logo

|

Home >

video-gallery >

63-nayanmar-drama-thirumoolar-nayanar-dram

63 Nayanmar Drama- திருமூலர் நாயனார் - நாடகம் Thirumoolar Nayanar Drama

 

திருமூலர் - நாடகம்

ஒலி வடிவம்


TitlePlayDownload
திருமூலதேவ நாயனார் நாடகம் - காட்சி-1 Download
திருமூலதேவ நாயனார் நாடகம் - காட்சி-2 Download
திருமூலதேவ நாயனார் நாடகம் - காட்சி-3 Download
திருமூலதேவ நாயனார் நாடகம் - காட்சி-4 Download
திருமூலதேவ நாயனார் நாடகம் - காட்சி-5 Download
திருமூலதேவ நாயனார் நாடகம் - காட்சி-6 Download
திருமூலதேவ நாயனார் நாடகம் - காட்சி-7 Download
திருமூலதேவ நாயனார் நாடகம் - காட்சி-8 Download

 

திருமூலதேவ நாயனார் நாடகம்

காட்சி 1 :

பின்குரல் : இளம்பிறையை சூடிய சிவபிரானது திருக்கயிலாய மலையினில் உள்ள பழமையான கோயிலுக்கு முதற்பெருங் காவலராம் தலைமை பெற்று இந்திரன், மால், அயன் முதலாய தேவர்கட்கு சிவநெறியினை அருளிச் செய்யும் நந்தியெம்பெருமான் திருவருள் பெற்ற நான்மறை யோகிகள் சுந்தரநாதன். இச்சிவயோகியார் அணிமா முதலாகிய எண்வகை சித்திகளையும் கைவர பெற்றவர். சிவயோகியார் திருக்கயிலையில் இறைவனை சிந்தித்த நிலையில் இருக்கிறார்.

இடம் : திருக்கயிலை.

(சிவயோகியார் தியானத்தில் ஆழ்ந்திருக்கின்றார்; - ஓம் என்ற பிரணவ மந்திரம் ஒலித்துக்கொண்டிருக்கிறது.)

சிவயோகியார் : சிவ சிவ! இறைவா! உரை, உணர்வு கடந்த தேவரீர் திருவடிகளை என்றென்றும் சிந்திக்கும் திருக்கயிலாய வாழ்வினை அடியேனுக்கு அளித்தீர்கள். இன்று ஏனோ என் மனம் தென் திசையில் உள்ள பொதிகைமலையில் வீற்றிருக்கும் அகத்திய மாமுனிவரை கண்டு தரிசிக்க விரும்புகிறது. சிவ சிவ! எல்லாம் உனது திருவருள். எம்பெருமானே, தேவரீர் எழுந்தருளியிருக்கும் பல தலங்களையும் வழிபட்டு நற்றமிழின் பிறப்பிடமாகிய பொதிகைமலைக்குச் செல்கிறேன்; தாங்கள் உடனிருந்து திருவருள் செய்ய வேண்டுகிறேன்.

காட்சி - 2 :  
இடம் : மூலன் இல்லம்.

மூலன் : ஏ புள்ளே நீ எனக்கு எம்புட்டு பொருத்தமான மனைவி தெரியுமா! நீ எனக்கு மனைவியாக கெடச்சது போன பொறப்புல நான் செஞ்ச புண்ணியமாத்தான் இருக்கும் புள்ள!

மூலனின் மனைவி : போதும் மாமா ஓம் புகலாரம்!

மூலன் : பாத்தியா புள்ள, உன்ன ஒன்னும் நான் சும்மா புகலல; உண்மையைத்தான் சொல்றேன்.

மூலனின் மனைவி : மாமா, நீ இப்படியெல்லாம் பேசி என்னைப் புகலலனாலும், நான் எப்பவும் ஓம்மேல உசிராத்தான் இருப்பேன்.

மூலன் : அதிலென்ன சந்தேகம் புள்ள; நிச்சயமா நீ ரொம்ப அன்பானவதான்; அதனாலதானே நீ எனக்கு மனைவியாக கெடச்சது நான் செஞ்ச புண்ணியன்னு சொன்னேன்!

மூலனின் மனைவி : (கன்னம் சிவக்க பெருமையுடனும் வெட்க்கத்துடன் தலைகவிழ்ந்து கால் பெருவிரலால் தரையில் கோலமிடுகிறாள்.)

மூலன் : வெக்கத்தப்பாரு...! ஏப்புள்ள இப்பதான் நீ முன்னைய காட்டிலும் ரொம்ப அழகா இருக்கிறே. (மனைவி அருகே செல்கிறான்.)

மூலனின் மனைவி : (தன் கடமை மீதுற சற்றே அவரை விலக்கி விட்டு) என்னை புகழ்ந்தது போதும், மேய்ப்புக்கு போயிட்டு வாங்க; ஊர் பசுவெல்லாம் வந்துருச்சி.

மூலன் : ஆமாம் ஆமாம் பசுக்கள மேய்ச்சலுக்கு ஓட்டிட்டுப் போகனும் புள்ள; நீ என் பக்கத்தில இருந்தா ஒலகமே மறந்துருது புள்ள. (பேசிக்கொண்டே ஆனிரைகளை நோக்கி ஓடுகிறான்.)

மூலனின் மனைவி : (கடமை மேலீட்டால் ஓடும் தன் கணவனை நோக்கி உரத்த குரலில்) கலயத்தில் நிறைய மோர் கஞ்சி வெச்சிருக்கேன் நேரம் போக்காம, உச்சி வேளைல எல்லாத்தையும் குடிச்சிடு மாமா!

மூலன் : சரி சரி... ஆகட்டும் புள்ள. (தூரத்திலிருந்து குரல் மட்டும் வருகிறது.)

காட்சி - 3 :

பின்குரல் : பொதிகைமலை நோக்கி வழிகொண்டு வரும் சிவயோகியார் நிலைபெற்ற திருக்கேதாரம், பெரும்புகழ் வாய்ந்த பசுபதி நேபாளம், என்னும் பதிகளை பணிந்து போற்றி புனிதமாகிய கங்கையாற்றில் நீராடி பிறவிப் பெருங்கடலில் இருந்து உயிர்களை கரையேற்றும் கண்ணுதல் பெருமான் எழுந்தருளியிருக்கும் காசி என்னும் திருப்பதியைப் பணிந்து போற்றி விந்தியமலை, நிலைப்பெற்ற திருப்பருப்பத மலையையும் பணிந்து அன்னலார் திருக்காளத்திமலையினை வணங்கி பின் திருஆலங்காட்டு அப்பரை இறைஞ்சி ஏத்தி மால், அயன் அறியா சிவபெருமான் மகிழ்ந்து அருளும் திருஏகாம்பரத்தினை வணங்கினார். காஞ்சிநகரில் வாழ்கின்ற யோக முனிவர்களை நயந்து பின் திருஅதிகை வழிபட்டு தில்லை வந்தணைந்தார். எவ்வுலகும் உய்ய எடுத்து ஆடி அருளிய சேவடியை தில்லை பொன்மன்றினில் கண்டு வணங்கி அப்பேரின்ப விளைவின் ஆராமையினாலே சில காலம் அங்கு தங்கியிருந்து, அதன்பின் பொருவில் பொன்னி திருநதியாம் காவிரியில் புனித நீராடி பசுவாக உமையம்மை தவம் செய்து தம்பெருமானை வழிபட்ட திருவாவடுதுறையை அடைந்தார்.

இடம் : திருவாவடுதுறை திருக்கோவில்.

சிவயோகியார் : எம்பெருமானே! மாசிலாமணீஸ்வரா ஆனேற்றில் எழுந்தருளி உயிர்களுக் கெல்லாம் அருள் சுரப்பவனே பசுபதி! உமையம்மை பசுவாக வந்து தவம் செய்ய பேரருள் புரிந்தவனே! தேவரீரை இத்தலத்திலேயும் கண்டு வழிபடும் பெரும்பேறு பெற்றேன். எம்பிரானே! பொதிகைமலை சென்று அகத்திய மாமுனிவரை வணங்க வந்த அடியேனுக்கு இத்தலத்தை விட்டு பிரிய மனம் வரவில்லையே! சிவ சிவ!

காட்சி - 4 : இடம் : மேய்ச்சலுக்குச் செல்லும் வழி மற்றும் காவிரி ஆற்றங்கரை மேய்ச்சல் நிலம்.

மூலன் : (மூலன் ஆனிரைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லும்போது அவைகளுடன் அன்பால் அலவலாவிக்கொண்டு செல்கிறான்.) என் அருமை பசுக்களே நேத்து மேஞ்ச, ஆத்தங்கரைக்கு ஓரத்திலேயே பச்சபசேல்னு நெறைய புல்லெலாம் இருக்கு; இன்னைக்கும் அங்கேயே போங்க! வழக்கம்போல் வயிறாற மேயலாம்.

(மாடுகள் சந்தோசத்தில் கத்திக்கொண்டு செல்கிறது.)

ஏ....! வெள்ளையம்மா நீ ஏன் இப்படி அடிச்சி புடிச்சிக்கிட்டு ஓடுறே?! கருத்தம்மாவை பார்த்தியா, தன் கன்னுக்குட்டியோட எப்படி அமைதியா போகுதுன்னு?!

(மாடுகளும் கன்றுகளும் இனிமையாகக் கத்துகிறது.)

அடடடா... [ஏய்... ஏய்...} கொம்பா நிதானம்; நிதானம்; எளங்கன்னு குட்டியெல்லாம் போகுதில்லே, கீழே தள்ளியேதும் விட்டுடாதே! எல்லாரும் நிதானமா போங்க!

ஏன் இவ்வளவு அவசரம்!? இவ்வளவு குதியல்!? எல்லாரும் நிதானமா போங்க! என் அருமை பசுக்களே, எம்புட்டு நேரமானாலும் வழக்கம்போல உங்க எல்லாரு வயிறும் நெறைய மேய்ச்சலைக் கொடுத்து, நல்லநீரைக் குடிக்கவெச்சி திருப்தியாதான் அந்தியில அலச்சிக்கிட்டு போவேன்; நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. போங்க போங்க.!

(மாடுகள் கன்றுகள் கத்துகிறது)

பாத்தீங்களா எவ்வளவு பச்சயான புல்லுங்க! ம்... எல்லாரும் போய் வயிறாற மேயுங்க; நான் இந்த மரத்தடி நெலுல ஒக்காந்திருக்கேன்.

ம்... சொல்ல மறந்துட்டேனே, யாருக்கேனும் தாகமெடுத்தா கரைபுரண்டு ஓடுற இந்த காவேரியில எறங்கிடாதீங்க; அது சில நேரத்துல பெரிய ஆபத்தாபோயிரும்.

“அம்மா...”ன்னு கூப்புடுங்க நான் வந்து கூட்டிட்டு போயி காவேரிகர தொறயில தண்ணீ குடிக்கவெச்சி கூட்டிட்டு வாறேன். சரி சரி கவனமாக மேயுங்க.

அப்பாடா என்ன வெயிலு...; மனுசன் மண்டயே வெடிச்சிரும் போலருக்கே! ம்..., நம்ம வாய்பேசுறோம் சொல்றோம்; ஆனா இந்த வாயில்லா சீவனுக என்ன பண்ணும்...! ஈசுவரா நீதான் எல்லாரயும் காப்பாத்தனும்.

(மீண்டும் எழுந்து போய், நல்ல மேய்ச்சலை விட்டுவிட்டு தூரத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் பசுக்களை செல்லமாகக் கடிந்து கொண்டு அழைத்து “நல்ல மேய்ச்சல் உள்ள இங்கே வந்து மேயுங்கள்” என்றவாறு அன்பாய் கட்டளையிடுகிறார்.)

ஏ... சுரபியம்மா... - சுசீலை... ஏ... கொம்பா... அங்க ஒன்னுமே இல்லாத எடத்துல என்னத்த மேயிறீங்க!? எல்லாரும் நெறய புல்லு இருக்குற இங்க வந்து மேய்ங்க! நல்ல ஆகாரம் இங்க இருக்கயில ஏன் எல்லாரும் எததையோ தேடி அலையிறீங்க! எல்லாரும் இங்க வாங்க.

சரி சரி எல்லாரும் கவனமா மேய்ங்க..., நான் இந்த மரத்தடியில இருக்கேன். (அம்மரத்தடியில் அமர்ந்திருக்கும் மூலன் சற்றே பொழுதிற்குள் விதி வசத்தால் இறந்து வீழ்கிறான்.)

பின்குரல் : ஆவடுதண் துறையை விட்டு நீங்காததோர் கருத்து சிவயோகியார் உள்ளத்தில் தோன்றி எழுந்தாலும் பொதிகைமலை சேரும் விருப்பால் அத்திருப்பதியை நீங்கி காவிரி ஆற்றங்கரையை அடைகிறார். அங்கே கங்காளன் பூசும் கவச திருநீற்றினைத் தரும் பசுவினங்கள் ஒரு சோலையில் அழுது அரற்றி கதறுவதைக் காண்கிறார்.

சிவயோகியார் : சிவ! சிவ! பசுக்கூட்டங்கள் மிகுந்த வருத்தத்துடன் அழுது புலம்புகின்றதே! எம்பிரான் விரும்பி, ஆடி அருளுதற்கு தூய திருமஞ்சனம் ஐந்தும் அளிக்கும் உரிமையை உடையன அல்லவா நல் ஆனினங்கள் சிவ! சிவ!

(யோகி தன் யோகநிலையில் நடந்தவற்றை அறிந்து கொள்கிறார்.)

இப்பசுக்களை மேய்க்கின்ற மூலன் விதியினாலே அரவம் தீண்டி மாய்ந்துவிட்டான்.

சிவ! சிவ! இவன் பேணி வளர்த்த பசுக்கள் மிகுந்த துயரம் அடைந்து அவனைச் சுற்றி வந்து கதறுகின்றதே! இவன் மீண்டும் உயிர் பெற்றாலன்றி இப்பசுக்களின் துயரத்தை போக்க முடியாது. நம்பர் அருளாலே இப்பசுக்கள் உற்ற துயரத்தை போக்குவேன்.

பின்குரல் : மூலனுடைய உடலில் தம் உயிரைச் சேர்ப்பிக்க திருவுள்ளம் கொண்ட சிவயோகியார், தம் உடலை தீங்குறாத வகையில் ஓரிடத்தில் காவல்செய்து வைத்துத், தாம் பழகியிருந்த யோக சாதனையின் வழியால் அம்மூலனுடைய உடலில் தமது உயிரைச் செலுத்தினார். சிவயோகியார் மூலனது உடலில் திருமூலராய் எழலும், பசுக்கள் எல்லாம் அது கண்டு நாத்தழும்பேற அவரை முகந்து, அணைந்து கனைப்பொடு நயந்து, வாய்க்கப்பெற்றெழுந்த மகிழ்ச்சியால் வால் எடுத்துத் துள்ளிப் பின் நீங்கிய துயருடையனவாகித் நிரையாக மேயச் சென்றன. பசுக்களின் கூட்டம் மகிழ்வுற்றது கண்டு சுந்தரநாதர் என்னும் திருமுலதேவ நாயனார் மிகுந்த அன்புடன் அப்பசுக்கள் சென்று மேயும் இடத்துப் பின்னாகச் சென்று, மேய்ந்த அப்பசுக்கள் எல்லாம், காவிரியாற்றின் துறையில் சென்று தண்ணீர் விரும்பி உண்டு, களைப்புத் தீர்ந்து கரை ஏறிப் பின், மலர்கள் விரிந்த சோலையின் நிழலில் இனிதாகத் தங்கிடத், தாம் காவல் செய்தார்.

திருமூலர் : ஆவடுதண்துறை உறையும் எம் அண்ணலே, உமைஅம்மை பசு உரு கொண்டு பூசித்த இத்தலத்தில், ஆவுற்ற பெருந்துயரத்தை போக்கும் பெரும்பாக்கியம் பெற்றேன். சிவ சிவ!.

(சற்று நேரம் கழித்து) மாலை நேரம் நெருங்கி விட்டது. இப்பசுக்களெல்லாம் தங்கள் இடங்களை நோக்கி செல்ல தொடங்கிவிட்டன. பசுக்களின் பின் சென்று, அவை தத்தம் இடங்களுக்கு பாதுகாப்பாக சென்றடைந்த பின், மீண்டு வந்து மறைத்து வைத்த உடலுக்குள் சென்று விடவேண்டும். (ஆனிரைகளுடன் செல்கிறார்.)

காட்சி 5 :

பின்குரல் : பசுக்களை பின் தொடர்ந்து சாத்தனூரினை சென்றடைந்த திருமூலர், பசுக்கள் எல்லாம் தத்தமது மனைகளிற் கொண்டு சேர்த்து வருகையில், பெருமையுடைய மூலனின் மனைவி “பொழுது போன பின்பும் தன் கணவர் வரத் தாழ்த்தாரே” என்று அச்சத்துடன் ஓடி வருகிறார்.

இடம் : சாத்தனூர்.

மூலனின் மனைவி : ஏ... மாமோய்! பொழுதுசாஞ்சி இம்பூட்டு நேரமாயும் நீ வரலையின்னு நான் எம்புட்டு பயத்தோட இருந்தேந் தெரியுமா?.

ஆமா...! ஏன் மாமா இன்னிக்கு இம்புட்டு நேரமாச்சி!? (திருமூலர் மூலனின் மனைவியை கண்டு ஏதும் பேசாது திரும்பி கொள்கிறார்.)

மாமோய்! ஒனக்கு என்னாச்சி!? காத்தால ஏன்மேல நீ கோச்சிக்கிட்டியா? ஒன்னத்தான் கேக்கிறன் மாமோய்!? காத்தால நல்லாதானே போனே அந்திக்குள்ள ஒனக்கு என்ன வந்ருச்சி! காத்துக்கருப்பு எதையும் பாத்து பயந்துட்டியா?!

(கூறியவாறே அவள் தன் கணவர் என்று நினைத்து அருகில் வருகிறாள்.)

திருமூலர் : (தன்னை அவள் தீண்டி விடாதவாறு சற்று விலகிச் சென்று) அம்மா, நான் உம் கணவன் அல்ல.

மூலனின் மனைவி : அச்சச்சோ! ஏன் மாமா என்னென்னவோ பேசுதே! ஈசுவரா! என் மாமாவுக்கு என்ன ஆச்சி!? ஏன் மாமா என்னத் தொட்டுபுடாதேன்னு வேற சொல்லுதே! இத கேக்க யாருயில்லயா?! ஏய்... சித்தப்பு - பெரியப்பு இத வந்து கேளுங்களேன்.

(அவள் தன்னைச் சற்று சமாதானப்படுத்திக்கொண்டு மீண்டும் அவரை அழைக்கலானாள்.)

மாமா விளையாண்டது போதும், வா நம்ம வீட்டுக்கு போலாம்.

திருமூலர் : அம்மா! உமக்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை; அப்படியிருக்க உம்முடன் என்னால் வர இயலாது. யாம் பொது மடத்திலே சென்று தங்கி கொள்கிறோம்.

மூலனின் மனைவி : மாமா! நீ என்னவுட்டுட்டு எங்கேயு போயிடாதே!

(இவள் பேசுவதை ஏற்றுக்கொள்ளாமல் திருமூலர் செல்கிறார்.)

மாமா... மாமா... மாமா...! (மூலனின் மனைவி அவரை அழைத்துக்கொண்டே சற்றுத் தொடர்ந்து சென்று அதன்பின் நின்றுவிடுகிறாள்.)

காட்சி 6 :

பின்குரல் : தனது கணவனின் மனநிலை இவ்வாறு வேறானமை கண்டு எவ்வளவோ அவருடன் உரையாட முயன்றும், ஒரு வார்த்தையும் பேசாதிருக்கும் நிலை கண்டு, அவருடன் அணையாது, துயிலும் கொள்ளாதிருந்த மூலனின் மனைவி , மறுநாள் காலை அவ்வூரிலுள்ள பெரியோர்கள் பலர் முன்னிலையில் தன் கணவனுக்கு நேர்ந்த மனமாற்றத்தை எடுத்துச் சொல்ல, அவர்கள் திருமூலரை காண பொது மடத்திற்கு செல்கின்றனர்.

இடம் : சாத்தனூர் பொது மடம்.

பணியாள் : மூலா!? மூலா!?, உன்னைக் காண நம் ஊரில் உள்ள பெரியோர்கள் வந்துள்ளனர்.

ஊரார் 1 : மூலனே, உனக்கு என்னவாயிற்று?! நீ மணம் முடித்த மனைவியுடன் வாழாது, இவ்வாறு பொது மடத்தில் தங்குவது தவறென்று உனக்கு தெரியவில்லையா?!

திருமூலர் : பசுக்களாகிய ஆன்மாக்களின் தலைவனாகிய எந்தை பசுபதியார் திருவடிகளைத் தவிர எமக்கு வேறு எந்த பற்றும் இல்லை.

மூலனின் மனைவி : பெரியவங்களே, பாத்தீங்களா! ஏன் மாமா என்ன பேசுதுன்னே புரியவில்லை. இதுக்கு பித்து ஏதும் புடிச்சிருச்சா?! இல்ல, காத்து கருப்பு ஏதும் புடிச்சிருச்சா?!?! ஒன்னும் புரியலையே!?

ஊரார் 2 : பெண்ணே! சற்று பொறுமையாக இரு; ஏன் இத்துனை பிதற்றுகின்றாய்!. மூலனே, உன் மனைவி மற்றும் சுற்றத்தாரின் வருத்தம் உனக்கு புரியவில்லையா?

திருமூலர் : சிவத்தைச் சார்ந்தாரன்றி எமக்கு வேறு சுற்றமுமில்லை; இப்பெண்ணோடு எந்த பந்தமும் இல்லை.

சிவ சிவ! மகாதேவா!

ஊரார் 1 : தெளிந்த ஞானத்துடன் இவர் பேசுவதை பார்க்கும் பொழுது, இவர் நம் ஆனிரை மேய்க்கும் மூலனாக தெரியவில்லை. முற்றும் துறந்த ஞான வடிவேயான முனிவராக தெரிகிறார்.

பெண்ணே! நீ நினைந்தவாறு இவர் உன்னுடைய கணவரும் அல்லர்; பித்து, பேய் முதலியவற்றால் மனமாற்றம் அடைந்தாரும் அல்லர். பொருள் அல்லவற்றைப் பொருளாகக் கருதும் மன வேறுபாடுகளினின்றும் நீங்கித் தெளிந்த மனநிலை யுடையவராய், யாவர்க்கும் இறைவனாம் சிவத்தின் மீது கொண்ட பேரன்பினால் அப்பெருமானிடம் ஒன்றுபட்ட உள்ளத்தால் மீதூர்ந்த பெருமை யுடையவராயுள்ளார். இச்சிவயோக நிலையின் தன்மை, யாராலும் அளத்தற்கு அரிதாகும்.

ஊரார் 2 : பெண்ணே! இவர் ஒரு சிவயோகி தான்; இருவகைப் பற்றுக்களையும் நீக்கிய மேலான உபதேசத்தினால் ஈசன் திருவடிகளைப் பெற்றிருப்பவராகிய ஞானிகளைப் போன்று, அவர் முழுவதும் உணர்ந்த முனிவராயுள்ளார். இவர் உங்களது சுற்றத்தொடர்பிற்கு உரியவர் அல்லர்.

(மூலனின் மனைவி மயங்கி விழுகிறாள்.)

ஊரார் 1 : இப்பெண்ணை இங்கிருந்து அழைத்து செல்லுங்கள்.

ஊரார் 2 : சிவயோகியாரே தங்களை வணங்குகிறோம்.

காட்சி 7 :

பின்குரல் : சாத்தனூர்ப் பொதுமடத்தில் இருந்த திருமூலர், எழுந்திருந்து, அங்குப் பசு நிரைகள் வந்தவழியே திரும்பிச் சென்று, தாம் காவலாக வைத்த முன்னைய உடலைத் தேடிப் பார்த்தபோது, அவ்வுடற் பொறையைக் காணாராகி, எல்லாம் உணர்ந்த மெய்ஞ்ஞானமாய் நிற்கும் தம் சிந்தையில், அச்செயலை ஆராய்ந்து தெளிகிறார்.

திருமூலர் : சிவ சிவ; யான் இங்கு மறைத்து வைத்த உடலை காண வில்லையே! எம்பெருமானே!

குளிர்ந்த நிலவணிந்த திருச்சடையையுடைய சிவபெருமானே, தாங்கள் தந்தருளிய ஆகமப் பொருளை இந்நிலவுலகில் தமிழால் சொல்லுதற்பொருட்டு, உடலை மறைத்தீரோ! “என்னை நீ நன்றாக படைத்து இங்கே அனுப்பியது உன்னை நன்றாக தமிழ் செய்வதற்காக” என உணர்ந்தேன். சிவ சிவ!

பசுபதி நாதா! உயிர்கள் மாட்டு தேவரீர் கொண்ட கருணையை எவ்வாறு போற்றுவேன்! தேவ தேவா! மகாதேவா! கைலாச வாசா!

பின்குரல் : திருவாவடுதுறையினைச் சேர்ந்து திருக்கோயிற் சுற்றின் புறத்திலே மேற்குப் பக்கத்திலே மிகவும் உயர்ந்த அரசமரத்தின் கீழே தேவாசனத்தில் அமர்ந்து எழுந்தருளியிருந்து சிவராஜயோகத்தின் மிக்கிருந்து இதய கமலத்தில் அரும்பொருளாகிய இறைவருடன் இரண்டறக் கூடி ஒன்றியிருந்தனர். ஊன் பொருந்திய இப்பிறப்பாகிய விடத் தொடக்கு நீங்கி உலகத்திலுள்ளார்கள் உய்யும் பொருட்டு ஞான முதலாகிய நான்கு நெறிகளும் விரிந்து காணும் நல்ல திருமந்திர மாலையினை பான்மை முறையினாலே ஓர் ஆண்டுக்கு ஒரு மந்திரமாக பரம்பொருளாகிய ஏனக் கொம்பினை அணிந்தவருமாகிய இறைவரை, “ஒன்றவன்தான்...” என எடுத்து நினைந்த அப்பொருளினையுடைய திருமந்திர மாலையாகிய தமிழ் மூவாயிரம் மந்திரங்களையும் சாத்தியருளினார்.

காட்சி 8 : 
இடம் : திருவாவடுதுறை திருக்கோயில்.

(சீடர்கள் எழுவரும் திருமூலர் இருக்கும் இடத்தில் பணிகள் செய்கின்றனர்.)

திருமூலர்: ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின் 
பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின் 
வேட்கை உடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின் 
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே.

(சீடர்கள் பாடலை எழுதிக்கொள்கின்றனர். பின்னர் அமர்ந்து படிக்கின்றனர்.)

மாலாங்கன்: கஞ்சமலையா! செல்வத்தைப் பற்றி என்ன நினைக்கிறாய்?

கஞ்ச மலையன்: மாலாங்கா! என் சிந்தனையைத் தூண்டுகிறாய்! ம்ம்ம்... செல்வம் தேவை தான்! ஆனால் அதனை வைத்துக்கொண்டு இந்த உலகத்தினர் செய்யும் கூத்து இருக்கின்றதே! சிவ சிவ! சிரிப்புத் தான் வருகின்றது!

மாலாங்கன்: சரியாகத்தான் சொன்னாய்! செல்வம் பயனாகும் அளவில் இருந்தால் நல்லது. அதுவே கதியாக இருப்பவர்களுக்கு அதோகதிதான்! மனிதர்கள் செல்வம் திரட்டுகின்றார்களேயன்றி அதனைப் பயன்படுத்த அறியவில்லையே!

கஞ்சமலையன்: செல்வத்தினுடைய சரியான பயன்பாடு தான் என்னவென்று சொல்லேன்!

மாலாங்கன்: அதற்கு செல்வம் என்பது என்ன என்று தெரிந்துகொள்ளவேண்டும். நாணயம் செல்வமா? பொன், வெள்ளி செல்வமா? வீடு, நிலம் செல்வமா? மக்களைக்கூடச் செல்வம் என்கின்றார்களல்லவா? தனு, கரண, புவன, போகங்கள் யாவும் செல்வம் தானே! ஆக சிவபெருமான் நமக்கு அளித்த இவை அனைத்தும் செல்வங்களே! இந்தச் செல்வங்கள் அனைத்திற்கும் உடையவன் அவனே! அதனாலன்றோ நம் சிவத்திற்கு ஈஸ்வரன் என்று பெயர்! இச்செல்வமெல்லாம் சிவன் தந்ததென்று தெளிவுடன் செல்வத்தை அணுகுவதே மதியுடையார் செயல்.

கஞ்சமலையன்: சரியாகச் சொன்னாய்! ஆமாம் நம் திருமூலர் பெருமான் இம்முறை சொன்ன திருமந்திரத்தின் கருத்து இதை ஒட்டியது தானே!

மாலாங்கன்: அதிலென்ன சந்தேகம்! நம் திருமூல தேவ நாயனார் எத்தனை அரிய சிவயோகக் கருத்துடன் எளிய வகையே எல்லோர்க்கும் தேவையான கருத்தும் சொல்ல வல்லரன்றோ! செல்வத்தின் பயன் எல்லோரும் நல்வாழ்வு வாழ வாழ்வதே ஆகும்! காக்கை கரைந்துண்பது போல மற்ற உயிர்களின் பசி தீர்த்து உண்ண வேண்டும்.

கஞ்: ஆமாம், "பழம்பொருள் போற்றன்மின்" என்றாரே!

மாலா: ஒரு பொருள் நம்மிடத்தே பல காலமும் உபயோகிக்கப்படாமல் இருந்தால் நம் தேவைக்கு அதிகமானது என்று தானே பொருள்!

கஞ்: ஆமாம், அதிலென்ன சந்தேகம்!

மாலா: அப்படித்தானே செல்வமும்! நம் தேவைக்கு அதிகமான செல்வத்தை பல காலமும் உபயோகிக்காமல் மூட்டை கட்டி வைத்து அதனை எவ்வாறு பாதுகாப்பது என்று அல்லலுறுவர் அற்பர்கள். இறுதியில் அதானால் பயனுறவும் மாட்டார்கள். எனவேதான் நம் திருமூலர் பெருமான் நமக்குச் சொல்லும் அறிவுரை - தேவைக்கு அதிகமானதை தேவையுள்ளோரிடத்தில் பகிர்ந்து வாழுங்கள் - என்பதாகும்.

கஞ்: மனிதர்கள் அப்படி வாழ்ந்துவிட்டால் உலகத்தில் எல்லோருக்கும் நல்வாழ்வு தான்! நம் திருமூலர் வழி இவ்வுலகம் நடக்கும் எனப் பிரார்த்திப்போம்! சரி வா! நாம் நம் பணியாற்றலாம்.

(சீடர்கள் பணி செய்கிறார்கள்.)

திருமூலர்: புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு 
அண்ணல் அதுகண்டு அருள்புரி யாநிற்கும் 
எண்ணிலி பாவிகள் எம்இறை ஈசனை 
நண்ணறி யாமல் நழுவுகின் றாரே.

(சீடர்கள் பாடலை எழுதிக்கொள்கின்றனர். பின்னர் அமர்ந்து படிக்கின்றனர்.)

மா: கஞ்ச மலையா! சிவபெருமானை வணங்கி வாழும் அருளியல் வாழ்க்கை கடினம் என நினைக்கின்றாயா?

கஞ்: வாழ்வின் பொருளறியாது எது எதையோ பொருளெனக் கருதி அலைந்து திரிந்து விலங்குகள் போல் மடிகின்ற மாக்கள் தான் அவ்வாறு கூறுவர். ஒழுக்கத்திற்கு அஞ்சி சிவ வழிபாட்டினை விட்டு ஒதுங்குகின்றனர் பேதைகள்! கல்வியால் வரும் மேன்மையை அறிந்தால் கல்வி கற்கும் ஒழுக்கத்தினை அறிவுடையர் விடுவரோ! உழைப்பினால் வரும் செல்வத்தின் பயன் உணர்ந்தோர் அவ்வுழைப்பாம் ஒழுக்கத்தை விடுவரோ! வாழ்வின் பயன் சிவவழிபாட்டால் வரும் என உணர்ந்த்தால் அவ்வழிபாடு செய்யாதிருத்தல் மடமையன்றி வேறென்ன?

மா: சரியாகத் தான் சொன்னாய்! அதுமட்டுமல்ல! நம் சிவபெருமான் நம்மிடத்தில் ஏதோ இயலாத சாதனைகளா எதிர்பார்க்கிறார்? திருவைந்தெழுத்தை - நமச்சிவாய மந்திரத்தைக் -கற்றுக்கொள்ள வாயும் நாவும் உள்ளது. சிவபெருமான் திருமேனிக்கு இடப் பூவும் நீரும் நிறையவே உள்ளன. சிவபெருமானுக்கு முறைப்படி இவற்றிச் சார்த்தி அன்போடு அஞ்சலி செய்தால் ஆயிற்றே!

கஞ்: ம்ம்ம். இது கூடச் செய்ய இயலாமல் சிவபூசனையிலிருந்து நழுவி விடுகின்றனர். படகேறச் சோம்பலுற்றுக் கடலிலே வீழ்ந்த மதியிலிகள் போன்றோர் அவர். தங்கள் உயிர்க்குத் தாங்களே துரோகிகள் ஆனார்!

மா: இறைவா! உன் திருவடிக்குப் பூவும் நீரும் சுமக்கும் பேறு எமக்கு அளித்தனையே! உன் கருணையே கருணை!

கஞ்: ஆம்! சற்றும் தாமதியாமல் நாம் சிவ பூஜனை செய்வோம் வா! சிவ சிவ! ஹர ஹர!

திருமூலர் : ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் 
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே 
சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து 
நின்றே நிலைபெற நீர்நினைந்துய் மினே.

மா: என்ன கஞ்ச மலையா! அப்படியே நின்றுவிட்டாய்?!

கஞ்: நம் திருமூலர் பிரான் அருளிய திருமந்திரம் என் சிந்தை விகற்பம் களைந்து சிவயோகத்தில் சேர்க்கின்றது! ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்!

மா: அற்புதம் கஞ்சமலையா! வானவர்கள் முதல் புழுக்கள் தாவரங்கள் உட்பட நாமெல்லாம் பலவாகத் தெரியினும் உயிராகிய பசுக் கூட்டங்கள் தானே! நாமெல்லாம் ஒரு குலம் - பசுக்குலம். நாம் எல்லோருக்கும் ஒருவன் தான் தேவன் - இறைவன். பதி என்று பெயர் கொண்ட பரமசிவன் தான் அவன். இத்தெளிவு நமக்கிருந்தால் உலகை நாம் காணும் கண்ணோட்டமே வேறூ தான்!

கஞ்: உண்மை தான்! சென்றே புகுங்கதி இல்லை! என்று சொன்னார் நம் பெரியோர்! என்ன வார்த்தைகள் அவை! மெய் சிலிர்க்கின்றது!

மா: தத்வமஸி மகா வாக்கியத்தை விரித்துரைத்தவரன்றோ நம் திருமூலர்! இறைவனை எங்கோ உள்ள ஒருவனாக எண்ணுவது துவக்க நிலையில் தானே! நம் உயிரோடு வேறாய் உடனாய் ஒன்றாய் உறவாகி உள்ள சிவத்தை நம்மிடைத்திலேயே உணர்ந்து அப்பெருமானின் மீது உள்ள காதலால் நமச்சிவாய என்று சிவத்தையே எண்ணித் தன்னையும் மறந்த சிவமான நிலைதானே, தத்வமசி வாக்கியம், சிவோஹம் பாவனை!

கஞ்: ஆம் மாலாங்கா! நாம் செல்ல வேண்டிய கதி நமக்குளேயே உள்ளது! அந்த இன்பப்பொருளோடு ஆனந்தமே ஆய்விட என்ன தடை? நாமே தான் தடை! நானெனும் உணர்வு - அதுதான் தடை!

மா: அத்தடை நீங்கிச் சிவானந்தம் அனுபவிக்க என்ன செய்யவேண்டும் என்கிறாய் கஞ்சமலையா?

கஞ்: அதற்கு இரண்டு வேண்டும். முதற்கண் தெளிந்த சிவஞான நூல்களைக் கற்றும் கேட்டும் தேடும் பொருள் சிவன் கழலே என்னும் தெளிவு பெற வேண்டும். அவ்வாறு அறிவுநிலையில் இருக்கின்ற தெளிவினை அவ்வறிவும் அனுபூதியும் உடைய குருவின்றன் அணுக்கத்தால் அவ்வனுபூதி தனக்கும் கைவரப்பெற்று நின்றால் அவன் அதனை அடைந்தவனாகிறான்! (திருமூலரை வணங்கி நிட்டை கூடுகின்றார்.)

மா: ஆகா! மெய்ஞ்ஞானத்தையும் அதனை சித்தி செய்யும் வண்ணத்தையும் இன்று கண்டேன். வேத சிவாகமத் தெளிவைத் தமிழ் செய்த திருமூல தேவா! உம் உபதேசத்தால் உங்கள் நினைவாலேயே அந்தச் சிவானந்தத் தேனைப் பருகும் பேறு பெற்றோம்! வாழ்கவே வாழ்க

(எல்லோரும் மலர் தூவுகின்றனர்)

திருமூலர்: வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி 
வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம் 
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள் 
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே

பின்குரல் : இவ்வாறு மூவாயிரம் ஆண்டுகள் இவ்வுலகத்தின்கண் மகிழ்ந்து வீற்றிருந்து தமிழ் மூவாயிரம் பாடல்களை பாடியருளி திருமுடியில் ஞான சந்திரனைச் சூடிய சிவபெருமானது திருவருளினாலே அவர்தம் திருக்கயிலையினை அடைந்து என்றும் பிரியாதபடி சிவனாரது சீபாதநிழலிற் சேர்ந்திருந்தார்.

- திருச்சிற்றம்பலம் -

For comments contact.

Related Content