logo

|

Home >

hindu-hub >

temples

நாகப்பட்டிணம் - நாகநாதர் திருக்கோயில் தல வரலாறு

இறைவர் திருப்பெயர்: நாகநாதர்

இறைவியார் திருப்பெயர்: அகிலாண்டேசுவரி

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

  • முகப்பில் மூன்று நிலை ராஜ கோபுரம் அணி செய்கிறது. உள்ளே சென்றால் கருங்கல் மண்டபத்தில் விநாயகர், நந்தி, பலிபீடம் இருக்கக் காணலாம். சன்னதிக்குச் செல்லும் வழியிலுள்ள சுவற்றில், ஆதிசேஷன் சிவபெருமானைப் பூஜிக்கும் திருவுருவம் இருக்கக் காணலாம். இடப்புறச் சுவற்றில், நாககன்னிகை இருக்கிறாள்.

  • நாகநாத சுவாமி சன்னதியில் நாகப்புற்றுக்கள் உள்ளன

  • சனத்குமார முனிவரின் வேண்டிக்கோளுக்குக் கிணங்கி, நந்தியெம்பெருமான், நாகையில் திருக்கோயில் கொண்டுள்ள நாகநாதப் பெருமானுடைய பெருமைகளைக் கூறுவதாகத் தலபுராணம் அமைந்துள்ளது.

  • பாதாள உலகை ஆண்டு வந்த ஆதிசேஷனுக்கு மகப்பேறு இல்லாததால் மிகவும் மனச்சோர்வடைந்து வசிஷ்ட முனிவரை அணுகினான். சிவபூஜை செய்துவந்தால் மகப்பேறு சித்திக்கும் என்று முனிவர் அருளவே; சிவராத்திரி தினத்தன்று இரவு நான்கு காலங்களும் முறையே, குடந்தைக் கீழ்க்கோட்டம் (கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி ஆலயம்)திருநாகேசுவரம்,திருப்பாம்புரம், திருநாகைக் காரோணம் ஆகிய நான்கு தலங்களை வழிபட்டான். நாகையை அடைந்து, தேவ தீர்த்தத்தில் நீராடி, காயாரோகணப் பெருமானையும், நீலாயதாக்ஷி அம்பிகையையும் முறைப்படி வழிபட்டான். சர்வ தீர்த்தத்தின் மேல்திசையில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தான். அதன் பயனாக அவனது மனைவி ஒரு பெண் மகவை ஈன்றெடுத்தாள். ஆனால் அக்குழந்தைக்கோ மூன்று தனங்கள் இருக்கக் கண்டு வருந்தலாயினான். அப்போது “நாகராஜனே! வருந்தாதே; இவளுக்குத் தக்க மணாளன் வரும்போது மூன்றாவது தனம் மறையும்” என அசரீரி ஒலித்தது.

  • ஆதிசேஷனின் மகளான நாககன்னிகை, நாள்தோறும் ஆதிபுராணரை மனமுருகி வழிபட்டுவந்தாள். ஒருநாள் தேவ தீர்த்தக்கரையில் சோழ அரசகுமாரனாகிய சாலீசுகனைக் கண்டாள். அப்போது அவளது மூன்றாவது தனம் மறையவே, இவனே தனது மணாளன் என அறிந்து, தன் பெற்றோரிடம் கூறினாள்.

  • பிலத்துவாரம் வழியே நாகலோகம் சென்ற சோழனை ஆதிசேஷன் வரவேற்றுத் தன் மகளை அவனுக்கு மணம் செய்துவித்தான். பின்னர் அவனை அரசாட்சி செய்யுமாறு கூறிவிட்டு, நாகராஜன் நாகையை வந்து அடைந்தான். நாக தீர்த்தத்தில் நீராடித் தான் பிரதிஷ்டை செய்த நாகலிங்கத்தை வழிபாட்டு வந்தான். இத்தீர்த்தத்தில் நீராடுவோரைப் பாம்பு தீண்டினாலும் விஷம் ஏறாமல் இருக்கக் கடவது என்ற வரமும் பெற்றான்.

  • ஆதிசேஷன் மாசி மாத மகாசிவரத்திரியன்று பூஜை செய்யும்போது, இறைவன் காட்சி நல்கினான்; அப்போது ஆதிசேஷன், "இறைவா, இந்நகரம் அடியேனது பெயரில் அழைக்கப்பட வேண்டும்; இந்த லிங்கமூர்த்தியில் தாங்கள் எப்போதும் இருத்தல் வேண்டும்; இங்கு வந்து வணங்கும் அன்பர்களுக்கு வேண்டிய வரம் அனைத்தையும் தந்தருள வேண்டும்;” என்று வீழ்ந்து வணங்கினான். நாகநாதப் பெருமானும் அவன் வேண்டிய வரத்தைத் தந்தருளினார்.

  • நாகநாதப்பெருமானது அருளை வேண்டி, வாசுகி, கார்கோடகன், தனஞ்சயன், ஐராவதன், குளிகன், சங்கபாலன் ஆகிய நாகங்களும் வழிபட்டதை மேலைத் திருச்சுற்றில் காணலாம்

Specialities

  • அம்பிகை அகிலாண்டேச்வரியாக தனிச் சன்னதி கொண்டு காட்சி அளிக்கிறாள்.

  • சுவாமி சந்நிதிக்கு அருகில் ராகு, கேது ஆகியோரின் திருவுருவங்கள் காணப்படுகின்றன. இது சர்ப்பதோஷ நிவர்த்தி ஸ்தலம் என்பர்.

  • கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு இது பரிகாரத் தலம் எனப்படுகிறது.

  • சீதையைத் தேடிவந்த இராமபிரான் இக்கோயிலில் (தென்புறம்) ஓர் லிங்கமூர்த்தியை நிறுவி பூஜித்தார்; அம்மூர்த்தி இராமலிங்கேசுவரர் என்று அழைக்கப்படுகிறார்.

  • கிரகண காலங்களிலும், அர்தோதய-மகோதய புண்ணிய காலங்களிலும் இங்குள்ள கடலில் மூழ்கி இராமனாதப் பெருமானை வணங்குவோர், எல்லா நன்மைகளையும் அடைவர்.

  • இத்தலத்தை வழிபடுவோர், மணப்பேறு, புத்திரப்பேறு, நோய் நீக்கம் ஆகியன அருளப்பெறுகிறார்கள்.

  • கார்த்திகை சோமவாரம் பங்குனி உத்தரம் மற்றும் மாதந்திர விசேஷ நாட்கள் அனைத்தும் இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன.

  • பிராகாரத்தில், தக்ஷிணாமூர்த்தி, கருவறைச் சுவற்றை ஒட்டி கோஷ்டமாக மட்டும் இருக்காமல் தனிச் சன்னதி கொண்டு விளங்குகின்றார். இது போன்ற அமைப்பு, இக்கோயிலிலும், நாகை சட்டையப்பர் (ஆதிகாயாரோகணேசுவரர்) கோயிலிலும் மட்டுமே உள்ளன.

  • ஸ்தல விருக்ஷமான சரக்கொன்றை தற்போது இல்லை. மாறாக, ஒரே இடத்தில் ஆலும்வேம்பும் இணைந்த தோற்றத்தையே காண்கிறோம்.

  • தென்மேற்கில் வினாயகப்பெருமானின் சன்னதியும், வடக்குத் திருச்சுற்றில் முருகப்பெருமானது சன்னதியும் உள்ளன. மயில் வாகனனாக, வள்ளி-தெய்வானையுடன் அற்புதக் காட்சி வழங்குகின்றான் ஆறுமுகன். சண்டேசர், பைரவர் ஆகிய மூர்த்திகளையும் பிராகாரத்தில் தரிசிக்கலாம்

Contact Address

அமைவிடம் அ/மி. நாகநாதர் திருக்கோயில், சட்டையப்பர் வடக்கு வீதி, நாகப்பட்டினம் - 611 001. தமிழ்நாடு, நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் சட்டையப்பர் வடக்கு வீதியின் வட சிறகில் இக்கோயில் அமைந்துள்ளது. நாகப்பட்டிணம் இரயில் நிலையதிலிருந்து, இக்கோவில் 2-கி.மீ. தூரத்தில் உள்ளது. சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை முதலிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது

Related Content

நாகப்பட்டிணம் - அழகியநாதர் திருக்கோயில் தல வரலாறு

நாகப்பட்டிணம் - அக்கரைகுளம் ஸ்ரீசுந்தரேஸ்வரர் திருக்கோயில் த

நாகப்பட்டிணம் - விசுவநாதர் திருக்கோயில் தல வரலாறு

நாகப்பட்டிணம் ஸ்ரீஅமரரேந்திரேஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு