திருச்சிற்றம்பலம்
ஞானநாடகம் (மாணிக்கவாசகர்) - ஓரியூர் உகந்த பிரான் - பகுதி-1 - கௌரி திருமணம்
காட்சி : 1
இடம் : விரூபாக்கன் இல்லம்
(விரூபாக்கனும் சுபவிரதையும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்)
விரூபாக்கன்: அங்கயற்கண்ணி உடனுறை சொக்கநாதப் பெருமான் திருவருள். எத்தனை காலம் தவமிருந்தோம்? நமக்கு மக்கட் பேறு வாய்ப்பதற்கு. நம் மகள் கௌரி வளர்வது கண்டு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா?
சுபவிரதை: அறிவில் மட்டுமல்ல; நம் மகள் கௌரி பண்பிலும் அன்பிலும் மிகச் சிறந்து விளங்குகிறாள். அவளை ஈன்ற என் உள்ளம் பூரிக்கிறது. எல்லாம் ஆலவாயண்ணல் பேரருள்.
(கௌரி ஓடிவந்து)
கௌரி: அப்பா! நீங்கள் மந்திரங்கள் வேதங்கள் எல்லாம் தெரிந்தவர் தானே? பிறவிக்கடல் நீத்து வீடுபேறு அடைந்திட எந்த மந்திரமப்பா செபிக்கவேண்டும்?
விரூபாக்கன்: என் கண்ணே! ஐந்து வயதில் உனக்கு இத்தனை ஞானமா? சொக்கநாதா! கூறுகிறேன் கண்ணே! (காதில் உபதேசிக்கிறார்.) எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு தெய்வமே உண்டு. அந்த தெய்வமே சிவமாகவும் சத்தியாகவும் காட்சியளிக்கிறது. அந்த சிவசக்தியாம் நம் அங்கயற்கண்ணி உடனுறை ஆலவாய் ஈசன் திருவடி தொழுதலே நம்மை உய்விப்பது. இதில் எந்த ஐயமும் வேண்டாம் குழந்தாய்!
கௌரி: சரியப்பா! அம்மையப்பர் திருவடிகளை எப்பொழுதும் வணங்கியிருப்பேன்!
காட்சி : 2
இடம் : விரூபாக்கன் இல்லம்
(கௌரி வளர்ந்து மணப்பருவம் எய்தினாள். வளர்ந்தது அப்பெண் மட்டுமல்ல. அவல் உள்ளத்தில் அங்கயற்கண்ணி ஆலவாய் அண்ணலுக்கு அன்பும் தான். அவள் பேரழகையும் இறைவர் திருவடி மேல் வைத்த அன்பையும் கண்ட அவள் பெற்றோர்களும், உறவினர்களும், அவளுக்கு சிவபக்தியிற் சிறந்த கணவன் அமைய வேண்டும் என்ற ஆவலில் இருக்கின்றனர். அப்போது ஒருநாள் ஓரியூரைச் சார்ந்த ஒரு வைணவ பிரமசாரி பிச்சை ஏற்று வருகிறான்.)
வை.பி: பவதி பிட்சாம் தேஹி!
விரூபாக்கன்: ஆகா! பிரமசாரி பிட்சை கேட்டு வந்துள்ளான். இவனுக்குக் கன்னிகாதானமாக என் மகளை அளிக்கிறேன். (கரக நீரைக் கையில் சொரிகிறான்.) ஏ பிரமசாரியே, உனக்கு என் மகளை மனைவியாக கன்னிகாதானமாக அளித்தேன்!
சுபவிரதை: என்ன காரியம் செய்தீர்கள்! நம் மகளை எவ்வளவு பாராட்டிச் சீராட்டி வளர்த்தோம். என்ன யார் என்று ஒன்றுமே விசாரிக்காமல் கன்னிகாதானம் செய்கிறீர்களே!
உறவினர்: உனக்குப் புத்தி பேதலித்துவிட்டதா? இப்படித்தானா அருமையாக வளர்த்த மகளுக்குத் திருமணம் செய்வது? நம் கௌரி சிவபெருமான் உமையம்மையிடம் எத்தனை அன்புடையவள்! இந்த பிரமசாரியோ சிவவழிபாடை நினைபவன் போலக் கூட இல்லை. வினைப்பயன் தான் இவ்வாறு உன்னைச் செய்யச் செய்ததோ! சிவ சிவ!!
உறவினர் மற்றொருவர்: சிவ வழிபாடு இல்லாத ஒன்றே அப்பிரமசாரியிடம் குறையாகத் தோன்றுகிறது. எனவே விரூபாக்கன் கரக நீர் வார்த்ததால் வேறு வழியின்றி நம் செல்வம் கௌரியை அப்பிரமசாரிக்குத் தான் கொடுத்தாக வேண்டும். பிச்சைக்காரனுக்குக் கிடைத்த பொன்முடிப்பு!
(கௌரியை அப்பிரமசாரியுடன் அனுப்புகின்றனர்.)
காட்சி : 3
இடம் : ஓரியூரில் கௌரியின் புகுந்த வீடு
கணவன்: அம்மா அப்பா!
மாமி: என்னடா போடா! பிச்சைக்குப் போய் வந்தாயா, அவ்வளவு தானே! வருகிறேன்.
கணவன்: இல்லையம்மா, இங்கே வந்து பார்! செல்வம் மிகுந்த ஒரு அழகுக் கன்னியை மணமுடித்து வந்திருக்கிறேன்.
மாமி, மாமன்: உனக்கு யாரடா பெண் கொடுத்தார்கள்! (ஓடி வருகின்றனர். காலிருந்து பார்த்து) அடடே! பட்டு சேலை. தங்க ஒட்டியாணம், பங்கத்திலேயே பொண்ணை புதைச்சு வைச்சுக் கொடுத்திருக்காங்களே! (முகத்தைப் பார்த்து) ஆஆ! இது என்னடா! சாம்பலைப் பூசியிருக்கா!
கௌரி: சிவ சிவ! அம்மா, வேதம் இறைவனைத் திருநீறு பூசி வெளுத்த மிடறை உடையவன் என்று புகழ்கின்றன. உபநிடதங்கள் திருநீற்றை அல்லவா உள்ளத்தின் மாசு கழுவும் எனப் பேசுகின்றன. திருநீறு பூசாதவர்களால் செய்யப்படும் எத்தகு வேள்வியும் பயனற்றது என்றல்லவா முனிவர்கள் கூறியுள்ளனர். திருநீற்றை இகழ வேண்டாமம்மா!
மாமி மாமன்: ஆஆ! இந்தக் கழுதை எனக்கே சாணிச்சாறைப் பத்திச் சொல்றா! சுடுகாட்டிலே ஆடுறவனைக் கும்பிடுவாள் போலருக்கே!
கௌரி: சிவ சிவ! அம்மா! என் வணக்கதிற்குரிய மாமியாகிய நீங்கள் இவ்வாறு சிவநிந்தனையால் நரகம் புகுந்துவிடக்கூடாது என என் மனம் துடிக்கிறது. அம்மா! மறைகள் ஈசுவரன் - உடையவன் என்று கூறும் அந்த ஈசுவரன் என்ற சொல் சிவபெருமானையல்லவா குறிக்கும்? காயத்திரி மந்திரத்திற்குப் பொருளாகவும், பிறப்பு இறப்பு இல்லாதவராக இருந்து, வீடுபேறு அருளக்கூடிய ஒரே இறைவன் சிவபெருமான் அல்லவா! அவரை நீங்கள் நன்றாக இருத்தல் பொருட்டு என்றும் நிந்திக்காதீர்கள் அம்மா!
மாமி: டேய்! இவளையாடா கட்டிட்டு வந்த? அவளை அந்த மூலைல தள்ளு! நல்லா கல்யாணம் கட்டிட்டு வந்திருக்கான்! கௌரி: சிவபெருமானே! அன்னையே!
- திருச்சிற்றம்பலம் -
ஞானநாடகம் (மாணிக்கவாசகர்) - ஓரியூர் உகந்த பிரான் - பகுதி-2 - விருத்த குமார பாலரான படலம்
திருச்சிற்றம்பலம்
காட்சி : 4
(மாமி மாமன் கணவன் வெளியூர் செல்கின்றார்கள்)
மாமி: நம்ம வெளியூர் போயிக் கல்யாணம் பார்த்துட்டு வரணும். இவள விட்டுட்டுப் போணா சாம்பலைப் பூசிட்டு வந்துருவா! வீட்டுக்குள்ள வைச்சு பூட்டிட்டுப் போயிடுவோம்!
(போகிறார்கள்.)
கௌரி: அங்கயற்கண்ணி அம்மையே! ஆலவாய்ப் பெருமானே! என்ன கொடுமை இது! உங்கள் திருவருளைப் பேசாத ஒவ்வொரு நாளும் வீண் நாளன்றோ! வாழ்வின் பயனை அடைவது சிவபூசையாலன்றோ! இங்கு உன் பூசையும் செய்ய இவர்கள் விடமாட்டார்கள். நடமாடும் கோயிலாக விளங்கும் சிவனிடியார் பெருமக்கள் தம் சிவ வேடத்தை வணங்கி அவர்களுக்கு அமுதிடுதல் அன்றோ இல்லறத்தின் பெருமை! இறைவா உன் அடியார் முகம் கூடக் காணாத நிலையில் உள்ளேனே! சொக்கா!
(இறைவன் முதிய சிவனடியாராக வருகிறார்.)
முதியவர்: சிவசிவ!
கௌரி: (குரல் கேட்டு ஒடி வருகிறாள்) சிவசிவ!
முதியவர்: சிவபெருமான் திருவருள் உனக்கு உரித்தாகுக அம்மா! பல நாள் பசி, இந்த வெயிலின் கொடுமையில் மிகவும் களைத்துவிட்டேன் எனக்கு உணவளிப்பாயா?!
கௌரி: ஆகா! பாலைவனத்தில் சென்றுகொண்டிருப்பவனுக்குச் சோலை தெரிந்தாற் போல, எனக்குத் தங்களின் சிவவேடப் பொலிவழகு கண்களெல்லாம் நிறைவிக்கின்றது! ஆ ஆ! என்ன சொன்னீர்கள்! பசியா! அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈதலை விடவும், பிரான் திருக்கோயிலுக்குச் சிகரம் ஆயிரம் செய்தலினும், ஞானிக்கு ஒரு பகல் உணவு அளிப்பதன்றோ சிறந்தது! ஆனால் பெரியீர்! என்னே நான் செய்வேண்? என் புகுந்த வீட்டார், வீட்டினை வெளியே பூட்டிச் சென்றுவிட்டனரே! எவ்வாறு நான் அமுது படைப்பேன்?
முதியவர்: உன்னுடைய கரம் பட்டதும் கதவு திறக்கும்! நீ தாமதியாது என் பசிக்கு உணவளி!
(கௌரி தொட்டவுடன், கதவு திறக்கின்றது. அன்போடு அழைத்துச் சென்று உணவு பரிமாறுகிறாள். இறைவர் உண்டவுடன் இளைஞராகிறார். கௌரி திகைத்து ஒதுங்கி நிற்க, அப்பொழுது புகுந்த வீட்டார் வருகின்றார்கள்.)
கௌரி: கண்ணுதற் பெருமானே!
(இறைவர் அவர்கள் உள்ளெ வரும் முன்னர் இளங்குழந்தை ஆகி விடுகின்றார்.)
மாமி: என்னடி இது குழந்தை? எங்கிருந்து வந்தது?
கௌரி: தேவதத்தன் மனைவி இக்குழந்தையைச் சிறிது நேரம் பார்த்துக்கொள்ளக் கூறி விட்டுச்சென்றாள்.
மாமி: ஓஓ! எரியாடும் உருத்திரனுக்கு அன்பு பூண்டவன் குழந்தையையா நம் வீட்டில் சேர்த்தாய்! போடீ! நீயும் இந்தப் பிள்ளையும் என் கண் முன்னே நிற்காது எங்காவது போய் விடுங்கள். இனி உனக்கு இந்த வீட்டில் இடம் இல்லை.
(தெருவில் தள்ளப்பட்ட கௌரி திருமந்திரத்தை செபிக்கிறாள். அருகில் கிடந்த குழந்தை வானில் உமையோடு இறைவனாகக் காட்சி அளிக்கிறார்.)
இறைவர்: கௌரி! நின் அன்பை மெச்சினோம். நீ பார்வதியின் வடிவைப் பெறுவாயாக!
அடியார்க்கு எளிவந்த ஆலவாயண்ணல் திருவடிகள் போற்றி போற்றி!!
- திருச்சிற்றம்பலம் -