இறைவர் திருப்பெயர்: வடாரண்யேசுவரர், தேவர்சிங்கப் பெருமான், ஆலங்காட்டுஅப்பர்.
இறைவியார் திருப்பெயர்: பிரம்மராளகாம்பாள், வண்டார்குழலி.
தல மரம்:
தீர்த்தம் : சென்றாடு தீர்த்தம் ' (செங்கச்ச உன்மத்ய மோக்ஷ புஷ்கரணி), முத்தி தீர்த்தம்.
வழிபட்டோர்:கார்க்கோடகன், சுநந்த முனிவர் , சம்பந்தர் , அப்பர் , சுந்தரர், காரைக்கால் அம்மையார், பரணதேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார் முதலியோர்
- இத்தலம் 'வடாரண்யம் ' எனவும் பெயர் பெற்றது.
- இறைவன் காளியுடன் நடனமாடிய தலம். காளி அன்னை உக்கிரமாக இருந்தபோது முஞ்சிகேச கார்க்கோடக முனிவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சிவபெருமான் காளியுடன் நடனமாடி ஊர்த்துவ தாண்டவத்தால் வென்று காளியின் கோபத்தை அடக்கினார். சிவபெருமான் காளிக்கு அருள் செய்து இங்கு எழுந்தருளி உள்ளார். அருகில் காளிக்குத் தனிக் கோயில் உள்ளது.
- கார்க்கோடகன், சுநந்த முனிவர் முதலியோர் வழிபட்ட தலம்.
- காரைக்காலம்மையார் தலையால் நடந்து வந்து நடராசப் பெருமானின் திருவடிக் கீழிருந்து சிவானந்த இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் தலம்.
- இங்கே வாழ்ந்த வேளாளர்கள் பழையனூர் நீலியால் வணிகன் உயிர் போகவும் தாம் கொடுத்த வாக்குப்படி தங்கள் உயிர் துறந்து சத்தியத்தை நிலை நாட்டினார்கள். இதனைத் `துஞ்ச வருவாரும்` என்னும் பாடலில் ஞானசம்பந்த சுவாமிகள் குறித்துள்ளார்.
- காரைக்காலம்மையார் தலையால் நடந்து வந்த இத்தலத்தைத் தமது காலால் மிதிக்க அஞ்சிய சம்பந்தர் ஊருக்கு வெளியில் ஓரிடத்தில் இறங்கி, அன்று இரவு துயிலும்போது, அவர் கனவில் வந்த ஆலங்காட்டப்பன் "நம்மை அயர்த்தனையோ பாடுதற்கு" என்று நினைவூட்ட அடுத்த நாள் தலத்துக்குள் சென்று கோயிலில் இறைவனை பதிகம்பாடி வணங்கினார்.
திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. துஞ்ச வருவாருந் (1.45); அப்பர் - 1. வெள்ளநீர்ச் சடையர் (4.68), 2. ஒன்றா வுலகனைத்து (6.78); சுந்தரர் - 1. முத்தா முத்தி தரவல்ல (7.52); காரைக்கால் அம்மையார் - 1. கொங்கை திரங்கி (11.2), 2. எட்டி இலவம் (11.3); பாடல்கள் : அப்பர் - மறைக்காட்டார் (6.51.7); பரணதேவ நாயனார் - குறியார் மணிமிடற்றுக் (11.24.50); பட்டினத்துப் பிள்ளையார் - ஆலையங் கார் (11.30.65); சேக்கிழார் - திரு ஆலங்காடு (12.21.342) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், ஆலங்காடு அதனில் (12.24.63) காரைக்கால் அம்மையார் புராணம், குன்ற நெடும் (12.28.1007) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், அங்கணர் தம்பதி (12.29.282 & 283) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
சென்னையிலிருந்து திருவள்ளூர் வழியாக அரக்கோணம் செல்லும் பேருந்துப் பாதையில் இத்தலம் உள்ளது. காஞ்சியிலிருந்தும், அரக்கோணத்திலிருந்தும், திருவள்ளூரிலிருந்தும் இவ்வூருக்குப் பேருந்துகள் உள்ளன.