தெய்வப் பொன்னி நதி வளம் கொழிக்கும் சோழ வளநாட்டில் காவிரியின் இருகரைகளிலும் உள்ள தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் 190 ஆகும். அவற்றுள், காவிரித் தென்கரைத் தலங்களுள் ஒன்றாக விளங்குவதும், மிகப் பழமையானதும், தேவார மூவராலும் பாடல் பெற்றதும்,சக்தி பீடங்களுள் ஒன்றும், சப்த விடங்கத் தலங்களுள் ஒன்றும், பல்வேறு புராண வரலாறுகளைக் கொண்டதும் ஆகிய தலம், நாகப்பட்டினம் என்று தற்போது வழங்கப்பெறும் நாகைத் திருத்தலம். நாகராஜனாகிய ஆதிசேஷன் வழிபட்ட சிறப்புடையதால், இப்பெயர் வந்தது என்பர்.
ஊழிக்காலத்தில் அனைத்தும் இங்கு ஒடுங்குவதால், இத்தலம் சிவராஜதானி எனப்பட்டது எனத் தல புராணம் கூறுகிறது. காயாரோகணர் என்ற பெயருடன் சிவபெருமான் அருட் காட்சி வழங்கும் தலங்கள், காஞ்சி, கும்பகோணம் (மகாமகக் குளக்கரை), நாகை ஆகிய மூன்றுமாம். கயிலையையும், காசியையும் போன்று முக்தி மண்டபம் இங்கு இருக்கிறது.
இத்தல எல்லைக்குள், ஸ்ரீ நீலாயதாக்ஷி அம்பிகா சமேத ஸ்ரீ காயாரோகண ஸ்வாமி ஆலயம் உள்ளிட்ட பன்னிரண்டு சிவாலயங்கள் உள்ளன. இவை யாவும் புராணச் சிறப்பும், பழமையும் வாய்ந்தவை. இப்பன்னிரண்டு ஆலயங்களையும் பலர் ஒரே நாளில் தரிசிப்பர்.
.இத்திருக்கோயில்கள் பற்றிய குறிப்புகள் அளித்தவர் சிவதிரு. சிவபாதசேகரன், சென்னை. நன்றி
Send comments