logo

|

Home >

thala-marangalin-sirappukal >

temple-trees-aala-tree

temple-trees-தலமர சிறப்புகள் ஆல மரம்

தலமர சிறப்புகள்


ஆல் Ficus bengalensis, Linn.; Moraceae.

வானஞ் சேர்மதி சூடிய மைந்தனை
நீநெஞ் சேகெடு வாய்நினை கிற்கிலை
ஆனஞ் சாடியை அன்பிலா லந்துறைக்
கோனெஞ் செல்வனைக் கூறிட கிற்றியே.
- திருநாவுக்கரசர்.

 

திருஅன்பிலாலந்துறைதிருப்பழுவூர்திருவாலம்பொழில் திருமாந்துறை, திருக்கச்சூர்,திருப்பூந்துருத்தி, திருவாலங்காடு,திருநெல்வாயில் அரத்துறை, திருப்புள்ளமங்கைதிருக்கோணமலை, திருக்கூடலையாற்றூர்   ,திருவெண்காடு , கோயில் (சிதம்பரம்) , திருக்குற்றாலம்  , திருக்காளத்தி , திருத்தலையாலங்காடு  முதலிய சிவத்தலங்களில் ஆலமரம் தலமரமாக விளங்குகின்றது. இவற்றுள் திருக்கூடலையாற்றூர் தலத்தில் இம்மரம் தற்போது இல்லை. அகன்ற இலைகளையுடைய பெருமரம். கிளைகளிலிருந்து விழுதுகள் வளர்ந்து தரையில் ஊன்றி மரத்தைத் தாங்கி விசாலமாக்கும் தன்மை கொண்டது. நிழலுக்காக தமிழகமெங்கும் வளர்க்கப்படும் மரமாகும். இதன் சாறு பால் தன்மை கொண்டது. இம்மரத்தின் இலை, மொட்டு, பழுப்பு, பழம், விதை, பால், பட்டை விழுது ஆகியன மருத்துவப் பயனுடையதாகும்.

பொதுவாக நரம்புகளையும் சதைகளையும் சுருக்கிக் குருதி, சீழ் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும், உடல் பலம் பெருக்கும், காமம் பெருக்குதல் ஆகிய மருத்துவக் குணமுடையது.

 

திருமுறைகளில் ஆல்/ஆலமரம் பற்றிய குறிப்புகள் :-

பாலுந்துறு திரளாயின பரமன்பிர மன்தான்
போலுந்திற லவர்வாழ்தரு பொழில்சூழ்புள மங்கைக்
காலன்திற லறச்சாடிய கடவுள்ளிடங் கருதில்
ஆலந்துறை தொழுவார்தமை யடையாவினை தானே.
			- 1.16.1

மலையான்மகள் கணவன்மலி கடல்சூழ்தரு தன்மைப்
புலையாயின களைவானிடம் பொழில்சூழ்புள மங்கைக்
கலையால்மலி மறையோரவர் கருதித்தொழு தேத்த
அலையார்புனல் வருகாவிரி ஆலந்துறை அதுவே.
			- 1.16.2

மெய்த்தன்னுறும் வினைதீர்வகை தொழுமின்செழு மலரின்
கொத்தின்னொடு சந்தாரகில் கொணர்காவிரிக் கரைமேல்
பொத்தின்னிடை யாந்தைபல பாடும்புள மங்கை
அத்தன்நமை யாள்வானிடம் ஆலந்துறை யதுவே.
			-1.16.5

மன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில்
பொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்புள மங்கை
என்னானவன் இசையானவன் இளஞாயிறின் சோதி
அன்னானவன் உறையும்மிடம் ஆலந்துறை யதுவே.
			-1.16.6

முடியார்தரு சடைமேல்முளை இளவெண்மதி சூடி
பொடியாடிய திருமேனியர் பொழில்சூழ்புள மங்கை
கடியார்மலர் புனல்கொண்டுதன் கழலேதொழு தேத்தும்
அடியார்தமக் கினியானிடம் ஆலந்துறை யதுவே.
			-1.16.7

இலங்கைமன்னன் முடிதோளிற எழிலார்திரு விரலால்
விலங்கல்லிடை அடர்த்தானிடம் வேதம்பயின் றேத்திப்
புலன்கள்தமை வென்றார்புக ழவர்வாழ்புள மங்கை
அலங்கல்மலி சடையானிடம் ஆலந்துறை யதுவே.
			-1.16.8

செறியார்தரு வெள்ளைத்திரு நீற்றின்திரு முண்டப்
பொறியார்தரு புரிநூல்வரை மார்பன்புள மங்கை
வெறியார்தரு கமலத்தயன் மாலுந்தனை நாடி
அறியாவகை நின்றானிடம் ஆலந்துறை யதுவே.
			-1.16.9

நீதியறி யாதாரமண் கையரொடு மண்டைப்
போதியவ ரோதும்முரை கொள்ளார்புள மங்கை
ஆதியவர் கோயில்திரு ஆலந்துறை தொழுமின்
சாதிம்மிகு வானோர்தொழு தன்மைபெற லாமே.
			- 1.16.10

மேலது நான்முக னெய்திய தில்லை 
	கீழது சேவடி தன்னை
நீலது வண்ணனு மெய்திய தில்லை 
	எனவிவர் நின்றது மல்லால்
ஆலது மாமதி தோய்பொழிற் பாச்சி 
	லாச்சிரா மத்துறை கின்ற
பாலது வண்ணரோ பைந்தொடி வாடப் 
	பழிசெய்வ தோவிவர் பண்பே.	
			- 1.44.9

 

ஆலமா மரவமோ டமைந்தசீர்ச் சந்தனஞ்
சாலமா பீலியுஞ் சண்பக முந்தியே
காலமார் முகலிவந் தணைதரு காளத்தி
நீலமார் கண்டனை நினையுமா நினைவதே.	3.36.2

கோலக் காவிற் குருமணியைக் 
	குடமூக் குறையும் விடமுணியை
ஆலங் காட்டி லந்தேனை 
	அமரர் சென்னி யாய்மலரைப்
பாலிற் றிகழும் பைங்கனியைப் 
	பராய்த் துறையெம் பசும்பொன்னைச்
சூலத் தானைத் துணையிலியைத் 
	தோளைக் குளிரத் தொழுதேனே.	4.15.5
மறைக்காட்டார் வலிவலத்தார் வாய்மூர் மேயார்
	வாழ்கொளி புத்தூரார் மாகா ளத்தார்
கறைக்காட்டுங் கண்டனார் காபா லியார்
	கற்குடியார் விற்குடியார் கானப் பேரார்
பறைக்காட்டுங் குழிவிழிகட் பல்பேய் சூழப் 
	பழையனூர் ஆலங்காட் டடிகள் பண்டோர்
மிறைக்காட்டுங் கொடுங்காலன் வீடப் பாய்ந்தார்
	வீழி மிழலையே மேவி னாரே.	6.51.7

படர்கொண்ட ஆலதின் வித்தது போலச்
சுடர்கொண்டு அணுவினைத் தூவழி செய்ய
இடர்கொண்ட பாச இருளற ஒட்டி
நடர்கொண்ட நல்வழி நாடலும் ஆமே. 10.2009.3

அக்கரை நின்றதோர் ஆல மரங்கண்டு
நக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வர்
மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டுபோய்த்
தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறே. 10.2899.34
ஆலநிழற்கீழ் இருப்பதுவும் ஆய்வதறம்
ஆலம் அமுதுசெய்வ தாடுவதீ - ஆலந்
துறையுடையான் ஆனை உரியுடையான் சோற்றுத்
துறையுடையான் சோராத சொல்லு.	
			- 11.பரண.39

குறியார் மணிமிடற்றுக் 
	கோலஞ்சேர் ஞானக்
குறியாகி நின்ற 
	குணமே- குறியாகும்
ஆலங்கா டெய்தா 
	அடைவேன்மேல் ஆடரவம்
ஆலங்கா 
	டெய்தா அடை.	
			- 11.பரண.50 

ஆலையங் கார்கரு காவைகச் 
	சூர்திருக் காரிகரை
வேலையங் கேறு திருவான்மி 
	யூர்திரு ஊறல்மிக்க
சோலையங் கார்திருப் போந்தைமுக் 
	கோணம் தொடர்கடுக்கை
மாலையன் வாழ்திரு ஆலங்கா 
	டேகம்பம் வாழ்த்துமினே.
			- 11.பட்டினத்.65

அம்மலர்ச் சீர்ப்பதியை அகன்று 
	அயல் உளவாம் பதிஅனைத்தின் 
மைம் மலரும் களத்தாரை 
	வணங்கி மகிழ்வொடும் போற்றி 
மெய்ம்மை நிலை வழுவாத 
	வேளாள விழுக் குடிமைச் 
செம்மையினால் பழையனூர்த் திருஆல 
	வனம் பணிந்தார்.
			- 12.திருநாவு.341

திருஆலங்காடு உறையும் 
	செல்வர்தாம் எனச் சிறப்பின் 
ஒருவாத பெரும்திருத் தாண்டகம் 
	முதலாம் ஓங்கு தமிழ்ப் 
பெருவாய்மைத் தொடை மாலை 
	பலபாடிப் பிற பதியும் 
மருஆர்வம் பெற வணங்கி 
	வடதிசை மேல்வழிக் கொள்வார்.	
			- 12.திருநாவு.342 

கூடுமாறு அருள் கொடுத்துக் 
	குலவுதென் திசையில் என்றும் 
நீடுவாழ் பழன மூதூர் 
	நிலவிய ஆலங் காட்டில் 
ஆடும்மா நடமும் நீகண்டு 
	ஆனந்தம் சேர்ந்து எப்போதும் 
பாடுவாய் நம்மை பரவு 
	வார் பற்றாய் நின்றான்.
			- 12.பேயார்.61

அப்பரிசு அருளப் பெற்ற 
	அம்மையும் செம்மை வேத 
மெய்ப் பொருள்ஆனார் தம்மைவிடை 
	கொண்டு வணங்கிப் போந்து 
செப்பரும் பெருமை அன்பால் 
	திகழ் திருஆலங் காடாம் 
நற்பதி தலையினாலே நடந்து 
	புக்கு அடைந்தார் அன்றே.
			- 12.பேயார்.62

ஆலங்காடு அதனில் அண்டமுற 
	நிமிர்ந்து ஆடுகின்ற 
கோலம்காண் பொழுது கொங்கை 
	திரங்கிஎன்று எடுத்துஅங்கு 
மூலம் காண்பரியார் தம்மை 
	மூத்தநல் பதிகம்பாடி 
ஞாலம் காதலித்துப் போற்றும் 
	நடம்போற்றி நண்ணும்நாளில்.
			- 12.பேயார்.63

தொழுது புறம்பு அணைந்து 
	அங்குநின்று ஏகிச்சுரர் பணிவுற்று 
எழுதிரு ஆலந்துறை 
	திருச் செந்துறையே முதலா
வழுவில் பல்கோயில்கள் சென்று 
	வணங்கி மகிழ்ந்து அணைவார்
செழுமலர்ச் சோலைத் திருக் 
	கற்குடி மலைசேர வந்தார்.
			- 12.சம்.342

தலைவர்தம் சக்கரப்பள்ளி 
	தன்இடை அகன்று 
அலைபுனல் பணைகளின் 
	அருகுபோய் அருமறைப் 
புலன்உறும் சிந்தையார் 
	புள்ள மங்கைப்பதி 
குலவும் ஆலந்துறைக் 
	கோயிலைக் குறுகினார்.
			- 12.சம்.363

குன்ற நெடும்சிலை ஆளர் 
	குலவிய பல்பதி பிறவும் 
நின்ற விருப்புடன் இறைஞ்சி 
	நீடுதிருத் தொண்டர் உடன் 
பொன்தயங்கு மணி மாடப் 
	பூந்த ராய்ப் புரவலனார் 
சென்று அணைந்தார் பழையனூர்த் 
	திருஆலங் காட்டு அருகு.
			- 12.சம்.1007

இம்மையிலே புவிஉள்ளோர் யாரும்காண ஏழ்உலகும் 
	போற்றி இசைப்ப எம்மை ஆளும் 
அம்மை திருத்தலையாலே நடந்து போற்றும் 
	அம்மை அப்பர் திருஆலங் காடாம்என்று 
தம்மை உடையவர் மூதூர்மிதிக்க அஞ்சிச் 
	சண்பைவரும் சிகாமணியார் சாரச் சென்று 
செம்மை நெறிவழுவாத பதியின் மாடோர் 
	செழும்பதியில் அன்றுஇரவு பள்ளி சேர்ந்தார்.
			- 12.சம்.1008

மாலைஇடை யாமத்துப் பள்ளி கொள்ளும் 
	மறையவனார் தம்முன்பு கனவிலே வந்து 
ஆலவனத்து அமர்ந்து அருளும் அப்பர்நம்மை  
	அயர்தனையோ பாடுதற்குஎன்று அருளிச் செய்ய 
ஞாலம்இருள் நீங்கவரும் புகலிவேந்தர் நடுஇடை 
	யாமத்தின் இடைத் தொழுது உணர்ந்து 
வேலைவிடம் உண்டவர் தம்கருணை போற்றி 
	மெய்உருகித் திருப்பதிகம் விளம்பல் உற்றார்.
			- 12.சம்.1009

நீடும்இசைத் திருப்பதிகம் பாடிப்போற்றி நெடும்
	கங்குல்இருள் நீங்கி நிகழ்ந்த காலை 
மாடுதிருத் தொண்டர்குழாம் அணைந்த போது 
	மாலையினில் திருஆல வனத்து மன்னி 
ஆடும்அவர் அருள்செய்த படியை எல்லாம் 
	அருளிச் செய்து அகம்மலர பாடிஏத்திச் 
சேடர்பயில் திருப்பதியைத் தொழுது போந்து 
	திருப்பாசூர் அதன்மருங்கு செல்லல் உற்றார்.
			- 12.சம்.1011

தேவர் பெருமான் கண்டியூர் 
	பணிந்து திருஐயாறு அதனை 
மேவி வணங்கிப் பூந்துருத்தி 
	விமலர் பாதம்தொழுது இறைஞ்சிச் 
சேவில் வருவார் திருஆலம் 
	பொழிலில் சேர்ந்துதாழ்ந்து இரவு 
பாவு சயனத்து அமர்ந்தருளிப் 
	பள்ளி கொள்ளக் கனவின்கண்.
			- 12.ஏயர்.71

பாடிய அப்பதியின்கண் இனிது 
	அமர்ந்து பணிந்து போய் 
நாடிய நல்லுணர்வின் ஒடும் 
	திருக்கச்சூர் தனை நண்ணி 
ஆடக மாமதில் புடைசூழ் 
	ஆலக் கோயிலின் அமுதைக் 
கூடிய மெய்அன்பு உருகக் 
	கும்பிட்டுப் புறத்து அணைந்தார்.
			- 12.ஏயர்.174

நீடு திருக்காளத்தி நிலவு 
	தாணுவை வணங்கி 
ஆடு திருஅரங்கான ஆலவனம் 
	தொழுது ஏத்தித் 
தேடும் இருவர்க்கு அரியார் 
	திருஏகாம்பரம் பணிந்து 
மாடுயர் மாமதில் காஞ்சி 
	வளநகரின் வைகினார்.
			- 12.மூலர்.5

 

< PREV <
ஆமணக்குச்செடி
Table of Content > NEXT >
இலந்தைமரம்

 

Related Content

Pictures of Sthala vruksham or Temple Trees

temple-trees-தலமரச் சிறப்புகள் அத்தி மரம் (Cluster Fig Tree)

temple-trees-தலமர சிறப்புகள் அகில் மரம்

temple-trees-தலமர சிறப்புகள் அரச மரம்

temple-trees-தலமரச் சிறப்புகள் அலரிச் செடி (Oleander Plant)