இறைவர் திருப்பெயர்: நர்த்தனவல்லபேஸ்வரர், நெறிகாட்டுநாதர்.
இறைவியார் திருப்பெயர்: பராசக்தி, ஞானசக்தி (புரிகுழல்நாயகி) (இரு அம்பாள் சந்நிதிகள்).
தல மரம்:
தீர்த்தம் : மணிமுத்தா நதி, வெள்ளாறு, சங்கமத்தீர்த்தம் (வெள்ளாறும் மணிமுத்தாறும் கூடும் இடம்), பிரம்ம தீர்த்தம், அகஸ்திய தீர்த்தம், கார்த்யாயன தீர்த்தம்
வழிபட்டோர்:சுந்தரர், சேக்கிழார்
- மணிமுத்தாறும் வெள்ளாறும் கூடும் இடத்தில் உள்ள ஊராதலின் கூடலையாற்றூர் என்று பெயர் பெற்றது. இத்தலத்தை தட்சிணப் பிரயாகை என்று கூறுவர்.
- வெள்ளப்பெருக்கில் இக்கோயில் அழிய, அங்கிருந்த கற்களைக் கொண்டு வந்து, இவ்வூரில் கோயிலைக்கட்டி சுவாமி அம்பாளை எழுந்தருளச்செய்துள்ளனர். இக்கோயில் நூறாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதென்பர்.
- மகரிஷி அகத்தியர் இத்தலத்தில் தான் கற்ற வித்தைகள் மறக்காமல் இருக்க இறைவனை பிரார்த்தித்தார்.
- அகஸ்தியருக்கு ஒரு மகள் வேண்டும் என இறைவனை வேண்டினார். இறைவன் திருவருளால் மகாலட்சுமியை இங்கு ஓடும் மணிமுத்தாறு நதியில் தாமரை மலர் மீது கண்டார். அக்குழந்தையை எடுத்து அம்புஜவல்லி எனப் பெயரிட்டு வளர்த்தார். விஷ்ணு வராக அவதாரம் எடுத்தபோது அம்புஜவல்லியை மணம் செய்து கொண்டார். இங்கு விஷ்ணுவுக்கும் சன்னதி உள்ளது.
- சிதம்பரத்தில் வியாக்ரபாத முனிவருக்கும், பதஞ்சலி முனிவருக்கும் தனது நடனக் காட்சியை காட்டி அருளினார் சிவபெருமான். அந்த நடனக் காட்சியைத் தானும் காண விரும்பி பிரம்மா இத்தலத்தில் இறைவனை வழிபட்டு வேண்டினார். அவர் வேண்டுதலை ஏற்று பிரம்மாவிற்கும் சரஸ்வதிக்கும் நர்த்தனம் ஆடி அருள் செய்தார். எனவேதான் இத்தல இறைவன் நர்த்தன வல்லபேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
- சோழ நாட்டை ஆண்ட தினகர மகாராஜன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவளைக் கொன்று விட்டான். இதனால் அவனுக்கு ஸ்திரீஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. தோஷத்தால் ஊர் திரிந்தான். அப்போது ஒரு சொறி நாய் அவன் பின்னால் வந்து கொண்டிருந்தது. ஒரு நாள் அந்த நாய் ஒரு நதியில் மூழ்கி எழுந்தவுடன் ஆரோக்கியத்துடனும் தோற்றப் பொலிவுடனும் விளங்கியது. இதைப் பார்த்த மன்னன் இரு நதிகள் சங்கமிக்கும் அந்த இடத்தில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றான். அவ்விடத்தில் கூடலையாற்றூர் சிவபெருமானுக்குத் திருக்கோயில் கட்டுவித்தான்.
- சுந்தரர் திருமுதுகுன்றம் சென்றபோது, இத்தலத்தை வணங்காமற் செல்ல, இறைவன் அந்தணராக வந்து, முன்செல்ல; சுந்தரர் அவரைத் திருமுதுகுன்றத்திற்கு வழியாதெனக் கேட்க, 'கூடலையாற்றூருக்கு வழி இஃது ' என்று கூறி மறைய, திடுக்கிட்ட சுந்தரர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டார் என்பது வரலாறு.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சுந்தரர் - 1. வடிவுடை மழுவேந்தி (7.85); பாடல்கள் : சேக்கிழார் - வம்பு நீடு (12.29.100 முதல் 104 வரை) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
சிதம்பரம் - காவாலகுடி நகரப் பேருந்து உள்ளது. சேத்தியாதோப்பு - கும்பகோணம் பாதையில் 'குமாரகுடி' வந்து, ஸ்ரீ முஷ்ணம் போகும் பாதையில் பிரிந்து 2-கி. மீ. சென்று, 'காவாலகுடி' சாலையில் திரும்பி, 2-கி. மீ. சென்று 'காவாலகுடி'யை அடைந்து, அடுத்துள்ள கூடலையாற்றூரை அடையலாம்.
தொடர்பு :
04144 - 208704