காட்சி - 1.இடம் : பாணபத்திரர் இல்லம். பின்குரல் : திருஆலவாயில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரப் பெருமான், தன்மேல் மிகுந்த அன்பு கொண்டு பண்ணிசை பாடல்களால் துதிக்கும் பாணபத்திரனாருக்கு நன்மை பொருந்திய பெருஞ்செல்வம் தர விரும்பி அருள்புரியத் திருவுள்ளம் கொள்கின்றார். மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப் பொங்கழ லுருவன் பூதநா யகனால் வேதமும் பொருள்களும் அருளி அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவா யாவதும் இதுவே. அசரீரி : அன்பனே, நம்மிடம் அன்பினால் எப்போதும் பரவும் தன்மையையுடைய சேரமானுக்கு பொன்னும், காசும், பட்டாடையும் பொருந்திய ஒளி செய்யும் கதிர்மணிகளையுடைய அணிகளும் இன்னும் வேண்டியனயெல்லாம் குறைவில்லாமல் உனக்குத் தரும்படி நமது திருமுகம் தருகின்றோம்; சென்று வருவாயாக. பாணபத்திரர் : தென்திருஆலவாயா! செந்தமிழ் சொக்கநாதா, சோமசுந்தரக் கடவுளே! உன் கருணையை அடியேன் எவ்வாறு போற்றுவேன். சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த தலைமைச் சங்கப் புலவனாகிய தேவரீர் அருளிய திருமுகத்தைச் சிரமேற் கொண்டு, இன்றே மலைநாடு செல்கின்றேன். காட்சி - 2.இடம் : சேர அரசவை. பின்குரல் : சேர மாமன்னர் அரசவையில் அமைச்சர் பெருமக்களுடன் உரையாடிக் கொண்டிருக்கின்றார். மகுடம் : மலைநன்னாட்டு அரசர்! கழறிற்றறிவார்!! வாழ்க!! வாழ்க!! சேரர் குலப்பேரரசர் மாமன்னர் கழறிற்றறிவார் வாழ்க! வாழ்க!! அமைச்சர் - 1 : சேரப்பேரரசே! உலகு புரக்கும் கொடையினை உடைய சோழரும், உரிமை பாண்டியரும் என்று இருவருடனே கூட நிலவுகின்ற பெரிய மூவேந்தர்களாய் நீதியினை மனுநூல் வழியே நடைபெறச் செய்தும், திருநீற்று அன்புநெறி பாதுகாத்தும் அரசளிக்கும் தங்கள் பெருமை சொல்லொணாதது. அமைச்சர் - 2 : மலை நன்னாட்டு அரசே! தங்கள்பால் வந்து யாசிப்போர்களுக்கும், வறியவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் செம்பொனை மழைபோல் பொழியும் தன்மையினராய், என்றும் திருந்து வெற்றியுடனும், நம் சிவனாருக்கு உம்பர்களும் போற்றும்படி உரிய வேள்விகளைத் தவறாது செய்யும் தங்கள் ஆட்சியின் கீழ் வாழ நாங்களும் இந்நாட்டு மக்களும் பெருந்தவம் செய்தோம். சேர மன்னர் : சிவ சிவ! அமைச்சர்களே, நீடுகின்ற உரிமையையுடைய இப்பேரரசை செலுத்துவதால் நிகழ்கின்ற பயனும், நாம் செய்யும் தவத்திற்கெல்லாம் முடிவாகிய நிறை தவமும், தேடி அடையக்கூடிய பொருளும், உயிருக்கு உற்ற பெருந்துணையாகவும் இருப்பது தில்லை அம்பலத்தில் ஆடுகின்ற திருவடியே ஆகும். சிவபெருமானை நினையாது செய்யும் எச்செயலும் பயனற்றதாகவே அமையும். திருஅஞ்சைக்களத்து உறையும் நம் இறைவன் திருவருளினால்தான், நம் மலைநாடு எந்தக் குறையும் இன்றி செழிப்புடன் இருக்கின்றது. காவலாளி : சேரர் குலப்பேரரசே! தங்கள் புகழ் வாழ்க! அரசே, தங்களைக் காண பாண்டிய நாட்டிலிருந்து பாணபத்திரர் என்ற சிவனடியார் ஒருவர் வந்துள்ளார். சேர மன்னர் : சிவ! சிவ!! எங்கே அந்த அடியவர்?! காவலாளி : மன்னா, அவர் அரண்மனை வாயிலில் உள்ளார்; அவரை இப்பொழுதே அழைத்து வருகிறேன். சேர மன்னர் : வேண்டாம்; நம் சேரநாடு உய்யும்படி எழுந்தருளியிருக்கும் அவ்வடியவரை நானே அரண்மனை வாயில் சென்று அழைத்து வருகிறேன். பின்குரல் : தனது அரண்மனை வாயிலிற்கு வந்துள்ள அடியவரை வரவேற்க சேர மன்னர் பள்ளத்தில் இறங்கும் புனலென விரைந்து ஆர்வத்தோடு வருகிறார். காட்சி - 3.இடம் : அரண்மனை வாயில். பின்குரல் : சேரமன்னர் திருஆலவாயுடையார் அருளிய திருமுகத்துடன் தன் நாட்டிற்கு வந்திருக்கும் பாணபத்திரரை, வரவேற்று அவர் தம் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, கண்களின் நீர் பெருக்கெடுக்க செய்வதறியாது கரங்குவித்து நிற்கிறார். சேர மன்னர் : பாணபத்திரரே! சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த தென்திருஆலவாயிலிருந்து எழுந்தருளியிருக்கும் தாங்கள் வர வேண்டும்; தங்களால் எங்கள் மலைநாடு பெரும்பேறு பெற்றது. பாணபத்திரர் : சேரப்பேரரசே! நம் இறைவரே அடியேன் கனவில் எழுந்தருளி, தங்களிடம் இத்திருமுகத்தைக் கொடுக்குமாறு அடியேனைப் பணித்தார். சேர மன்னர் : சிவ சிவ! அடியேனையும் பொருளாகக் கொண்டு, நம் இறைவர் திருமுகம் அருளினாரா?! என் செல்வமே, இவ்வுலகில் எவ்வரசருக்கும் கிடைக்காத ஓர் அரிய செல்வமாகிய தேவரீர் திருமுகத்தை என்னையும் பொருளாகக் கொண்டு அருளிச் செய்த எம்அண்ணலே! பெருமானே! தேவரீருடையப் பெருங்கருணையை எளிவரும் பெருமையை எவ்வாறு வழுத்துவேன். பாணபத்திரரே! கிடைத்தற்கரிய இவ்வரிய செல்வத்தை பாண்டிய நாட்டில் இருந்து அடியேன் பொருட்டு, கொண்டு வந்த தங்களுக்கு அடியேன் என் செய்ய வல்லேன்?! என்ன செய்தாலும் ஈடாகாது! சிவ சிவ!!. [சேர மன்னர் அத்திருமுகத்தைப் பிரித்துப் படிக்கின்றார்.] மதிமலி புரிசை மாடக் கூடற் பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிற கன்னம் பயில்பொழில் ஆல வாயில் மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம் பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க் குரிமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ் குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச் செருமா உகைக்குஞ் சேரலன் காண்க பண்பா லியாழ்பயில் பாண பத்திரன் தன்போல் என்பால் அன்பன் தன்பால் காண்பது கருதிப் போந்தனன் மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே. (சேரர் அத்திருமுக ஓலையை சிரத்தின் மீது சூடியும் கண்களில் ஒற்றிக்கொண்டும் ஆனந்தத்தில் திளைக்கிறார்.) சேர மன்னர் : அமைச்சரே! நம்முடைய அரசு கருவூலத்தில் உள்ள அனைத்துச் செல்வங்களையும் ஒன்றும் எஞ்சாமல் எடுத்துத், தக்கபடி பொதி செய்து, அரசவைக்கு கொண்டு வாருங்கள். அமைச்சர் : உத்தரவு மன்னா! காட்சி - 4.இடம் : சேர அரசவை. பின்குரல் : சேர மாமன்னர் உத்தரவின்படி அமைச்சர்கள் அரசு கருவூலத்திலுள்ள அனைத்துச் செல்வங்களையும் தக்கமுறையில் பொதி செய்து அரசவையில் வைத்திருக்கின்றனர்; திரும்பிய பக்கமெல்லாம் பொற்காசுகளும், முத்துக் குவியல்களும் என அரசவையே ஒளிமயமாகக் காட்சியளிக்கின்றது. சேர மன்னர் : பாணபத்திரரே, இங்கே குவிக்கப்பட்டிருக்கும் அனைத்துச் செல்வங்களும் தங்களுடையதுதான்; மற்றும் இவையும் சேர நாட்டிலுள்ள வலிமை பொருந்திய யானைகள், குதிரைகள் முதலாகிய உயிருள்ள தனங்களும் தங்களுடையதுதான். இறுதியாக இச்செங்கோலை ஏற்று மலைநாட்டினை காவல் புரியும் அரசாட்சியினையும் தாங்கள் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறேன். பாணபத்திரன் : சேரப்பேரரசே, அடியேனுக்காக தாங்கள் அருளிய இச்செல்வங்களைக் கண்டு மிகவும் அதிசயித்தேன். தங்கள் பெருமை சொல்லொணாதது. அடியேன் அன்றாடம் ஆலவாய் அண்ணலை பண்ணும் இசைப் பாடலால் பரவுபவன். எனக்கு இந்த அரசாட்சி, யானை, குதிரை முதலாய செல்வங்களில் விருப்பமும் இல்லை. அடியேனுக்குத் தேவையான அளவு செல்வத்தை மட்டும் தாருங்கள் போதும். மேலும் அடியேன் திருஆலவாய்ச் சென்று நம்பெருமானை இசையால் போற்ற வேண்டும். இதுவே நம் இறைவனுடைய விருப்பமுமாகும். அரசாட்சியை தாங்களே தொடர்ந்து புரிந்து, மலைநாட்டினை காத்துவர வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். சேர மன்னர் : இறைவனுடைய ஆணை அதுவென்றால், தங்கள் விருப்பப்படியே செய்கின்றேன். தாங்கள், தங்களுக்குத் தேவையான அளவு செல்வத்தை எடுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன். அமைச்சர்கள் : சேர மாமன்னர்! கார்கொண்ட கழறிற்றறிவார்! வாழ்க! வாழ்க!! பண்பால் யாழ்பயில் பாணபத்திரர்! வாழ்க! வாழ்க!! |