இறைவர் திருப்பெயர்: அரத்துறைநாதர், ஆனந்தீஸ்வரர், தீர்த்தபுரீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: அரத்துறைநாயகி, ஆனந்த நாயகி, திரிபுர சுந்தரி.
தல மரம்:
தீர்த்தம் : நிவா நதி, நீலமலர்ப் பொய்கை
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர்,சுந்தரர் ,நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், வால்மீகி முனிவர், அரவான் முதலியோர்.
- ஊர் பெயர் - நெல்வாயில்; கோயில் - அரத்துறை.
- இப்பதிக்கு தீர்த்தபுரி என்ற பெயரும் உண்டு; இதனாலேயே இத்தலத்து இறைவன் தீர்த்தபுரீஸ்வரர் என்னும் பெயரையும் கொண்டு விளங்குகிறார்.
- சப்தரிஷிகள் பூஜை செய்ய தீர்த்தம் வேண்டி நீ வா என்று அழைத்ததாக இதுவே நிவா நதியாகவும் வடவெள்ளாறாகப் பெயர் கொண்டு அமைந்துள்ளது என்று கூறுவர். இந்த நிவா நதியின் கரையில் சப்த ரிஷிகள் வழிபட்ட ஆதித்துறை, ஆலந்துறை, மாந்துறை, ஆடுதுறை, வசிட்டத்துறை, திருநெல்வாயில் அரத்துறை, முடவன் (பலாத்)துறை ஆகிய துறைகள் அமைந்துள்ளன.
- நிவாநதிக்கரையில் அமைந்துள்ள திருக்கோயில். நிவா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது, அதனால் சேதம் உண்டாகாமல் இருக்க நந்தியம்பெருமான் தலையைச் சற்று திரும்பி வெள்ளத்தைப் பார்க்க, வெள்ளம் வடிந்ததாக வரலாறு சொல்லப்படுகிறது.
- வான்மீகிமுனிவர்,அரவான் ஆகியோர் வழிபட்ட சிறப்புடையது.
- திருஞானசம்பந்தர் சிறு பாலகனாக இருந்ததால் அவருடைய தந்தையார் சம்பந்தரைத் தூக்கிக் கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது. திருதூங்கானைமாடம் சிவஸ்தலத்தை தரிசித்து திருநெல்வாயில் அரத்துறை நோக்கி செல்லும் போது தந்தை தோள்மீது எழுந்தருள்வதை விட்டு நடந்தே சென்றார். சம்பந்தர் தன் சிற்றடிகள் நோக நடந்து செல்வதைக் கண்டு யாவரும் வருந்தினர். திருநெல்வாயில் அரத்துறை செல்லும் வழியில் மாறன்பாடி என்ற இடத்தில் இரவு தன் அடியார்களுடன் சம்பந்தர் தங்கினார். அன்றிரவு திருநெல்வாயிலிலுள்ள அந்தணர்கள் கனவில் இறைவன் தோன்றிச் சம்பந்தர் கால்கள் நோகாமல் இருக்கத் தான் முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னங்கள் அளிப்பதாகவும் அவற்றை சம்பந்தரிடம் சேர்த்து அவரை ஆலயத்திற்கு அழைத்து வரும்படியும் ஆணையிட்டார். இதே போன்று சம்பந்தர் கனவிலும் தோன்றி முத்துச் சிவிகையில் ஏறிக்கொண்டு தன்னை தரிசிக்க வருபடியும் ஆணையிட்டர். மறுநாள் காலை திருநெல்வாயில் அரத்துறை அடியார்கள், கோவில் பணியாளர்கள் ஆலயத்தை திறந்து பார்க்க அங்கு முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னங்கள் ஆகியவை இருக்கக் கண்டு இறைவனை கைகளைக் கூப்பி வணங்கினர். பின்னர் அவற்றை எடுத்துக் கொண்டு மாறன்பாடி சென்று சம்பந்தரிடம் கொடுத்து, அவரை முத்துச் சிவிகையில் உட்கார வைத்து, முத்துக்குடை நிழலில் அரத்துறைநாதர் ஆலயம் அழைத்து வந்தனர். சம்பந்தரும் ஆலயம் வந்து இறைவனைத் தொழுது பதிகம் பாடி வணங்கினார்.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. எந்தையீசனெம் பெருமான் (2.090); அப்பர் - கடவுளைக் கடலுள் (5.003); சுந்தரர் - கல்வாய் அகிலும் (7.003); பாடல்கள் : நம்பியாண்டார் நம்பி - நித்தன் செழுங்காசு (11.38.79); சேக்கிழார் - தூங்கானை (12.21.154) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், நீடு வாழ் பதி யாகு(ம்) (12.28.196, 204 & 229) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், அந்நாட்டின் மருங்கு (12.29.294) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
இது, விழுப்புரம் - திருச்சி ரயில்பாதையில், திருப்பெண்ணாகடதிற்குத் தென்மேற்கே 7-கி. மீ. தூரத்தில் உள்ளது. விருதாச்சலத்திலிருந்து, தொழுதூர் செல்லும் பஸ்களில் கொடிகளம் என்னும் இடத்தில் இறங்கி, தெற்கே 1-கி. மீ. தூரத்தில் இத்தலத்தை அடையலாம். (இன்று, திருவட்டுறை எனப்படுகிறது.)
தொடர்பு :
04143 - 246467