பதினோராம் திருமுறையைப் பாடிய பன்னிருவரில் ஆலவாயுடையார் முதன்மையானவர். எல்லாம் வல்ல சிவபெருமானே சொக்க நாதர் என்ற பெயருடன் மதுரையில் தங்கியிருக்கிறார். தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி வள நாட்டின் தலை நகராகிய மதுரையில் விளங்கும் `திருஆலவாய்` என்னும் திருக் கோயிலில் எளிவந்த கருணையோடு எழுந்தருளி அன்பர்கட்கு நல்லருள் வழங்கும் இறைவர் திருஆலவாயுடையார் எனப் பெறுவார். அவர் அருளிச் செய்த திருமுகப் பாசுரம் என்று அழைக்கப்படும் அருமையான பனுவலே இந்தத் திருமுறையில் உள்ள முதல் பாடலாகும்.
சிவபெருமான் பாண பத்திரரை சேரமான் கழறிற்றறிவாருக்கு அறிமுகப்படுத்தி எழுதிய கடிதம் (திருமுகம்) இது. இந்த பாடல், கடிதம் எழுதும் வடிவங்களுக்கு முன்னோடியாக, இருந்து, அனுப்புனர், பெறுநர், பொருள் என ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
இந்த அஞ்சல் பாடலின் பின்னணியில் உள்ள வரலாறு பெரிய புராணத்திலும், திருவிளையாடல் புராணத்திலும் உள்ளது.
சேரமான் பெருமாள் நாயனார் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரியுங் காலத்தில் மதுரையம்பதியில் அடியவராகிய இசைப்பாணர் ஒருவர் வாழ்ந்து வந்தார். ஆலவாய் இறைவற்கு இசைத் தொண்டு புரியும் கடமை பூண்ட அப்பாணர் பத்திரர் வறுமையுற்றார்.
பாடுவார் பசி தீர்ப்பவராகிய பரமர் அவரது வறுமை நிலையை நீக்கத் திருவளம் கொண்டார். தாமே பெருஞ்செல்வம் வழங்க வல்லவராயினும் தம்பால் பேரன்பினரான சேரமான் பெருமாளைக் கொண்டு பாண பத்திரரின் வறுமையைப் போக்கத் திருவுளத்தெண்ணினார். பாண பத்திரர் கனவில் தோன்றி `அன்பனே என்பால் நிலை பெற்ற பேரன்புடைய சேரமான் பெருமாள் கழறிற்றறிவார் என்னும் வேந்தன் பொன், பட்டாடை, நவ மணிகள் பதித்த அணிகலன் முதலியவை எல்லாம் உனக்குக் குறைவறக் கொடுப்பான், அதன் பொருட்டு ஒரு திருமுகம் எழுதித் தருகின்றோம், நீ அதனைக் கொண்டு விரைந்து மலைநாடு அடைந்து பொருள் பெற்று வருக` எனப் பணித்து இத்திருமுகப் பாசுரத்தைக் கொடுத்தருளினார்.
பாணபத்திரர் அத் திருமுகத்தைத் தலைமேற் கொண்டு போற்றியவராய் மலைநாடு அடைந்து அரண்மனை வாயிற் காவலர் மூலம் தம் வருகையைச் சேரமான் பெருமாள் நாயனாருக்குத் தெரிவித்தார். பரமனையே பாடுவாராகிய பாணபத்திரரின் வருகையை அறிந்த மன்னர் விரைந்து வந்து அவரை வணங்கித் `தாங்கள் இங்கு எழுந்தருளியது யான் செய்த தவப்பேறேயாகும்` என முகமன் கூறி அவரை அன்போடு அழைத்துச் சென்று இருக்கை நல்கி உபசரித்தார்.
பாணபத்திரர் தாம் கொணர்ந்த திருமுகத்தை வேந்தர் கையில் கொடுத்த அளவில் அம்மன்னர் ஆர்வமுற வாங்கி முடிமேல் கொண்டு ஆனந்தக் கூத்தாடினார். மொழி குழறக் கண்ணீர் வாரப் பலமுறை நிலமுறப் பணிந்து எழுந்து மீண்டும் மீண்டும் அத்திருமுகத்தைப் படித்து உளம் உருகி அப்பாசுரத்தைப் படி எடுத்துக் கொள்ளுமாறு செய்து தம் உரிமைச் சுற்றத்தினர் முதலானோரை அழைத்துத் தமது நிதி அறையிலிருந்து பல்வகைப் பொருள்களையும் பொதி செய்து வருமாறு கட்டளையிட்டார். அவ்வாறு அவர்கள் கொண்டு வந்த பொருள்களின் பரப்பையெல்லாம் பாணபத்திரர்க்குக் காட்டி இப்பொருள்களோடு யானை குதிரை முதலிய சேனைகளையும் இந்நாட்டு ஆட்சி உரிமையையும் ஏற்றருள வேண்டும் என வேண்டி நின்றார்.
சேரமன்னரின் கொடைத்திறத்தைக் கண்டு வியந்த பாண பத்திரர் `வேந்தர்பிரானே என்னுடைய சுற்றத்தவரைப் பேணுதற்குப் போதுமான பொருள்களை மட்டுமே அடியேன் தங்கள்பால் பெற்றுக் கொள்ள வேண்டும்` என்பது இறைவன் ஆணை ஆதலின் ஆட்சி உரிமையையும் அதற்கு வேண்டுவனவாய படைகளையும் தாங்களே கைக்கொண்டருள வேண்டும் என்று கூறிச் சேரர் கோவை வணங்கி நின்றார்.
சேரமானும் அவ்வாணையை மறுத்தற்கு அஞ்சி அவரது வேண்டுகோளுக்கு உடன்பட்டுப் பாணபத்திரரைப் பெரும் பொருளுடன் யானை மேல் ஏற்றி வழியனுப்பி வைத்தார். பாணபத்திரர் அப்பெருஞ் செல்வத்துடன் மதுரையை அடைந்து ஆலவாய் இறைவனைப் போற்றி இன்னிசையால் பரவும் திருத்தொண்டினைச் செய்து கொண்டு இனிதே வாழ்ந்து வந்தார்.
இத் திருமுகப் பாசுரம் எழுந்த காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டாகும்.
See Also:
1. பதினோராம் திருமுறை - திருமுகப் பாசுரம்
2. சேரமான் பெருமாள் கழறிற்றறிவார்
3. பெரிய புராணம்
4. திருவிளையாடல் புராணம்