மேன் மேலும் எழ, வியப்பெய்தி `எட்டி இலவம் ஈகை` எனத் தொடங்கி முழவம் கொட்டக் குழகன் ஆடும் எனும் நிறைவுடைய திருப்பாட்டுக் களாலாய திருப்பதிகம் ஒன்றையும் அடுத்துப் பாடினார் (அம்மையார் எட்டி இலவம் ஈகை திருப்பதிகம் பாடுகிறார்) பின்குரல் : பெருக்கெடுத்த கங்கையைச் சடையில் கொண்ட சிவபெருமான், `அம்மையே` என இனிய மொழியால் அழைத்த ருளப் பெற்றாரை, அப்பெருமான் மகிழ்ந்தாடும் திருக்கூத்தில் எடுத்தருளுகின்ற திருவடிக்கீழ் என்றும் இருக்கின்றாரைப், பொருந் திய பெருஞ் சிறப்பினை எடுத்துப் போற்றும் செயல் எவருடைய அறிவில் அடங்கும்? ஒருவர் அறிவிலும் அடங்காது.முதலும் முடிவும் இல்லாத இறைவன் அருட்கூத்து இயற்றும் பொழுது, அவர் திருவடிக்கீழிருந்து பண்ணமைந்த பாடல் களைப் பாடிமகிழும் அம்மையாரின் ஒளி விளங்கும் மலரனைய திருவடிகளை நாமும் வணங்கி பிறந்த பிறவியின் பயனை அடைவோம். ஒப்பினை இல்லவன் பேய்கள்கூடி ஒன்றினை ஒன்றடித் தொக்கலித்துப் பப்பினை யிட்டுப் பகண்டை யாடப் பாடிருந் தந்நரி யாழ்அமைப்ப அப்பனை அணிதிரு ஆலங்காட்டுள் அடிகளைச் செடிதலைக் காரைக்காற்பேய் செப்பிய செந்தமிழ் பத்தும்வல்லார் சிவகதி சேர்ந்தின்பம் எய்துவாரே திருச்சிற்றம்பலம் |