logo

|

Home >

video-gallery >

63-nayanmar-drama-kaar-konda-kodai-kazharitrarivar-nayanar-drama

63 Nayanmar Drama-கார்கொண்ட கொடை கழறிற்றறிவார் புராணம்

aum namaH shivAya

Welcome to the Spiritual Video Gallery from the Shaivam.org.

Drama

 


கழறிற்றறிவார் (சேரமான் பெருமாள்) - பகுதி-1 - சேரமன்னர் கழறிற்றறிவார் பாணபத்திரருக்கு மாண்பொருள் கொடுத்தல்

 

 

கார்கொண்ட கொடை கழறிற்றறிவார் புராணம்

காட்சி - 1.

இடம் : திருஅஞ்சைக்களம் திருக்கோயில்.

பின்குரல் : பெருமாக்கோதையார் சிவாலயத்தில் திருப்பணிகள் செய்வதைக் கண்டு மக்கள் வியப்படைகின்றனர்.

பெருமாக்கோதையார் : சிவாய நம: ஓம்; நமச் சிவாய.

பக்தர் - 1 : சிவ! சிவ! நம் இளவரசர் செய்யும் திருப்பணிகளைப் பார்த்தாயா?! அவர் நம் அஞ்சைக்களத்து அப்பரின் திருவடிகளைத் தவிர வேறு எதையும் விரும்பாதவர். அதனால்தான் அரண்மனையில் இருந்து அரச போகத்தை அனுபவிக்காமல் மண்மேல் சைவநெறி வாழும்படி இறைவனாருக்குத் திருத்தொண்டு புரிந்து நமக்கெல்லாம் வழிகாட்டுகின்றார்.

பக்தர் - 2 : ஆமாம் ஐயா! சரியாகச் சொன்னீர்கள்; நம் திருக்கோயிலில் திருஅலகிடுதல், திருமெழுகிடுதல் மேலும் திருநந்தவனப் பணிகள் முதலாகிய பல ஒப்பற்றப் பணிகளையும் அவரே தம் கைப்பட செய்கின்றார். நம் சேரப் பேரரசர் செங்கோற்பொரையனாருடைய அருந்தவப் புதல்வராம் நம் இளவரசர் பெருமாக்கோதையாரின் பெருமையை என்னென்று கூறுவது! சிவ சிவ!!.

காட்சி - 2.

இடம் : சேர அரசவை.

பின்குரல் : பெருமாக்கோதையாரின் தந்தையாகிய செங்கோற்பபொரையர் அரச வாழ்வைத் துறந்து தவநெறியைச் சார்கின்றார். அமைச்சர்கள் ஒன்று கூடி, அடுத்து யாருக்கு முடி சூட்ட வேண்டும் என்று ஆலோசித்துக் கொண்டிருக்கின்றனர்.

அமைச்சர் - 1 : (சிறிது யோசித்துவிட்டு) ம்... ம்..., நம் சேரப் பேரரசர் செங்கோற்பொரையர் அரச வாழ்வைத் துறந்துவிட்டு, தவநெறிக்குச் சென்று விட்டார். விதிமுறைப்படி இவ்வரசாட்சியை அடுத்து ஏற்க வல்லவர் யார்?

அமைச்சர் - 2 : ம்ம்ம்... நம் மலைநன்னாட்டு மரபுவிதிப்படி நம் சேரப் பேரரசரின் அருந்தவப் புதல்வர் பெருமாக்கோதையாரே இவ்வரசாட்சியை ஏற்கும் தகுதியை உடையவர்.

அமைச்சர் - 1 : நம் இளவரசர் சதாசர்வ காலமும் திருஅஞ்சைக்களத்து சிவபெருமானையே நினைந்து அவருக்குத் தொண்டு செய்பவர்; குறிப்பாகச் சொன்னால், நம் பேரரசருக்கு முன்பாகவே தவநெறியில் இருப்பவர்; அவர் இவ்வரசாட்சியை ஏற்பாரா?

அமைச்சர் - 2 : உண்மைதான்! நம் பெருமாக்கோதையார் திருஅஞ்சைக்களத்து ஈசனார்த் திருவடிகளே தன் வாழ்வாகக் கருதி வாழ்பவர். ஆனாலும் நம் மலைநாட்டு உரிமைச் செங்கோல் அரசு புரிவதற்கு அவரே ஏற்றவர்; ஆகவே, நாம் இப்பொழுதே திருஅஞ்சைக்களம் சென்று, நம் இளவரசர் பெருமாக்கோதையாரிடம் இச்செய்தியைத் தெரிவிப்போம்.

அமைச்சர் - 1 : மிக்க நன்று; வாருங்கள் செல்வோம்.

காட்சி - 3.

இடம் : திருஅஞ்சைக்களம் திருக்கோயில்.

பின்குரல் : சேரநாட்டு அமைச்சர்கள், இளவரசர் பெருமாக்கோதையாரை காணும் பொருட்டு திருஅஞ்சைக்களம் சிவாலயத்திற்கு வருகின்றனர்.

அமைச்சர் - 1 : இளவரசே! தங்களை வணங்குகின்றோம்.

பெருமாக்கோதையார் : சிவ சிவ! அமைச்சர் பெருமக்களே! தாங்கள் அனைவரும் இங்கு கூடிவந்திருப்பதின் காரணம் யாது?!

அமைச்சர் - 2 : இளவரசரே! நம் சேரப் பேரரசரும், தங்களின் அன்பு தந்தையாருமாகிய செங்கோற்பொரையனார் அரச வாழ்வைத் துறந்து தபோவனம் சென்று விட்டார். நம் மலைநன்னாட்டு மரபின்படி தாங்களே இந்நாட்டை ஆள்வதற்கு உரியவர். தாங்கள் உரிமைச் செங்கோலை ஏற்று, நம் நாட்டினை வழி நடத்த வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம்.

பெருமாக்கோதையார் : சிவ சிவ! சிவ சிவ!! பேரின்பத்தை மேன்மேலும் பெருக்கும் எம் விடையவர்தம் திருத்தொண்டில் ஈடுபடும் அடியேனுக்கு, தாங்கள் கொண்டு வந்த செய்தி இடையூறாகவே தோன்றுகிறது. உலகின் இயல்பும், அரசியல்பும் உறுதியல்ல என்பதால்தானே, நம் அஞ்சைக்களத்து அப்பன் திருவடிகளே எனக்கு உற்றத் துணையாக வாழ்கின்றேன்.

அமைச்சர் - 1 : இளவரசரே! மன்னிக்க வேண்டும். தங்களைத் தவிர வேறு யாரும் இவ்வரசாட்சிக்கு உரிமையுடையவரும் தகுதியுடையவரும் அல்லர். தாங்கள் மறுக்காது இவ்வுரிமைச் செங்கோலை ஏற்று நம் சேரநன்னாட்டை வழிநடத்திக் காத்தருளுமாறு வேண்டுகிறோம்.

பெருமாக்கோதையார் : எம் இறைவன்மேல் கொண்ட அன்பு நிலையில் நின்று வழுவாமல் அரசு புரிவதற்கு திருவருள் உள்ளதா? என்பதை எம் அஞ்சைக்களத்து அப்பன் திருவடிகளுக்கு விண்ணப்பித்து அவரது திருவுள்ளத்தினை அறிவேன்.

பின்குரல் : பெருமாக்கோதையார் திருஅஞ்சைக்களத்து பெருமானிடம் தம் நிலையிலிருந்து விண்ணப்பம் செய்கின்றார்.

ஒல்லையாறி உள்ளமொன்றிக் கள்ளம்ஒழிந் துவெய்ய
சொல்லையாறித் தூய்மைசெய்து காமவினை யகற்றி
நல்லவாறே உன்றன்நாமம் நாவில்நவின் றேத்த
வல்லவாறே வந்துநல்காய் வலிவலமே யவனே.

அசரீரி : பெருமாக்கோதையாரே! உன்னைத் தேடி வந்த இவ்வுரிமைச் செங்கோலை நீ ஏற்பாயாக! நம்பால் உன்னுடையத் திருத்தொண்டு எந்நிலையிலும் வழுவாது. மேலும், யாவும் யாரும் கழறின அதாவது நினைந்தன பற்றிய அறிவும், உணர்வும், அளவில்லாத ஒப்பற்ற வெற்றியும், தடையில்லாத ஈகையும், அரசனுக்கு உரித்தான அனைத்து அங்கங்களையும் உனக்கு அளித்தோம்.

பெருமாக்கோதையார் : சிவ சிவ! இதுவே, தங்கள் திருவருள் என்றால், மகிழ்வோடு ஏற்கிறேன்.-

அமைச்சர்கள் : சேர மாமன்னர்! கழறிற்றறிவார்!! வாழ்க! வாழ்க!! சேரர் குலப்பேரரசர் மாமன்னர் கழறிற்றறிவார் வாழ்க! வாழ்க!!

காட்சி - 4.

இடம் : கொடுங்கலூர் நகர வீதி.

பின்குரல் : மலைநாட்டு மக்கள் இறைவனார் சிவபெருமான் சேரமாமன்னருக்கு திருவருள் அளித்த நிலையைக் கண்டு மிகவும் வியந்து பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.

ஊரார் - 1 : நம் சேரப் பேரரசரின் பெருமைகளை என்ன வென்று கூறுவது?! தன்னை தேடிவந்த அரசாட்சியையும் ஏற்க மறுத்து, சிவப்பணியே உயர்ந்தது என்று கூறினாரே! அடேயப்பா...! நம் அரசரின் பற்றற்ற நிலையைப் பார்த்தாயா?!

ஊரார் - 2 : ஆமாம் ஐயா! ஆட்சிக்காக போர் மற்றும் சூழ்ச்சிகளில் ஈடுபடும் அரசர்களின் மத்தியில் நம் சேரமாமன்னர் அரசாட்சி இன்னல், என்பதைத் தம் சிறு வயதிலேயே தெளிந்து இன்றும் திருத்தொண்டின் நெறியிலேயே நிற்பவர். மேலும், நம் அஞ்சைக்களத்து அப்பரே யாவும், யாரும் கழறின அறியும் ஆற்றலையும், அரசற்குரிய அனைத்து அம்சங்களையும் அருளினாரே! சிவ சிவ! இவ்வுலகில் எவ்வரசரும் பெறாத பேறை நம் கழறிற்றறியும் மாமன்னர் பெற்றிருக்கிறார்.

ஊரார் - 1 : ஆமாம் ஐயா!..... சிவ சிவ! உமக்கு செய்தித் தெரியுமா?! நம் சேரமாமன்னர் முடி சூடிய உடனே, நம் திருஅஞ்சைக்கள சிவாலயத்திற்கு வருகிறாராம்; வாருங்கள் நாமும் திருஅஞ்சைக்களம் செல்வோம்.

ஊரார் - 2 : அப்படியா! மிக்க மகிழ்ச்சி! வாருங்கள் நாமும் செல்வோம்!

காட்சி - 5.

இடம் : நகர்வல வீதி.

பின்குரல் : திருஅஞ்சைக்களத்து ஈசன் ஆணையால், அரசாட்சியை ஏற்ற கழறிற்றறிவார், மாமன்னராக முடி சூட்டியவுடன் திருஅஞ்சைக்களம் சிவாலயத்திற்குச் சென்று தன் தலைவராகிய சிவனாரை வழிபட்டு பின், நகர்வலம் செல்கின்றார்.

மகுடம் : சேரர் குலத்தோன்றல்! மாமன்னர் கழறிற்றறிவார்!! வாழ்க! வாழ்க!!
மண்மேல் சைவநெறி வாழ செங்கோலோச்சும் மலைநன்னாட்டு அரசர் கழறிற்றறிவார்! வாழ்க! வாழ்க!!

பின்குரல் : நகர்வலத்தின் போது சேர மாமன்னர், தோளில் உவர்மண் பொதியினைச் சுமந்து கொண்டு வரும் சலவைத் தொழிலாளி ஒருவரைக் காண்கின்றார். கண்மேல் விளங்கு நெற்றியினார் கழலே பேணும் கருத்தையுடைய கழறிற்றறிவாருக்கு, உவர் மண்ணினால் வெளுத்து இருந்த அச்சலவைத் தொழிலாளியின் தோற்றம், திருநீற்றின் வாரவேடமாகவே தெரிந்தது.

சேர மன்னர் : ஆகா! என்ன ஒரு திருவேடப்பொலிவு! மானுடன் விளங்கும் திருக்கரத்தினையுடைய நம் இறைவரது அடியார் திருவேடம் தொழப் பெரும் பேறு பெற்றேன்.

ச. தொழிலாளி : மாமன்னா...! அடியேனை யாரென்று தாங்கள் நினைத்து இவ்வாறு செய்தீர்கள்! சேரப்பேரரசே, அடியேன் ...அடி......வண்ணான்.

சேர மன்னர் : சிவ சிவ! அடிச்சேரன் அடியேன். திருநீற்றின் வாரவேடமாகிய அண்டர்பிரான் அடியார் திருவேடத்தை அடியேகுக்கு நினைவூட்டினீர். ஆதலால் வருத்தப்படாது தாங்கள் சென்றுவாருங்கள்.

மகுடம் : திருநீற்றின் அன்புநெறி பாதுகாத்து செங்கோலோச்சும் சேர மாமன்னர் கழறிற்றறிவார்! வாழ்க! வாழ்க!!

காட்சி - 6.

இடம் : பாணபத்திரர் இல்லம்.

பின்குரல் : திருஆலவாயில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரப் பெருமான், தன்மேல் மிகுந்த அன்பு கொண்டு பண்ணிசை பாடல்களால் துதிக்கும் பாணபத்திரனாருக்கு நன்மை பொருந்திய பெருஞ்செல்வம் தர விரும்பி அருள்புரியத் திருவுள்ளம் கொள்கின்றார்.

மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி 
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப் 
பொங்கழ லுருவன் பூதநா யகனால் வேதமும் பொருள்களும் அருளி 
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவா யாவதும் இதுவே. 

அசரீரி : அன்பனே, நம்மிடம் அன்பினால் எப்போதும் பரவும் தன்மையையுடைய சேரமானுக்கு பொன்னும், காசும், பட்டாடையும் பொருந்திய ஒளி செய்யும் கதிர்மணிகளையுடைய அணிகளும் இன்னும் வேண்டியனயெல்லாம் குறைவில்லாமல் உனக்குத் தரும்படி நமது திருமுகம் தருகின்றோம்; சென்று வருவாயாக.

பாணபத்திரர் : தென்திருஆலவாயா! செந்தமிழ் சொக்கநாதா, சோமசுந்தரக் கடவுளே! உன் கருணையை அடியேன் எவ்வாறு போற்றுவேன்.

சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த தலைமைச் சங்கப் புலவனாகிய தேவரீர் அருளிய திருமுகத்தைச் சிரமேற் கொண்டு, இன்றே மலைநாடு செல்கின்றேன்.

காட்சி - 7.

இடம் : சேர அரசவை.

பின்குரல் : சேர மாமன்னர் அரசவையில் அமைச்சர் பெருமக்களுடன் உரையாடிக் கொண்டிருக்கின்றார்.

மகுடம் : மலைநன்னாட்டு அரசர்! கழறிற்றறிவார்!! வாழ்க! வாழ்க!! சேரர் குலப்பேரரசர் மாமன்னர் கழறிற்றறிவார் வாழ்க! வாழ்க!!

அமைச்சர் - 1 : சேரப்பேரரசே! உலகு புரக்கும் கொடையினை உடைய சோழரும், உரிமை பாண்டியரும் என்று இருவருடனே கூட நிலவுகின்ற பெரிய மூவேந்தர்களாய் நீதியினை மனுநூல் வழியே நடைபெறச் செய்தும், திருநீற்று அன்புநெறி பாதுகாத்தும் அரசளிக்கும் தங்கள் பெருமை சொல்லொணாதது.

அமைச்சர் - 2 : மலை நன்னாட்டு அரசே! தங்கள்பால் வந்து யாசிப்போர்களுக்கும், வறியவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் செம்பொனை மழைபோல் பொழியும் தன்மையினராய், என்றும் திருந்து வெற்றியுடனும், நம் சிவனாருக்கு உம்பர்களும் போற்றும்படி உரிய வேள்விகளைத் தவறாது செய்யும் தங்கள் ஆட்சியின் கீழ் வாழ நாங்களும் இந்நாட்டு மக்களும் பெருந்தவம் செய்தோம்.

சேர மன்னர் : சிவ சிவ! அமைச்சர்களே, நீடுகின்ற உரிமையையுடைய இப்பேரரசை செலுத்துவதால் நிகழ்கின்ற பயனும், நாம் செய்யும் தவத்திற்கெல்லாம் முடிவாகிய நிறை தவமும், தேடி அடையக்கூடிய பொருளும், உயிருக்கு உற்ற பெருந்துணையாகவும் இருப்பது தில்லை அம்பலத்தில் ஆடுகின்ற திருவடியே ஆகும். சிவபெருமானை நினையாது செய்யும் எச்செயலும் பயனற்றதாகவே அமையும். திருஅஞ்சைக்களத்து உறையும் நம் இறைவன் திருவருளினால்தான், நம் மலைநாடு எந்தக் குறையும் இன்றி செழிப்புடன் இருக்கின்றது.

காவலாளி : சேரர் குலப்பேரரசே! தங்கள் புகழ் வாழ்க! அரசே, தங்களைக் காண பாண்டிய நாட்டிலிருந்து பாணபத்திரர் என்ற சிவனடியார் ஒருவர் வந்துள்ளார்.

சேர மன்னர் : சிவ! சிவ!! எங்கே அந்த அடியவர்?!

காவலாளி : மன்னா, அவர் அரண்மனை வாயிலில் உள்ளார்; அவரை இப்பொழுதே அழைத்து வருகிறேன்.

சேர மன்னர் : வேண்டாம்; நம் சேரநாடு உய்யும்படி எழுந்தருளியிருக்கும் அவ்வடியவரை நானே அரண்மனை வாயில் சென்று அழைத்து வருகிறேன்.

பின்குரல் : தனது அரண்மனை வாயிலிற்கு வந்துள்ள அடியவரை வரவேற்க சேர மன்னர் பள்ளத்தில் இறங்கும் புனலென விரைந்து ஆர்வத்தோடு வருகிறார்.

காட்சி - 8.

இடம் : அரண்மனை வாயில்.

பின்குரல் : சேரமன்னர் திருஆலவாயுடையார் அருளிய திருமுகத்துடன் தன் நாட்டிற்கு வந்திருக்கும் பாணபத்திரரை, வரவேற்று அவர் தம் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, கண்களின் நீர் பெருக்கெடுக்க செய்வதறியாது கரங்குவித்து நிற்கிறார்.

சேர மன்னர் : பாணபத்திரரே! சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த தென்திருஆலவாயிலிருந்து எழுந்தருளியிருக்கும் தாங்கள் வர வேண்டும்; தங்களால் எங்கள் மலைநாடு பெரும்பேறு பெற்றது.

பாணபத்திரர் : சேரப்பேரரசே! நம் இறைவரே அடியேன் கனவில் எழுந்தருளி, தங்களிடம் இத்திருமுகத்தைக் கொடுக்குமாறு அடியேனைப் பணித்தார்.

சேர மன்னர் : சிவ சிவ! அடியேனையும் பொருளாகக் கொண்டு, நம் இறைவர் திருமுகம் அருளினாரா?! என் செல்வமே, இவ்வுலகில் எவ்வரசருக்கும் கிடைக்காத ஓர் அரிய செல்வமாகிய தேவரீர் திருமுகத்தை என்னையும் பொருளாகக் கொண்டு அருளிச் செய்த எம்அண்ணலே! பெருமானே! தேவரீருடையப் பெருங்கருணையை எளிவரும் பெருமையை எவ்வாறு வழுத்துவேன். பாணபத்திரரே! கிடைத்தற்கரிய இவ்வரிய செல்வத்தை பாண்டிய நாட்டில் இருந்து அடியேன் பொருட்டு, கொண்டு வந்த தங்களுக்கு அடியேன் என் செய்ய வல்லேன்?! என்ன செய்தாலும் ஈடாகாது! சிவ சிவ!!.

[சேர மன்னர் அத்திருமுகத்தைப் பிரித்துப் படிக்கின்றார்.]

மதிமலி புரிசை மாடக் கூடற் பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிற கன்னம் பயில்பொழில் ஆல வாயில் மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம் பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க் குரிமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ் குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச் செருமா உகைக்குஞ் சேரலன் காண்க பண்பா லியாழ்பயில் பாண பத்திரன் தன்போல் என்பால் அன்பன் தன்பால் காண்பது கருதிப் போந்தனன் மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே.

(சேரர் அத்திருமுக ஓலையை சிரத்தின் மீது சூடியும் கண்களில் ஒற்றிக்கொண்டும் ஆனந்தத்தில் திளைக்கிறார்.)

சேர மன்னர் : அமைச்சரே! நம்முடைய அரசு கருவூலத்தில் உள்ள அனைத்துச் செல்வங்களையும் ஒன்றும் எஞ்சாமல் எடுத்துத், தக்கபடி பொதி செய்து, அரசவைக்கு கொண்டு வாருங்கள்.

அமைச்சர் : உத்தரவு மன்னா!

காட்சி - 9.

இடம் : சேர அரசவை.

பின்குரல் : சேர மாமன்னர் உத்தரவின்படி அமைச்சர்கள் அரசு கருவூலத்திலுள்ள அனைத்துச் செல்வங்களையும் தக்கமுறையில் பொதி செய்து அரசவையில் வைத்திருக்கின்றனர்; திரும்பிய பக்கமெல்லாம் பொற்காசுகளும், முத்துக் குவியல்களும் என அரசவையே ஒளிமயமாகக் காட்சியளிக்கின்றது.

சேர மன்னர் : பாணபத்திரரே, இங்கே குவிக்கப்பட்டிருக்கும் அனைத்துச் செல்வங்களும் தங்களுடையதுதான்; மற்றும் இவையும் சேர நாட்டிலுள்ள வலிமை பொருந்திய யானைகள், குதிரைகள் முதலாகிய உயிருள்ள தனங்களும் தங்களுடையதுதான். இறுதியாக இச்செங்கோலை ஏற்று மலைநாட்டினை காவல் புரியும் அரசாட்சியினையும் தாங்கள் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

பாணபத்திரன் : சேரப்பேரரசே, அடியேனுக்காக தாங்கள் அருளிய இச்செல்வங்களைக் கண்டு மிகவும் அதிசயித்தேன். தங்கள் பெருமை சொல்லொணாதது. அடியேன் அன்றாடம் ஆலவாய் அண்ணலை பண்ணும் இசைப் பாடலால் பரவுபவன். எனக்கு இந்த அரசாட்சி, யானை, குதிரை முதலாய செல்வங்களில் விருப்பமும் இல்லை. அடியேனுக்குத் தேவையான அளவு செல்வத்தை மட்டும் தாருங்கள் போதும். மேலும் அடியேன் திருஆலவாய்ச் சென்று நம்பெருமானை இசையால் போற்ற வேண்டும். இதுவே நம் இறைவனுடைய விருப்பமுமாகும். அரசாட்சியை தாங்களே தொடர்ந்து புரிந்து, மலைநாட்டினை காத்துவர வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.

சேர மன்னர் : இறைவனுடைய ஆணை அதுவென்றால், தங்கள் விருப்பப்படியே செய்கின்றேன். தாங்கள், தங்களுக்குத் தேவையான அளவு செல்வத்தை எடுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

அமைச்சர்கள் : சேர மாமன்னர்! கார்கொண்ட கழறிற்றறிவார்! வாழ்க! வாழ்க!! பண்பால் யாழ்பயில் பாணபத்திரர்! வாழ்க! வாழ்க!!

 

வாழ்க!!

 


கழறிற்றறிவார் - பகுதி-2 - கழறிற்றறிவார் சுந்தரருடன் திருக்கயிலை செல்லுதல்

 

 

காட்சி - 10.

இடம் : அரண்மனை.

பின்குரல் : கழறிற்றறிவார் நாள்தொறும் தில்லைப் பெருங்கூத்தப் பெருமானுக்குப் பூசை செய்யும் வழக்கம் உடையவர். அவர் பூசையின் இறுதியில் தில்லைப் பெருமான் நடந்து வரும் சிலம்பொலி கொடுத்து பூசையை ஏற்றதாக அருளுவார். ஒருநாள் சிலம்பொலி கேட்க காலதாமதம் ஆகின்றது. அப்போது -

சேர மன்னர் : பெருமானே! தேவரீருடைய ஆடற்சிலம்பின் ஒலி இன்னும் அடியேனுக்குக் கேட்கவில்லையே! சிவ சிவ! அடியேன் என்ன பிழை தெய்தேனோ? தெரியவில்லையே. இறைவனது திருச்சிலம்பின் ஒலியைக் கேட்கும் தகுதியை இழந்து விட்டேன். இனி இவ்வுடலினால் பெறத்தக்க இன்பம் யாதுளது?

பின்குரல் : சேர மன்னர் தன் உடைவாளை உருவி, தன் மார்பில் நாட்டுகின்றார். இறைவன் திருச்சிலம்பின் ஒலியை மிகவே கொடுக்கிறார்.

சேர மன்னர் : பெருமானே! என்னே உனது கருண! தேவரீர் திருவடிச் சிலம்பின் ஒலி கேட்டு பெரும்பேறு பெற்றேன். கோதிலா அமுதே! நெடுமாலும், பிரமனும் அருமறைகளும் தேடுதற்கு அரியவனே! தேவரீர்!, அடியேன் இனி எப்பிழைகளையும் செய்யாமை பொருட்டு, தாங்கள் முன்பே திருவருள் செய்யாமையின் காரணத்தை அறிய விரும்புகிறேன்?!

அசரீரி : சேரலனே! திருஅம்பலத்தினிடத்திலே நமது ஆனந்த கூத்தாடலை வன்தொண்டன் வந்து வணங்கி, நம்பால் ஒன்றிய உணர்வினாலே நம்மைத் துதித்து உரைசேர் பதிகத்தினை பாடுதலால், அதனை நின்று கேட்டபடியினாலே இங்கு வரக் காலந்தாழ்ந்தோம்.

சேர மன்னர் : என்னையும் பொருளாக இன்னருள் புரியும் என் செல்வமே, தேவரீர் அடியாருக்கு அருளும் கருணைத் திறம் இருந்தவாறுதான் என்னே?! வன்றொண்டப் பெருமானின் திருப்பதிகத்திற்கு எம்பெருமானீரெ இத்துணை சிறப்பு செய்கின்றிர்கள் என்றால் அவர் தம் பெருமை தான் எத்தகையது!! பொன் போன்ற சடையினையுடைய எம்தில்லை அம்பலவர் திருநடஞ்செய் பெரும்பற்றப் புலியூர் சென்று பொன்னம்பலத்தினை வணங்குவேன். மேலும், மன்றில் நடம்புரியும் வள்ளலையே காலம் தாழ்த்த வைத்த பெருமையை உடைய, தனக்கு ஓர் நிகரில்லாத வன்தொண்டர் பெருமானையும் கண்டு வணங்குவேன்.

காட்சி - 11.

இடம் : தில்லைத் திருக்கோயில்.

பின்குரல் : கழறிற்றறிவார் தில்லை கனக சபையில் கூத்தப் பெருமானை வழிபாடு செய்கிறார்.

சேர மன்னர் : மன்றில் நடம்புரியும் எம் வள்ளலே! களனிலே விடத்தை வைத்து தேவர்களுக்கு அளித்து காத்த அமுதமேயன்றி, திருஅம்பலத்திலே கழல் வைத்து என்றும் வளர்கின்ற திருக்கூத்தாகிய அமுதத்தினை உலகுக்கு அளித்தருளும் தேவரீ கருணைத்திறத்தினை என்னவென்று போற்றுவேன்!

[பொன்வண்ணத் திருவந்தாதி பாடுகின்றார். - இறைவன் திருச்சிலம்பொலி கொடுக்கிறார்.]

பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக்கண்ட 
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே. 

பின்குரல் : கூத்தப்பெருமான் திருமுன்னின்று செந்தமிழ் சொன்மாலையாகிய பொன்வண்ணத்து அந்தாதி சேரலனார் பாட, அதனை ஏற்று அதற்கு பரிசிலென, இவ்வுகத்தோர் வாழ எழுந்த ஒலியாகிய திருச்சிலம்பின் ஒலியை சேரலனார் கேட்கும்படி அருளினார்.

சேர மன்னர் : சிவ சிவா! என்னே உனது கருணை! பெருமானே! சிவ பரம்பொருளே!

அமைச்சர்கள் மற்றும் அடியவர்கள் : அருள்தரும் அன்னை சிவகாமியம்மை உடனாகிய ஞானபெருங்கூத்தப் பெருமான் மலரடிகள்! போற்றி! போற்றி!!

காட்சி - 12.

இடம் : திருஆரூர் பரவையார் மாளிகை.

பின்குரல் : தம்பிரான் தோழராகிய நம்பிஆரூரரைக் காண சேரமான் பெருமான் நாயனார் திருஆரூர் பரவையாரின் திருமாளிகைக்கு வருகின்றார்.

[நம்பிகள் பெருமான் திருவடிகளில் வீழ்ந்து சேரமன்னர் வணங்குகின்றார்.]

சேர மன்னர் : தன்னேரில்லா வன்தொண்டர் பெருமானே! தங்கள் பெருமையை மன்றில் நடம்புரியும் வள்ளல் உணர்த்த உணர்ந்தேன். தங்கள் திருவடிகளை இன்று கண்டு, அடியேன் பிறந்த பிறவியின் பயனை அடைந்தேன்.

நம்பிகள் : கார்கொண்ட கொடைக் கழறிற்றறிவாரே, அரனார் மேல் அளவிலா அன்பு கொண்ட தங்களை கண்டு பெரும்பேறு பெற்றேன்.

[இருவரும் ஆரத்தழுவிக் கொள்கின்றனர்.]

வாருங்கள். நம் இறைவர் திருவாரூர்ப் பூங்கோயில் வீற்றிருந்த பிரானை வணங்கலாம்.

(சுந்தரர் திருஆரூரர் திருச்சந்நிதியில் பாடுகின்றார்.)

குருகுபா யக்கொழுங் கரும்புகள் நெரிந்தசா
றருகுபா யும்வயல் அந்தணா ரூரரைப் 
பருகுமா றும்பணிந் தேத்துமா றுந்நினைந் 
துருகுமா றும்மிவை உணர்த்தவல் லீர்களே. 

நம்பிகள் : கழறிற்றறிவாரே! கோயில் திருத்தலத்தில் “பொன்வண்ணத் தந்தாதியை” பாடிப் பரவிய தாங்கள், எம் பூங்கோயில் இறைவர் மீதும் பாமாலைப் பாடிப் பரவிப் போற்றுங்கள்.

சேர மன்னர் : தங்கள் உத்தரவு!

(சேரர் பாடுகின்றார்.)

விரிகடல் பருகி அளறுபட் டன்ன கருநிற மேகம் கல்முக டேறி நுண்துளி பொழிய நோக்கி ஒண்தொடி பொலங்குழை மின்னப் புருவ வில்லிட்டு இலங்கெழிற் செவ்வாய்க் கோபம் ஊர்தரக் கைத்தலம் என்னும் காந்தள் மலர முத்திலங் கெயிறெனும் முல்லை அரும்பக் குழலுஞ் சுணங்குங் கொன்றை காட்ட எழிலுடைச் சாயல் இளமயில் படைப்ப உள்நிறை உயிர்ப்பெனும் ஊதை ஊர்தரக் கண்ணீர்ப் பெருமழை பொழிதலின் ஒண்ணிறத் தஞ்சனக் கொழுஞ்சே றலம்பி எஞ்சா மணியும் பொன்னும் மாசறு வயிரமும் அணிகிளர் அகிலும் ஆரமும் உரிஞ்சிக் கொங்கை என்னுங் குவட்டிடை இழிதரப் பொங்குபுனல் காட்டி யோளே கங்கை வருவிசை தவிர்த்த வார்சடைக் கடவுள் அரிவை பாகத் தண்ணல் ஆருர் எல்லையில் இரும்பலி சொரியும் கல்லோ சென்ற காதலர் மனமே.

மகுடம் : சேரமான் தோழர் நம்பிஆரூரர் பெருமன் மலரடிகள்! போற்றி! போற்றி!! கார்கொண்ட கொடைக் கழறிற்றறிவார் திருவடிகள்! போற்றி! போற்றி!!

காட்சி - 13.

இடம் : மலைநாடு செல்லும் வழி.

பின்குரல் : தில்லைப் பெருங்கூத்தப் பெருமானால் ஒன்று சேர்ந்த தம்பிரான் தோழர் நம்பிஆரூரரும், கழறிற்றறிவாரும் பல தலங்களுக்கு தலயாத்திரை செய்கின்றனர். சேரமாமன்னர் தமக்குத் திருமுகம் அளித்த பாண்டிய குலமாமன்னர் சோம சுந்தரக்கடவுளைப் பணிந்து பேரருள் பெற்றார். நம்பிகளும் சேரரும் பாண்டி நன்னாட்டின் திருத்தலங்கள் பல வணங்கிச் சோழ வள நாட்டின் சிவப்பதிகளைத் தொழுதனர். சேரர் பெருமானின் விண்ணப்பத்திற்கு இணங்கி, நம்பிகள் பெருமான் மலைநாடு வருவதற்கு இசைய; இருவரும் திருஆரூர் பெருமானை வழிபட்டு, மலைநாடு நோக்கி புறப்படுகின்றனர். செல்லும் வழியில் திருஐயாறு திருத்தலம் வருகிறது.

நம்பிகள் : கழறிற்றறிவாரே! அதோ தெரிகிறது பாருங்கள், காவிரியாற்றின் வடகரையில் நீண்ட கோபுரம்; அதுவே நம் இறைவர் விரும்பி வீற்றிருக்கும் திருஐயாறாகும்.

சேர மன்னர் : சிவ சிவ! (இருவரும் வீழ்ந்து வணங்குகின்றனர்.) நம்பிகள் பெருமானே, மையார் கண்டத்து நம் இறைவர் வீற்றிருக்கும் திருஐயாறை சென்று பணிய அடியேன் மனம் உருகி நைய நிற்கின்றது. இவ்வாற்றினைக் கடந்து சென்று நாம் பணிவோம். அதற்குத் தாங்கள் தான் அருள் செய்ய வேண்டும்.

ஊரார் -1: அடேயப்பா! கடல் பெருகி ஓடுவதைப்போலல்லவா காவிரி ஆர்ப்பரித்து ஓடுகின்றது! இந்த ஆற்றினை எவ்வாறு கடக்க முடியும்?! அதற்குச் சாத்தியமே இல்லை!

ஊரார் -2: உண்மைதான், மிக நீண்ட கமுகு மரங்களையே அடித்துச் செல்கின்றதே இக்காவிரி ஆறு. மிகப் பெரியப் படகுகளில் போனாலும் இவ்வாற்றினைக் கடக்க இயலாது?! ஆனால், நம்பிகள் பெருமான், நம் ஈசனாருக்கே தோழர்! அவரால் எதையும் செய்ய இயலும்! பொருத்திருந்துப் பார்ப்போம்.

பின்குரல் : சேரர் பெருமான் விண்ணப்பிக்க, நம்பிகள் பெருமான் கடல் பரந்ததுனைப் பெருகி ஓடும் காவிரி ஆற்றினை நோக்குகின்றார். நாவாய்களும் ஓடங்களும் செல்லா வகையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இறைவன் திருவடிகளைப் பணிந்து அன்பின் ஆற்றின் வழியாக செல்லும் நம்பிகள், ஐயாறப்பரை வணங்கி விளங்கும் பெருமைத் திருப்பதிகம் அருளிச் செய்கிறார்.

பரவும் பரிசொன் றறியேன்நான் பண்டே உம்மைப் பயிலாதேன் இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினைய மாட்டேன்நான் கரவில் அருவி கமுகுண்ணத் தெங்கங் குலைக்கீழ்க் கருப்பாலை அரவந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ. கூடி அடியார் இருந்தாலுங் குணமொன் றில்லீர் குறிப்பில்லீர் ஊடி இருந்தும் உணர்கிலேன் உம்மைத் தொண்டன் ஊரனேன் தேடி யெங்குங் காண்கிலேன் திருவா ரூரே சிந்திப்பன் ஆடுந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ.

பின்குரல் : பத்துப் பாடல்களை நிறைவு செய்தும் திருவருள் கூடாமையால், நம்பிகள் பெருமான் தன்னுடைய ஆன்மார்த்த நாயகர் ஆருயிர் தோழர் திருஆரூர் பெருமானை வணங்கிப் பாடுகின்றார்.

அசரீரி : ஓலம்.

பின்குரல் : நம்பிகள் பெருமானின் பதிகத்தை விரும்பிக் கேட்ட ஐயாறப்பர், கன்று தடையுண்டு எதிரழைக்க கதறிக் கனைக்கும் புனிற்றாப் போல், ஒன்றிய உணர்வினால் “ஓலம்” என்று சராசரங்கள் எல்லாம் கேட்கும்படி அருளினார். ஐயாறப்பரின் அருள் வாக்கினை கேட்ட பொன்னி மாநதித் தாயார், பெருக்கெடுத்து ஓடாமல், ஆகாயத்தை முட்டும் பளிங்கு மலைபோல் தங்கி நிற்க, ஆற்றைக் கடந்து செல்லும்படி அழகிய மணல் பரப்பிய பாதையும் உருவானது. இவ்வதிசயத்தைக் கண்ட சேரர் நம்பிகள் பாதம் பணிகிறார். அன்பர்கள் “அர அர” என விண்ணைத் தொடும் அளவிற்கு முழங்குகின்றனர்.

சேர மன்னர் : நம்பிகள் பெருமானே, தங்களின் விளங்கும் பெருமைத் திருப்பதிகத்திற்கு இணங்கி, நம் ஈசனாரே அஞ்சேல் என்னும்படி “ஓலம்” என அருளினாரே! பொன்னி மாநதியும் நீங்கி நெறி காட்டிய இவ்வதிசயத்தைக் கண்டு பெரும்பேறு பெற்றேன்.

நம்பிகள் : கழறிற்றறிவாரரே! தாங்கள் தான் ஐயாற்றுரையும் பெருமானை சென்று பணிய வேண்டும் என்று விரும்பினீர்கள். இது நம் இறைவர் உமக்கு அளித்த திருவருள் அல்லவா?

சேர மன்னர் : சிவ சிவ! நம்பிகள் பெருமானே, திருவருள்...

நம்பிகள் : வாருங்கள், நாம் சென்று அஞ்சேல் என்று அருள் செய்யும் அண்ணல் ஐயாற்றுறை ஆதிமூர்த்தியின் கழல் பணிவோம்.

அடியவர்கள் : அருள்தரும் அன்னை அறம்வளர்த்த நாயகி அம்மை உடனாகிய அருள்மிகு ஐயாறப்பர் மலரடிகள்! போற்றி! போற்றி!!

காட்சி - 14.

இடம் : திருஅஞ்சைக்களம்.

பின்குரல் : நம்பிகள் பெருமான் சேர மன்னரின் அரண்மனையில் சிலகாலம் இருந்தார். பின்னர் திருவாரூர்ப் பூங்கோயில் வீற்றிருந்த பிரான் ஈர்க்க சேரரிடம் விடைபெற்றுச் சென்றார். தம் தோழராம் நம்பிகளுக்கு சேரர் பெரும் செல்வம் கொடுத்து அனுப்பினார். சேரமான் தோழராயினும், நம்பி ஆதி முதற்கொண்டு தம்பிரான் தோழரல்லவா? இறைவன் அச்செல்வத்தை எல்லாம் திருவிளையாட்டாகச் சிவ பூதங்களைக் கொண்டு பறிமுதல் செய்து மீண்டும் கொடுத்தருளினர். திருவாரூர் சென்று பலகாலம் இருந்த சுந்தரர் மீண்டும் சேரர் மீதுள்ள கேண்மையால் மலை நாடு வந்தனர். அவ்வாறு கொடுங்கோளூரில் இருக்கும் நாட்களில், ஒருநாள் சேர மன்னர் திருமஞ்சனத் தொழிலில் ஈடுபடும்போது, நம்பிகள் பெருமான் தனித்துத் திருஅஞ்சைக்களம் திருக்கோயிலுக்குச் செல்கின்றார்.

நம்பிகள் : பெருமானே, கயிலையில், மலை வல்லியுடன் கூட வென்றி வெள்விடைப் பாகராய் வீற்றிருக்கும் தேவரீர் திருவடியை அடையும் நாள் எந்நாளோ?

பின்குரல் : அரிய செய்கையில் அவனியில் விழுந்து எழுந்து அலைப்புறும் மனை வாழ்க்கை சரிய நம்பிகள், “தலைக்குத் தலைமாலை...” என்ற பதிகத்தைப் பாடுகின்றார்.

தலைக்குத் தலைமாலை அணிந்த தென்னே சடைமேற்கங் கைவெள்ளந் தரித்த தென்னே அலைக்கும் புலித்தோல்கொண் டசைத்த தென்னே அதன்மேற் கதநாகக் கச்சார்த்த தென்னே மலைக்குந் நிகரொப் பனவன் றிரைகள் வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண் டலைக்குங் கடலங் கரைமேல் மகோதை அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே. வீடின் பயனென் பிறப்பின் பயனென் விடையே றுவதென் மதயா னைநிற்க கூடும் மலைமங் கைஒருத் தியுடன் சடைமேற் கங்கையாளை நீசூடிற் றென்னே பாடும் புலவர்க் கருளும் பொருளென் நிதியம் பலசெய் தகலச் செலவில் ஆடுங் கடலங் கரைமேல் மகோதை அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே. எந்தம் அடிகள் இமையோர் பெருமான் எனக்கென் றும்அளிக் கும்மணி மிடற்றன் அந்தண் கடலங் கரைமேல் மகோதை அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனை மந்தம் முழவுங் குழலு மியம்பும் வளர்நா வலர்கோன் நம்பியூ ரன்சொன்ன சந்தம் மிகுதண் டமிழ்மாலை கள்கொண் டடிவீழ வல்லார் தடுமாற் றிலரே

பின்குரல் : நம்பிகளின் பாடலிற்கு இறங்கும் கயிலைநாதனும், முன்னர் தடுத்த செய்கை முடிந்திட, தம் திருவடிச் சார்பினை தந்து அருள்வாராகி, “ஒன்றிய சிந்தை உடைய நம் ஊரனை உம்பர் வெள்ளை யானையின் மேல் ஏற்றிக் கொண்டு இங்கு வாருங்கள்” என பிரமன் முதலாய தேவர்களுக்குக் கட்டளையிட்டார்.

தேவர் : நம்பிகள் பெருமானே, கயிலை வீற்றிறுக்கும் இறைவரின் அருளிப்பாடு, தாங்கள் இவ்வெள்ளை யானையின்மேல் எழுந்தருள வேண்டுகிறோம்.

பின்குரல் : இறைவன் ஆணையினை மறுக்க இயலாதவராய், நம்பிகள் பெருமான் வெள்ளை யானையின்மேல் எழுந்தருளுகின்றார். அப்போது எல்லா உயிர்களும் கழறிய சொற்களை அறிவாராகிய தம் ஆருயிர் தோழனார் சேரமான் பெருமான் நாயனாரை தம் மனத்தினுள் நினைந்தவாறே செல்கின்றார்.

காட்சி - 15.

இடம் : சேரர் அரண்மனை.

பின்குரல் : சேர மன்னர் தன் நித்திய வழிபாட்டில் மூழ்கி இருக்கின்றார்; அப்பொழுது - இறைவர் ஆணையினை ஏற்று நம்பிகள் பெருமான் வெள்ளானையின் மேல் செல்வதை, யாவும், யாரும் கழறின அறியும் சேரமான் பெருமாள் நாயனார் அறிந்து, நம்பிகள் பெருமான் திருவடிகளைப் பற்றித் தானும் திருக்கயிலைச் செல்லத் துணிகின்றார்.

சேர மன்னர் : சிவ சிவ! என் துணையாம் தலைவர், நம்பிகள் பெருமான் வெள்ளை யானையின்மேல் கயிலாயம் செல்கிறார். அவர் திருவடிகளைப் பற்றி அடியேனும் கயிலைச் செல்வேன்.

காட்சி - 16.

இடம் : திருஅஞ்சைக்களம்.

பின்குரல் : சேரமான் பெருமான் நாயனார் ஓர் குதிரையில் மிக வேகமாக திருஅஞ்சைக்களம் செல்கிறார். ஆனால் அதற்குள் நம்பிகள் பெருமான், தேவர்கள் புடைசூழ விண்மேல் செலக்காண்கிறார்.

சேர மன்னர் : நம்பிகள் பெருமானே! என் கண்ணின் மணியாக இருக்கும் தங்களைப் பிரிந்து வாழேன்.

பின்குரல் : சேர மன்னர் தான் வந்த குதிரையின் செவியில் சிவமந்திரத்தை கூற, அக்குதிரை ஆகாயத்திலே பாய்ந்து சென்று வன்தொண்டர் பெருமானைத் தாங்கிச் செல்லும் வெள்ளை யானையை வலங்கொண்டு அதன் முன்னதாகச் சென்றது. சேரமான் பெருமான் நாயனாரின் பெருஞ்சேனை வீரர்கள், தங்கள் அன்புக்குரிய சேரர் பெருமானை பிரிய ஆற்றாது, தத்தம் உடைவாளினால் தங்களை வீழ்த்த, வீர யாக்கையினைப் பெற்று சேரர் பெருமானைச் சார முன்னே சென்று அவரது பணியினை ஏற்றனர். நம்பிகள் பெருமான் “தானெனை முன்படைத்தான்...” பதிகப் பாடலை அருளிச் செய்கிறார்.

தானெனை முன்படைத் தானத றிந்துதன் பொன்னடிக்கே நானென பாடலந் தோநாயி னேனைப் பொருட்படுத்து வானெனை வந்தெதிர் கொள்ளமத் தயானை அருள்புரிந்து ஊனுயிர் வேறுசெய் தான்நொடித் தான்மலை உத்தமனே இந்திரன் மால்பிர மன்னெழி லார்மிகு தேவரெல்லாம் வந்தெதிர் கொள்ளஎன் னைமத்த யானை அருள்புரிந்து மந்திர மாமுனி வர்இவ னாரென எம்பெருமன் நந்தமர் ஊரனென் றான்நொடித் தான்மலை உத்தமனே

காட்சி - 17.

இடம் : திருக்கயிலை.

பின்குரல் : சேரரை திருக்கயிலைக் காவலர் நந்தியம் பெருமான் தடுத்து நிறுத்த, நம்பிகள் பெருமான் திருக்கயிலாயத்தினுள் இறைவனைக் காண செல்கின்றார்.

இறைவர் : ஊரனே வந்தனை.

நம்பிகள் : கயிலைப் பெருமானே, அடியேன் செய்த பிழையினைப் பொறுத்து எனை ஆட்கொண்டு, என் பிழையினால் போந்த தொடக்கினை நீக்கி முடிவிலா நெறியாகிய தேவரீர் திருவடிப் பேற்றினை தருகின்ற பெரிய கருணை சிறியேனது தரத்திற்கு தகுதியாமோ? கயிலை நாதனே! தேவரீர் அருள்பெற வந்த சேரலன் தேவரீரது கோயிலின் திருஅணுக்கன் திருவாயிலின் புறத்தில் உள்ளார்.

இறைவர் : அவரை அழைத்து வருக.

[சேர மன்னர் சிரமேல் கைகுவித்து வருகிறார்.]

இறைவர் : சேரலனே, நாம் அழையாமல் இங்கு நீ வந்தது என்ன?

சேரர் : பெருமானே, அடியேன் நம்பிகளுடைய திருவடிகளைப் போற்றிக் கொண்டு, அவர் அருளினால் யானையில் முன்னே அவரைச் சேவித்துக் கொண்டு வந்தேன். தேவரீரது பொழிகின்ற கருணைப் பெருவெள்ளமானது அடியேனை முந்திக் கொண்டு வந்து இங்கே நிறுத்தியதால் தேவரீரது திருமுன்பு வந்து சேரும் பேறும் பெற்றேன். மணமுடைய கொன்றை மலர் மாலையினை அணிந்த சடையினையுடைய பெருமானே, மேலும், ஒரு விண்ணப்பம் உள்ளது பெருகுகின்ற வேதங்களும் முனிவர்களும் துதித்தற்கரிய பெருமையை உடையவரே! உமை அன்பினாலே திருஉலாபுறம் பாடினேன் அதனை தேவரீர் திருச்செவி சாத்தி கேட்டு அருள வேண்டும். மருவு பாசம் அகன்றிட வன்தொண்டர் கூட்டம் வைத்தாய்.

இறைவர் : சொல்லுக.

[சேரர் திருக்கயிலாய ஞான உலா பாடுகின்றார்.]

வெண்பா விரித்துரைக்கும் போழ்தில் விளங்கொளிசேர் கண்பாவு நெற்றிக் கறைக்கண்டன் - விண்பால் அரிஅரணஞ் செற்றாங் கலைபுனலும் பாம்பும் புரிசடைமேல் வைத்த புராணன் - எரிஇரவில் ஆடும் இறைவன் அமரர்குழாம் தற்சூழ மாட மறுகில் வரக்கண்டு - கேடில்சீர் வண்ணச் சிலம்படி மாதரார் தாமுண்ட கண்ணெச்சில் எம்மையே ஊட்டுவான் - அண்ணலே வந்தாய் வளைகவர்ந்தாய் மாலும் அருந்துயரும் தந்தாய் இதுவோ தகவென்று - நொந்தாள்போற் கட்டுரைத்துக் கைசோர்ந் தகமுருகி மெய்வெளுத்து மட்டிவரும் பூங்கோதை மால்கொண்டாள் - கொட்டிமைசேர் பண்ணாரும் இன்சொற் பணைப்பெருந்தோள் செந்துவர்வாய்ப் பெண்ணார வாரம் பெரிதன்றே - விண்ஓங்கி மஞ்சடையும் நீள்குடுமி வாள்நிலா வீற்றிருந்த செஞ்சடையான் போந்த தெரு

இறைவர் : ஊரனாகிய ஆலால சுந்தரனுடனே கூடி விரும்பி இருந்து நீவிர் இருவரும் சார நம் கணங்களுக்கு நாயகராகிய தலைமை பெற்று இருப்பீராக.

பின்குரல் : இரு பெருமக்களும் பணிந்து எழுந்து இறைவரது திருவளினை தலைமேல் கொண்டு நிலைபெற்ற வன்தொண்ட பெருமான் ஆலால சுந்தரராகவும், முதன்மை உடைய சேரனாரும் நன்மை சேரும் சிவ கணநாதராகி அவர்கள் செய்யும் விருப்ப மிக்க திருத்தொண்டினை மேற்கொண்டனர். வாழி மாதவர் ஆலால சுந்தரர் திருக்கயிலை நோக்கி வரும் வழியிலே அருளிச் செய்த “தானனை முன்படைத்தான்” எனும் திருப்பதிகத்தினை முந்நீர் கடலின் அரசனாகிய வருணன் திருஅஞ்சைக்களத்தில் சேர்த்து உணர்வித்தான். சேரர் பெருமான் விண்ணப்பித்தருளிய திருக்கயிலாய ஞான உலாவினை கயிலை மலையினில் உடனிருந்து கேட்ட மாசாத்தனார், இந்த நிலவுலகத்தில் வேதியர்கள் வாழும் திருப்பிடவூரில் வெளிபடச் சொல்லி அருளி கடல் சூழ்ந்த இவ்வுலகினில் எங்கும் நன்மையாலே விளங்கிட அருளினார்.

என்றும் இன்பம் பெருகும் இயல்பினால் 
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட 
மன்றுளார் அடியார் அவர் வான் புகழ் 
நின்றது எங்கும் நிலவி உலகெலாம்

திருச்சிற்றம்பலம்

 
 

Related Content

History of Thirumurai Composers - Drama-கார்கொண்ட கொடை கழறிற

The Puranam of Kazharitru Arivaar Nayanar

Kazharitrarivar (Cheraman Perumal) Nayanar History - Part-I

திருமுறைகளில் கழறிற்றறிவார் (சேரமான் பெருமாள்) நாயனார் பற்றி