logo

|

Home >

video-gallery >

63-nayanmar-drama-tamil-drama-sundharar

63 Nayanmar Drama-Tamil Drama ஆண்ட நம்பி (சுந்தரர்)

Aanda Nambi (Sundarar) - Tamil Drama

 


Welcome to the Spiritual Video Gallery from the Shaivam.org.

Drama


ஆண்ட நம்பி (சுந்தரர்) பகுதி-1 - தன்னை மறந்து உலகியலில் கலக்க இருக்கும் சுந்தரராகிய நம்பி ஆரூரரைக் கருணைக் கடவுளாகிய சிவம் விருத்தனாக வேடம் பூண்டு, தன்னைச் சார்ந்தே இருக்கும்படி தடுத்து ஆட்கொள்ளுதல்.

 

 

 

திருச்சிற்றம்பலம்

ஆண்ட நம்பி

நாடகம் : 1 அணுக்க வன்றொண்டர்

காட்சி : 1

( சுந்தரர் திருமணக் கோலத்தில் அமர்ந்துள்ளார். முதியவர் திருமண மண்டபத்தில் வாயிலுக்கு வருகிறார் ).

முதியவர் : எனக்கும் உனக்கும் ஒரு வழக்கு உள்ளது. அதனை முடித்து விட்டு நீ உன்னுடைய திருமணச் சடங்கை நடத்து.

நம்பி : வழக்கா?! அப்படியொன்று உண்டென்றால் அதனை முடிக்காது இத்திருமணம் செய்யமாட்டேன். உமது வழக்கைக் கூறும்.

முதியவர் : ( எல்லோரையும் நோக்கி ) இந்த திருநாவலூரன் என்னுடைய அடிமை.

நம்பியும் பிறரும் : ( சிரித்து ) நல்ல கதையையா இது!

முதியவர் : ஏன் சிரிக்கின்றாய்?! உன் பாட்டனார் பாட்டனார் செய்த ஓலை எழுதிச் செய்த உறுதி அது, எவ்வாரடா சிரிக்கிறாய்!

நம்பி : அந்தணர் வேறோர் அந்தணர்க்கு அடிமையாதல் இல்லாத தொன்று. நீரென்ன பித்தரா, இவ்வாறு பேச?

முதியவர் : பித்தன் என்றும் சொல்! பேயன் என்றும் சொல்! இதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன். வித்தகம் பேச வேண்டாம் பணி செய்ய வேண்டும்!

 

வேண்டும்!

நம்பி : எங்கே அந்த ஓலை? காட்டும்!

முதியவர் : அதை உனக்கேன் காட்ட வேண்டும். அவையோர் முன் காட்டுவேன், நீ எனக்கு பணிசெய்!

( நம்பி கோபமுற்று பெரியவரின் ஓலையை வறிக்கப் பார்க்கிறார். முதியவர் ஓட, நம்பி துரத்திச் சென்று ஓலையைப் பறிக்கிறார். )

நம்பி : நல்ல ஓலையாம்! ( கிழிக்கிறார் )

முதியவர் : ஆ! இது முறையோ! இவன் இவ்வோலையை வாங்கிக் கிழித்ததே இவன் அடிமை என்பதை அறிந்துள்ளான் என்பதற்க்கு சான்று!

நம்பி : என்னையா! பெரிய கூத்தாடியாக இருப்பீர்போல்!

திருமணத்துள்ளோர் : ( நம்பியை விலக்கி ) இவ்வுலகில் இல்லாத வழக்கை கூறுகின்றீர்கள். தாங்கள் யாரையா?

முதியவர் : எம் ஊர், அருகிலுள்ள திருவெண்ணெய் நல்லூராகும். அங்குள்ள சபையோர் நீதி மிக்கோர். அங்கு என் வழக்கை கூறுவேன். இவன் கிழித்தது படியோலை தான். மூலவோலையைக் கொண்டு வழக்கு செய்வேன்.

நம்பி : உங்கள் வெண்ணெய் நல்லூருக்கே போய் உன் பொய் வழக்கைத் தீர்க்கலாம்.

முதியவர் பின் நம்பி செல்லக், கூட்டத்தா தொடர்கிறார்கள்.

காட்சி 2:

( திருவெண்ணெய் நல்லூர் சபை. சபையோர் முன் நம்பியும், முதியவரும் நிற்கின்றனர். )

அவைத் தலைவர் : ஐயா! உம் வழக்கென்ன?

முதியவர் : அந்தத் திருநாவலூர் ஆரூரன் எனக்கு அடிமை என்று உள்ள ஓலையைக் கிழித்து அடிமை என்பதை ஏற்க மறுக்கிறான்!

அவைத்தலைவர் : இது வழக்கில் இல்லாததோர் வழக்கு! ஆரூரரே! நீர் எவ்வாறு இம்முதியவரின் ஆவண்த்தைக் கிழிக்கலாம்? உம் தரப்பு நியாயத்தை சொல்லும்.

நம்பி : பெரியோர்களே! ஆதிசைவர் பிறர்க்கு அடிமையாவது எங்கும் இல்லாதது என்பதை அறிவீர். இம்முதியவர் பெருமாயையில் தேர்ந்தவராய் நம்மையெல்லாம் ஏமாற்றுகின்றார். இது தவிர எனக்கொன்றும் புரியவில்லை.

அவைத்தலைவர் : பெரியவரே! உங்கள் வழக்கை நீங்கள் ஆதாரத்தோடு நிருபிக்க வேண்டும். வழி வழியாக வரும் மரபாட்சி, ஆவணம் அல்லது கண்கூடாக பார்த்த பிறர் சாட்சி ஆகிய மூன்றில் ஒன்ரு கொண்டு உம் வழக்கை நிறுவ வேண்டும்.

முதியவர் : அப்படியே ஆகட்டும். இவன் முன்பு கிழித்தது படியோலை. மூல ஓலை இதோ! ( ஓலையை கொடுக்கிறார் )

( அவைத்தலைவர் அருகிலுள்ளவரிடம் கொடுக்கிறார். அவர் படிக்கிறார் )

ஆவணம் படிப்போர் : “திருநாவலூர் ஆரூரனாகிய நான் வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்கு நானும், என் மறபில் வருவோரும் வழியடிமை என்று ஒப்புக்கொண்ட ஆவணம்”.

அவைத்தலைவர் : இவ்வோலையில் உள்ள கையொப்பம் இவ்வாரூரர் தம் பாட்டனுடையது தானா என்பதைக் கூற முடியுமா?

ஆவணக்காரன் : ஐயா! அரசு ஆவணக் காப்பில் இருந்த அவருடைய மற்றொரு ஓலையைக் கொண்டு கையொப்பம் ஒப்பிட்டதில் இவ்வோலையில் உள்ள கையொப்பம் ஒத்துள்ளது. எனவே அவர் எழுதியது தான் இவ்வோலை என்பதில் ஐயமில்லை.

அவைத்தலைவர் : அரூரா! நீர் தோற்றீர். இவ்வெணெய் நல்லூர் முதியவருக்கு அடிமைப்பணி ஆற்றுவது உம் கடமை.

நம்பி : ( மனம்வெறுத்து ) தீர்ப்பு இவ்வாறு ஆனபின் இனிப் பணி செய்ய மாட்டேன் என்று கூறமுடியுமா?

அவைத்தலைவர் : ஐயா! நீங்கள் இவ்வூரென்கிறீகள். நாங்கள் யாரும் உம்மைக் கண்டதில்லை. தங்களுடைய இல்லம் எது என்று நாங்கள் அறியலாமா?

முதியவர் : ( கட கடவென சிரித்து ) நம் இல்லத்தை அறியவில்லையோ? வாருங்கள்!

முதியவர் பின் நம்பியும் மற்றோரும் தொடர்கின்றனர்.

முதியவர் திருவருட்டுறை புகுந்து பின் காணப்படவில்லை.

நம்பி : ஆகா எங்கள் பிரான் திருமுன் புகுந்து மறைந்தாரே. இவர் யார்? இவர் யார்?

இறைவர் வாக்கு : நம்பி! நம்முடைய தொண்டனே! நம் கட்டளைப்படி மண்ணில் பிறந்தனை. நாம் கூறியது படி உன்னைத் தடுத்தாட்கொண்டோம். பித்தன் என்று வன்மை பேசியமையால் வன்றொண்டன் எனப் பெயர் பெறுவாய். நமக்கு அருச்சனை பாட்டேயாகும். பித்தன் எண்றே தொடங்கிப் பாடுக.

நம்பி : பித்தாபிறை சூடீபெரு மானேஅரு ளாளா
எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அத்தாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.

 


ஆண்ட நம்பி (சுந்தரர்) பகுதி-2 - திருஆரூர் தேவாசிரியன் மண்டபத்தில் குழுமி இருக்கும் அடியார் பெருமக்களை பார்க்காமல் புறத்தே ஒதுங்கிச் செல்லும் சுந்தரரை, விறன்மிண்டர் "புறகு" என்ன - திருவருள் துணைக்கொண்டு திருத்தொண்டத் தொகை வெளிப்படுதல்.

 

 


ஆண்ட நம்பி (சுந்தரர்) பகுதி-3 - திருவதிகை சித்தவட மடத்தில் சுந்தரர் தம் அடியார் பெருமக்களுடன் களைப்பால் அயர்ந்து துயிலும்போது திருஅதிகைப் பெருமான் திருவடிச் சூட்டுதல்.

 

 

 

 

 


ஆண்ட நம்பி (சுந்தரர்) பகுதி-4 - திருவொற்றியூர் திருத்தலத்திலே சங்கிலி நாச்சியாரைக் கண்ணுற்ற சுந்தரர், இறைவன் திருவருளால் சங்கிலி நாச்சியாரை மணத்தல்.

 

 

 

ஆண்ட நம்பி

நாடகம் 4: சங்கிலி கேள்வர்

காட்சி 1:

இடம் : திருவொற்றியூர்த் திருக்கோயில்

நம்பி : பாட்டும் பாடி………

( வணங்கி வெளிவரும்போது பூமண்டபத்தில் வருகிறார். பெண்கள் மலர் தொடுத்துக் கொண்டுள்ளன. திரை விலக்கிச் சங்கிலியார் மலர் கொடுத்து மறைகிறார். )

நம்பி ; சிவ சிவ! மின்னலைப் போன்று தோன்றி மறைந்த இந்நங்கை இறைவன் பால் நிலைபெற்றிருக்கும் என் உள்ளத்தை எடுத்துச் சென்றாளே! யாரவள்?

அருகுள்ள பெண்டிர் : அவர் பெருந்தவச் சங்கிலியார். ஒற்றியூர் ஈசற்க்கே பணி செய்து வரும் கன்னியார்.

நம்பி : இறைவன் இரண்டு பெண்கள் காரணமாக இப்பிறவியை அளித்தார். ஒருவர் பரவையார் மற்றொருவர் இச்சங்கிலியார் தாம். அப்பெருமான் திருவருளாலேயே இவளைப் பெறுவேன்.

( இறைவரிடம் ) மங்கையொருபால் வைத்துக் கங்கையை சடைமேல் தரித்த கடவுல்ளே! அன்று வெண்ணைய் நல்லூரில் வலிய ஆண்டு கொண்டீர். இன்று எனக்குச் சங்கிலியை மணஞ் செய்து தாரும்.

இறைவர் : இவ்வுலகத்தவர் யாரும் கருதவும் இயலாத தவமுடைய சங்கிலியை உனக்குத் திருமணம் செய்து தருகிறோம். கவலை ஒழி!

நம்பி : திருவருள்! திருவருள்!!

காட்சி 2:

சங்கிலியார் கனவில் இறைவன் எழுந்தருளுகிறார்

சங்கிலியார் ( பரவசத்துடன் ) : சிவசிவ! அடியேன் உய்யப் பெருமான் எழுந்தருளியது!

இறைவர் : தவம் உன்னைச் சார்ந்து வாழும் சங்கிலியே! ஆரூரன் என்பால் மிக்க அன்புடையான். மேரு மலையயைவிடத் தவம் மிக்கவன். நம்பால் உன்னை வேண்டினான். அவனை நீ மணந்து கொள்க!

சங்கிலியார் : பெருமான் கட்டளைப்படியே அவர்க்கே உரியவள் யான். தங்களுக்கு அடியேன் ஒன்றைக் கூற விரும்புகிறேன். ஆரூரர் திருவாரூரில் மணவாழ்க்கை நடத்துபவர்……

இறைவர் : அவ்வளவு தானே! உன்னைவிடுப் பிரியாது இருக்க ஆரூரன் சபதம் செய்வான்.

சங்கிலியார் : ( பணிந்து ) இறைவர் திருவருள்!

காட்சி 3:

( சுந்தரர் தொழுதிருக்க, அவரிடம் )

இறைவர் : நம்பி! சங்கிலியை மணம் செய்வதற்கு நீ அவளிடம் சென்று அவளை நீங்கமாட்டேன் என்று சபதம் செய்ய வேண்டும்.

நம்பி : இச்சபதம் செய்தாலே திருமணம் நடைபெறும் எனில் அது செய்கிறேன் பெருமானே! ஆயினும் பெருமானே! தங்கள் திருப்பதிகள் எல்லாம் வணங்கி வரும் நியமம் உடைய அடியேனுக்கு இது இடையூராகிவிடும். ஆரூள்கூர்ந்து தாங்கள் சபதம் செய்யும் பொழுது மூலட்டானத்தை விட்டு மகிழ மரத்தடியில் இருக்க வேண்டும்.

இறைவர் : நம்பி! நீ சொன்னபடி நாம் செய்வோம்!

காட்சி 4:

( சங்கிலியார் பெருமை கூறுக )

( இறைவன் சங்கிலியார் கனவில் )

இறைவர் : சங்கிலி! நம்பியாரூரன் உன்னிடம் வந்து சபதம் செய்வான். நீ நம் திருமுன்னால் சபதம் செய்வதற்க்கு உடன்படாது மகிழ மரத்தடியில் சபதம் செய்யுமாறு பெறுக.

சங்கிலியார் : ( தழுதழுத்த குரலில் ) இறைவா! என்னைப் பொருளாகக் கொண்டு என்றும் கைவிடாது அருளும் வள்ளலே! உம் அருளின் மேம்பட்ட துண்டோ?! ( வீழ்ந்து வணங்குகிறார் ) காட்சி 5:

( சங்கிலியார் சேடியருடன் ஒரு புறம் வருகிறார். சுந்தரர் மறுபுறம் வருகிறார். )

நம்பி ; ( சங்கிலியாரைப் பார்த்து ) உங்களை பிரியாமல் இருக்கும் சபதத்தை திருவொற்றியூரில் பெருமான் முன் செய்கிறேன் வாருங்கள்.

சேடிப்பெண் : சிவ சிவ! இத்தகு சபதங்களை இறைவர் திருமுன் செய்தல் தகாது. ஆதலால் மகிழ மரத்தடியில் சபதம் செய்யுங்கள்.

நம்பி : ( துணுக்குற்று ) இறைவா! இதுவும் தங்கள் திருவிளையாடலோ? சங்கிலியார் செய் தவம் தான் என்னே!

( மகிழ மரத்தடியில் )

நம்பி : இவ்வொற்றியூர் விட்டு நான் நீங்கமாட்டேன் என உறுதி கூறுகிறேன்.

( திரும்பி வரும் வழியில் )

சங்கிலியார் : இறைவா! தாங்கள் பணியால் தங்கள் சீரடியாரைக் கூட்டி வைக்கும் இச்சபதம் செய்ய வைத்தேனே! பெருமானே! பெருமானே!

 

 


ஆண்ட நம்பி (சுந்தரர்) பகுதி-5 - சுந்தரர் திருஆரூர் பெருமானை தன் முதல் மனைவியான பரவை நாச்சியாரிடம் தூது அனுப்புதல்.

 

 

 

 

நாடகம்5: பரவை கொழுநர்

காட்சி 1:

இடம்: சுந்தரர் இருப்பிடம்

நம்பி: காரூர் கண்டத்து எண்டோ ள் முக்கண் கலைகள் பலவாகி ஆரூர்த் திருமூலட்டானத்தே வீற்றிருக்கும் பெருமானே! உம் திருவருளால் ஒளி படைத்த கண் கள் இரண்டும் பெற்றேன். இறைவா! திருவொற்றியூரில் சங்கிலியாரை மணம் புணர்ந்த செய்தி அறிந்த பரவையார் என்னைச் சார்ந்த எவரையும் திருமாளிகையின் அருகில் கூட அனுமதிப்பதில்லை. கற்றறிந்தோர் சிலரை அனுப்பியும் அவரிடத்து என்னை மீண்டும் ஏற்றுக்கொள்ளும் இது தவிர வேறு எதுவாயினும் பேசுங்கள் என் கிறாளாம்! இறைவா! அடியாருடைய துன்பம் தாங்காத பெருமானே! தாங்கள் அடியவர்களைப் பேணிப் புரக்கும் நல்லறமாகிய எங்கள் இல்வாழ்க்கையை முன்போல் பயனுறச் செய்தாலன்றோ நான் உய்வது! செம்பெருமானே!!

(இறைவர் வருகின்றார்)

இறைவர்: நம்பி! உன் கவலையை விடு! நாமே உன் தூதுவனாக பரவையிடம் இப்பொழுதே செல்லுகின்றோம்!

நம்பி: இன்ன தன்மையன் என்று அறியவொண்ணாதவனெனினும் அடியவர்க்கு எளிவந்த பிரானே! உம் கருணையே கருணை!

காட்சி 2:

இடம்: பரவையார் மனை

(இறைவர் அருச்சகர் கோலத்தில் அழைக்கிறார். பரவையார் துயிலில் இருக்கின்றார்.)

அருச்சகர்: பரவையே! கதவினைத் திற!

(பரவையார் கதவினை விரைவுடன் திறக்கின்றார்.)

பரவையார் (வணங்கி): சிவ சிவ! திருவாரூர்ப் பெருமானுக்குத் தொண்டு செய்யும் பெரியீர்! ஊரெல்லாம் உறங்கும் இந்த நடு இரவில் வந்துள்ளீர்கள். தங்களுக்கு என்ன தேவை என்று அருளுங்கள்!

அருச்சகர்: ஆரூர்ப் பெருமான் பணியிலும் அடியவர்கள் நல்வாழ்விலும் பெரிதும் திகழும் பரவையே! நம்பியாரூரன் இங்கு வரவேண்டும்.

பரவையார்: நல்ல காரியம் நீங்கள் சொன்னது. என்னைப் பிரிந்து திருவொற்றியூரில் சங்கிலியாரைத் திருமணம் செய்துவிட்டு வந்திருக்கும் அவருக்கு எம் இல்லம் எதற்கு?

அருச்சகர்: பரவையே அதனைப் பெரிது படுத்தவேண்டாம். உன் கோபத்தைத் தவிர்க்கவேண்டும் என்று வெண்டிக்கொள்வதற்குத் தானே நான் இங்கு வந்திருக்கி றேன்!

பரவையார்: ஐயா! இந்தக் காரணத்தால் தாங்கள் இவ்வாறு வந்திருப்பது தங்களுடைய பெருமைக்கு ஒவ்வாத ஒன்று. இது பற்றி இன்னும் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. நீங்கள் போகலாம்!

(அருச்சகர் புன்முறுவலுடன் கிளம்புகின்றார்.)

காட்சி 3:

இடம்: சுந்தரர் இருப்பிடம்

(இறைவர் வருகின்றார்)

நம்பி: ஆகா! இறைவா! எம்மை முன்னமே ஆண்ட பெருமானே! தாங்கள் பரவையின் கோபம் தணித்துத் தூது சென்று வந்துள்ளீர்களே!

இறைவர்: நம்பீ! நீ சொன்னவாறே நாம் பரவை மனைக்குச் சென்று அவளிடம் உன் திறமெல்லாம் எடுத்துக் கூறினோம்! ... ஆனால், அவள் எதையும் கேட்க விரும்பவில்லை. எத்துனை கேட்டும் மறுத்துவிட்டாள்.

நம்பி: பெருமானாகிய தாங்கள் சொன்னபின்பும் அடியாரிற் சிறந்த பரவையோ மறுத்துக் கூறுவாள்? உன்னால் ஒன்றும் குறையில்லை இறைவா! என்னுடைய ப ணியும் அடிமையும் அவ்வளவே போல! ஆயினும் இறைவா, தாங்களும் கைவிட்டால் என் உயிர் நில்லாது!

இறைவர்: நம்பீ! நீ கலங்காதே! இன்னும் ஒருமுறை பரவையிடம் சென்று உன்னை அவள் ஏற்றுக்கொள்ளுமாறு செய்கிறோம்!

நம்பி: இவ்வாறன்றோ அடியார் தம் துயர் நீக்கி ஆட்கொள்ளும் எம்மிறைவர்!

காட்சி 4:

(இறைவர் திருக்கோலத்தில் கணங்கள் சூழ பரவையார் மனைக்கு எழுந்தருள்கிறார். கண்ட பரவையார் திருவடிகளில் வீழ்ந்து வணங்குகின்றார்.)

இறைவர்: பரவை! நம்பி மீண்டும் உன்னிடம் உரிமையால் நம்மை தூது அனுப்ப வந்துள்ளோம்! நம்பி இங்கு வரப்பெற வேண்டும்.

பரவையார் (கலங்கி): ஆ! அறியாது கெட்டேனே! தாங்கள் தானா அருச்சகராய் முன்பு தூது வந்தது! தங்களிடமா நான் மறுப்புக் கூறினேன்! அடியவருக்காக அயனும் மாலும் அறியாது தேடுகின்ற பாதங்கள் நோவத் தாங்கள் ஒருமுறைக்கு இருமுறையும் அங்கும் இங்கும் செல்வீராகில், அடிகளே உமக்கு அடிமைப்பட்ட ந ஡ங்கள் எதனை மறுக்க உரியோம்?

இறைவர்: உன் ஆட்பட்ட திறம் நாம் அறிவோம். நன்றே கூறினாய்.

காட்சி 5:

நம்பி: பெருமானே! என்ன செய்தி கொண்டு வந்தீர்கள்?

இறைவர்: நம்பீ! இனி நீ பரவை மாளிகை சென்று சேரலாம். அவள் சீற்றத்தைத் தணிவித்தோம்.

நம்பி: இறைவ! உம்மை அண்டி இருக்கும் அடியவர்களுக்கு ஏது இடர்?

காட்சி 6:

(பரவையார் இல்லம்)

நம்பி பரவையாரிடம்: நம்மை ஆளுடைய பெருமானின் அருள் தான் எவ்வளவு! நம்மை எல்லாம் பக்குவப்படுத்தி பேரின்பப் பெருங்கடல் தந்தருளும் அவர் இவ்வுலக வாழ்விலும் ஒவ்வொரு கணமும் நம் துணையாக இருந்து வழி நடத்தி உதவும் திறம் தான் என்னே! நம்மால் அவருக்கு ஆவதொன்று உண்டோ ?! அவரே நமக்குத் தொலையாச் செல்வம்! அவர் தம் அடியார்களுக்கு அடியவனாகப் பணி செய்வதே வாழ்வின் பயன்.

ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய 
தோழனுமாய் யான்செய்யுந் துரிசுகளுக் குடனாகி 
மாழையொண்கண் பரவையைத்தந் தாண்டானை மதியில்லா 
ஏழையேன் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே. 

 

இறைவனையே. 


ஆண்ட நம்பி (சுந்தரர்) பகுதி-6 - தன்னைக் காண விரும்பாத ஏயர்கோன் கலிக்காம நாயனாரை சுந்தரர் காண செல்லுதல்.

 

 

 

நாடகம் 6: ஏயர்கோன் இரும்பிணி தீர்த்தார்

காட்சி 1:

(ஏயர்கோனும் அடியார்களும் பாடிகொண்டு இருக்கின்றார்கள்.)

மாசில் வீணையும் மாலை மதியமும் 
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.

ஏயர்கோன்: ஆகா! அரசர் பெருமான் எவ்வளவு அழகாக இறைவனை பாடுகின்றார். அவர் தம் தேவாரப் பாடல்களே நம் ஆரூர்ப் பெருமானுக்கு இனிய அணிகலன்கள்!

அடியார்: ஐயா! தாங்கள் திருவாரூர்ப் பெருமானைப் பற்றிச் சொன்னவுடன் நினைவுக்கு வருகின்றது. ஊரெல்லாம் ஒரே கோலாகலம். திருவாரூர்ப் பெருமான் ந ம்பியாரூரருக்காக பரவையாரின் சினம் தணிவிக்க அவர் மனைக்கு இரண்டு முறை தூது சென்றாராம்.

ஏயர்கோன்: சிவ சிவ! இதென்ன கொடுமை! அரியும் அயனும் இந்திரனும் குற்றேவல் செய்யக் காத்திருக்கும் அண்ட முதல்வரை ஒரு அடியவர் தன் மனைவியி டம் தூதாக அனுப்புவதா?! சிவ சிவ! நினைக்கவே ஏற்கவில்லையே! பாவியேன் காதுகளில் இச்செய்தி விழுந்து உள்ளத்தைப் புண்ணாக்கி விட்டதே! இறைவா! ஆரூரர் அனுப்பினாரென்றால் தாங்களும் உடன்படலாமா? எங்கள் கோனே! எங்கள் கோனே!

காட்சி 2:

(ஏயர்கோன் சூலை நோயால் துடிக்கிறார்.)

ஏயர்கோன்: சிவ சிவ! பெருமானே! கொடிய சூலை நோய் வயிற்றை வேல் கொண்டு குத்துவது போல் வருத்துகின்றது! குடரைப் பிசைகின்றது, வலிக்கின்றது பெருமானே! அடியார்க்கு மாமருந்தே! ஒரு பற்றே! இறைவா, இதனைத் தீர்த்துப் பெருங்கருணை புரிய வேண்டும்! பெருமானே! பெருமானே!

இறைவர்: கலிக்காமரே! வன்றொண்டர் வந்து தீர்த்தாலன்றி இந்நோய் தீராது!

ஏயர்கோன்: என்ன? வன்றொண்டனா? இறைவா! என் தந்தை, அவரது தந்தை அவர்க்கும் தந்தை என்று எமது கூட்டமெல்லாம் உமது திருவடியே சரணம் என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அவ்வாறு இருக்கையில் தங்களைப் பெண்ணிடம் தூது அனுப்பிய நம்பியோ வந்து தீர்ப்பது? அதற்கு இந்தச் சூலை நோயால் வருந்துதலே மேல்! இறைவா! இறைவா!

காட்சி 3:

(சுந்தரர் உலாவிக்கொண்டிடு இருக்கின்றார்.)

நம்பி: ஏயர்கோன் கலிக்காமர் எவ்வளவு பெரிய அடியவர். அப்பெரியவர் பரவை மனைக்குப் பெருமான் தூது சென்றதற்கு எவ்வளவு வருந்துகிறார். அவருக்குத் தான் பெருமான் மேல் எவ்வளவு அன்பு! அத்தகு அடியவர் வருந்தும் பிழை செய்துவிட்டேன்! இறைவன் தம்மைத் தோழமையாக அருளிய பெரும்பண்பால் அவரிட மே எல்லாமும் கேட்டுப் பெறும் நியமத்தாலன்றோ செய்தேன்! அது இவ்வடியவருக்கு மனவருத்தத்தை ஏற்படுத்திவிட்டதே!

இறைவர்: நம்பீ! கலிக்காமருக்கு உள்ள கொடிய சூலை நோயை நம் கட்டளைப்படி நீ சென்று தீர்த்து வா!

நம்பி: உத்தரவு! திருவருள் பெருமான்!

காட்சி 4:

(கலிக்காமர் சூலையால் வருந்த அவர் தேவியார் அருகில் இருக்கின்றார்.)

ஒரு பெண்: அம்மா! சுந்தரர் இங்கு வரப்போவதாக செய்தி சொல்லி அனுப்பியுள்ளார் அம்மா!

கலிக்காமர்: ஆ! வேண்டாம், நம்பி தீர்த்து இந்தச் சூலை நோய் தீரத்தேவையில்லை! உயிர் இருந்தால் தானே இச்சூலை! (வயிற்றைக் கிழித்துக் கொள்கின்றார்.)

கலிக்காமர் துணைவியார்: பெருமானே! தங்களோடு நானும் வருகின்றேன்!

(கத்தியை எடுக்க முற்படுகின்றார். அப்போது ..)

ஒரு பெண்: அம்மா! சுந்தரர் நம் வாயிலருகே வந்துவிட்டார் அம்மா!

கலிக்காமர் துணைவியார்: (கண்களைத் துடைத்துக்கொண்டு) யாரும் இங்கு அழக்கூடாது! இச்செய்தி யாருக்கும் தெரிய வேண்டாம்! சீரடியாராம் நம்பிகளை பூரண கும்பம் வைத்து வரவேற்போம்!

(நம்பிகளை வரவேற்கின்றனர்.)

நம்பி: ஏயர்கோனார் உற்ற சூலை நோயைத் தீர்க்க எம்பெருமான் கட்டளையோடு வந்துள்ளேன். பெரியவரைக் காணவேண்டும்!

பெண்: ஓ! அதெல்லாம் ஒன்றும் துன்பமில்லை! ஐயா துயில் கொண்டிருக்கின்றார்கள்!

நம்பி: துன்பமில்லை என்றால் மகிழ்ச்சி தான். என்றாலும் என் மனநிம்மதிக்காக அவரைக் கண்டே ஆக வேண்டும்! அவர் எங்கே!

(நம்பிக்கு ஏயர்கோனைக் காட்டுகின்றனர்.)

நம்பி: ஆ! இத்துயில் தான் நீங்கள் கூறியதா! இவர் முன்னம் நானும் என் உயிரைச் செலுத்துவேன்!

(நம்பி கத்தியை எடுகின்றார்.)

ஏயர்கோன்: (உயிர்பெற்று) கேளிரேயாகிக் கெட்டேன்! ஆரூரரே! தங்களது அன்பின் பெருமைக்கே அன்றோ இறைவர் தூது சென்றார். திங்கள் சூடினரேனும் திரி புரம் எரித்தனரேனும் புகழே அன்றிப் பழி இல்லாத எம்பெருமான் செய்யத் தகாத ஒன்றை என்று தான் செய்துள்ளார்? நாமே காரணம் அறியாது மயங்குகின்றோம். ஆரூரர் ஆண்ட நம்பியே நும் பெருமையே பெருமை!

நம்பி: தங்கள் பேரன்பே பேரன்பு! வாருங்கள் ஐயா! திருப்புன்கூர் இறைவரைச் சென்று வணங்குவோம்!

ஏத நன்னிலம் ஈரறு வேலி ஏயர்கோன் உற்ற இரும்பிணி தவிர்த்துக்
கோதனங்களின் பால் கறந்து ஆட்டக் கோல வெண்மணற் சிவன் தன்மேற் சென்ற
தாதை தாளற எறிந்த சண்டிக்கு உன் சடைமிசை மலர் அருள்செயக் கண்டு
பூதவாளி நின் பொன்னடி அடைந்தேன் பூம்பொழில் திருப்புன்கூர் உளானே.

 

 

 

காட்சி - 14.

இடம் : திருஅஞ்சைக்களம்.

பின்குரல் : நம்பிகள் பெருமான் சேர மன்னரின் அரண்மனையில் சிலகாலம் இருந்தார். பின்னர் திருவாரூர்ப் பூங்கோயில் வீற்றிருந்த பிரான் ஈர்க்க சேரரிடம் விடைபெற்றுச் சென்றார். தம் தோழராம் நம்பிகளுக்கு சேரர் பெரும் செல்வம் கொடுத்து அனுப்பினார். சேரமான் தோழராயினும், நம்பி ஆதி முதற்கொண்டு தம்பிரான் தோழரல்லவா? இறைவன் அச்செல்வத்தை எல்லாம் திருவிளையாட்டாகச் சிவ பூதங்களைக் கொண்டு பறிமுதல் செய்து மீண்டும் கொடுத்தருளினர். திருவாரூர் சென்று பலகாலம் இருந்த சுந்தரர் மீண்டும் சேரர் மீதுள்ள கேண்மையால் மலை நாடு வந்தனர். அவ்வாறு கொடுங்கோளூரில் இருக்கும் நாட்களில், ஒருநாள் சேர மன்னர் திருமஞ்சனத் தொழிலில் ஈடுபடும்போது, நம்பிகள் பெருமான் தனித்துத் திருஅஞ்சைக்களம் திருக்கோயிலுக்குச் செல்கின்றார்.

நம்பிகள் : பெருமானே, கயிலையில், மலை வல்லியுடன் கூட வென்றி வெள்விடைப் பாகராய் வீற்றிருக்கும் தேவரீர் திருவடியை அடையும் நாள் எந்நாளோ?

பின்குரல் : அரிய செய்கையில் அவனியில் விழுந்து எழுந்து அலைப்புறும் மனை வாழ்க்கை சரிய நம்பிகள், “தலைக்குத் தலைமாலை...” என்ற பதிகத்தைப் பாடுகின்றார்.

தலைக்குத் தலைமாலை அணிந்த தென்னே சடைமேற்கங் கைவெள்ளந் தரித்த தென்னே அலைக்கும் புலித்தோல்கொண் டசைத்த தென்னே அதன்மேற் கதநாகக் கச்சார்த்த தென்னே மலைக்குந் நிகரொப் பனவன் றிரைகள் வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண் டலைக்குங் கடலங் கரைமேல் மகோதை அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே. வீடின் பயனென் பிறப்பின் பயனென் விடையே றுவதென் மதயா னைநிற்க கூடும் மலைமங் கைஒருத் தியுடன் சடைமேற் கங்கையாளை நீசூடிற் றென்னே பாடும் புலவர்க் கருளும் பொருளென் நிதியம் பலசெய் தகலச் செலவில் ஆடுங் கடலங் கரைமேல் மகோதை அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே. எந்தம் அடிகள் இமையோர் பெருமான் எனக்கென் றும்அளிக் கும்மணி மிடற்றன் அந்தண் கடலங் கரைமேல் மகோதை அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனை மந்தம் முழவுங் குழலு மியம்பும் வளர்நா வலர்கோன் நம்பியூ ரன்சொன்ன சந்தம் மிகுதண் டமிழ்மாலை கள்கொண் டடிவீழ வல்லார் தடுமாற் றிலரே  

பின்குரல் : நம்பிகளின் பாடலிற்கு இறங்கும் கயிலைநாதனும், முன்னர் தடுத்த செய்கை முடிந்திட, தம் திருவடிச் சார்பினை தந்து அருள்வாராகி, “ஒன்றிய சிந்தை உடைய நம் ஊரனை உம்பர் வெள்ளை யானையின் மேல் ஏற்றிக் கொண்டு இங்கு வாருங்கள்” என பிரமன் முதலாய தேவர்களுக்குக் கட்டளையிட்டார்.

தேவர் : நம்பிகள் பெருமானே, கயிலை வீற்றிறுக்கும் இறைவரின் அருளிப்பாடு, தாங்கள் இவ்வெள்ளை யானையின்மேல் எழுந்தருள வேண்டுகிறோம்.

பின்குரல் : இறைவன் ஆணையினை மறுக்க இயலாதவராய், நம்பிகள் பெருமான் வெள்ளை யானையின்மேல் எழுந்தருளுகின்றார். அப்போது எல்லா உயிர்களும் கழறிய சொற்களை அறிவாராகிய தம் ஆருயிர் தோழனார் சேரமான் பெருமான் நாயனாரை தம் மனத்தினுள் நினைந்தவாறே செல்கின்றார்.

காட்சி - 15.

இடம் : சேரர் அரண்மனை.

பின்குரல் : சேர மன்னர் தன் நித்திய வழிபாட்டில் மூழ்கி இருக்கின்றார்; அப்பொழுது - இறைவர் ஆணையினை ஏற்று நம்பிகள் பெருமான் வெள்ளானையின் மேல் செல்வதை, யாவும், யாரும் கழறின அறியும் சேரமான் பெருமாள் நாயனார் அறிந்து, நம்பிகள் பெருமான் திருவடிகளைப் பற்றித் தானும் திருக்கயிலைச் செல்லத் துணிகின்றார்.

சேர மன்னர் : சிவ சிவ! என் துணையாம் தலைவர், நம்பிகள் பெருமான் வெள்ளை யானையின்மேல் கயிலாயம் செல்கிறார். அவர் திருவடிகளைப் பற்றி அடியேனும் கயிலைச் செல்வேன்.

காட்சி - 16.

இடம் : திருஅஞ்சைக்களம்.

பின்குரல் : சேரமான் பெருமான் நாயனார் ஓர் குதிரையில் மிக வேகமாக திருஅஞ்சைக்களம் செல்கிறார். ஆனால் அதற்குள் நம்பிகள் பெருமான், தேவர்கள் புடைசூழ விண்மேல் செலக்காண்கிறார்.

சேர மன்னர் : நம்பிகள் பெருமானே! என் கண்ணின் மணியாக இருக்கும் தங்களைப் பிரிந்து வாழேன்.

பின்குரல் : சேர மன்னர் தான் வந்த குதிரையின் செவியில் சிவமந்திரத்தை கூற, அக்குதிரை ஆகாயத்திலே பாய்ந்து சென்று வன்தொண்டர் பெருமானைத் தாங்கிச் செல்லும் வெள்ளை யானையை வலங்கொண்டு அதன் முன்னதாகச் சென்றது. சேரமான் பெருமான் நாயனாரின் பெருஞ்சேனை வீரர்கள், தங்கள் அன்புக்குரிய சேரர் பெருமானை பிரிய ஆற்றாது, தத்தம் உடைவாளினால் தங்களை வீழ்த்த, வீர யாக்கையினைப் பெற்று சேரர் பெருமானைச் சார முன்னே சென்று அவரது பணியினை ஏற்றனர். நம்பிகள் பெருமான் “தானெனை முன்படைத்தான்...” பதிகப் பாடலை அருளிச் செய்கிறார்.

தானெனை முன்படைத் தானத றிந்துதன் பொன்னடிக்கே நானென பாடலந் தோநாயி னேனைப் பொருட்படுத்து வானெனை வந்தெதிர் கொள்ளமத் தயானை அருள்புரிந்து ஊனுயிர் வேறுசெய் தான்நொடித் தான்மலை உத்தமனே இந்திரன் மால்பிர மன்னெழி லார்மிகு தேவரெல்லாம் வந்தெதிர் கொள்ளஎன் னைமத்த யானை அருள்புரிந்து மந்திர மாமுனி வர்இவ னாரென எம்பெருமன் நந்தமர் ஊரனென் றான்நொடித் தான்மலை உத்தமனே

காட்சி - 17.

இடம் : திருக்கயிலை.

பின்குரல் : சேரரை திருக்கயிலைக் காவலர் நந்தியம் பெருமான் தடுத்து நிறுத்த, நம்பிகள் பெருமான் திருக்கயிலாயத்தினுள் இறைவனைக் காண செல்கின்றார்.

இறைவர் : ஊரனே வந்தனை.

நம்பிகள் : கயிலைப் பெருமானே, அடியேன் செய்த பிழையினைப் பொறுத்து எனை ஆட்கொண்டு, என் பிழையினால் போந்த தொடக்கினை நீக்கி முடிவிலா நெறியாகிய தேவரீர் திருவடிப் பேற்றினை தருகின்ற பெரிய கருணை சிறியேனது தரத்திற்கு தகுதியாமோ? கயிலை நாதனே! தேவரீர் அருள்பெற வந்த சேரலன் தேவரீரது கோயிலின் திருஅணுக்கன் திருவாயிலின் புறத்தில் உள்ளார்.

இறைவர் : அவரை அழைத்து வருக.

[சேர மன்னர் சிரமேல் கைகுவித்து வருகிறார்.]

இறைவர் : சேரலனே, நாம் அழையாமல் இங்கு நீ வந்தது என்ன?

சேரர் : பெருமானே, அடியேன் நம்பிகளுடைய திருவடிகளைப் போற்றிக் கொண்டு, அவர் அருளினால் யானையில் முன்னே அவரைச் சேவித்துக் கொண்டு வந்தேன். தேவரீரது பொழிகின்ற கருணைப் பெருவெள்ளமானது அடியேனை முந்திக் கொண்டு வந்து இங்கே நிறுத்தியதால் தேவரீரது திருமுன்பு வந்து சேரும் பேறும் பெற்றேன். மணமுடைய கொன்றை மலர் மாலையினை அணிந்த சடையினையுடைய பெருமானே, மேலும், ஒரு விண்ணப்பம் உள்ளது பெருகுகின்ற வேதங்களும் முனிவர்களும் துதித்தற்கரிய பெருமையை உடையவரே! உமை அன்பினாலே திருஉலாபுறம் பாடினேன் அதனை தேவரீர் திருச்செவி சாத்தி கேட்டு அருள வேண்டும். மருவு பாசம் அகன்றிட வன்தொண்டர் கூட்டம் வைத்தாய்.

இறைவர் : சொல்லுக.

[சேரர் திருக்கயிலாய ஞான உலா பாடுகின்றார்.]

வெண்பா விரித்துரைக்கும் போழ்தில் விளங்கொளிசேர் கண்பாவு நெற்றிக் கறைக்கண்டன் - விண்பால் அரிஅரணஞ் செற்றாங் கலைபுனலும் பாம்பும் புரிசடைமேல் வைத்த புராணன் - எரிஇரவில் ஆடும் இறைவன் அமரர்குழாம் தற்சூழ மாட மறுகில் வரக்கண்டு - கேடில்சீர் வண்ணச் சிலம்படி மாதரார் தாமுண்ட கண்ணெச்சில் எம்மையே ஊட்டுவான் - அண்ணலே வந்தாய் வளைகவர்ந்தாய் மாலும் அருந்துயரும் தந்தாய் இதுவோ தகவென்று - நொந்தாள்போற் கட்டுரைத்துக் கைசோர்ந் தகமுருகி மெய்வெளுத்து மட்டிவரும் பூங்கோதை மால்கொண்டாள் - கொட்டிமைசேர் பண்ணாரும் இன்சொற் பணைப்பெருந்தோள் செந்துவர்வாய்ப் பெண்ணார வாரம் பெரிதன்றே - விண்ஓங்கி மஞ்சடையும் நீள்குடுமி வாள்நிலா வீற்றிருந்த செஞ்சடையான் போந்த தெரு

இறைவர் : ஊரனாகிய ஆலால சுந்தரனுடனே கூடி விரும்பி இருந்து நீவிர் இருவரும் சார நம் கணங்களுக்கு நாயகராகிய தலைமை பெற்று இருப்பீராக.

பின்குரல் : இரு பெருமக்களும் பணிந்து எழுந்து இறைவரது திருவளினை தலைமேல் கொண்டு நிலைபெற்ற வன்தொண்ட பெருமான் ஆலால சுந்தரராகவும், முதன்மை உடைய சேரனாரும் நன்மை சேரும் சிவ கணநாதராகி அவர்கள் செய்யும் விருப்ப மிக்க திருத்தொண்டினை மேற்கொண்டனர். வாழி மாதவர் ஆலால சுந்தரர் திருக்கயிலை நோக்கி வரும் வழியிலே அருளிச் செய்த “தானனை முன்படைத்தான்” எனும் திருப்பதிகத்தினை முந்நீர் கடலின் அரசனாகிய வருணன் திருஅஞ்சைக்களத்தில் சேர்த்து உணர்வித்தான். சேரர் பெருமான் விண்ணப்பித்தருளிய திருக்கயிலாய ஞான உலாவினை கயிலை மலையினில் உடனிருந்து கேட்ட மாசாத்தனார், இந்த நிலவுலகத்தில் வேதியர்கள் வாழும் திருப்பிடவூரில் வெளிபடச் சொல்லி அருளி கடல் சூழ்ந்த இவ்வுலகினில் எங்கும் நன்மையாலே விளங்கிட அருளினார்.

என்றும் இன்பம் பெருகும் இயல்பினால் ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட மன்றுளார் அடியார் அவர் வான் புகழ் நின்றது எங்கும் நிலவி உலகெலாம்

திருச்சிற்றம்பலம்

 

 


ஆண்ட நம்பி (சுந்தரர்) பகுதி-8 - வெள்ளை ஆனையின் மீது சுந்தரரும் - தன் புரவியின் மீது சேரரும் திருக்கயிலாயம் செல்லுதல்.

உளானே.


ஆண்ட நம்பி (சுந்தரர்) பகுதி-3a - திருமுருகன்பூண்டியில் சேரமான் கொடுத்த பொருளை சிவபூதங்கள் கவர்ந்து சிவபிரான் அருளாக மீளக்கொடுத்தல்

 


ஆண்ட நம்பி (சுந்தரர்) பகுதி-7 - அவிநாசியில் - முதலையுண்ட பாலகனை மீட்டுத் தருதல்.

 
 

Related Content

Thoughts - 64 th Nayanar

Our Savior for the life here and the other world

Remover of Hunger

Is God sectarian ?

Calling out to God