இறைவர் திருப்பெயர்: காயாரோகணேஸ்வரர், ஆதிபுராணர்.
இறைவியார் திருப்பெயர்: நீலாயதாட்சி, கருந்தடங்கண்ணி.
தல மரம்:
தீர்த்தம் : தேவ தீர்த்தம், புண்டரீக தீர்த்தம்.
வழிபட்டோர்:சம்பந்தர்,அப்பர், சுந்தரர்,பரணதேவ நாயனார், சேக்கிழார்,ஆதிசேஷன், புண்டரீக முனிவர், அகத்தியர், அம்பிகை, முருகன், திருமால், வசிட்டர், முசுகுந்தன், அரசகேசரி, விசித்திரகவசன்,விரூரகன், பத்திரசேனன், பாற்கரன், மித்திரன், காளகண்டன்,சண்டதருமன் முதலியோர்.
Sthala Puranam
புண்ணியத் தலங்களும் தீர்த்தங்களும் நிறைந சோழ வளநாட்டில் தெய்வப்பொன்னி நதியின் தென்கரையில் உள்ள தேவாரப் பாடல்பெற்ற சிவத்தலங்களுள் 82 வது தலமாக விளங்குவது திருநாகைக் காரோணம் எனும் இத்தலம். இது, மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புடையதாய் விளங்குகிறது.
பல ஊழிக்காலங்களுக்கும் அப்பாற்பட்டதால் இதனை ஆதி புராணம் என்றும் சுவாமியை ஆதி புராணேச்வரர் என்றும் தல புராணம் குறிப்பிடுகிறது.
இது, ஆதி சேஷனால் பூஜிக்கப் பெற்றதால், நாகை என்றும், புண்டரீக முனிவரை இறைவன் தனது தேகத்தில் ஆரோகணம் செய்துகொண்டமையால், காயாரோகணம் என்றும் பெயர். இது மருவி, காரோணம் என்றாயிற்று. (காரோணம் என்று பெயருடைய திருக்கோயில்கள் தமிழ்நாட்டில் மூன்று உள்ளது; 1. நாகைக் காரோணம், 2. குடந்தைக் காரோணம், 3.கச்சிக்காரோணம் [காயாரோகணம்] - லிங்கபேசம் [காயாரோகணம்]ஆகும்.)
ஆதிபுராணம், சிவராசதானி, பார்ப்பதீச்சரம், அரவநகரம் முதலிய பெயர்களாலும் இத்தலம் விளங்கியுள்ளது என்று தலபுராணம் கூறுகின்றது.
கிழக்கு நோக்கிய இச்சிவாலயத்தின் முகப்பிலுள்ள முற்றுப்பெறாத கோபுர வாசலைக் கடந்தால், நாகாபரண விநாயகர், சுதையாலான நந்தி, முக்தி மண்டபம்,ஆகியவற்றைத் தரிசிக்கலாம்.
ஐந்து நிலை கோபுர வாசலைக் கடந்தால், தெற்கு நோக்கிய அம்பாள் சன்னதியும், அருகில் கொடிமரம் ஆகியன அமைந்துள்ளன. சுவாமி பிராகாரத்தில், அருகாமையில் தியாகராஜமூர்த்தி சன்னதியும், எதிரில் சுந்தரரும் இருக்கக் காணலாம். இப்பிராகாரத்தில், அறுபத்து மூவர், புண்டரீக முனிவர், சாலீசுக மன்னன், முருகன், கஜலக்ஷ்மி, தசரதன் ஸ்தாபித்த சநீச்வரன், காட்சி கொடுத்தவர், நடராஜர், பிக்ஷாடனர் அதிபத்தர் ஆகிய மூர்த்திகளையும் தரிசிக்கலாம். தியாகராஜர் சன்னதியில் சுந்தரவிடங்கரையும் தரிசிக்கலாம். மூலவரான காயாரோகண சுவாமிக்குப் பின்னால் சப்த ரிஷிகளுக்கும் காட்சி தந்த சோமாஸ்கந்தரையும் தரிசிக்கலாம். ஸ்தல விருக்ஷமான மாமரத்தின் அருகில் மாவடிப் பிள்ளையார் வீற்றிருக்கிறார்.
சர்வ தீர்த்தம் என்னும் புண்டரீக தீர்த்தம் கோவிலின் மேற்கிலும், சிவகங்கை என்னும் தேவ தீர்த்தம் முக்தி மண்டபத்தருகிலும், தேவநதியாகிய உப்பாறு ஊருக்கு மேற்கிலும் உள்ளன. கடலும் சிறந்த தீர்த்தமாவதால், விசேஷ நாட்களில் இதில் நீராடுவது சிறப்புடையதாகக் கருதப்படுகிறது.
அகத்தியருக்கு இறைவன் திருமணக்காட்சி நல்கிய தலம்; சப்த ரிஷிகளுக்கும் இறைவன் மூல லிங்கத்திலிருந்து தோன்றி சோமாஸ்கந்தராய்க் காட்சி கொடுத்தத் தலம்.
சாலிசுக மன்னனுக்குத் திருமணக் கோலம் காட்டும் பஞ்சக்குரோச யாத்திரையாகிய சப்தஸ்தான விழா நடைபெறும் தலமாகவும் இத்தலம் விளங்குகின்றது.
சுந்தரருக்கு இறைவன் குதிரை, முத்துமாலை, நவமணிகள், பட்டு, சாந்தம், சுரிகை முதலானவை வழங்கிய தலம்; இறைவன் தனது குதிரை வாகனத்தை சுந்தரருக்கு அளித்ததால், அன்றுமுதல் இக்கோவிலில் குதிரைவாகன விழா, சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கே நடைபெறுவதாகப் புராணம் கூறும்.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. புனையும் விரிகொன்றை (1.84), 2. கூனல்திங்கட் குறுங்கண்ணி (2.116); அப்பர் - 1. மனைவி தாய் தந்தை (4.71), 2. வடிவுடை மாமலை (4.103), 3. பாணத்தால் மதில் (5.83), 4. பாரார் பரவும் (6.22); சுந்தரர் - 1. பத்தூர்புக் கிரந்துண்டு (7.46); பாடல்கள் : அப்பர் - அறையார்பொற் (6.54.6); பரணதேவ நாயனார் - கடனாகக் கைதொழுமின் (11.23.35) சிவபெருமான் திருவந்தாதி; சேக்கிழார் - சோலை மறைக் காட்டு (12.21.291) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், மற்றவர்தம் பெரும் கேண்மை (12.28.466) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், சேவித்து அணையும் (12.37.84) கழறிற்றறிவார் நாயனார் புராணம்.
Specialities
அ/மி. அமுதீசர் திருக்கோயில், (அதிபத்தர் திருக்கோயில்), நம்பியார் நகர், நாகப்பட்டினம் - 611 001. தொலைபேசி : +91-98436 03733.
அவதாரத் தலம் : நாகப்பட்டினத் திருநகர் - நுளைபாடி (நம்பியார் நகர்) வழிபாடு : இலிங்க வழிபாடு. முத்தித் தலம் : நாகைக்காரோணம். குருபூசை நாள் : ஆவணி - ஆயில்யம்.
சேக்கிழார் பெருமான் குறிப்பிடும் நாகப்பட்டினத் திருநகர "நுளைபாடி" என்பது தற்போது "நம்பியார்நகர்" என்று வழங்கப்படுகின்றது. இது நாகப்பட்டின நகரின் ஒரு பதியாகும்.
ஏழு விடங்கத் தலங்களுள் ஒன்று. (தியாகராஜர் - சுந்தர விடங்கர்; நடனம் - பாராவாரதரங்க நடனம்).
கயிலையையும், காசியையும் போல இத்தலம் முத்தி மண்டபத்தைக் கொண்டுள்ளது.
மூவர் பெருமக்களால் பாடல் பெற்றத் திருத்தலம்.
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்களும் பெற்றத் தலம்.
இத்தல ரதம் கண்ணாடித் தேராகும்.
ஏழு கல்வெட்டுகள் படியெடுக்கப் பட்டுள்ளன; முதல் இராசராசன், குலோத்துங்கன் முதலியோர் காலத்துக் கல்வெட்டுக்கள் அவை.
சோழ மன்னர்களின் தலைநகரங்களுள் ஒன்றாகவும் இவ்வூர் விளங்கியுள்ளது.
நாகப்பட்டினத்துச் சோழன் பிலத்துவாரத்தால் நாகலோகம் சென்று நாககன்னியைக் கூடிப்பெற்ற புதல்வனே தொண்டை நாட்டை அரசாண்ட இளந்திரையன் எனப் பத்துப்பாட்டால் அறிகிறோம்.
குறுந்தொகைப் புலவர் ஒருவரின் பெயர் நன்நாகையார் எனக் கூறப்படுகிறது.
நகரின் மத்தியில் இக்கோயில் 180 மீட்டர் நீலம், 75 மீட்டர் அகலம் நிலப்பரப்பு கொண்டு, இரண்டு பிரகாரங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
வைகாசியில் பிரமோற்சவமும், ஆனி ஆயில்யத்தில் புண்டரீக மகரிஷி ஐக்கியமும், ஆனி கிருஷ்ண பக்ஷ அஷ்டமியில் பஞ்சக் குரோச உற்சவமும் நடைபெறும். அப்போது, சாலீசுகனுக்குத் திருமணக்காட்சி அளித்த பின், பல்லக்கில் புறப்பட்டு, பஞ்சகுரோச யாத்திரையாக, பொய்யூர், பாப்பாகோவில், சிக்கல், பாலூர், வடகுடி, தெத்தி, நாகூர் ஆகிய தலங்களுக்குச் சென்று, மறுநாள் காலை, நாகை அடைந்து, கோபுர வாசல் தரிசனம் நடைபெறுகிறது. ஆவணியில் அதிபத்த நாயனார் விழாவும், ஆடி - தை அமாவாசை மற்றும் மாசி மக நாட்களில் சமுத்திர தீர்த்த வாரியும், தியாகராஜப் பெருமானுக்குப் பங்குனி உத்திர விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன. கார்த்திகை சோமவாரங்களில் சங்காபிஷேகம் நடைபெறுகிறது.
நாகைக்காரோணப் புராணம் 61 - படலங்களையும், 2506 பாடல்களையும் கொண்ட இந்நூல் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களால் இயற்றப் பெற்று 1860 அரங்கேற்றம் பெற்றது.
மகாவித்துவான் பிள்ளை அவர்களின் மாணாக்கரான டாக்டர் உ.வே. சுவாமிநாத ஐயர் அவர்கள், இப்புராணத்தின் அருமை பெருமைகளைப் பின்வருமாறு விளக்கியுள்ளார்கள்:
“இந்நூலில் பல நயங்கள் மிகுந்து விளங்கும். சொல்லணி,பொருளணி, தொடைநயம்,பொருட்சிறப்பு,சுவைநயம்,நீதி,சிவபக்தி,சிவத்தலச்சிறப்பு, நாயன்மார் பெருமை முதலிய பலவும் நிரம்பியுள்ளன. சுவைப் பிழம்பாக விளங்கும் இக்காப்பியத்தைப் பெறுதற்குத் தமிழ்நாடு தவம் செய்திருக்க வேண்டும். பல புலவர்களின் வாக்குகளை ஒருங்கே பார்த்து மகிழ வேண்டுபவர் இந்நூலைப் படித்தால் போதும்.”
ஞானசம்பந்தர் அருளிய திருமுகப் பாசுரத்தின் ஒவ்வோரு பாடலுக்கும் சேக்கிழார் விரிவுரை செய்ததைப் போலப் பிள்ளை அவர்களும், சுந்தரர் இத்தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒவ்வொரு பாடலுக்கும் இப்புராணத்தில் விளக்கம் அளித்துள்ளது அறிந்து மகிழத் தக்கது.
2506 பாடல்களைக் கொண்ட இப்புராணத்தைத் திருவாவடுதுறை ஆதீனம், 1970 ம் ஆண்டு, குறிப்புரையுடன் வெளியிட்டுத் தமிழ் கூறு நல்லுலகிற்குத் தந்து பேருபகாரம் செய்தது, நன்றியுடன் இங்கு நினைவுகூரத் தக்கது.
கற்றார் பயில் கடல் நாகைக்காரோணம் என்பது திருஞானசம்பந்தர் திருவாக்கு. காளமேகப் புலவர் இவ்வூருக்கு வந்தபோது பசியால், வீதியில் பாக்கு விளையாடும் பாலகர்களை நோக்கிப் "சோறு எங்கு விக்கும்?" என்று கேட்டார். அச்சிறுவர்கள் தொண்டையில் விக்கும் என்று பதில் கூறினர். (விற்கும் என்பது பேச்சு வழக்கில் விக்கும் என வழங்குதலும் உண்டு.) புலவர் சிறுவர்கள் மீது கோபங்கொண்டு, அவர்கள் மீது வசைபாடும் பொருட்டு வரைசுவரொன்றில் "பாக்குத் தறித்து விளையாடும் பாலகர்க்கு..." என்று எழுதி நிறுத்தி விட்டு, பசிதீர்ந்து எஞ்சிய பகுதியைப் பாடி முடிப்போம் என்று சென்று, பசியாறி வந்து பார்க்கும்போது, அப்பாடலின் இரண்டாமடி "நாக்குத் தமிழுரைக்கும் நன்னாகை" என்று எழுதி இருப்பதைக் கண்டு, சிறுவர்களின் கல்வியறிவை மெச்சிச் சென்றார் என்பது தனிப்பாடல் திரட்டில் காணப்படும் வரலாறு.
Contact Address