இறைவர் திருப்பெயர்: | பாம்புரேஸ்வரர், சேஷபுரீஸ்வரர், பாம்பீசர், பாம்புநாதர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | பிரமராம்பிகை, வண்டார்குழலி. |
தல மரம்: | |
தீர்த்தம் : | ஆதிசேஷ தீர்த்தம். |
வழிபட்டோர்: | சம்பந்தர், அப்பர், சுந்தரர், சேக்கிழார், ஆதிசேஷன் முதலியோர் |
நாகராசன் (ஆதிசேஷன்) வழிபட்ட தலமாதலின், பாம்பு + புரம் = பாம்புரம் என்றாயிற்று.
ஆதிசேஷன் உலகைத் தாங்கும் சோர்வு நீங்கி நல்ல வலிமை பெற இறைவனருளை வேண்டி, உலகிற்கு வந்து, மகாசிவராத்தி நாளில் முதற் காலத்தில் குடந்தை நாகேஸ்வரரையும், இரண்டாங் காலத்தில் திருநாகேச்சுரம் நாகநாதரையும், மூன்றாங் காலத்தில் திருப்பாம்புரம் பாம்புரேஸ்வரரையும், நான்காம் காலத்தில் நாகூர் நாகேஸ்வரரையும் வழிபட்டு உடல் வளம் பெற்றான் என்பது தல வரலாறு.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. சீரணி திகழ்திரு மார்பில் (1.41); பாடல்கள் : அப்பர் - நெடியானும் (6.22.11); சுந்தரர் - தழலும் மேனியன் (7.12.9); சேக்கிழார் - தக்க அந்தணர் (12.28.537 & 538) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
உரகபுரம், சேஷபுரி என்பன இதன் வேறு பெயர்களாம்.
நாகதோஷம் நீங்கவும், மகப்பேறு வாய்க்கவும், ராகு கேது போன்ற சர்ப்ப தோஷங்கள் விலகவும் இத்தலம் சிறந்த பிரார்த்தனையிடமாக விளங்குகிறது.
இத்தலத்தில் பாம்பு கடித்து இறப்பவர்கள் இல்லையாம். வீடுகளில் பாம்பு வந்தாலும் சாதாரணமாகப் போயிவிடுமாம் - யாரையும் கடிப்பதில்லையாம்.
இத்தலத்தில் ராகராஜனுக்கு மூல, உற்சவ விக்ரஹங்கள் உள்ளன.
பாம்பு வழிபட்ட தலமாதலின் மூலத்தானத்தில் எப்போதேனும் ஓரொரு காலங்களில் இன்றும் பாம்பினுடைய நடமாட்டம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஞாயிறு, செவ்வாய், வெள்ளி நாட்களில் மல்லிகை, தாழம்பூ வாசனை கோயிலுக்குள் கமகமவென வீசுமாம். அப்போது பாம்பு கோயிலுக்குள் எங்கேனும் ஓரிடத்தில் உலாவிக் கொண்டிருக்கும் என்பது பொருளாம்.
மகா சிவராத்திரியில் ஆதிசேஷன் இறைவனை வழிபட சிற்றம்பல விநாயகர் துணையுடன் ஏற்படுத்திய குளம், வடக்கு வீதியில் சிற்றம்பலக் குட்டை என்னும் பெயரில் உள்ளது.
இராசராசன், இராசேந்திரன், சுந்தர பாண்டியன், சரபோஜி மன்னன் முதலியோர் காலத்திய 15 கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன.
கல்வெட்டுக்களில் இறைவன் "பாம்புரம் உடையார்" என்றும், விநாயகர் "ராஜராஜப் பிள்ளையார்" என்றும், இறைவி "மாமலையாட்டி" என்றும் குறிக்கப்பட்டுள்ளனர்.
சரபோஜி மன்னனின் பிரதிநிதி சுபேதரர் ரகுபண்டிதராயன் என்பவனால் வசந்த மண்டபமொன்று கட்டப்பட்டதாகத் தெரிகிறது.
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காரைக்கால் - கும்பகோணம் (வழி) பேரளம் - சாலையில் கற்கத்தி வந்து அங்கிருந்து திரும்பி 2 கி. மீ. அச்சாலையில் வந்தால் ஊரை அடையலாம். கோயில் வரை வாகனங்களில் செல்லலாம். தொடர்புக்கு :- 94439 43665 , 0435 - 246 9555 .