வையனை வைய முண்ட
மாலங்கந் தோண்மேற் கொண்ட
செய்யனைச் செய்ய போதிற்
திசைமுகன் சிரமொன் றேந்துங்
கையனைக் கடல்சூழ் நாகைக்
காரோணங் கோயில் கொண்ட
ஐயனை நினைந்த நெஞ்சே
அம்மநாம் உய்ந்த வாறே. 2
நிருத்தனை நிமலன் றன்னை
நீணிலம் விண்ணின் மிக்க
விருத்தனை வேத வித்தை
விளைபொருள் மூல மான
கருத்தனைக் கடல்சூழ் நாகைக்
காரோணங் கோயில் கொண்ட
ஒருத்தனை உணர்த லால்நாம்
உய்ந்தவா நெஞ்சி னீரே. 3
மண்டனை இரந்து கொண்ட
மாயனோ டசுரர் வானோர்
தெண்டிரை கடைய வந்த
தீவிடந் தன்னை யுண்ட
கண்டனைக் கடல்சூழ் நாகைக்
காரோணங் கோயில் கொண்ட
அண்டனை நினைந்த நெஞ்சே
அம்மநாம் உய்ந்த வாறே. 4
நிறைபுனல் அணிந்த சென்னி
நீணிலா அரவஞ் சூடி
மறையொலி பாடி யாடல்
மயானத்து மகிழ்ந்த மைந்தன்
கறைமலி கடல்சூழ் நாகைக்
காரோணங் கோயில் கொண்ட
இறைவனை நாளு மேத்த
இடும்பைபோய் இன்ப மாமே. 5