logo

|

Home >

hindu-hub >

temples

திருநாகேச்சுரம் (திருநாகேஸ்வரம்)

இறைவர் திருப்பெயர்: நாகேஸ்வரர், நாகநாதர், சண்பகாரண்யேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: கிரிகுஜாம்பிகை, குன்றமாமுலையம்மை.

தல மரம்:

தீர்த்தம் : சூரிய தீர்த்தம், இயம தீர்த்தம், பிரம தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்கினி தீர்த்தம், துர்கா தீர்த்தம், கௌதம தீர்த்தம், பராசர தீர்த்தம், இந்திர தீர்த்தம், பிருகு தீர்த்தம், கண்வ தீர்த்தம், வசிஷ்ட தீர்த்தம்

வழிபட்டோர்: சம்பந்தர்,அப்பர்,சுந்தரர், சேக்கிழார்,ஆதிசேஷன், தக்ஷன், கார்க்கோடகன் (மூவரும் நாகராஜாக்கள்)

Sthala Puranam


 

 

nageccaram temple

 

 

  • இப்போது மக்கள் வழக்கில் திருநாகேஸ்வரம் என்று வழங்கப்படுகிறது.

     

  • நாகராஜாக்கள் வழிபட்ட தலமாதலின் 'திருநாகேச்சுரம்' எனப் பெயர் பெற்றது. நாகராஜன் ஒரு சிவராத்திரியில் நான்கு யாமங்களில் முதல் யாமத்தில் வில்வவனமான குடந்தைக் கீழ்க்கோட்டத்திலும் இரண்டாம் யாமத்தில் சண்பக வனமான இத்திருநாகேச்சரத்திலும், மூன்றாவதில் வன்னி வனமான திருப்பாம்பரத்திலும், நான்காம் யாமத்தில் புன்னைவனமான நாகைக்காரோணத்திலும் வழிபட்டுப் பேறு பெற்றான். இந்த நான்கு தலங்களும் நாகராசன் பெயராலேயே வழங்கப்படுதல் கண்கூடு. 

     

  • சிவபெருமானை மட்டுமே வணங்கி வந்த பிருங்கி முனிவரைக் கண்டு வெகுண்ட பார்வதி தேவி, இறைவனைக் குறித்து அர்த்தநாரீசுர வடிவம் வேண்டி இத்தலத்தில் சண்பக மரத்தடியில் கடுந்தவம் புரிந்தார்.

  •  

    நந்தி சேரும் திருநாகேச்சரம் என்று தேவாரம் பேசுகின்றது.

     

     

  • ஆதிசேஷன், தக்ஷன், கார்க்கோடகன் (மூவரும் நாகராஜாக்கள்), கௌதமர், நந்தி, நளன், பராசரர், பகீரதன்முதலியோர் வழிபட்டு பேறு பெற்றனர்.

  • சூரியன் இங்கே வழிபட்டுப் பேறுபெற்றார். 

  • விநாயகர் வழிபட்டுக் கணங்களுக்குப் பதியானார்.

  • கௌதமர் வழிபாடு செய்து அகலிகையை அடைந்தார்.

  • நளன் இங்கே வணங்கி, இழந்த தன் மனைவியைப் பெற்றான். 

  • பராசர முனிவர் வழிபட்டு பாவம் நீங்கினார்.

  • பாண்டவர்கள் வழிபட்டு இழந்த தம் செல்வத்தை மீண்டும் பெற்றதோடு இப்பெருமானுக்குக் கார்த்திகை மாத விழாவினையும் நடத்தினர்.

  • வசிட்ட முனிவர் வழிபட்டு நலம் பெற்றார். 

  • ஒரு குருவியின் கட்டளைப்படி இந்திரன் இங்கே வழிபட்டு மேன்மையுற்றான்.

  • பிரமனும், பகீரதனும் வழிபட்டுப் புனிதமடைந்தனர். 

  • சித்திர சேனன் எனும் மன்னன் வைகாசியில் விழா நடத்தி, வழிபட்டு நற்புத்திரனை அடைந்தான். 

  • ஒரு சிவயோகி கோயிலிலுள்ள புற்பூண்டுகளைப் போக்கிப் புனிதரானார். 

  • சௌனக முனிவர் காம மயக்கத்திற்குக் கழுவாய் இங்கே பெற்றார்.

  • கதிரவன் வழிபட்டுக் கைவளரப் பெற்றான்.

  • நற்குணன் என்னும் முனிவன் கார்த்திகைச் சோமவாரங்களில் விளக்கேற்றி நோன்பிருந்து, பாம்பு கடித்து இறந்த தன்மகனைப் பிழைக்கச் செய்தான். இராக்கதம், பைசாசம், வேதாளம் முதலிய பிணிப்பினின்றும் விடுபட்டுப் பேறு பெற்றோர் பலர்.

  • கேரள நாட்டு மன்னனாக விளங்கிய சம்புமாலி என்பவன் பொன்னால் பல் அறங்கள் செய்து வந்தான். ஒருநாள் காலாங்கிரி முனிவர் அவனிடம் சென்றபோது, அதற்கு முதல்நாளே அவன் அறத்தை முடித்துவிட்டானாதலால் அவனால் அம்முனிவருக்குப் பயன் கிட்டவில்லை. வெகுண்ட முனிவர், அவனை 'அலகையுரு பெற்று அலைக'' எனச் சாபமிட்டார். பதைத்த மன்னன் பலவாறாகப் புலம்பி முனிவரிடம் கழுவாய் வேண்டினான்.  சற்றே மனமிரங்கிய முனிவரும், அவ்வலகையுருவுடன் அவன் ஆயிரத்தெட்டு, சிவத்தலங்களையும் கண்டு வணங்கி இறுதியில் சண்பகவனம், என்னும் திருநாகேச்சரத்திற்கு வந்து சூரிய புட்கரணியில் நீராடி, ஸ்ரீநாகநாதப்பெருமானையும், குன்று மாமுலையம்மையையும் வணங்கிச் சாப நீக்கம் பெறுமாறு கழுவாய் கூறினார். அவ்வாறே சம்புமாலி
    மன்னனும் அலகையுருவுடன் எங்கும் அலைந்து இறுதியில் இத்தலத்துச் சூரிய புட்கரணியில் நீராடி வணங்கி விமோசனம் பெற்றான். அலகையுருக்கொண்ட சம்புமாலியின் உருவம் இக்கோயிலின் அலங்கற மண்டபத்தில் ஒரு  தூணில் உள்ளது.

 

long view of the temple

 

 

view of the rAjagOpuram

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்     :    சம்பந்தர்    - 	1. பொன்னேர் தருமே னியனே (2.24),
                                        2. தழைகொள்சந்தும் மகிலும் (2.119);

                      அப்பர்      -	1. கச்சைசேர் அரவர் போலுங் (4.66),
                                        2. நல்லர் நல்லதோர் (5.52),
                                        3. தாயவனை வானோர்க்கும் (6.66);

                      சுந்தரர்     - 	1. பிறையணி வாணு தலாள் (7.99);

     பாடல்கள்   :   அப்பர்      -        நந்திபணி கொண்டருளும் (6.33.4),
                                           அஞ்சைக் களத்துள்ளார் (6.51.8), 
                                           நறையூரிற் சித்தீச் சரம் (6.70.10); 

                    சேக்கிழார்    -       எறி புனல் (12.21.192) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், 
                                           திரு நாசேச் சரத்து அமர்ந்த (12.28.411) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம். 

Specialities

 

  • சேக்கிழார் திருப்பணி செய்த பெருமையுடையது. அவர் மிகவும் நேசித்த தலம். இதனால் தம் ஊரான குன்றத்தூரில் இப்பெயரில் ஒரு கோயிலைக் கட்டினார்.

     

  • இத்தலம் ராகு கிரகத்திற்குரிய தலமாதலின், இப்பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்தால் பால் நீல நிறமாகிவிடுகிறது.

     

  • தலவிநாயகர் - சண்பக விநாயகர் எனப்படுகிறார்.

     

  • இக்கோயிலுக்கு சண்பகவனம், கிரிகின்னிகைவனம் என்பன வேறு பெயர்கள்.

     

  • காலையில் குடந்தைக் கீழ்க்கோட்டம், நண்பகலில் திருநாகேச்சுரம், மாலையில் திரும்பாம்புரம் என்று ஒரே நாளில் வழிபடுவது விசேஷம் என்பர்.

  •  

    திருவிழாக்கள் 
    பௌர்ணமிதோறும் நிறைபணி விழா 
    சித்திரா பௌர்ணமியன்று சிங்காரவேலர் புறப்பாடு 
    வைகாசி விசாகத்தன்று சோமாஸ்கந்தர் புறப்பாடு 
    அடி பதினெட்டு அம்மன் நாட்டாற்றில் தீர்த்தம் கொடுத்தல் 
    பிரம்மோத்சவம் கார்த்திகை மதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் தொடங்கிப் பத்து நாட்கள் நடைபெறுகிறது. (தலபுராணப்படி சித்திரை, வைகாசியில் பிரம்மோத்சவம் நடைபெற்றதாகத் தெரிகிறது).
    தை மாதம் முதல் நாள் கிரிகுசாம்பிகைக்குப் புனுகு சட்டம் சாத்தப்படும். 
    மகா சிவராத்திரி இரண்டாம் காலத்தில் நாகராசன் பூசிக்கும் விழா நடைபெறும். 
     

  • சேக்கிழார், அவர் தாயார், தம்பி உருவங்கள் கோயிலில் உள்ளன.

     

  • கண்டராதித்த சோழன் இக்கோயிலைக் கட்டியதாக சொல்லப்படுகிறது.

     

  • இக்கோயிலில் 16 கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன; இவை கண்டராதித்த, இராஜராஜன், இராஜேந்திர சோழர் காலத்தியவையாகும்.

  • கல்வெட்டுக்கள்
    திருநாகேச்சுரம் திருக்கோயிலில் சுவாமி கோயிலின் சுவர்களிலும் பிறவிடங்களிலும் 16 கல்வெட்டுக்கள் உள. 
    1 . நாகநாதர் கோயிலின் வடசுவரில் உள்ளது. பரகேசரிவர்மன் எனும் முதல் இராஜேந்திர சோழனது 6-வது ஆட்சி ஆண்டில் உடையார் இராஜேந்திர சோழதேவனது சேனையில் இளைய குஞ்சர மன்னராயிருந்த ஆச்சான் என்பவனால் உய்யக் கொண்டார் வளநாட்டைச் சேர்ந்த திரைமூர் நாட்டில் உள்ள திருநாகேஸ்வரம் உடையார் கோயிலுக்கு இரத்தினங்களும் முத்துக்களும் பதித்த பொன்ஆபரணம் கொடுக்கப்பட்டது.
    2.  நாகநாதர் கோயிலின் வடசுவரில் உள்ளது. பரகேசரிவர்மன் எனும் முதல் இராஜேந்திர சோழனது  8வது ஆண்டில் அரண்மனையைச் சேர்ந்த சக்திவிடங்கி என்னும் பெண்ணால் அரயன் உத்தமதேவி என்னும் தன் புதல்வியின் நினைவாக மகாதேவர் கோயிலில் நந்தா விளக்கு எரிக்க 48 வீடுகள் கொடுக்கப்பட்டன. 
    3.நாகநாதர் கோயிலின் வடசுவரில் உள்ளது.  பரகேசரிவர்மனுடைய 14-வது ஆண்டில் கந்தன் கோவலநாதன் என்னும் கோயில் சிப்பந்தியின் வேண்டுகோளின்படி மன்னனது உத்தரவால் கோயிலுக்குப் பொன் வெள்ளிப்பாத்திரங்கள் முதலியன கொடுக்கப்பட்டன. உய்யக்கொண்டான் வளநாட்டைச் சேர்ந்த பாம்பூர் நாட்டில் திருக்குடமூக்கில் திருநாகேசுவரமுடைய தேவர் கோயில் என்று இதில் குறிப்பிட்டுள்ளது.
    4. சுவாமிகோயிலின் மேற்குச் சுவரில் உள்ளது. பரகேசரிவர்மன் உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவனுடைய 2-வது ஆண்டில் (கி.பி.1050-63) ஜயங்கொண்ட சோழ மண்டலத்தைச் சேர்ந்த வெங்குன்றக் கூற்றத்தில் மருதவூரில் உள்ள மாணிக்கம்மாவலி என்னும் விக்கிரமசிங்கப் பல்லவராயனிடமிருந்து திருக்குடமூக்குச் சபையார் நூறு பொற்காசுகள் பெற்றுக் கொண்டது. காவிரியின் வெள்ளத்தால் சேதம் அடைந்த பாசன வாய்க்காலைச் செப்பனிடவும், கோயிலில் திருச்சிற்றம்பலமுடையான் மண்டபத்தில் சிவதர்மங்களை எடுத்து விரிவுரை செய்வதற்கும் அத்தொகை செலவிடப்பெற்றது.
    5. சுவாமிகோயிலின் தென் சுவரில் முடிவு பெறாத கல்வெட்டு சோழமன்னன் ராஜகேசரிவர்மன் கண்டராதித்தனின் 9-வது ஆண்டில் கோயிலின் பூசைகளுக்காக உதவியது இதில் மரிகுலகேசரிவர்மனின் மகளும் அரசியுமான அருஞ்சிகைப்பிராட்டியாரின் பெயர் கூறப்பட்டு உள்ளது.
    6. தென்கவரில் காணும் மற்றொரு கல்வெட்டு, சோழமன்னன் முதலாம் இராஜேந்திர சோழதேவன் காலத்தில் ஏற்பட்டது. கோயிலின் வலதுபுறத்தில் கோவில்கொண்ட பாசயத்தேவரை ஊர்வலமாக எடுத்துச் சென்ற செய்தி காணப்படுகிறது.
    7. தென்சுவரிலேயே உள்ள கல்வெட்டில் சோழமன்னன் பரகேசரிவர்மன் என்னும் உடையார் முதலாம் இராஜேந்திர சோழதேவனது 32-வது ஆண்டில்  உய்யக் கொண்டார் வளநாட்டைச் சேர்ந்த பரம்பூர் நாடு திருக்குடமூக்கில் உள்ள திருநாகேசுவரமுடைய மகாதேவர் கோயிலுக்கு உய்யக் கொண்டார் வளநாட்டைச் சேர்ந்த வெண்ணாடு சதுர்வேதிமங்கலம் நரக்கன் கிருஷ்ணன் ராமன் என்பவனால் நிலம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஷை மன்னனது , 24, 31-வது ஆண்டுகளில் வெளியிடப்பட்ட இராஜேந்திரசோழன் காசு என்னும் பொன் நாணயம் இதில் குறிப்பிடப்டுகிறது. ஷை கிருஷ்ணன் ராமன் என்பவன் முதலாம் இராஜராஜ சோழனுடைய முக்கியஸ்தனாயிருந்து தஞ்சை  பிரகதீசுவர சுவாமி கோயிலின் ஒரு கட்டிடத்தை மேற்பார்வை செய்ததாகவும் ஷை கோயிலில் அர்த்தனாரீசர்  சிலையை பிரதிட்டை செய்ததாகவும் கூறப்படுகிறது.
    8.  தென்சுவரிலேயே உள்ளது இராஜகேசரி வர்மன் முதல் இராஜராஜ சோழனுடைய 14-வது ஆண்டில் திருநறையூர் நாட்டுப் பிரமதேயமான மாதானமங்கலத்து மகாசபையரால் கோயிலுக்கு 1 1/2 வேலி நிலத்தின் கிரயத் தொகை சேர்க்கப்பெற்றது. ஒரு காணி ஆறு மாநிலத்தி கிரயமான 01 கழஞ்சு துலைப்பொன் இளவரசி அருஞ்சிலை பிராட்டியரால் கோயிலுக்குப் பூசைகளுக்காகக் கொடுகக் பட்டது திரைமூர் நாட்டின் தேவதானமாகத் திருநாகேச்சரம்  இதில் கூறப்பட்டுள்ளது.
    9.  தென்சுவரிலேயே சிதைந்துள்ள கல்வெட்டு. இதில் நாகநாதர் கோயிலைப் பற்றியும் கண்டராதித்தனைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது. கண்டராதித்தன் இக்கோயிலைக் கட்டியதாகக் கூறப்படுகிறது.
    10.  முதல் பிரகாரத்தின் வடசுவரில் உள்ளது. 'திரிபுவனச் சக்கரவர்த்தி இரண்டாம் இராஜராஜ சோழனது 19-வது ஆண்டில் குலோத்துங்க வளநாட்டைச் சேர்ந்த திருநறையூர் நாட்டில் பஞ்சவன்மாதேவிச் சதுர்வேதி மங்கலத்தின் பகுதியான சிவபாதசேகர மங்கலத்தில் உள்ள நிலங்கள் திருநாகேச்சரம் உடையார் கோயிலுக்கு வழங்கப்பெற்றது. இக்கோயில் உய்யக் கொண்டார் வளநாட்டில் திருநாகேச்சரத்தில் இருப்பதாகவும் கோசலராயர் என்னும்  இளவரசனால் கரையீடுகள் (குத்தகைகள்) விடப்பட்டதாகவும் தெரிகிறது.
    11. முதல் பிரகாரத்தின் தென்சுவரிலுள்ள சிதைந்த கல்வெட்டு. சோழன் பரகேசரிவர்மன் இரண்டாம் இராஜராஜ சோழ தேவனது ஆட்சியில் 'பூமருவிய பொழில்" என்று தொடங்கும் கல்வெட்டில் கோயிலுக்கு நிலம் வழங்கியது கூறப்படுகிறது.
    12. கோயிலுக்கு நேராகத் தெருவில் உள்ள மண்டபத்தில் விழுந்து கிடந்த தூணிலிருந்து சோழன் இராஜசேகரிவர்மனது இரண்டாவது ஆண்டில் திருநாகேச்சரத்தைச் சேர்ந்த குமாரமார்த்தாண்டபுரம் பெரும் நகரத்தாரால் வசூலிக்கப்பட்ட வார வாய்க்கால் என்னும் தொகை கோயிலுக்குக் கொடுக்கப்பட்டது. தென்கரை திரைமூர் நாட்டிலுள்ள மிலாடுடையார் கோயில் கோபுரத்தையும், திருச்சுற்றாலயத்தையும் (திருமதில்) புதுப்பிப்பதற்கு அத்தொகை கொடுக்கப்பட்டது. மேலும் இக்கல்வெட்டு விளக்க அறிக்கையில் நாகநாதர் கோயிலிலுள்ள கிரிகுஜாம்பிகையம்மன் கோயிலைச் சுற்றிலுமுள்ள சமணர் சிலைகளைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது. மிலாடுடையார் சமணப்பள்ளியாகக் கூறப்பட்டுள்ளது.
    13.  சுவாமிகோயிலின் நடுமண்டபத்து மேல் சுவரில் உள்ள கல்வெட்டு இராசகேசரிவர்மன் முதல் இராஜராஜ சோழனது ஆட்சியில் நிலம் வழங்கப்பெற்றதைக் கூறுகின்றது.
    14. சுவாமிகோயிலின் நடுமண்டபத்து மேல் சுவரில் உள்ளது.  முதல் இராஜராஜ சோழனது 14-வது ஆண்டில் ஒரு அரசியால் நிலம்  வழங்கப் பெற்றதைக் குறிப்பிடுகின்றது.
    15.  நடுமண்டபத்தின் வடசுவரில் சிதைந்த கல்வெட்டு, இது பரகேசரிவர்மன் என்னும் முதல் இராஜேந்திர சோழதேவனது ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டது.
    16. இரண்டாம் பிராகாரத்தின் தென்சுவரிலுள்ளது. திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரிமேக் கொண்டானது 14-வது ஆண்டில் கோயிலுக்கு நிலம் வழங்கப்பெற்றது கூறப்படுகிறது.

    இத்தலப்பகுதி முற்காலத்தில் உய்யக்கொண்டார் வளநாடு, குலோத்துங்க சோழ வளநாடு, சயங்கொண்ட சோழமண்டலம் என்ற பெயர்களிலும் உள்நாடுகளாக திரைமூர், பாம்பூர்நாடு, திருநறையூர் நாடு வெங்குன்றக்கூற்றம் என்ற பெயர்களிலும் வழங்கப்பெற்றது. 
    மாதானமங்கலம் சிவபாத சேகரமங்கலம், குமாரமார்த்தாண்டபுரம், குடமூக்கு முதலிய ஊர்கள் குறிக்கப்பெறுகின்றன. பல சதுர்வேதிமங்கலங்கள் குறிக்கப்பெறுகின்றன. கோமில் ஒரு மண்டபத்துக்கு திருச்சிற்றம்பலமுடையான் மண்டபம்  எனப் பெயர்   கூறப்படுகின்றன.
     

Contact Address

அமைவிடம் இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு இவ்வூர் கும்பகோணத்திற்கு பக்கத்தில் உள்ளது. நகரப் பேருந்துகள் அடிக்கடி செல்கின்றன. தொடர்புக்கு :- 0435 -2430386.

Related Content