logo

|

Home >

devotees >

kazharitru-arivaar-seraman-peruman-payanar-puranam

கழறிற்று அறிவார் (சேரமான் பெருமாள்) நாயனார் புராணம்

 

Kazharitru Arivaar (Seraman Peruman) Nayanar Puranam

யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது

காவலர்ம கோதையார் கொடுங்கோ ளூர்க்கோக்    கழறியவை யறிந்தகோச் சிலம்போசைக் கருத்தார் நாவலர்கோ னண்பரடிச் சேர னென்றே    நவின்றுவரும் வண்ணானை நயந்த கோநற் பாவலர்கோப் பாணபத் திரனால் வாய்ந்த    பரமர்திரு முகம்வாங்கிப் பணிகோ வெற்பின் மேவியகோ வானைக்குக் குதிரை வைத்த    வீரர்கோ வெனையாளுஞ் சேரர் கோவே.

மலைநாட்டிலே, இராஜதானியாகிய மகோதையென்னும் பெயரையுடைய கொடுங்கோளூரிலே, சேரர்குடியிலே பெருமாக் கோதையாரென்றும் பெயரையுடைய ஒரு சற்புத்திரர் சைவநெறி வாழும்படி அவதரித்தார். அவர் பாலியதசையிலே தானே, வியாதிபீடையினால் வருஞ் சனனவைராக்கியம் தன்னுடைய தேகதோஷத்தைக் கண்டும்வருந் தேவவைராக்கியம், சகல சம்பத்துக்களையும் குறைவற அநுபவித்து இனிப்போதும் என்று வரும் ஐசுவரிய வவராக்கியம். ஆன்மிக தைவிக உற்பெளதிகங்களினாலே வரும் பிரபஞ்ச வைராக்கியம், அருத்தத்தைத் தேடு தலினாலுங்காத் தலினாலுங் கள்ளர்கொண்டு போதலினாலும் உண்டாகுந்துக்கம்பற்றி வருந் திரவியவைராக்கியம், தாய் தந்தை மனைவி மைந்தர் சுற்றத்தார் நண்பர் முதலாயினாரைப் பிரிந்த துக்கத் தினாலே கூட்டமெல்லாம் பிரித்த காலத்திலே துக்கத்துக்கு எதுவென்று வருஞ் சங்கவைராக்கியம், காமுகனாயிருக்கின்றவன் தான் மோகிக்கப்பெற்ற ஸ்திரீயினிடத்திலே குணத்திலாயினும் தேகத்திலாயினும் வைராக்கிய ஏதுவாகிய ஒரு தோஷத்தைக் கண்டபோது வரும் ஸ்திரீ வைராக்கியம், அன்னபானாதிகள் ஒருபொழுது இல்லாதிருக்கினும் தேகம் நில்லாது எத்தனைநாள் எத்தனைவகையாகப் புசித்தாலும் திருத்தியடையாது என்று வரும் போசனவைராக்கியம், தானத்துக்குப் போய்த் தள்ளுண்டதனால் வரும் பிரதிக்கிரகவைராக்கியம், இகத்திலே இப்படிப் பட்டதொரு எதுவுமின்றிப் பூர்வஜன்ம சிவபூஜா புண்ணிய பலத்தினாலே தேகாதியாகிய சர்வவஸ்துக்களிலும் வரும் வைராக்கியம் என்னும் பத்துவகை வைராக்கியங்களுள் இறுதியில் நின்ற நிருகேதுகமாகிய உத்தமவைராக்கியத்தையுடையவராகி, சிவபெருமானுடைய திருவடியை அடைதல் வேண்டுமெனக்கருதி, இராஜபுத்திரருக்குரிய தொழில்களைச் செய்தலின்றி, திருவஞ்சைக்களமென்னுஞ் சிவஸ்தலத்தை அடைந்து, "பரமசிவன் சுவதந்திரர், நாம் பரதந்திரர்" என்று உணர்ந்து, சிவாதீனமாய் நின்று, தினந்தோறும் பிராம முகூர்த்தத்தில் எழுந்து, ஸ்நானம்பண்ணி அநுட்டானஞ் செய்து கொண்டு, திருநந்தனவனம் வைத்தல், பூக்கள் பறித்தல், திருமாலை கட்டல், திருவலகிடல், திருமெழுக்கிடல், திருப்பாட்டுப்பாடல் முதலிய த் திருத்தொண்டுகளைச் செய்வாராயினார்.

இப்படி நிகழுங் காலத்திலே, செங்கோற்பொறையன் என்னுஞ் சேரமகாராஜனுக்கு இது நித்தியம் இது அநித்தியம் என்கின்ற பகுத்தறிவும், அநித்தியமாகிய இம்மை மறுமை யின்பங்களின் வெறுப்பும், பிறவித்துன்பங்களும், அவன் செய்த புண்ணிய பலத்தினாலே தோன்றின. அவை தோன்றவே, நித்தியமாகிய மோக்ஷத்திலே ஆசை உண்டாயிற்று. அதனால் அவன் பிறவிக்குக் காரணமாகிய வீண் முயற்சிகளை விட்டு, கோக்ஷத்திற்குக் காரணமாகிய யோக முயற்சியைச் செய்யவேண்டுமென்று தெளிந்து, அரசியற்றுதலினின்று நீங்கி, தவஞ்செய்யும் பொருட்டுத் தபோவனத்தை அடைந்தான்.

Kazharitrarivar Nayanar - Kazharitrarivar (Cheraman Perumal) Nayanar - Part Iமந்திரிமார்கள் சிலநாள் ஆலோசித்துத் தெளிந்து, திருவஞ்சைக்களத்திலே திருத்தொண்டுசெய்து கொண்டிருக்கின்ற அச்சேரர் மரபிற்கு முதல்வராகிய பெருமாக்கோதை யாரிடத்திலேபோய், அவரை வணங்கி நின்று, "இம்மலைநாட்டை நீரே முடிசூடி அரசியற்றல்வேண்டும்" என்று விண்ணப்பஞ்செய்ய; பெருமாக்கோதையார் "இவர்கள் வார்த்தை இன்பமயாகிய திருத்தொண்டுக்கு இடையூறாயிருக்கின்றது. சிவபத்தியிலே சிறிதும் வழுவாது அரசியற்றுதற்குத் திருவருள் உளதாயின், இதனை எம்பெருமானுக்கு விண்ணப்பஞ்செய்து அறிவேன்" என்று ஆலயத்தினுள்ளே பிரவேசித்து, சிவபெருமானை வணங்கி விண்ணப்பஞ்செய்து, அவருடைய திருவருளினாலே அவரிடத்தே வைத்த பத்திவழுவாது அரசியற்றுஞ் சத்தியையும், யாரும் யாவும் கழறினவைகளனைத்தையும் அறியும் அறிவையும், பாசமில்லாத மகாபராகிரமத்தையும் பெருங் கொடையையும், அரசருக்கு உரியபடை வாகனமுதலிய வெல்லாவற்றையும் கைவரப் பெற்று, நமஸ்கரித்துக்கொண்டு, புறத்தணைந்து, மந்திரிமார்களுடைய வேண்டுகோளுக்கு உடன்பட்டார். மந்திரிமார்கள் பெருங்களிப்புடையர்களாகி, அவரை நமஸ்கரித்தார்கள்.

கழறிற்றறிவாராகிய அப்பெருமாக்கோதையார், ஆன்மார்க்களெல்லாம் உய்யும் பொருட்டுச் சுபதினத்திலே சுபமுகூர்த்தத்திலே முடி சூடி, சிவாலயத்தை வலஞ்செய்து, சந்நிதானத்திலே விழுந்து நமஸ்கரித்து எழுந்து, யானை மேற்கொண்டு, கொற்றக்குடையும் வெண்சாமரமும் உரியவர்கள் தாங்க, மகா அலங்காரத்தோடு நகரிவலஞ் செய்தார். செய்யும்பொழுது, ஒருவண்ணான் தோளிலே உவர்ப்பொதி சுமந்துகொண்டு தமக்கு முன்னே வரக்கண்டு, அவனுடைய சரீரம் மழையினாலே கரைந்த உவர் ஊறப்பெற்று வெளுத்திருத்தலால், விபூதியை உத்தூளனஞ் செய்த சிவனடியாரது திருவேடம்போலுதலை உணர்ந்து, அந்த க்ஷணத்திலேதானே யானையினின்றும் இறங்கி பேராசையோடு விரைந்துசென்று, கைதொழுதார். அது கண்டவுடனே அவ்வண்ணான் மனங்கலங்கி, அவரை விழுந்து நமஸ்கரித்து, "அடியேனை யார் என்றுகொண்டது? அடியேன் அடிவண்ணான்" என்று சொல்ல; சேரமான் பெருமாணாயனாரும் "அடியேன் அடிச்சேரன். தேவரீர் திருநீற்றுவேடத்தை நினைப்பித்தீர். வருந்தாதே போம்" என்று சொல்லியருளினார். மந்திரிமார்கண் முதலாயினோரெல்லாரும் சேரமான்பெருமாணாயனாருடைய சங்கமபத்தி மிகுதியைக் கண்டு, ஆச்சரியமடைந்து, சிரசின்மேலே அஞ்சலி செய்து தோத்திரம் பண்ணினார்கள். சேரமான் பெருமாணாயனார் யானைமேலேறி, நகரியை வலங்கொண்டு மாளிகை வாயிலிலே புகுந்து, யானையினின்றும் இறங்கி மண்டபத்தை அடைந்து, இரத்தினசிங்காசனத்திலேறி, வெண்கொற்றக் குடைநிழற்ற, வெண்சாமரம் வீச, அரசர்கள் மலர்தூவி வணங்கித் துதிக்க, வீற்றிருந்தருளினார். இங்ஙனமிருந்து, மனுநீதிநெறியை நடத்தி, எண்ணிறந்த அரசர்கள் திறைகொணர அகத்தும் புறத்தும் பகையை அறுத்து, சைவ சமயம் அபிவிருத்தி யாகும்படி அரசியற்றுவாராயினார்.

அந்நாயனார் தில்லையின்கணுள்ள திருச்சிற்றம்பலத்திலே ஆனந்ததாண்டவஞ் செய்தருளுஞ் சபாநாயகருடைய திருவடித் தாமரைகளே தாந்தோடும்பொருளும் தமக்குரிய பெருந்துணையுமென்று தெளிந்த மெய்யறிவினாலே, அத்திருவடியை மிகுந்த அன்பினோடு சைவாகமவிதிப்படி எந்நாளும் பூசிப்பாரானார். பூசைமுடிவிலே சபாநாயகர் அவரைத் தமது திருச்சிலம் பொலியை கேட்பிப்பாராயினார். சேரமான்பெருமாணாயனார் சிவனடியார்களுக்குந் தரித்திரர்களுக்குங் கனகமாரிபொழிகின்றவராகி, பரமசிவனுக்கு உரிய பல யாகங்களைச் செய்தார்.

இப்படி நிகழுங்காலத்திலே, பாண்டிநாட்டிலே மதுரையில் எழுந்தருளியிருக்குஞ் சோமசுந்தரக்கடவுள் தம்மை அன்பினோடும் இசைப்பாட்டினாலே துதிக்கின்ற பாணபத்திரருக்குப் பெருஞ் செல்வத்தைக் கொடுத்தருளுதற்குத் திருவுளங்கொண்டு, இரவில் அவருக்குச் சொப்பனத்திலே தோன்றி, "உனக்குப்பொன் இரத்தினம் பட்டாடை முதலியவைகளெல்லாவற்றையும் நீ வேண்டியபடி குறைவின்றித் தரும்பொருட்டு, நம்மேல் எப்பொழுதும் அன்புடையனாகிய சேரனுக்கு ஓலை தருவோம் தாழ்க்காமற்போய் வா" என்று அருளிச் செய்து,

"மதிமலி புரிசை மாடக் கூடற் பதிமிசை நிலவு பானிற வரிச்சிற கன்னம் பயில்பொழி லால வாயின் மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம் பருவக் கொண்முப் படியெனப் பாவலர்க் குரிமையி னுரிமையி னுதவி யொளிதிகழ் குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச் செருமா வுகைக்குஞ் சேரலன் காண்க பண்பா லியாழ்பயில் பாண பத்திரன் றன்போ லென்பா லன்பன் றன்பாற் காண்பது கருதிப் போந்தனன் மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே" 

என்னுந் திருப்பாசுரத்தை வரைந்த திருமுகத்தைக் கொடுத்தருளினார்.

பாணபத்திரர் அத்திருமுகத்தைத் தலைமேற்கொண்டு, அப்பொழுதே புறப்பட்டு, மலைநாட்டிற்சென்று, கொடுங்கோளுரை அடைந்து, மாளிகைக்கு முன்வந்து, சேரமான் பெருமாணாயனாருக்கு அறிவித்தார். உடனே அவர் சிரசின் மேலே கைகுவித்து, மிகுந்த அன்பினோடுங் கண்ணீர் சொரிய எழுந்து மாளிகைக்குப் புறத்தில் வந்து, பாணபத்திரரைப் பல முறை வணங்கி, "சுவாமி! தேவரீர் அடியேனை ஒருபொருளென மதித்துத் திருமுகங் கொண்டு வந்தீரே" என்றார். அப்பொழுது பாணபத்திரர் சிவபிரானுடைய திருமுகத்தைக் கையிலே கொடுத்து வணங்க, சேரமான்பெருமாணாயனார் அதனை முடிமேற்கொண்டு கூத்தாடி, மொழி குழற, ஆன்ந்தவருவி சொரிய, பரவசராய்ப் பூமியிலே பலமுறை விழுந்தார். திருமுகத்தைப் பலதரம் வணங்கி, அதனை வாசித்து, திருவருளைத் துதித்து; மாளிகையினுள்ளே புகுந்து, மந்திரிமார்களை நோக்கி, "நம்முடைய குல மாளிகையில் இருக்கின்ற பண்டாரமுழுதையும் பொதி செய்து ஆளின்மேல் ஏற்றிக் கொண்டு வாருங்கள்" என்று ஆஞ்ஞாபிக்க; அவர்கள் ஏற்றிக் கொண்டுவந்து வணங்கினார்கள். சேரமான்பெருமாணாயனார் பாணபத்திரருக்கு அந்தத் தனங்களை வெவ்வேறாகக் காட்டி, "சுவாமீ! தேவரீர் இவைகளையும் யானை குதிரை தேர் காலாள் என்னுஞ் சதுரங்கங்களையும் அடியேனுடைய அரசையுங் கைக்கொண்டருளும்" என்று சொல்ல, பாணபத்திரர் தமக்குச் சேரமான்பெருமாணாயனார் தந்த தனங்களெல்லாவற்றையுங் கண்டு, மனமகிழ்ந்து, அதிசயித்து, அவரைநோக்கி, "சுவாமீ! அடியேன் எனக்கு வேண்டுவனவற்றை மாத்திரங்கொள்ளும் பொருட்டே சிவாஞ்ஞை அரசையும் அரசுறுப்பையும் தேவரீரே கைக்கொண்டருளும்" என்று சொல்லி வணங்கினார். சேரமான்பெருமாணாயனாரும் சிவாஞ்ஞையை மறுத்தற்கு அஞ்சி, அதற்கு உடன்பட்டார் பாணபத்திரர்தனங்களெல்லாவற்றையும் யானை குதிரை உள்ளிட்டனவற்றுள் வேண்டுவனவற்றையுங்கொண்டு, ஓர் யானைமேல் ஏறிக்கொண்டுபோனார். சேரமான்பெருமாணாயனார் பாணபத்திரருக்குப் பின் கண்ணீர் சொரிய, கைதொழுது கொண்டு செல்ல, பாணபத்திரர் நகர்ப்புறத்தில் அவரிடத்திலே விடைபெற்றுக்கொண்டு போய், மதுரையை அடைந்தார்.

சேரமான்பெருமாணாயனார், ஒருநாள் முன்போலப் பூஜாந்தத்திலே சபாநாயகருடைய திருச்சிலம்பொலி தமக்குக் கேளாதொழிய, மனமயங்கி, 'அடியேன் யாது பிழை செய்தேனோ" என்று பொருமி "இனி இந்தத் தேகத்தினால் அடையும் பேரின்பம் யாது" என்று உடைவாளை உருவித் தமது மார்பிலே நாட்ட, சபாநாயகர் விரைந்து திருச்சிலம்பொலியைக் கேட்பித்தார். உடனே நாயனார் உடைவாளை அகற்றி நமஸ்காரம் பண்ணித் தோத்திரஞ்செய்து, "எம்பெருமானே! அத்திருவருளை முன் செய்யாதொழிந்தது என்னை" என்றார். அப்பொழுது சபாநாயகர் சைவசமயாசாரியராகிய சுந்தரமூர்த்தி நாயனாரை நினைப்பிக்கும் பொருட்டு, எதிர் நின்றருளாது, "வன்றொண்டனாகிய சுந்தரன் கனகசபையின் கண்ணே நமது ஆனந்த நிருத்தத்தை வந்து வணங்கிப் பதிகம் பாடுதலால், நாம் நின்று அதனைக் கேட்டு வரத்தாழ்த்தோம்" என்னுந்திருவாக்கை அருளிச் செய்தார். சேரமான்பெருமாணாயனார் "அடியார்களுக்கு இவர் அருளுங்கருணை இருந்தவாறு என்னை" என்று வியந்து கனகசபையை வணங்கி வன்றொண்டரையும் தரிசித்தல் வேண்டும் என்று விரும்பி, சுபதினத்திலே திருவஞ்சைக்களத்தில் எழுந்தருளியிருக்கும் கடவுளை வணங்கிக் கொண்டு, சேனைகளோடு புறப்பட்டுப்போய்ச் சிதம்பரத்தை அடைந்து, கனகசபையிலே திருநிருத்தஞ்செய்தருளும் சபாநாயகரை வணங்கி, சிவானந்தக்கடலுள் அமிழ்த்தி, பொன்வண்ணத்தந்தாதி பாடியருளினார். சபாநாயகர் அதற்குப் பரிசிலாகத் தமது குஞ்சிதபாதத்தினது திருச்சிலம்பின் ஓசையை எதிரே கேட்பித்தார். சேரமான்பெருமாணாயனார் காலந்தோறும் சபாநாயகரைத் தரிசனஞ் செய்து கொண்டு அத்திருப்பதியில் இருந்தார்.

சிலநாளாயினபின், சுந்தரமூர்த்திநாயனாரைத் தரிசித்து வணங்குதற்கு விரும்பிப் புறப்பட்டு, இடையில் உள்ள சிவஸ்தலங்களை வணங்கிக்கொண்டு, திருவாரூரை அடைந்து, தம்மை எதிர்கொண்ட சுந்தரமூர்த்திநாயனாரை நமஸ்கரித்து, அவரோடு திருக்கோயிற்சென்று, வன்மீகநாதரை வணங்கி, திருமும்மணிக்கோவைபாடி, பரவையார் வீட்டிலே போய், சுந்தரமூர்த்திநாயனாரோடும் இருந்தார். சிலதினஞ் சென்றபின், சுந்தரமூர்த்திநாயனாரோடும் திருவாரூரை அகன்று, வேதாரணியத்தை அடைந்து, சுவாமிதரிசனஞ் செய்து, திருவந்தாதி பாடினார். அதன்பின் பாண்டிநாட்டிற் சென்று, அங்குள்ள மதுரை முதலாகிய திருப்பதிகளை வணங்கிக் கொண்டு, சுந்தரமூர்த்திநாயனாரோடுந் திருவாரூருக்குத் திரும்பிவந்து, அவரோடுஞ் சுவாமிதரிசனஞ் செய்து கொண்டிருந்தார். பலநாட்சென்றபின், சுந்தரமூர்த்திநாயனாரைத் தம்முடைய ஊருக்கு வரும்படி பிரார்த்தித்து, அழைத்துக் கொண்டு சென்று, தம்முடைய கொடுங்கோளுரை அடைந்து, அவரோடும் இருந்தார். ஒருநாள் சுந்தரமூர்த்திநாயனார் வன்மீகநாதரை நினைத்து உருகி, திருவாருருக்குப் போம்படி எழுந்துசெல்ல; சேரமான்பெருமாணாயனார் பிரிவாற்றாதவராகி, எழுந்து அவரைப் பின்றொடர்ந்து, போகாதபடி தடுத்து, அதற்கு அவர் உடன்படாமை கண்டு, மந்திரிகளைக் கொண்டு தம்முடைய திருமாளிகையில் உள்ள பண்டாரமுழுதையும் பொதிசெய்து ஆட்களின்மேலே ஏற்றுவித்து, சுந்தரமூர்த்திநாயனாருக்கு முன் செல்லும்படி அனுப்பி, அந்நாயனாரை விழுந்து நமஸ்கரித்தார். சுந்தரமூர்த்திநாயனார் சேரமான்பெருமாணாயனாரைத் தழுவி, விடைகொடுத்துச் சென்று, திருவாரூரை அடைந்தார். சுந்தரமூர்த்திநாயனாரிடத்திலே விடைபெற்ற சேரமான்பெருமாணாயனார் சுந்தரமூர்த்திநாயனார் மறவாத சிந்தையோடு, கொடுங்கோளுரிலே அரசு செய்து கொண்டிருந்தார்.

Cheraman and Sundarar towards Kailashநெடுநாளாயினபின், சுந்தரமூர்த்திநாயனார் பின்னுங் கொடுங்கோளூருக்கு வந்து, சேரமான்பெருமாணாயனாரோடும் எழுந்தருளியிருந்தார். பலநாளாயினபின், ஒருநாள் சேரமான்பெருமாணாயனாரோடும் எழுந்தருளியிருந்தார். பலநாளாயினபின், ஒருநாள் சேரமான்பெருமாணாயனார் ஸ்நானம் பண்ணும்பொழுது, சுந்தரமூர்த்திநாயனார் திருக்கைலாசத்துக்குப் போய், சுவாமிதரிசனஞ்செய்து, திருக்கைலாசத்தினின்றும் சிவபெருமானால் அனுப்பப்பட்ட வெள்ளையானையின்மேல் ஏறி, தம்முடைய தோழராகிய சேரமான்பெருமாணாயனாரை நினைத்துக்கொண்டு சென்றார். சேரமான்பெருமாணாயனார் சுந்தரமூர்த்திநாயனாருடைய செயலை அறிந்து, அந்தக்ஷணத்தில் அருகிலே நின்ற ஓர் குதிரையில் ஏறிக்கொண்டு திருவஞ்சைக்களத்துக்குப்போய் வெள்ளையானையின் மேற்கொண்டு ஆகாயத்திற் செல்லுஞ் சுந்தரமூர்த்திநாயனாரை கண்டு, தாம் ஏறிய குதிரையின் செவியிலே ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஓதியருளினார். உடனே அந்தக் குதிரையானது ஆகாயத்திலே பாய்ந்து சுந்தரமூர்த்திநாயனாருடைய வெள்ளையானையை அடைந்து, அதனை வலஞ்செய்து அதற்கு முன்னாகச் சென்றது. சேரமான்பெருமாணாயனாருடைய படைவீரர்கள் குதிரையிற்செல்லும் அந்நாயனாரைத் தங்கள் கண்ணுக்குப் புலப்படும் எல்லை வரைக்கும் ஆகாயத்திலே கண்டு, பின் காணாமையால், மிகுந்த திடபத்தியினாலே உருவிய உடைவாட்களினால் தங்கள் தங்கள் தேகத்தை வீழ்த்தி, வீரயாக்கையைப் பெற்றுப்போய், சேரமான்பெருமாணாயனாருக்கு முற்பட்டு, அவரைச் சேவித்துக் கொண்டு சென்றார்கள். சேரமான்பெருமாணாயனாரும் சுந்தரமூர்த்திநாயனாரும், திருக்கைலாசத்தின் தெற்குவாயிலுக்கு முன் போனவுடனே, குதிரையினின்றும் யானையினின்றும் இறங்கி, பலவாயில்களையும் கடந்து, திருவணுக்கன்றிரு வாயிலை அடைந்தார்கள். அங்கே சேரமான்பெருமாணாயனார் தடைப்பட்டு நிற்க; சுந்தரமூர்த்திநாயனார் உள்ளே போய்ச் சிவசந்நிதானத்திலே விழுந்துநமஸ்கரித்து எழுந்து, ஸ்தோத்திரம்பண்ணி, "சுவாமீ! தேவரீருடைய திருவடிகளை அடையும் பொருட்டுச் சேரமான்பெருமான் திருவணுக்கன்றிருவாயிலின் புறத்திலே வந்து நிற்கின்றார்" என்று விண்ணப்பஞ்செய்தார். பரமசிவன் சேரமான்பெருமாணாயனாரை உள்ளே அழைப்பிக்க; அவர் விரைந்து வந்து சந்நிதானத்திலே நமஸ்கரித்துத் தோத்திரம்பண்ணினார். பரமசிவன் திருமுறுவல்செய்து, "இங்கே நாம் அழையாதிருக்க, நீ வந்ததென்னன" என்று அருளி செய்ய, சேரமான்பெருமாணாயனார் அஞ்சலி செய்து நின்று, "சுவாமீ! சுந்தரமூர்த்தி நாயனாருடைய திருவடிகளைத் துதித்து அவர் ஏறிய வெள்ளையானைக்குமுன் அவரைச் சேவித்துக்கொண்டு வந்தேன். தேவரீர் பொழிகின்ற பெருங்கருணைவெள்ளம் முன்கொண்டு புகுதலால், திருமுன்பு வரப்பெற்றேன். இனி ஒரு விண்ணப்பம் உண்டு, அரிபிரமேந்திராதிதேவர்களாலும் முனிவர்களாலும் வேதங்களாலும் துதிக்கப்படுதற்கு அரிய பெருமையையுடைய தேவரீர்மேல் அன்பினாலே தேவரீரது திருவருள்கொண்டு திருவுலாப்பாடினேன். அதனைத் தேவரீர் திருச்செவி சாத்தல்வேண்டும்" என்று விண்ணப்பஞ்செய்தார். அப்பொழுது சிவபெருமான் "சேரனே! அவ்வுலாவைச் சொல்லு" என்று திருவாய்மலர்ந்தருள; சேரமான்பெருமாணாயனாரும் அதனைக் கேட்பித்தார். சிவபெருமான் அதற்கு அருள்செய்து, "நம்முடைய கணங்களுக்கு நாதனாய் இரு" என்று திருவாய்மலர்ந்தருளினார். சேரமான்பெருமாணாயனார் சிவகணநாதராகிச் சுவாமியைச் சேவிப்பாராயினார். அவர் அருளிச்செய்த திருக்கைலாயஞானவுலாவைத் திருக்கைலாசகிரியிலே அன்று கேட்ட மாசாத்தரானவர் அதனைத்தரித்து, தமிழ்நாட்டிலே உள்ள திருப்பிடவூரிலே, வெளிப்படச்சொல்லி, பூமியிலே விளங்கும் பொருட்டு நாட்டியருளினார்.

திருச்சிற்றம்பலம்.

 


கழறிற்று அறிவார் (சேரமான் பெருமான்) நாயனார் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது

1. திருவடிச்சிலம்பொலி கேட்டல்

வழிபாட்டு முறையிற் புறத்திற் கையாளும் மூர்த்தி தரிசனம் சார்பான காரியங்கள் அகப்பேறாகிய ஆன்ம விமோசனத்துக்குச் சாதனங்களாகி அது பலனுறுதல் எப்படி என்ற விசாரத்துக்குச் சுவாரஸ்யமான விளக்கஞ் சைவத்திலுண்டு. புறத்திற்கொள்ளப்படுந் தர்சனமூர்த்தங்களுக்கும் புறவுலகாகிய அண்டத்தில் அவ்வவற்றின் இருப்புநிலைகளுக்கும் நேரொத்த மூர்த்தங்களும் இருப்பு நிலைகளும் அகவுலகாகிய பிண்டத்திலும் ஆங்காங்கு அமைந்திருக்கும் உண்மையைச் சிவயோக தரிசன மூலமும் நிறுவியுள்ளது சைவம். அது திருவாதவூரடிகள் புராணத்தில் அண்டபிண்ட சமத்துவந்தெரிவிக்கும், "எண்டரும் பூதமைந்தும் எய்திய நாடி மூன்றும் மண்டலம் மூன்றுமாகி மன்னிய புணர்ப்பினாலே பிண்டமு மண்டமாகும் பிரமனோ டைவராகக் கண்டவர் நின்றவாறும் இரண்டினுங் காணலாமே" என்னுஞ் செய்யுளான் விளங்கும். அவ்வகையில் அண்டமாகிய புறத்திற் பிரசித்தமாகிய சிற்றம்பலம் அங்கு நிகழுந் திருநடனம் என்பன பிண்டமாகிய அகத்திலும் உளவாதல், "நெற்றிக்கு நேரே புருவத்திடைவெளி உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம் பற்றுக்குப் பற்றாய்ப் பரமனிருந்திடஞ் சிற்றம்பலமென்று தேர்ந்து கொண்டேனே" என்னுந் திருமந்திரத்தானும் "பன்னிரண்டு காலான புரவியப்பா பாங்காக மூலவெளி தன்னில் நிற்கும் நன்னயமாய் வாசிதனிலேறிக் கொள்ளு நாட்டியந்த நடுவீடு தன்னிற் சென்றால் முன்னின்ற முப்பாழுக் கப்பா லேறி முகப்புண்டு முச்சந்தி வந்து கூடும் சின்னஞ்சிறு வாசல்கடந் தப்பாற் சென்றாற் சிதம்பரமுங் கண்டு முத்தி சித்தியாமே" எனவரும் அகஸ்தியர் சுத்தஞானச் செய்யுளானும் நீடுஞ் சிரசிடைப் பன்னிரண்டங்குலம் ஓடும் உயிரெழுத்தோங்கி யுதித்திட நாடுமின் நாதாந்த நம்பெருமான்நடம் ஆடுமிடந் திருஅம்பலந்தானே" என்னுந் திருமந்திரத்தானும் புலனாம். "இங்ஙனம் பிண்டஞ் சார்ந்த இவ்வகைத் தரிசனங்கள் தோன்றி வலுவுறுதற் பொருட்டே இவற்றுக்குச் சமானமான அண்டஞ் சார்ந்த புறவழிபாடுகள் உளவாயின என்பதும் தாமாகத் தம் அகத்தில் இவற்றைத் தரிசிக்கப் பேறு பெற்ற பழையோர்களாகிய மஹான்களின் வாயிலாகவே புற வழிபாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டாயின என்பதும் இத்தொடர்பிற் கருதத்தகும். இனி இச்சிதம்பரதரிசனம் நடன தரிசனங்கள் போன்றே நடனத்தில் இடம் பெறுவதாகிய திருவடிச்சிலம்பொலி கேட்டலும் அகத்தில் உளதாதல் பின்வருமாற்றால் விளங்கிக் கொள்ளப்படும்.

முன் வந்துள்ள திருமூலநாயனார் புராண சூசனத்தில், சிவயோகமாவது குண்டலினி சத்தியை அதிட்டித்து நிற்கும் திருவருட்சக்தியால் விளக்கமுறும் மேதாகலை முதலாகிய பிராசாத கலைகள் பதினாறிலும் ஆன்ம உணர்வு படிமுறைக் கிரமமாக மேலேறிச் சென்று பதினாறாங் கலையாகிய உன்மனா கலைக்கும் மேல் விளங்கும் சிவத்தைச் சார்ந்து அதனோடியைதலாகும் எனக் காணப்பட்டதுண்டு.

அக்கலைகள் பதினாறில் முன்னுள்ள எட்டும் ஆதார கலைகள், அடுத்த எட்டும் நிராதார கலைகள் எனவுங் கண்டதுண்டு. அவ்வாதார கலைகளில் ஏழாங் கலையாகிய நாதகலையும் எட்டாங்கலையாகிய நாதாந்த கலையுஞ் சேர்ந்த வளாகத்தில் ஆன்ம உணர்வு அழுந்தும் போது நாதத்தின் தன் இயல்பாகிய நிர்மலமான ஒலி ஆன்மாவினாற் கேட்கப்பெறும். அதுவும் அவரவர் ஆன்மிக நிலை வேறுபாட்டை அநுசரித்து நின்று அதனை வழங்குந் திருவருட்செயலாற் பலவித ஒலியாயிருக்கும் என்பர். அது திருமந்திரத்தில், "மணி கடல் யானை வார்குழல் மேகம் அணிவண்டு தும்பி வளை பேரிகையாழ் தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும் பணிந்தவர்க்கல்லது பார்க்கவொண்ணாதே" - "சத்தியார் கோயில் வலமிடஞ்சாதித்தால் மத்தியானத்திலே வாத்தியங் கேட்கலாம்" எனவும் விநாயகரகவலில், "சத்தத்தினுள்ளே சதாசிவங்காட்டி" எனவும் வருவனவற்றாற் பெறப்படும். மேல், ஆதார யோக முடிவாகிய நாதாந்த கலைகடந்து நிராதார யோகத்திற் சத்திகலை முதலாக உன்மனாகலையீறாக ஆன்ம உணர்வு பிரவர்த்தித்துச் சென்று அப்பாலாகிய பரவிந்து பரநாத தரிசனம் பெறுகையிலும் அப்பரவிந்துவாகிய திருவடியிலமையும் பரநாதமாகிய சிலம்போசை ஆன்மாவினாற் கேட்கப் பெறும். அந்த ஓசை வழியே நாடிச்சென்று கூடி அந்த ஓசை முடிந்தவிடத்தே தன்னுடைய போதமும் ஒக்க முடியில் அப்பொழுதே அம்முடிவிடமே தனக்கு இடமாகக் கொண்டிருக்கும் நடராசப்பெருமான் தமது காருண்ய சக்தியுடனே கூடி அம்பலமாகிய ஞானஒளியில் வந்து ஆன்மாவுக்குத் தன்னைத் தரிசிப்பித்தருளுவார். அது, சிவஞான அநுபவநூலாகிய திருவுந்தியாரில் "திருச்சிலம்போசை ஒலி வழியே சென்று நிருத்தனைக் கும்பிடென்றுந்தீபற நேர்பட அங்கேநின்றுந்தீபற" எனவும் திருக்களிற்றுப்படியாரில், "ஓசையெலாம் அற்றால் ஒலிக்குந் திருச்சிலம்பின் ஓசை வழியேசென் றொத்தொடுங்கில் ஓசையினின் அந்தத்தான் அத்தான் அரிவையுடன் அம்பலத்தே வந்தொத்தான் அத்தான் மகிழ்ந்து" எனவும் வரும். இங்ஙனம் திருவருள் ஞானப் பேறாகத் திருச்சிலம்போசை கேட்டு அதன் வழிச் சிவனைத் தரிசிக்க வல்லார் விஷயத்தில் அவர் புரியும் மந்திரசெபம், தியானம், சிவபூசை முதலியவற்றில் எதுவொன்றும் முடிவில் அவ்வொலி கேட்கப்படுதல் கொண்டுமட்டுமே அதுவது சிவபெருமானால் ஏற்கப்பட்டதாகக் கொண்டு திருப்தியுறும் நிலை உளதாம். அது, திருவருள் ஞானங்கைவரப் பெறாத, நம்மவர்புரியுஞ் சிவபூசைக் கிரியைகளிலுங்கூட அவை சிவபெருமானால் ஏற்கப்பட்டன எனும் பாவனைரூபமான திருப்திக் கறிகுறியாக ஒருதரம் விசேடமாக மணிகுலுக்குதல் நியமத்தோடே முடிவுறக் காண்டலிலிருந்தும் ஊகிக்கப்படும். (பூசைக் கிரியை ஆரம்பத்தில் இருந்து தொடர்ந்தேர்ச்சியாகக் குறைந்தபட்சம் மணியோசையாவது நிகழ வேண்டும் நியமமிருத்தல், அது நிகழுமிடம் மேற்கண்டவாறு நாதம் நிகழ்தற் கிடமாகிய நாத நாதாந்த கலைகளைக் கொண்ட சிவபவனத்தில் நிகழ்கின்ற தெனும் பாவனைக் கறிகுறியாகவும் அதன் நிறைவிலும் விசேடதரமாக மணியைக் குலுக்கும் நியமமிருத்தல் அது சிவனால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதெனத் திருப்தியுறும் பாவனைக் கறிகுறியாகவும் இடம் பெறுவனவாம்.)

எல்லா உயிர்களும் பேசும் எல்லாந் தெரிந்து கொள்ளும் பேறு பெறுமளவுக்குப் பழுத்த சிவயோகச் செம்மலாராகிய சேரமான் பெருமான் நாயனார் உண்மையநுபவ ரீதியாகவே தமது சிவபூசை முடிவில் திருச்சிலம் போசை கேட்டு வந்தார் என்பது, இறைவன் திருவிளையாடலால் ஒருநாள் அது கேளா தொழிய நேர்ந்தமையைச் சகிக்கலாற்றாது அவர் தம்மைத் தாமே உடைவாளால் தீர்த்துக் கொள்ள முயன்றதும் அதைச் சகிக்கலாற்றா நிலையிற் சிவபெருமான் விரைந்து அது அவர்க்குக் கேட்க அருளியதுடன் தமது திருவிளையாடல் அந்தரங்கம் புலப்பட அவருக்குச் சமாதான விளக்கந் தெரிவித்தருளியதுமான செய்தியாற் புலனாகும். அது அவர் புராணத்தில், "வானக்கங்கை நதிபொழிந்த மல்கு சடையார் வழிபாட்டுத் தூநற் சிறப்பினர்ச்சனையாந் தொண்டு புரிவார் தமக்கொருநாள் தேனக்கலர்ந்த கொன்றையினார் ஆடற்சிலம்பின் ஒலி முன்போல் மானப்பூசை முடிவின் கண் கேளாதொழிய மதிமயங்கி" - "பூசை கடிது முடித்தடியேன் என்னோ பிழைத்ததெனப் பொருமி ஆசையுடம்பால் மற்றினி வேறடையு மின்பம் யாதென்று தேசின் விளங்குமுடைவாளை யுருவித் திருமார்பினில் நாட்ட ஈசர் விரைந்து திருச்சிலம்பி னோசைமிகவு மிசைப்பித்தார்" - "ஆடற்சிலம்பி னொலிகேளா உடைவாளகற்றி அங்கைமலர் கூடத் தலைமேற் குவித்தருளிக் கொண்டுவிழுந்து தொழுதெழுந்து நீடப்பரவி மொழிகின்றார் நெடுமால் பிரமன் அருமறைமுன் தேடற்கரியாய் திருவருள்முன் செய்யா தொழிந்த தென்னென்றார்" - "என்ற பொழுதில் இறைவர்தா மெதிர்நின் றருளா தெழுமொழியால் மன்றி னிடைநங்கூத்தாடல் வந்துவணங்கி வன்றொண்டன் ஒன்று முணர்வால் நமைப்போற்றி உரைசேர் பதிகம் பாடுதலால் நின்று கேட்டு வரத்தாழ்த்தோ மென்றார் அவரை நினைப்பார்" என வரும்.

2. அன்புநெறி வழுவாது அரசியற்றல்

"அருளே உலகெல்லா மாள்விப்பது" என்ற காரைக்காலம்மையார் அருளிச்செயற் கிணங்க வேறுவேறியல்புகள் நூறு நூறாயிரம் வகையிற் கொண்ட விசித்திரமான இவ்வுலகில் அனைத்து வகை உயிர்களும் தத்தந் திருப்திக் கேற்ப வாழ்ந்து ஈடேறுதற்கு ஆவனவெல்லாம் வகுத்தளித்து அனைத்தையும் நிர்வகித்துக் கொண்டிருப்பது அருளல்லது மற்றொன்றில்லையாகும். அந்த அருள் உயிர்களால் உருவநிலையிற் கண்டுகொள்ள முடியா வண்ணம் அருவநிலையில் இருத்தல் பற்றி உருவிலுள்ள ஒருவரை மட்டும் தொடர்புகொள்ளும் நிலையினவாகிய உயிர்கள் பொருட்டு இறைவனால் உலகாட்சிப் பொறுப்பில் நியமிக்கப்படுபவனே அரசனாம். அது அரசனைக் குறிப்பதற்கு இதே இறைவனையே சுட்டும் இறை என்ற பெயரையே திருவள்ளுவர் தெரிந்துகொண்டுள்ளமையானும் ஆட்சி உத்தரவாதம் இறைமை என்ற பெயராலேயே என்றும் வழங்குவதானும் அறியப்படும். அதனால் அருவாய் நின்று உலகையாளும் அருளின் பிரதிநிதியாயிருக்கும் நிலையே அரசன் நிலை என்பது வெளிப்படையாம். அங்ஙனம் உலகை நிர்வகித்து நிற்கும் அருளின் நோன்மைப் பண்புகளுக்கு மாறுபாடில்லாத வகையில் தன் பணி இறைவன் பணி என்ற கடப்பாட்டுணர்வுடன் அரசாள வேண்டியதே அரசன் பொறுப்பாகும். இனி, உலகில் அருளின் நோன்மைப்பண்பு பேணப்படுதற்கு முற்றிலும் இணக்கமான நெறி அன்பு நெறியல்லதில்லை என்பது, அருளை வசப்படுத்தற்கு ஏற்ற சாதனம் அன்பொன்றே எனத் திருமூலர், நம் சமயாசாரியர்கள், காரைக்காலம்மையார் முதலானோர், தம் சொல்லாலுஞ் செயலாலும் பல்வேறு வகையிற் புலப்படுத்திவைத்த பிரசித்த உண்மையாற் புலனாம்.

திருவருள் ஞானங் கைவந்த பெரு மேதையாகிய சேரமான் பெருமான் நாயனார் அருளின் நோன்மையும் அதற்கிணக்கமாகிய அன்பின் தகைமையும் உணரவல்லாராதலின், தாமாகவே அரசியற் சூழ்நிலையிலிருந்து விலகி அன்பு நெறிச் சிவ தொண்டி லீடுபட்டிருந்த தம்மை அரசனாக்கியே தீர வேண்டிய சூழ்நிலை தானாகவே வந்துவிட்டபோது அன்புநெறி வழுவாமல் தாம் அரசாட்சிபுரியத் திருவருட் சம்மதம் இருந்தால் மட்டுமே தாம் அதற்கிசையலாகும் எனத் துணிவாராயினர். அது அவர் புராணத்தில் (மந்திரிமார்) "எய்தி அவர்தம் எதிரிறைஞ்சி இருந்தண் சாரல் மலைநாட்டுச் செய்தி முறைமை யாலுரிமைச் செங்கோல் அரசு புரிவதற்கு மைதீர் மரபின் முடிசூடி யருளும் மரபால் வந்ததெனப் பொய்தீர் வாய்மை மந்திரிகள் போற்றிப் புகன்ற பொழுதின்கண்" -"இன்பம் பெருகுந் திருத்தொண்டுக் கிடையூறாக இவர் மொழிந்தார் அன்பு நிலைமை வழுவாமல் அரசுபுரிதற் கருளுண்டேல் என்பும் அரவும் புனைந்தாரை இடைபெற் றறிவேன் எனப் புக்கு முன்பு தொழுது விண்ணப்பஞ் செய்தார் முதல்வர் அருளினால்." என வருஞ் செய்யுட்களாற் பெறப்படும்.

சிவன் பற்றன்றி மற்றொன்றும் வேண்டா நிலையில் இருப்போர் மூலம் ஏதும் நிகழவேண்டும் அவசியம் உளதாயின் அது முற்று முழுதாகத் திருவருள் விருப்பால் அமைவதேயாகும். அது "வேண்டத் தக்க தறிவோய்நீ வேண்ட முழுதுந் தருவோய் நீ வேண்டுமயன்மாற் கரியோய் நீ வேண்டி யென்னைப் பணிகொண்டாய் வேண்டிநீயா தருள்செய்தாய் யானு மதுவே வேண்டினல்லால் வேண்டும் பரிசொன் றுண்டென்னி லதுவு முன்றன் விருப்பன்றே" எனுந் திருவாசகத்தால் விளங்கும். இந்த நாயனார் தம் பிஞ்சிளம் பருவத்திலேயே பிறப்பின் சார்பாலுள்ள தமது அரசபோகச் சூழலை முற்றாக நீத்தொழிந்து தம்பால் விஞ்சியிருந்த திருவருள் ஞான விளக்கத்தினாலே தன்பணி நீத்துச் சிவன் பணியில் தலைநின்றவ ராகலின் சிவனும் அவரை அரசியலில் நிறுத்தும் பொறுப்பைத் தம் நேரடிப் பொறுப்பாகவே கையேற்றுள்ளார். அதனால், நாயனார்க்கு அரசனாம் நிலையை அருளியது மட்டில்லாமல், தம்பால் நிகழும் அன்புநிலையை ஊடகமாகக் கொண்டே அவர்தம் அரசியற் கருமங்கள் அனைத்தும் நிகழ்தற்கான நல்வாய்ப்புக்களையும் யாரும் யாவும் பேசுவன எல்லாம் இருந்தாங்கிருந்தே தெரிந்துகொள்ளும் ஞானக் காட்சியையும், வியக்கத்தகுமளவில் அவருக்கு விசேட ஆற்றல், விசேட சேனாபலம், விசேட கொடை வளம் ஆகியவற்றையும் நிரம்ப அருளுவாராயினர். அது சேக்கிழார் வாக்கில், "முதல்வர் அருளினால், மேவும் உரிமை அரசளித்தே விரும்புகாதல் வழிபாடும் யாவும் யாருங் கழறினவும் அறியும் உணர்வும் ஈறில்லாத் தாவில் விறலும் தண்டாத கொடையும் படைவா கனமுதலாங் காவன் மன்ன வர்க்குரிய எல்லாங் கைவந் துறப்பெற்றார்." என வந்திருத்தல் காணலாம்.

"வேண்டுவார் வேண்டுவதே யீவான்கண்டாய்" என்ற சொல்வேந்தர் துதிக்கிணங்க, வேண்டியவாறே அன்புநிலை வழாமல் அரசியற்றும் வரம் இறைவனாற் சம்பூரணமாக வழங்கப்பெற்று அரசாள்கையில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகள் பலவும் இந்த நாயனார் அதனையே கடைபோகத் தழுவி நின்ற வகையால் சிவ தொண்டு அரசியலில் விளைத்துவிட்ட புதுமையைக் காட்டும் தமது முதற் பவனியின் போதே உவர்மண்சுவறிக் காய்ந்த விபூதி வெண்மையோடு எதிர்வந்த ஒருவனை அவர்விழுந்து வணங்கியமையும் சிவபிரான் வரைந்த திருமுகத்தோடு தம்மையணுகிய பாணபத்திரர்க்கும் திருவாரூரிலிருந்து பக்திவிநயபூர்வமாகத், தாம் அழைத்து வந்த தம்தோழர் சுந்தர மூர்த்திநாயனார்க்கும் அவர் தமது இராஜதானியில் வைத்துத் தனித்தனி விசேட வரவேற்புசாரம் அளித்துப் போற்றியமையும் அரசாட்சியில் மதிக்கப்படுவனவற்றுள் எல்லாம் மிகமேலாக மதிக்கப்படத்தக்கன திருவெண்ணீறும் சிவனாணையும் சிவனடியார்களுமே எனத் தமது மந்திரி பிரதானிகளும் அறிந்து கடைப்பிடிக்கத் தக்கவகையில் அவர் காட்டிய நன்முன் மாதிரிகளாம். தமது அரச நிதிக்களஞ்சியத்தில் உள்ளன அனைத்தும் பாணபத்திரர்க்கும் சுந்தரமூர்த்தி நாயனார்க்கும் அவர் உபகரித்த கொடைத் தாராளம், சொத்து முழுவதுஞ் சிவனுடைமை அதனை ஆளுந்தகுதியுள்ளார் சிவனடியார்கள் ஆதலின் அவர்களுக்கே அது வெகு அன்பாதரவாக வழங்கத்தக்கதாம் எனப் பிரத்யக்ஷத்தில் உணர்த்தியவாறாம். மதுரையில் பாண்டிய சோழர்களின் நல்விருந்தாகச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் சகிதம் அவர் தங்கியிருந்த காலத்தில் நிகழ்ந்தனவெல்லாம் சுவாமிகள் போன்ற மேலோர்களே அரசர்களால் அதிநண்புறவோடு தழுவி வணங்கப்பட வேண்டியவர்கள் எனப் பாண்டியற்கும் சோழற்கும் விளக்கியவாறாம். இவையனைத்தும் ஈண்டுக் கருதத்தகும். இங்ஙனம் சமய நெறி மட்டிலன்றிச் சமூக அரசியல் நெறியிலுஞ் சேர அன்பு நெறியின் அகிலமளாவிய தன்மை துலங்கவைத்த இந்த நாயனார் மகிமை இருந்தவாறென்னே!

3. சுந்தரர் - சேரமான் தோழமை மாண்பு

சைவசமயாசாரிய சுவாமிகள் நால்வரும் சிவபெருமானைத் தம்மவனாகக் கொண்டு பயின்று சிவாநுபவப் பேறுறுதற் கமைந்த மார்க்கங்கள் நான்கிற் சுந்தர மூர்த்தி சுவாமிகள் சார்பிலமைந்தது சகமார்க்கம் என்னுந் தோழமை நெறியாகும். அது சுவாமிகளின் முதலாவது திருவாரூர்த் தரிசனத்தின் போதே, "தோழமையாக நம்மைத் தந்தனம்" எனத் திருவாரூர்த் தியாகராஜப் பெருமான் திருவாக்கினால் அவர்க் குணர்த்தப்பட்டதாகவுள்ள செய்தியானும் சுவாமிகள் திருவாயில் வந்துள்ள, "தூதனை என்றனையாள் தோழனை நாயகனை" என்பது போன்ற அருளிச்செயல்களினாலும், பரவையார் ஊடல் தீர்க்க அவர் பொருட்டுத் தியாகராஜப் பெருமானே தூதாகச் சென்றதென்ற திவ்விய அருள் நிகழ்ச்சியாலும் பெறப்படும். இனி, சைவ நாற்பாதங்கள் எனப்படுவனவற்றில் மூன்றவதான யோகம் இச் சகமார்க்கத்துக்கு நேரொத்த நிலையினதாதல், சிவயோக இலக்கணமென்றறியப்படும் பதினாறு கலைப்பிராசாத யோகம் சகமார்க்க இலக்கணமாகவும் திருமூலநாயனாராற் கூறப்பட்டிருத்தல் கொண்டு துணியப்படும். அது திருமந்திரத்தில் "ஆதார சோதனையால் நாடி சுத்திகள் மேதாதியீரெண் கலாந்தத்து விண்ணொளி போதாலயத்துப் புலன் கரணம் புந்தி சாதாரணங்கெட லாஞ்சக மார்க்கமே" எனவரும். இதனானும் சுவாமிகள் அருளிச் செயல்களிலொன்று "நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலேயொர் நால்விரல்" எனச் சிவயோக அனுபவங் கூறலானும் சுவாமிகள் பரவையாரோடுற்றிருந்த உறவு, "பன்னாளும் பயில்யோக பரம்பரையின் விரும்'பியதாகச் சேக்கிழார் திருவாக்கில் வந்துள்ளமையானும் அவர் திருக்கைலைக்கு எழுந்தருள உதவிய வெள்ளானை பிரணவ யோகத்து அறிகுறிப் பொருளாக இருத்தலானும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பரம சிவயோகி ஆவார் எனல் பெறப்படும். சிவபூசையில் திருவடிச் சிலம்பொலி கேட்குமளவுக்கு உயர்பெருஞ் சிவயோக நிலையினரான சேரமான் பெருமான் நாயனார்க்கு, சிவபரம் பொருள் சிலம்போசை யருளவைத் தாமசப்படுத்தும் திருவிளையாடல் மூலம் சுவாமிகளை அறிமுகப்படுத்தி வைத்தமை உயர்தரத்தினர்களாய சிவயோகியார் இருவரை நட்பாக்குதல் மூலம் அவ்விருவரும் தாம்தாம் சிவயோக நெறியிற் பெறுஞ் சிவாநுபவப் பேற்றில் பரஸ்பரம் ஒருவர்க்கொருவர் உதவுமாற்றால் இருவருஞ் சிறந்தோங்க வைக்கும் பெருங்கருணைத் திறமென்றே கொள்ளப்படும். இங்ஙனம் தெய்விகப் புணர்ப்பால் அவ்விருவர்க்கு மிடையில் நேர்ந்த தோழமைப் பண்பு அவர்தம் முதற் சந்திப்பிலேயே களை கட்டிவிட்டிருந்த அற்புதம், நாயனார் சுவாமிகளைத் தேடித் திருவாரூரிற் சென்று சந்தித்த காட்சியை விமர்சிக்கும் சேக்கிழார் வாக்கில் வந்துள்ளவாறறிந் தின்புறற் பாலதாம். அது, "வந்து சேரர் பெருமானார் மன்னுந் திருவாரூரெய்த அந்தணாளர் பெருமானும் அரசர் பெருமான் வரப்பெற்றுச் சிந்தை மகிழ எதிர்கொண்டு சென்று கிடைத்தார் சேரலனார் சந்த விரைத்தார் வன்றொண்டர் முன்புவிருப்பி னுடன்தாழ்ந்தார்" - "முன்பு பணிந்த பெருமாளைத் தாமும் பணிந்து முகந்தெடுத்தே அன்புபெருகத் தழுவவிரைந் தவருமார்வத் தொடு தழுவ இன்பவெள்ளத் திடைநீந்தி ஏறமாட்டா தலைவார்போல் என்புமுருக உயிரொன்றி உடம்பு மொன்றாமென இசைந்தார்" - "ஒருவ ரொருவ ரிற்கலந்த உணர்வாலின்ப மொழியுரைத்து மருவ இனியார்பாற் செய்வ தென்னா மென்னு மகிழ்ச்சியினால் பருவமழைச் செங்கை பற்றிக் கொண்டு பரமர்தாள் பணியத் தெருவு நீங்கிக் கோயிலினுட் புகுந்தார் சேரமான் தோழர்" எனவரும். அவ்விருவர்க் கிடையிலான இத்தகைய ஒப்பற்ற உள்ளுணர்வுருக்கமும் உணர்வுச் செறிவழுத்தமுமான பெருநண்புப் பிணைப்பினுள்ளும் தம்நிலை சுவாமிகள் தரத்துக்கு எவ்வளவோ தாழ்ந்ததென நாயனாரும் தம்நிலை நாயனார் தரத்துக்கு எவ்வளவோ தாழ்ந்ததெனச் சுவாமிகளும் கொண்டிருந்த பயபக்தி விநயப் பண்பு அறிதொறும் வியப்பூட்டுவதாகும். திருவாரூரில் நிகழ்ந்த சந்திப்பின்போது தம்மோடுடனிருந்து அமுதுசெய்ய வருமாறு சுவாமிகள் அழைத்தபோது நாயனார் வெருவிப் பின்னிட்டமையும், மேல், கொடுங்கோளூரில் நாயனார் அரண்மனையில் சுவாமிகள் நாயனாரால் வரவேற்கப் படுகையில் இவர் அவர்க்குப் பாதைபூசை ஆரம்பிக்க அவர் இது தகாது எனக் கூறிக் காலை மேலெடுத்துக் கொண்டமையும் அதற்குதாரணங்களாம். அவை நாயனார் புராணத்தில், "சேரர் பெருமான் எழுந்தருளி அமுது செய்யச் செய்தவத்தால் தாரின் மலிபூங் குழன்மடவாய் தாழா தமுது செய்வியெனப் பாரின்மலிசீர் வன்றொண்டர் அருளிச் செய்யப் பரிகலங்கள் ஏரின் விளங்கத் திருத்திக்கா லிரண்டிற் படியா ஏற்றுதலும்" - "ஆண்ட நம்பி பெருமானை உடனே அமுது செய்தருள வேண்டுமென்ன ஆங்கவரும் விரைந்து வணங்கி வெருவுறலும் நீண்ட தடக்கை பிடித்தருளி மீண்டும் நேரே குறைகொள்ள ஈண்ட அமுது செய்வதனுக் கிசைந்தார் பொறையர்க்கிறைவனார்" எனவும் "கழறிற்றறியுந் திருவடியுங் கலைநா வலர்தம் பெருமானாம் முழவிற் பொலியுந் திருநெடுந்தோள் முனைவர் தம்மை உடன் கொண்டு விழவிற் பொலியும் மாளிகையில் விளங்கு சிங்கா தனத்தின் மிசை நிழல்திக் கொளிரும் பூணாரை யிருத்தித் தாமும் நேர்நின்று" - "செம்பொற்கரக வாசநீர் தேவிமார்க ளெடுத்தேந்த அம்பொற்பாதந் தாம்விளக்கி யருளப் புகலு மாரூரர் தம் பொற்றாளை வாங்கியிது தகாதென்றருளத் தரணியில் வீழ்ந் தெம்பெற்றிமையாற் செய்வனவிங்கெல்லா மிசைய வேண்டுமென" - "பெருமாள் வேண்ட எதிர்மறுக்க மாட்டாரன்பிற் பெருந்தகையார் திருமா நெடுந்தோ ளுதியர்பிரான் செய்த வெல்லாங் கண்டிருந்தார் அருமானங்கொள் பூசனைகளடைவே யெல்லா மளித்ததற்பின் ஒருமாமதி வெண்குடை வேந்தருடனே அமுது செய்திருந்தார்" எனவும் முறையே காணப்படும், ஒருவரது பயபக்தி விநயப் பண்பு தலை தூக்கும்போது மற்றவரது அன்புருக்கப் பரிவோடு கூடிய தாழ்மைப்பண்பு எதிரெழுந்து அதனைத் தணித்துச் சமச்சீர் பண்ணுந் தன்மையும் தோழமையின் நோன்மைப் பண்பாக இச்செய்திகளிற் கண்டறியப்படும். மேலும், "இவ்விருவர் பெருமக்கள் தோழமையானது சாமான்யத்தில் உள்ளத்தை உள்ளம் ஈர்த்து நிற்கு மளவினன்றி உயிரை உயிர் ஈர்க்கும்" அளவினதாகிய உன்னதமான உயிர்த் தோழமையாயிருந்த விசேடமும் இவ்விருவர்க்கும் ஒன்றித்த ஆன்மலாபப் பேறுவாய்த்து இருவரும் ஒருமித்துக் கயிலையெய்திய இறுதி நிகழ்வினாலறியப்படும். அதன் விபரம் இப்புராணத்து இறுதிச் சருக்கமாகிய வெள்ளானைச் சருக்கத்திற் காண்க.

திருச்சிற்றம்பலம்.

See Also:  
1. கழறிற்றறிவார் நாயனார் புராணம் (தமிழ் மூலம்)  
2. kazaRiRRaRivAr nAyanAr purANam in English prose  
3. Kazharitru Arivaar Nayanar Puranam in English Poetry 

Related Content

How I am, so is my Lord

Description of sankaranArAyanar

Enslaves and Dances with me !

History of Thirumurai Composers - Drama-திருவிளையாடல் நாடகம்

திருவிளையாடல் நாடகம் - திருமுகம் கொடுத்த படலம் Thiruvilaiya