logo

|

Home >

video-gallery >

63-nayanmar-drama-podha-mamunivar-appudhiyadikal-nayanar

63 Nayanmar Drama-போத மாமுனிவர் - அப்பூதியடிகள் நாயனார் - நாடகம் Podha Mamunivar - Appudhiyadikal Nayanar

aum namah shivaya

Welcome to the Spiritual Video Gallery from the Shaivam.org.

Drama

திருச்சிற்றம்பலம்

தனமாவது திருநாவுக்கரசின் சரணம் என்னா
மனமார் புனற்பந்தர் வாழ்த்தி வைத்து ஆங்கு அவன் வண் தமிழ்க்கே
இனமாத் தனது பெயர் இடப் பெற்றவன் எங்கள் பிரான்
அனமார் வயல் திங்கள் ஊரினில் வேதியன் அப்பூதியே.

நாடகம் - 2 (பெருவாழ்வு வழங்கியது)

காட்சி 1

இடம்: திங்களூர்த் தண்ணீர்ப் பந்தல்

திருநாவுக்கரசர்: இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.

ஆ! என்ன! ஆண்ட அரசு தண்ணீர்ப் பந்தலா? அதென்ன அங்கு தெரிவது? ஆண்ட அரசு அமுதுண் சாலை! சிவ சிவ! சிந்தை திருந்தா அடியேனை அன்றோ இறைவன் திருநாவுக்கரசு என விளித்தார். (அங்கு இருப்பவரிடம்) இத்தகைய பெயர் இட்டு இங்கு அறம் செய்து வருபவர் யார்?

அருகிலுள்ளவர்: அதுவாங்கையா! இந்த ஊரில அப்பூதி அடிகள்ன்னு ஒருத்தர் இருக்காரு. திருநாவுக்கரசருன்னா அவருக்கு உசிரு. வீட்டுக்குப் பேரும்

திருநாவுக்கரசு, மாட்டுக்குப் பேரும் திருநாவுக்கரசு, புள்ளைங்க பேரும் திருநாவுக்கரசு, பந்தல், சத்திரம், குளம் அவரு செய்யற எல்லாப் பணிக்கும் திருநாவுக்கரசு தான் பேரு. இதை ஏன் கேக்குறீங்க? அவரு வீட்டுல இருக்குற மரக்காலு, உழக்குக்குக் கூடப் பேரு திருநாவுக்கரசு தான்! திருநாவுக்கரசு திருநாவுக்கரசு திருநாவுக்கரசு - எல்லாமே திருநாவுக்கரசு தான் அவருக்கு. இந்த கொஞ்ச தூரம் போனீங்கன்னா திருநாவுக்கரசு இல்லம்ன்னு போட்டு அவரு வீடு இருக்கும்.

திருநாவுக்கரசர்: சிவ சிவ! அவரை உடனடியாகச் சென்று காண்பேன்!

காட்சி 2

இடம்: அப்பூதி அடிகளார் இல்லம்

(திருநாவுக்கரசர் வருகிறார்.)

அப்பூதி அடிகள்: சிவ சிவ! வரவேண்டும் வரவேண்டும்! முடிவில் தவம் செய்தேன்! தூய வெண்ணீறு துதைந்த பொன் மேனியும், தாழ்வடமும், நாயகன் சேவடி தைவரு சிந்தையும், நைந்துருகிப் பாய்வது போலன்பு நீர் பொழி கண்ணும், சிவபெருமான் திருவடி போற்றும் செஞ்சொல்லும் உடைய கருணைபுரி வடிவுடையீர்! தாங்கள் இம்மனையில் எழுந்தருள என்ன பேறு செய்தேன்?!

திருநாவுக்கரசர்: நம் அன்பிற்கினிய பெருமானைத் திருப்பழனத்தில் வழிபட்டு வருகின்றோம். வழிக்கரையில் நீர் வைத்த இனிய தண்ணீர்ப்பந்தர் கண்டு அதுபோன்ற பல அறங்களும் செய்யும் உம் பெருமை கேட்டு இங்கு வந்தோம். ஆமாம், சிவபெருமான் அடியார்களுக்காகத் தாங்கள் வைத்த தண்ணீர்ப் பந்தலில் உம் பெயர் எழுதாமல் வேறொரு பெயர் ஏன் எழுதியிருக்கிறிர்கள்?

அப்பூதி அடிகள்: (அதிர்ந்து போய்) நன்றாகத்தான் சொன்னீரோ? அமணர்களோடு சேர்ந்துகொண்டு பல்லவன் செய்த கொலைபாதகச் சூழ்ச்சிகளையெல்லாம் வென்று ஆண்ட அவர் திருப்பெயரோ வேறொரு பெயர்? சிவபெருமான் திருவடிக்குத் திருத்தொண்டு செய்து இம்மையிலேயே உய்யலாம் என்று என் போல்வாரும் தெளிய நின்ற அத்திருத்தொண்டின் பெயரோ வேறொரு பெயர்? பொங்கு கடற் கல் மிதப்பில் போந்தேறும் அவர் பெருமை அங்கணர் தம் புவனத்தில் அறியாதார் ஆர் உளரே! மங்கலமாந் திருவேடத்துடன் இன்று இவ்வகை மொழிந்தீர்! எங்குறைவீர்? நீர் தாம் யார்? சொல்லும்!

திருநாவுக்கரசர்: வீழ்ந்த அமண் சமயத்திலிருந்து கரையேற நம் தலைவனால் சூலை நோய் என்ற அருளால் ஆட்கொள்ளப்பட்ட தேற்றமில்லாத சிறுமையேன் யான்.

அப்பூதி அடிகள்: (உளம் நைய) திருநாவுக்கரசர் பெருமானா! (அடியற்ற மரம் போலத் திருநாவுக்கரசர் திருவடிகளில் வீழ்ந்து பற்றிக் கொள்கிறார். அரசர் அவரை வணங்கி எடுக்கிறார்.) பெருவாழ்வு பெற்றேன் பெருவாழ்வு பெற்றேன்! (துணைவியார், மூத்த இளைய திருநாவுக்கரசு அரசரை வணங்குகின்றார்கள்.) அடிகளே! தாங்கள் எம் மனையில் திருவமுது செய்தருளினால் வாழ்வின் பயன் என மகிழ்வோம்!

திருநாவுக்கரசர்: கறைக்கண்டன் அடியார்கள் வீட்டில் திருவமுது செய்தலன்றோ சாலச்சிறந்தது. உம் விருப்பப்படியே ஆகட்டும்.

அப்பூதிஅடிகள்: (துள்ளிக் குதித்து) என் தவமெல்லாம் இன்று பலன் கண்டது. (துணைவியாரிடம்) ஆண்ட அரசுகள் அமுது செய்ய அறுசுவை உணவு செய்வோம்.

(மூத்த திருநாவுக்கரசிடம்) பெருமானார் அமுது செய்ய நல்ல குருத்து வாழை இலை கொண்டு வா!

மூத்த திருநாவுக்கரசு: என் தவமே தவம். ஆளுடைய அரசுகள் அமுது செய்ய நல்ல தாய் தந்தையர் ஏவ நான் பணி செய்யப் பெற்றேன். உய்ந்தேன் உய்ந்தேன்....(ஒடுகிறார்.)

காட்சி 3

இடம்: அப்பூதி அடிகளார் இல்லம்

(மூத்த திருநாவுக்கரசு வாயில் நுரை கொப்பளிக்க இலையைத் தாயாரிடம் கொடுத்து விழுகின்றார்.)

அப்பூதி அடிகளாரும் துணைவியாரும்: (உளம் பதைத்து) சிவ சிவ! பாம்பு கடித்துள்ளது! சிவபெருமானே!

அப்பூதி அடிகள்: (உடன் தேற்றிக் கொண்டு துணைவியாரிடம்) இது தெரியாவண்ணம் பெருமானாரை அமுது செய்விப்போம்.

(பாயில் மூத்த திருநாவுக்கரசைச் சுற்றி வைக்கிறார்கள்.)

 

 

 

காட்சி 5

இடம்: திருக்கோயில்

திருநாவுக்கரசர்: பத்துக்கொலாம் அவர் பாம்பின் கண் பாம்பின் பல்
பத்துக்கொலாம் எயிறும் நெரிந்து உக்கன
பத்துக்கொலாம் அவர் காயப்பட்டான் தலை
பத்துக்கொலாம் அடியார் செய்கை தானே.

(மூத்த திருநாவுக்கரசு உயிர் பெற்று எழுகிறார். திருநாவுக்கரசர் அவருக்குத் திருநீறு அளிக்கிறார். ஊரார் அதிசயித்து வணங்குகின்றனர்.)

அப்பூதி அடிகள்: திருவைந்தெழுத்தின் துணையால் கல்லே தெப்பமாக மிதந்தவரால் ஆகாத ஒன்று தான் எது? ஆயினும் பெரியோர் அமுது செய்ய இவன் சிறிது இடையூறு செய்துவிட்டான். சிவ சிவ!

திருநாவுக்கரசர்: வஞ்சித்து என் வளை கவர்ந்தான் வாரானே ஆயிடினும்
பஞ்சிக்கால் சிறகன்னம் பரந்தார்க்கும் பழனத்தான்
அஞ்சிப்போய்க் கலி மெலிய அழல் ஓம்பும் அப்பூதி
குஞ்சிப் பூவாய் நின்ற சேவடியாய் கோடியையே.

Related Content